பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Saturday, January 2, 2010

2009 சினிமா... 'ஹிட்' அடித்த படங்கள்!

வழக்கம் போல 2009ம் ஆண்டிலும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் தமிழில் வெளியாகின. இதற்கு முந்தைய ஆண்டுகளில் இல்லாத அளவு 131 படங்கள் வெளியாகின இந்த ஆண்டு.
இவற்றில் வெற்றிக் கோட்டைத் தொட்டவை, கையைக் கடிக்காமல் தயாரிப்பாளர்களைக் காப்பாற்றியவை 19 படங்கள் மட்டுமே என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில்.
அவற்றின் விவரம்...
நாடோடிகள்:
2009-ம் ஆண்டில் அதிக லாபம் தந்த படம் என்ற பெருமையைப் பெறுகிறது சசிகுமாரின் நாடோடிகள் திரைப்படம். சமுத்திரக் கனி இயக்கத்தில் குறைந்த பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் பல மடங்கு நல்ல லாபம் தந்தது. சமுத்திரக் கனிக்கு புதிய வாழ்கையும் தந்தது.
அயன்:
ஏவிஎம் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தை கேவி ஆனந்த் இயக்கியிருந்தார். இயக்குநர் கேவி ஆனந்த் என்றதுமே இது மிடில்கிளாஸ் படமாக இருக்கும் என்றுதான் நம்பினார்கள். படத்தின் மீது பெரிய நம்பிக்கை இல்லாததால் சன்னுக்கு விற்றது ஏவிஎம். ஆனால் அயனோ மசாலா படமாக வந்து வசூலையும் அள்ளியது. சன் டிவியின் வியாபார உத்தியே இந்த பெரிய வெற்றிக்குக் காரணம் என்பதில் இரண்டாவது கருத்து இருக்க முடியாது.2009-ம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றி சன் பிக்சர்ஸின் அயன்தான். சிவாஜி படத்துக்கு அடுத்து அதிக வசூல் பெற்ற படமும் இதுதான்.
உன்னைப் போல் ஒருவன்:
கமல்ஹாசன், மோகன்லால் நடிப்பில், ஸ்ருதி ஹாசன் இசையமைப்பில், சக்ரி டோலட்டியின் இயக்கத்தில் உருவாகி வெளியான உன்னைப் போல் ஒருவன், இந்திப்பட ரீமேக்தான் என்றாலும், தமிழில் ஒரு புதிய முயற்சியாகப் பார்க்கப்பட்டது.வித்தியாசமான தமிழ்ப் படமாக வந்த உன்னைப் போல் ஒருவன் மூலம் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஆனாலும் கமல் ஹாசன் தனது மதவாதப் பார்வையை இதில் திணித்திருப்பதாக சர்ச்சையையும் எழுப்பியது. எப்படியிருந்தாலும் கமலுக்கு இந்தப் படம் லாபமே, தமிழ் சினிமா வுக்கும் பலம் கூட்டியபடம்.
பசங்க:
எந்தவித ஸ்டார் வேல்யூவும் இல்லாமல் வந்து அனைவரது பாராட்டையும் அள்ளிக் கொண்டு போனது. ஒரு ஆங்கிலப் படத்தின் உல்டாதான் இந்தப் பசமும். ஆனால் கிராமப்புறத்து பசங்களும் உஷாராக, புத்திசாலித்தனமாக, லட்சிய வேகத்தோடு இருப்பவர்கள் என்ற செய்தியை நேட்டிவிட்டியோடு சொன்னதில் வெற்றி பெற்றிருந்தார் இயக்குநர் பாண்டிராஜ். நல்ல தயாரிப்பாளர் என்ற பெயரை சசிகுமாருக்குப் பெற்றுத் தந்தது பசங்க. ரேணிகுண்டா:
முற்றிலும் புதுமுகங்களுடன் வெளியாகி, சத்தம் போடாமல் அனைவரின் சபாஷையும் பெற்ற படம். அஜீத், நடிகர் என்ற நிலையிலிருந்து பெரிய நட்சத்திரமாக மின்ன உதவிய படங்களைத் தயாரித்த நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி, தன் மகன் ஜானியையே பெரிய கதாநாயகனாக்கி விட்டார் இந்தப் படம் மூலம்.
