
உணர்ச்சியும் எழுச்சியுமாய் இரண்டு நாட்கள் தகித்தது தஞ்சைத் தரணி. பழ.நெடு மாறனின் உலகத் தமிழர் பேரமைப்பின் ஏழாம் ஆண்டு நிறைவையொட்டி, ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் மாநாடு, தஞ்சையில் எம்.நடராஜனுக்கு சொந்தமான தமிழரசி மண்டபத்தில் டிசம்பர் 26,27 தேதி களில் நடைபெற்றது.
திரும்பிய பக்கமெல்லாம் பிரபாகரன் பேனர்கள், ஈழ வரைபடம், சிங்கள அரசின் கொலைவெறித் தாண்டவக் காட்சி களாய் தஞ்சாவூர் காட்சியளித்தது.முதல்நாள், மேரீஸ் கார்னரி லிருந்து புறப்பட்ட பேரணியில் நெடு மாறன் தலைமையில் ஆயிரம்பேர் திரண்டிருந்தனர். வெளிநாட்டிலிருந்து வந்திருந்த தமிழர்களும் இதில் அடக்கம். உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் மாநாட்டு அரங்கத்திற்கு சென்று சேர்ந்தது பேரணி. மாநாட்டு அரங்க நுழைவாயிலில், முள்ளிவாய்க்காலில் இருந்து சேகரித்து வரப்பட்ட ரத்தம் தோய்ந்த மண் வைக்கப் பட்டிருந்தது. அதற்கு அஞ்சலி செலுத்தி விட்டே அரங்கிற்குள் நுழைந்தனர்.ஈழம் தொடர்பான புத்தகங்கள், குறுந்தகடுகள் வெளியிடும் நிகழ்ச்சிகளும் கருத்தரங்குகளும் முதல்நாளில் முதன்மை பெற்றிருந்தன. கருத்தரங்கத்திற்குத் தலைமை தாங்கிய இந்திய-இலங்கை கூட்டமைப்பின் சச்சிதானந்தம், ஈழத்தமிழர்களுக்காகத் தாய்த் தமிழகம் என்ன செய்து விட்டது என்ற ரீதியில் பேச, அரங்கத்தின் வெப்பநிலை உயர்ந்தது. இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் கவியரங்கமும், வெளிநாடு வாழ் தமிழர்களின் அரங்க மும் முக்கியமானவை.
கவியரங்கம் அதன் வீச்சோடு நடந்தேற, வெளிநாட்டுத் தமிழர்கள் அரங்கத்திற்குத் தலைமை தாங்க வேண்டிய இலங்கை தமிழ் எம்.பி. சிவாஜிலிங்கம் , துபாயிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்தபோது, அனுமதியில்லை என அவரை திருப்பி அனுப்பினர் இந்திய அதிகாரிகள். இது இரண்டாம் நாளின் பரபரப்பாக அமைந்தது.மாநாட்டில் பங்கேற்க முடியாத நிலை யிலும், செல்போனில் தலைமையுரையாற்றினார் சிவாஜிலிங்கம். ""ராஜதந்திர கடவுச்சீட்டு இருந்தும்கூட என்னை அனுமதிக்க மறுத்து விட்டது இந்திய அரசு.
ராஜபக்சேவையும் பொன் சேகாவையும் எதிர்த்து தேர்தலில் போட்டியிடப் போகிறேன் என்பதாலேயே இந்தியா என்னைத் தடுத்துவிட்டது. இந்தியா வின் தவறான வெளியுறவுக் கொள்கைதான் என்னை இந்த மாநாட்டுக்கு வர விடாமல் தடை செய்துள் ளது. இக்கட்டான நிலையில் ஈழத்தமிழினம் உள்ளது. ஈழத்தமிழர் உரிமைகள் காக்கப்பட, தொப்புள் கொடி உறவுகளின் துணைவேண்டும்'' என்றார்.
