பாராளுமன்றம் வெகு விரைவில் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான அறிவித்தல் இன்னும் ஓரிரு வாரங்களில் விடுக்கப்படும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார்.
ஜனாதிபதிக்கு கிடைக்கப்பெற்ற 60 வீத வாக்குகளை தக்கவைத்துக்கொண்டு எதிர்க் கட்சிக்கு வழங்கப்பட்ட 40 வீத வாக்குகளையும் வெற்றிகொள்ளும் முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பொதுத் தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுப்பதற்கு தேவையான நடவடிக் கைகளை உடனடியாக ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றதை அடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்திருந்த விஷேட செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை நடைபெற்றது.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம் ஜயந்த், அமைச்சர்களான கலாநிதி சரத் அமுனுகம, பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், ரிஷாத் பதியுதீன், சம்பிக ரணவக்க, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச ஆகியோர் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் அமைச்சர் மைத்திரிபால மேலும் கூறுகையில்:-
தற்போதைய பாராளுமன்றத்தின் காலம் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் முடிவடையவுள்ளது. இந்நிலையில் அரசியலமைப்பின் பிரகாரம் பொதுத் தேர்தல் ஒன்றுக்கான அறிவிப்பு வெகு விரைவில் விடுக்கப்படும்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகள் இன்னும் ஓரிரு தினங்களில் நடைபெறவுள்ளது.
பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் தகவல்களை திரட்டி பெயர்ப்பட்டியலை தயாரிக்கும் நடவடிக்கைகள் நேற்று (இன்று) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற வகையில் இதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளேன் என்றார்.
மக்கள் எதிர்பார்க்கும் வளமான எதிர்காலம் நிச்சயம் உருவாக்கப்படும். மஹிந்த சிந்தனையில் கூறப்பட்டமை நிறைவேற்றப்படும். உலகிலேயே வளமான நாடாக மாற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் எம்மீது நம்பிக்கை வைத்துள்ள மக்கள் 60 வீத வாக்குகளையும் எதிர்க்கட்சி வேட்பாளருக்கு 40 வீத வாக்குகளையும் வழங்கியுள்ளனர்.
எஞ்சிய 40 வீதத்தை பெற முடியாமல் போன காரணங்கள் ஆராயப்பட்டு அந்த குறைகளை நிவர்த்தி செய்துகொண்டு ஜனநாயக முறையிலான அரசியலின் மூலம் எஞ்சிய 40 வீத வாக்குகளையும் எமது வெற்றிக்காக பெற்றுக்கொள்ள முயற்சிப்போம்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இந்த நாட்டை முன்னேற்ற எதிர்க்கட்சியின் 40 வீத வாக்காளர்களும் எம்முடன் கைக்கோர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார்.
சரத் பொன்சேக்கா தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக கூறி வருகிறார். அவருக்கு நாங்கள் ஒன்றும் செய்யப்போவதில்லை, இதற்கான தேவையில்லை.
எமது கூட்டங்களில் பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டனர். ஆனால் குறைவான வாக்குகளே கிடைத்துள்ளது. இது நீதியான தேர்தல் இல்லை என்று சரத் பொன்சேகா தெரிவித்தார். இதன் மூலம் அரசியல் தெரியாதவர் என்பதை தெளிவாக காண்பிக்கின்றது என்றார்.
மக்கள் விடுதலை முன்னணி இம்முறை தவறான முடிவுகளை எடுத்துள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.