பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Thursday, October 22, 2009

நிஜத்தை சொல்லும் பேராண்மை!

ஊருக்கெல்லாம் சோறு போடுகிற விவசாயிகள் தங்கள் வயிற்றுக்கான சோற்றுக்கு ரேஷன் கடையில், ஒரு ரூபாய் அரிசி க்யூவில் நின்றுகொண் டிருக்கிறார்கள். நாட்டின் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்காக நடைபெற்ற பசுமை புரட்சியின் பின்விளைவுகளாய் இந்தியாவின் பாரம்பரியமிக்க இயற்கை விவசாயம் பாழானது. செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளால் மலடான மண்ணில், அதிக விளைச்சல் என்ற பெயரில் மரபணு மாற்றப்பட்ட தாவரங்கள் பயிரிடப்படுகின்றன.செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட விதைகளற்ற தாவரங்களே மரபணு மாற்றுப் பயிர்கள் எனப்படுகின்றன.முதலில் பருத்தி விளைச்சலில் அமெரிக்காவின் மான்சான்ட்டோ நிறுவனம் தயாரித்த பி.ட்டி காட்டன் என்ற மரபணு மாற்றப்பட்ட பயிர் இந்திய மண்ணில் அறிமுகப்படுத்தப்பட்டது. 60% விளைச்சல் கூடும் என்ற வார்த்தையை நம்பி, மராட்டிய மாநில விவசாயிகள் இதனைப் பயிரிட்டனர். சாதாரண பருத்தி அளவுக்குக்கூட இந்த மரபணு மாற்றப்பட்ட பருத்தி விளைச்சல் தரவில்லை. கடன் வாங்கி வேளாண்மை செய்த விவசாயிகளின் கதி, தற்கொலையில்தான் முடிந்தது. இப்போது, மாகிகோ என்ற பன்னாட்டு நிறுவனம் தயாரித் துள்ள மரபணு மாற்ற கத்தரிக்காய்க்கு மத்திய ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. ஆணையத்தின் அனுமதி யையடுத்து, மத்திய அரசு ஒப்புதல் தரவேண்டும். விதைகளற்ற இந்த மரபணு மாற்ற கத்தரிக்காயால் விவசாயம் மேலும் பாதிக்கும் என்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்றும் விவசாய அமைப்புகள் எதிர்ப்புக் குரல் கொடுக்கின்றன. இத்தகைய காய்கறிகளை சாப்பிடுவோரின் உடலுக்கும் கேடு விளையும் என எச்சரிக்கப்படுகிறது.""உலகமயத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டிருப் பது விவசாயத் துறைதான். உழவன் உற்பத்தி செய் யும் விளைபொருட்களுக்கு யாரோ விலை நிர்ணயிக் கிறார்கள். அவனுக்கு யாரோ கூலி நிர்ணயிக்கிறார் கள். இந்தியாவில் பூச்சிக் கொல்லி மருந்தையும் உரத்தையும் அதிகமாகப் பயன்படுத்தி மண்ணை யும் தானியத்தையும் கெடுத்துவிட்டார்கள். இயற்கை உரங்கள் மூலம்தான் மண்ணுக்கு சத்து கிடைக்கும். இப்போது உலகம் முழுவதும் ஆர்கானிக் வெஜிடபிள் என்று இயற்கை முறையில் விளைவித்த காய்கறி களைச் சாப்பிடச் சொல்லி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்கிறார்கள். ஆர்கானிக் முறையில் விளைந்தவை அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இதையேதான் இந்தியாவின் பாரம்பரிய விவசாய முறை குறைந்த செலவில் விளைவித்து, குறைந்த விலைக்கு விற்று வந்தது. அதற்கு மாற்றாக, அதிக விளைச்சல்-அதிக விலை என இந்திய விவசாயிகளை ஏமாற்றி, இந்திய விவசாயத்தை அழித்துவிட்டார்கள்'' எனக் குற்றம் சாட்டுகிறார்கள் இயற்கை வேளாண் ஆர்வலர்கள். இவர்களின் எச்சரிக்கையை அரசாங்கங்கள் அலட் சியப்படுத்தும் நிலையில், சாதாரண விவசாயிகளும் பொதுமக்களும் விழிப்புணர்வு அடைந்தால்தான் இயற்கை விவசாயத்தைக் காப்பாற்ற முடியும்.பாரம்பரிய விவசாயத்தைக் காப்பாற்ற வேண்டிய அவசியத்தையும், இந்தியாவில் இயற்கை விவசாயம் புத்துயிர் பெறுவதை சர்வதேச சக்திகள் தடுக்கின்றன என்பதையும் பொதுமக்கள் தெரிந்து கொண்டு விழிப்புணர்வடையும் விதத்தில், "பேராண்மை' திரைப்படத்தைப் படைத்திருக்கிறார் இயக்குநர் ஜனநாதன். "இயற்கை' படத்திற்காக தேசிய விருது பெற்றவர். புதிதாக கண்டுபிடிக்கும் மருந்துகளை சோதிப்பதற்காக இந்தியா போன்ற நாடுகளில் உள்ள ஏழை மனிதர்களை எலி- தவளை போல பயன்படுத்தி உயிர் பிடுங்கும் சர்வதேச பயங் கரத்தை "ஈ' படத்தின் மூலம் பகிரங்கப்படுத்தியவர். தீபாவளி ரேஸில் முன்னணி இடத்தைப் பிடித்திருக்கும் ஜனநாதனின் "பேராண்மை' படம், தாய்மண் மீதான அக்கறையை சிவப்பு வண் ணத்தில் வெளிப்படுத்துகிறது. அதனைப் பொறுக்கமுடி யாமல் படத்தின் பல இடங்களில் கத்திரி போட்டிருக்கிறது சென்சார் போர்டு