கனடாவிலிருந்து வந்தி ருந்த தேவராஜன், ""இந்திய சுதந்திரத்திற்காக சிவாஜிலிங்கத்தின் தாத்தா இலங்கையில் போராடினார். ஆனால், பேரனுக்கோ இந்தியாவில் நுழையவே அனுமதியில்லை'' என்றார் சோகத்துடன். மாநாட்டில் தோழர் நல்லகண்ணு, பேராசிரியர் விருத்தாசலம், பெங்ளூரு தமிழ்ச்சங்கம் சுப்ரமணியன், அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா ஆகியோருக்கு "உலகப் பெருந்தமிழர்' பட்டம், பிரபாகரன் படம் போட்ட விருதுடன் வழங்கப் பட்டது.தோழர் நல்லகண்ணு, ""முள்ளிவாய்க்கால் சோகம் இனி எந்த மூலையிலும் நடக்கக் கூடாது.
போராட்ட முறையை எதிரிதான் தீர்மானிக்கிறான். அதனால், ஆயுதம் ஏந்துவது தவறில்லை.
இலங்கைப் பிரச் சினையில் இந்திய அரசின் அணுகுமுறை தவறாக உள்ளது'' என்றார். ம.நடராஜன் பேசும்போது, ""தனித்தமிழ்நாடு அமைந் திருந்தால் தனி ஈழம் எப்போதோ அமைந் திருக்கும்'' என பரபரப்பூட்டினார்.தாயகத் தமிழர்கள் என்ன செய்தார்கள் என்று சச்சிதானந்தம் முதல்நாள் கேட்டதற்கு இரண்டாம் நாளில் பதிலளித்தார் பழ.நெடு மாறன்.
""புலிகளுக்கு சிகிச்சை அளித்த வைகோ தம்பி சிறைக்குப் போனார். நானும் போனேன். பயிற்சி பட்டரை அமைத்து உதவி செய்தவர் எம்.ஜி.ஆர். இது ஜெய லலிதாவுக்குப் பிடிக்கா மல், பயிற்சி அளிப் பவர்கள் எங்க ளையே அழிக் கலாமே என பிரதமர் இந்திராவிடம் சொல்ல, இதே கேள்வியை எம்.ஜி.ஆரிடம் கேட்ட இந்திரா, பதிலையும் அவரே சொல்லி எம்.ஜி.ஆரை எழுதச் சொன்னார். அதாவது, அவர்கள் புலிகள் அல்ல, அகதிகள் என்று.
சட்டசபைக்கு அனைவரும் கருப்புசட்டை போட்டு வரச்சொன்னார் எம்.ஜி.ஆர். அப்போதுதான் கலைஞரும் பேராசிரியரும் பதவியை ராஜினாமா செய்தார்கள்'' என்றார்.கவிஞர் காசிஆனந்தன், ""நான் சிங்கள அரசில் வேலை பார்த்தபோது, எனக்கு கீழே இருந்து வேலை பார்த்த சிங்களர்கள்கூட தமிழ் நாய்கள் என்பார்கள். பிரபாகரன் வந்த பிறகு, அதே சிங்களர்கள் எங்கள் தமிழர் களைப் பார்த்து தமிழ்ப்புலிகள் என்றார்கள்.
உலக வரலாற்றில் பிரபாகரன் குடும்பம் போல தியாகம் செய்த குடும்பம் இல்லை. விரைவில் பெரிய போர் வெடிக்கும்'' என்றார் உணர்ச்சி கரமாக.ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, ""திருப்பதிக்கு வந்த ராஜபக்சேவுக்கு அனுமதி வழங்குகிறார்கள். ஆனால், சிவாஜிலிங்கத்துக்கு அனுமதியில்லை. இது பின்னடைவு இல்லை.
தொடக்கம். 7 நாட்டு படைகளுடன் போரிட்ட ஒரே தலைவன் பிரபாகரன் மட்டும்தான். அவர் தலைமையில் வீறுகொண்டெழுவோம். வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு உலகத்தமிழர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதை இங்கேயும் கொண்டுவந்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும்'' என்றார். அதுவே, தீர்மான மாகவும் நிறைவேற்றப்பட்டது.
ஈழத்தமிழர்களின் துயர்துடைக்க தாயகத் தமிழர்களின் கரங்கள் எப்போ தும் தயாராக இருக்கிறது என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது தஞ்சையில் நடந்த உலகத் தமிழர் மாநாடு.