வெண்ணிலா கபடிக் குழு:
இந்தப் படமும் புதுமுகங்களுடன் வந்து ரசிகர்களின் மனதில் அமர்ந்த படம். சக்தே இந்தியாவை இன்ஸ்பிரஷனாக வைத்து நம்ம ஊர் கபடியை பிரதானப்படுத்தி ஜெயித்தவர்கள் இந்தக் குழுவினர். மூச்சு விடாமல் வெற்றிக் கோட்டைப் பிடித்து வெற்றியும் பெற்றது இந்த டீம்.யாவரும் நலம்:மாதவன், நீத்து சந்திராவின் நடிப்பில் வெளியான இந்த திரில்லர் படம், சுமார்தான் என்றாலும், விநியோகஸ்தர்களின் புலம்பலுக்கு ஆளாகாமல் தப்பித்த ஆச்சரியப் படம்.
மாயாண்டி குடும்பத்தார்:
பீம்சிங் காலத்துக்கு நம்மை அழைத்துச் சென்ற படம் இது. குடும்பத்தோடு அமர்ந்து பார்க்க வைத்த படம். முற்றிலும் இயக்குநர்களே நடிகர்களாக மாறி அனைவரையும் வியக்க வைத்திருந்தனர். கூட்டுக் குடும்பத்தின் அழகு, அவலம், பங்காளிச் சண்டை என உறவுகளுக்குள் பின்னிப் பிணைந்த இந்த மண்ணின் மனிதர்களது வாழ்க்கையைத் திரையில் பார்த்தபோது மனசு கனத்துப் போனது. பெரிய வெற்றி இல்லை என்றாலும், தயாரிப்பாளர்களை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்த படம் இது.
சிவா மனசுல சக்தி:
ஸ்லீப்பிங் விக்டரி என்று கோலிவுட் வட்டாரத்தில் அடிக்கடி சொல்லப்படும் வார்த்தையை நிஜமாக்கிய படம் இது. சுமாராக இருந்தாலும் நகரப் பகுதிகளில் இந்தப் படத்துக்கு பார்வையாளர்கள் அதிகமாக இருந்தது. ஒரு இடைவெளிக்குப் பிறகு படமெடுக்க வந்த விகடன் டாக்கீஸுக்கு இந்த வெற்றி உற்சாகம் தந்தது (ஆனால் அதே விகடன் குழுமத்தின் வால்மீகி சோகத்தைக் கொடுத்து விட்டது).
ஈரம்:
பேய்ப் படம் என்று கூறினாலும் பேயை கண்ணிலேயே காட்டாமல் தண்ணீரை மட்டும் காட்டி மிரட்டலாக எடுக்கப்பட்ட வெற்றிப் படம்.இந்தப் படத்தை எவ்வளவோ கேட்டுப் பார்த்தது சன் டிவி. ஆனாலும் ஷங்கர் அழுத்தமாக அமைதி காத்தார். படத்தின் வெற்றியைப் பார்த்து, வட போச்சே என சன் பிக்ஸர்ஸே புலம்பும் அளவுக்கு நன்றாக ஓடிய படம்.
பேராண்மை:
ஜெயம் ரவியின் நடிப்புப் பக்குவத்தை படம் போட்டுக் காட்டிய, சிறப்பான கதையம்சத்துடன் கூடிய அருமையான படம். ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் விமர்சகர்களின் பாராட்டுக்களையும் வாரிக் குவித்தது. வரிசையாக தோல்வியைத் தழுவிய ஐங்கரனுக்கு முதல் வெற்றியாக அமைந்தது இந்தப் படமே.
கந்தசாமி:
அது ஏனோ தெரியவில்லை இந்தப் படம் ஒட்டு மொத்தமாக விமர்சகர்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டது. ஓவர் பில்ட் அப் கொடுத்த சுசி கணேசன் கடைசியில் சிவாஜியின் கதையை காப்பியடித்துப் படமாக்கிய ஏமாற்றத்தின் விளைவு என்று கூட இசைத் சொல்லலாம். ஆனால் கலைப்புலி தாணுவோ பல கோடி ரூபாய் வசூல் விவரம் காட்டி, நூறாவது நாள் விழாவும் எடுத்துவிட்டார். எனவே இதுவும் ஹிட் லிஸ்டில் சேர்ந்தாகி விட்டது.
இவை தவிர,கண்டேன் அழகர் மலை, மதுரை சம்பவம், படிக்காதவன், மாசிலாமணி, கண்டேன்காதலை போன்ற படங்களும் சராசரியாக ஓடி தயாரிப்பாளர்களை நாலு காசு பார்க்க வைத்தன.