பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Monday, December 28, 2009

இயேசுவுக்கு உலகம் தந்த முதல் பரிசு!


யாழ்ப்பாணத்து அருட்குரு ஒருவரின் தாயார் சென்னை வந்தி ருந்தார். கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்து சொல்லவும் நக்கீரன் செய்து வரும் நற்பணிகளுக்கு நன்றி கூறவுமாய் கடந்த புதன்கிழமையன்று என் அலுவலகம் வந்தார்.


நீண்டு உரையாட நேர அவகாசமிருக்கவில்லை. முல்லைத்தீவு வரை ஓடிக் களைத்து முள்ளிவாய்க்கால் கொடுமை கண்ட நான்கு லட்சம் தமிழருள் அக் கொடு மையின் காலத்தில் தாய்மையுற்ற பெண்களுக்குப் பிறக்கும் குழந்தை கள் குறைபாடுகளுடன் பிறக்கின்றன என்ற செய்தியை முக்கியமாகச் சொல்ல வேண்டியே என்னைச் சந்திக்க விரும்பியதாகவும் கூறினார்.


தனது உறவுப் பெண் ஒருவர் வவுனியா வதை முகாமில் எட்டாம் மாதத்திலேயே பிறப்புவலி காண, வவுனியா மருத்துவமனையில் பிள்ளைக்கு மட்டுமே படுக்கை-தாய் கூட்டத்தோடு கூட்டமாய் அழுக்கும் நாற்றமுமான அரசு மருத்துவமனையில் அல்லல்பட்ட அவலம், பிறந்த குழந்தையும் இதயத்தில் குறைபாடுடன் பிறக்க கொழும்பு நகருக்கு அவசர அறுவை சிகிச்சைக்கு வேண்டி புறப்பட்டு நிற்க ஆம்புலன்ஸ் வந்து சேரவே நான்கு நாட்களான கொடுமை... கொழும்பில் அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வெடுக்கும் அவகாசம் இன்றி வதைமுகாமில் ""இருக்கிறேன் ஐயா'' பதிவு செய்வதற்காக மீண்டும் ஆம்புலன்சில் பதறிப் பயணம் செய்ய வேண்டிய வேதனை... அந்தத் தாயும் இப்போது பாதி மனம் பேதலித்தவளாய் ஆகிவிட்டாள்...கடந்துபோன கிறிஸ்து பிறப்பு தினத்தன்று நினைவிலும், ஜெபங்களிலும் நின்றவர்கள் தமிழீழத்தின் இத்தாயும் இவர்போன்று சொல்லொணா துன்பங்களை தொடர்ந்து அனுபவிக்கும் நூற்றுக்கணக்கான பெண்களும்தான்.


இயேசுவின் தாயாம் கன்னிமரியாளுக்கு பேறு கால வலி வந்துற்றபோது அவளும் தன் கணவருடன் அகதி போலவே தெருவில் நின்றார்கள். இல்லத்து வாயில்கள் எவையும் அவளுக்காயும் குழந்தை இயேசு பாலனுக்காயும் திறக்கவில்லை. வழிப்போக்கர்கள் தங்கி இளைப்பாறிச் செல்லும் சத்திரங்களில் கூட இடம் கிடைக்கவில்லை.


நிறைவாக மாடுகள் படுத்துறங்கும் தொழுவக் கிடையில்தான் இன்று உலகில் இருநூறு கோடிக்கும் மேலான மக்களால் "மீட்பர்' என வணங்கப்படும் இயேசு பிறந்தார். பனிவிழும் இரவொன்றில், கொடுங் குளிர் வாட்ட இவ்வுலகில் ஏழைகளும் அனாதைகளும் படுகிற அனுபவமே அம்மீட்பருக்கு இப்பூவுலகம் தந்த முதல் பிறந்த நாள் பரிசு.