இயற்கையோடு இணைந்து வாழும் மலைவாசி சமுதாயத்தில் பிறந்தவன் துருவன். இடஒதுக்கீட்டின் மூலம் உயர்படிப்பு படித்து, என்.சி.சி. ட்ரெய்னராக இருக்கிறான். முள்ளிமலையில் உள்ள கல்லூரிக்கு என்.சி.சி. கேம்ப்புக்காக வரும் மாணவிகளுக்குப் பயிற்சி அளிக்கும் பொறுப்பு அவனிடம் அளிக்கப்படுகிறது. அவர்களில் 5 மாணவிகளைத் தேர்வு செய்து, அவர் களுக்கு காட்டுப்பகுதியில் பயிற்சியளிப்பதற்காக அழைத்துச் செல்கிறான் துருவன். இருட்டு வதற்குள் கல்லூரிக்குத் திரும்பியாகவேண்டும். அவர்கள் சென்ற ஜீப் விபத்துக்குள்ளாகிறது. இரவில் காட்டிலேயே தங்க வேண்டிய நிலை. ஆள் நடமாட்டமில்லாத பகுதி என்று சொல்லப்படும் அந்தக் காட்டில் வெளிநாட்டு ஆட்கள் இருவர் நடமாடுவதை 5 மாணவிகளில் ஒரு பெண், இருட்டு நேரத்தில் பார்க்கிறாள். துருவனிடம் சொல்கிறாள். அப்போதுதான் ஒரு பயங்கர சதித்திட்டம் தெரியவருகிறது. இயற்கை விவசாயத்தை மேம்படுத்துவதற்காக "பசுமை' என்ற ராக்கெட்டை, வெள்ளிமலையிலிருந்து ஏவுவதற்குத் தயாராக இருக்கிறார்கள் இந்திய விஞ்ஞானிகள். அந்த ராக்கெட்டை தகர்ப்பதற்காக ஏவுகணை தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் காட்டுக்குள் நுழைந்திருக்கிறது சர்வதேச கூலிப்படையைச் சேர்ந்த 16 பேர் குழு. நவீன போர் ஆயுதங் களுடனும், ஏவுகணையுடனும் இந்திய பாரம்பரிய விவசாயத் தின் வளர்ச்சியை அழிக்க வந்த அந்த சர்வதேச கூலிப்படை யை, தன்னுடன் பயிற்சிக்கு வந்த 5 என்.சி.சி. மாணவிகள் படையைக் கொண்டு துருவன் தாக்கி அழித்து, சர்வதேச சக்திகள் பொருத்திய ஏவுகணையை திசை திருப்பி பயணிக்க வைத்து, இந்தியாவின் இயற்கை விவசாய செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்வதற்கு துணை நிற்பதுதான் "பேராண்மை'. பாரம்பரிய விவசாயத்தின் அவசியம், இடஒதுக்கீட்டுக் கொள்கையினால் ஏற்பட்டுள்ள சமுதாய மாற்றம், உலக மயத்தின் மோசமான விளைவுகள், இந்தியாவுக்கு எதி ரான சர்வதேச சதி, உயிர்த் தியாகத்துக்குத் துணிந்த பெண்களின் வலிமை, பொதுவுடைமைச் சிந்தனை இவற்றை அடிப்படை கலவையாகக்கொண்டு எழுப்பப் பட்டிருக்கிறது பேராண்மைத் திரைக்கதை. மலை- காடு கள்- ஆறு-ஏரி என இயற்கையின் பிரம்மாண்டத்துடன் இணைந்து பயணிக்கிறது பிரமிக்கவைக்கும் கேமரா தொழில்நுட்பம். நாயகன் ஜெயம்ரவியின் துடிப்புமிக்க நடிப்பு, என்.சி.சி மாணவிகளாக நடித்துள்ள பெண்களின் திறமை, வர்ணாசிரமத்தை காமெடியால் இடித்துத்தள்ளும் வடிவேலு என சிறப்பான பல அம்சங்களால் ரசிகர்களை ஈர்த்திருக்கிறது "பேராண்மை' திரைப்படம். காதல், டூயட், குத்துப்பாட்டு, ஃபாரின் காட்சிகள் எதுவுமில்லாமல் ஒரு வெற்றிப்படம் தரமுடியும் என நிரூபித்திருக்கிறார் இயக்குநர் ஜனநாதன். சினிமாவை பொழுதுபோக்காகப் பார்க்க வரும் ரசிகர்களை, அவர்களின் எதிர்பார்ப்பு குறையாத திரைக் கதை மூலமாகவே இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் எதிராக நடக்கும் உலகளாவிய சதிகள் பற்றிய விழிப் புணர்வுடன் வெளியே அனுப்புகிறது பேராண்மை.