அவர் பிறந்துவிட்ட செய்தியை வானகத்தின் தூதுவர்கள் வந்து முதலில் அறிவித்ததுகூட கடையர்களிலும் கடையர்களான ஆட்டிடையர்களுக்குத்தான். ""உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை, பூமியிலே நல் மனதுடை யோர்க்கு அமைதி'' என வாழ்த்துச் சொல்லிய அவ் வானகத் தூதுவர்கள், ""உங்களுக்காய் பெத்லெகெமின் மாட்டுத் தொழுவமொன்றில் உலக மீட்பர் பிறந்துள்ளார்'' என இடையர்களுக்கு அறிவித்தனர்.


நள்ளிரவில் சாக்குத் துணிகளால் போர்த்திக் கொண்டு வானக் கூரையின் கீழ் படுத்துறங்கிக் கொண்டிருந்த அந்த ஏழை ஆட்டிடையர்கள்தான் இயேசு பாலனை முதலில் சென்று கண்டு வணங்கும் பாக்கியம் பெற்ற வர்கள்.

வதைமுகாம்களிலும், தற்காலிகத் தடுப்பு முகாம்களிலும், பாலியல் வல்லுறவின் இருட் டறைகளிலுமாய் மானுடத்தின் மாண்புகள் இழந்து உழலும் நம் இனத்தின் அம்மக்களது சமகால அனுபவங்களும் இயேசுவினது பிறப்பு அனுபவமும் ஒன்றாகவே பார்க்க முடிகிறது.

இறைவன் ஏழ்மையை விரும்பவில்லை. வறுமை போல் கொடுமை வேறொன்றுமில்லை.

""இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின்-பரந்து கெடுக இவ் உலகியற்றியான்'' என்ற வள்ளுவப் பெருந்தகை யின் கோபம் என் காதல்களில் ஒன்று. இவ் வுலகில் இரந்துண்ணும் கொடுமைக்கு ஒரு மனிதன் மாண்பிழைக்கும் நிலைவரின், இவ்வுலகைப் படைத்த அக்கடவுளே வந்து பிச்சையெடுத்துக் கெடுவானாக- என்று சாபமிடும் திருவள்ளுவக் கோபம்.

ஆம், இறைவன் ஏழ்மையை நேசிக்க முடியாது. ஆனால் ஏழைகளோடு நிற்கிறார், வறியவர்களோடு தன்னை அடையாளப் படுத்துகிறார். அந்நிலையிலிருந்து அம்மக்கள் விடுவிக்கப்பட வேண்டுமென்பதற்காய். உலகின் பெரியவர்களெல்லாம் கைவிட்டு விட்ட நம் மக்களுக்கு கிறிஸ்து பிறப்பு வாழ்த்தாக தூரத்திலிருந்து நாம் இதயத்தில் சொல்கிறோம்: கடவுள் நம்மோடு, நீதி நம்மோடு, மீட்பு வரும், தர்மத்தை சூது வெல்லும், தர்மம் மறுபடியும் வெல்லும்.

உண்மையில் இயேசு பிறந்த காலச் சூழமைவும் இன்றைய ஈழம் போலவே இருந்தது. அவரது அன்றைய தேசமான பாலஸ்தீனம் உரோமாபுரிப் பேரரசின் ராணுவ ஆக்கிரமிப்புப் பிடியில் நின்ற காலமது. அநியாய வரி, அவமானங்கள், பாலியல் வல்லுறவுகள் என அடிமைத்தனத்தின் கொடும் சுமைகளை அம்மக்கள் அனுபவித்திருந்த காலம்.

நமக்கென மீட்பர் ஒருவர் வருவார், நமக்கும் காலமும் வாழ்வும் வருமென அவர்கள் காத்திருந்த காலம். அக்காத்திருப்பின் நிறைவாகவே இயேசு வந்தார். அவரது வருகையைக் குறித்து பலநூறு ஆண்டுகளுக்கு முன்னரே பழைய வேத புத்தகமொன்றில் இவ்வாறு சொல்லப்பட்டிருந்தது: ""இருளில் நடந்து வந்த மக்கள் போராளியைக் கண்டனர், மரண நிழல்படும் நாட்டில் வாழ்ந்தோருக்கு ஒளி உதித்தது''.

ஈழம் இன்று இருள் சூழ நிற்கும் நாடு. மரண நிழல் கவிந்து வெளிறி நிற்கும் பூமி. ஆயினும் நம்பிக்கையை விட்டுவிட முடியாது. நம்பிக்கையே விடுதலையின் உயிரும், ஒளியும், உப்பும்.இயேசு பிறந்தபோது நிகழ்ந்த பிறிதொரு கொடுமை உரோமாபுரிப் பேரரசின் எடுபிடிக் கூலி ஏரோது மன்னன் செய்தது.

சோதிடர் களும் குறிசொல்பவர் களும் ""பிறந்திருக்கும் இயேசு பாலன் உமது அரியணைக்கு அச் சுறுத்தலாய் இருப்பார்'' என வரலாறு முழுதும் நீங்காது வந்து போகிற மோசடிக் குறிசொல்வோர் போல் எச்சரிக்க, அம் மன்னன் முதலில் பாலன் இயேசுவை கண்டுபிடிக்க முயல்கிறான். அது இயலாதபோது அக் காலகட்டத்தில் நாட் டில் பிறந்த அத்தனை குழந்தைகளையும் கொன்று விடும்படி தன் கூலிப்படைகளுக்கு உத்தர விடுகிறான்.ராஜபக்சே-கோத்தபய்யா சகோதரர்களை இங்கு இழுத்து நிறுத்துவதை நம்மால் தவிர்க்க முடியவில்லை.

சமீபத்தில் ""சாட்சியில்லா போர்'' (ரஹழ் ஜ்ண்ற்ட்ர்ன்ற் ஜ்ண்ற்ய்ங்ள்ள்) என்ற அமைப்பிற்கு வாக்குமூலம் வழங்கியுள்ள இலங்கையின் மனித உரிமை ஆர்வலர் ஒருவர் அதிர்ச்சியூட்டும் தகவலொன்றை வாக்குமூலமாய் பதிவு செய்துள்ளார்.

அதன்படி இலங்கை ராணுவப் பிடியில் இப்போது மனிதாபி மானமற்ற சித்திரவதைகளுக்கு உள்ளாகி வரும் சுமார் 12,000 விடுதலைப் புலிப் போராளிகளில் கணிசமானவர்களை தீர்த்துக் கட்ட ராஜபக்சே- கோத்தபய்யா சகோதரர்கள் முடிவு செய் துள்ளதாய் கூறி எச்சரித்துள்ளார். இந்த மனித உரிமை ஆர்வலர் இலங்கையின் ராணுவ உயர் அமைப்புடன் நெருங்கிய தொடர்புகள் கொண்டவர் எனக் கூறப்படுகிறது.

இரு வாரங்களுக்கு முன் கிடைத்த பிறிதொரு செய்தியின்படி கைது செய்யப்பட்டு வதை முகாம்களில் வாழும் புலிகளின் முக்கிய முதல், இரண்டாம், மூன்றாம் நிலை தளபதிகள், அரசியற் பிரிவின் தலைவர்களை கதை முடிக்கும் திட்டம் தயார் என்று சொல்லப்பட்டது. இப்போது பெரு வாரியான போராளி களையும் முடித்துவிட முடிவு செய்யப் பட்டுள்ளதாய் எச்சரிக்கப்படுகிறது.மிகப்பெரும் நாடகமாக இது அரங்கேற்றப்படப் போகிறதெனவும் அந்த ஆர்வலர் எச்சரித்துள்ளார்.

அதாவது சரணடைந்த ஒரு தொகுதி புலிகளை அணியாக்கி பெருந்தொகையான புலிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் வதை முகாம்கள் மீது தாக்குதல் நடத்த வைப்பார்களாம்.

அதனை சாக்காகப் பயன்படுத்தி அத்தனைபேரையும் கதை முடிப்பதுதான் திட்டமாம். உலகிற்கு எப்படி இந்நாடகம் பிரச்சாரம் செய்யப்படுமென்றால் வன்னிக்காடுகளில் தப்பி நின்ற புலிகள் ஒருங்கிணைந்து அடைத்து வைக்கப்பட்டிருக்கும் போராளிகளை மீட்க வேண்டித்தாக்குதல் நடத்தினார்கள். அதனை தடுத்து நிறுத்த ராணுவம் நடத்திய தாக்குதலில் இத்தனை நூறு அல்லது ஆயிரம் பேர் கொல்லப்பட்டார்கள் என்பதாகக் கதை விரிக்கப்படுமாம்.

ஏன் இந்த முடிவினை ராஜபக்சே-கோத்தபய்யா சகோதரர்கள் எடுத்துள்ளார்கள் என்பதற்கும் காரணம் சொல்லப்படுகிறது. சர்வாதிகாரிகள், மனித குலத்திற்கெதிரான குற்றம் புரிந்தவர்கள் என்றுமே நிம்மதியாக வாழ்ந்ததாய் வரலாறு இல்லை.

ராஜபக்சே சகோதரர்களையும் இப்போது பலவிதமான பயங்கள் பிடித் தாட்டுவதாய் தெரிகிறது. இப்போதைய முதற்பயம் தேர்தலில் ஒருவேளை தோற்றுவிட்டால்... என்பது. வெளியே பெரிய பலசாலிகள் போல் காட்டிக் கொண்டாலும் உண்மையில் ஒருவேளை தோல்வியை சந்திக்க வேண்டி வருமோ என்ற அச்சம் அவர்களை ஆட்கொண்டிருப்பதாகவே கொழும்பு செய்திகள் கூறுகின்றன.

அதிபர் தேர்தலில் தோல்வியுற்றால் தொடர்ந்து வரும் பாராளுமன்றத் தேர்தலை ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சி வெல்கிற புதிய சூழல் எழலாம். ரணில் வென்றால் நிச்சயம் போர்க்கைதிகளாய் இப் போதிருக்கும் புலிகள் விடுவிக்கப்படு வார்கள்.

அவ்வாறு விடுவிக்கப்பட்டால் மீண்டும் விடுதலைப்புலிகள் இயக்கம் வலுவான இயக்கமாக மாறும் என்ற அச்சம் ஒருபுறம், அதனிலும் முக்கியமாக, மீண்டும் புலிகள் வலுப்பெற்றால் முதலில் அவர்கள் குறிவைக்கப் போவது தம்மையும், தமது குடும்பத்தவரையும்தான் என்பதும் அவர்களுக்கு நன்றாகவே தெரியுமெனச் சொல்லப்படுகிறது.உண்மையில் முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் கடைசி நாட்களில் தென்னிலங்கையில் குறிப்பாக கொழும்பு நகரில் பெரிய தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தும் திட்டங்களை உறுதியாகத் தடுத்து நிறுத்திய வேலுப்பிள்ளை பிரபாகரன்- அப்போதும் கூட, ""நமது போராட்டம் சிங்களப் பேரினவாதத்திற்கும் அதனை நடைமுறைப்படுத்துகிற ராணுவத்திற்கும் எதிரானது- சிங்கள மக்களுக்கு எதிரானதல்ல'' என்றிருக்கிறார்.

அதேவேளை. உண்மையா என்பது நமக்குத் தெரியாது- ஆனால் அவர் இளைய தளபதியரிடம் கூறியதாக உலவும் செய்தி இது: ""ராஜபக்சேக்களை மட்டுமல்ல அவர்களது வம்சத்தையும் தமிழ் வரலாறு மன்னிக்காது. எமது இனத்தை அழித்த பாவிகள்... இவர்களை தமிழ் வரலாறு பழிதீர்க்கும்'' என்றிருக்கிறார்.