
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், வழக்கறிஞர்கள் சந்திரசேகரன், பழனி ஆகியோர் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள தமிழகத்திலிருந்து சென்றிருந்தனர்.இறுதிச் சடங்கில் கலந்துகொண்டிருந்த திருமாவளவனை தொடர்பு கொண்டு பேசினோம்.
நம்மிடம் பேசிய திருமா, ‘""கடந்த 6-ந்தேதி மரண மடைந்திருக் கிறார் அய்யா வேலுப்பிள்ளை. அதனை உடனடியாக சிங்கள அரசு தெரிவிக்க வில்லை. மறுநாள் 7-ந்தேதி மதியத்திற்கு மேல்தான் அறிவித்தனர்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவாஜி லிங்கத்திடமும் செல்வம் அடைக்கல நாதனிடமும் வேலுப்பிள்ளையின் உடலை சிங்கள அரசு ஒப்படைத்தது.
பிரபாகரனின் தந்தையின் உடலை தக்க மரியாதையுடன் அவர்கள் வல்வெட்டித்துறைக்கு கொண்டு சென்றனர். மற்றொரு வாகனத்தில் பார்வதி அம்மாள் அழைத்து வரப்பட்டார்.
பார்வதி அம்மாள் குளிப்பதற்காக வவுனியாவில் உள்ள ஒரு ஹோட்டலில் உடல் சில மணி நேரங்கள் இருக்க வேண்டியிருந்தது. 8-ந்தேதி இரவு சென்னையிலிருந்து புறப்பட்ட நாங்கள், வவுனியாவில் அவர்களுடன் இணைந்து கொண்டோம்.அங்கேயே அய்யா வேலுப்பிள்ளைக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அறையில் இருந்த பார்வதி அம்மாவிற்கு ஆறுதல் சொன்னேன். வயதின் முதிர்ச்சிக் காரணமாக மிகவும் தளர்ந்து போயிருந்தார். என்னைப்பற்றி சொல்லிய போது கேள்விப்பட்டிருப்பதாகச் சொன்னார் அம்மா. அய்யா மரணமடைந்திருப்பதை வல்வெட்டித்துறைக்கு சென்ற பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டிருந்ததால் அவரிடம் யாரும் இறப்பு குறித்துப் பேசவில்லை. ஆனால் பார்வதி அம்மாள்,
"என் சாமி (அய்யா) கோயிலுக்கு போயிருக்கிறார். பின்னால வருவார்' என்றே சொல்லிக்கொண்டிருந் தார்.வவுனியாவிலிருந்து வல்வெட்டித் துறைக்கு புறப்பட்டபோது அவர்களோடு இணைந்து கொண்டேன். 9-ந்தேதி மாலை வல்வெட்டித்துறையைச் சென்றடைந்தோம்.
புலேந்திரன்குமரப்பா நினைவு சதுக்கத்தில் மக்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப் பட்டது. வல்வெட்டித்துறைக்கு வந்ததும்தான் பார்வதி அம்மாளிடம் அய்யா மரணமடைந்திருப்பதையே சொன்னார்கள். அதை கேட்டு கதறித் துடித்தார் பார்வதி அம்மாள். அப்போதுதான் எனக்கு ஒரு உண்மை புரிந்தது. அதாவது, ராணுவ முகாமில் கடைசி நாட்களில் வேலுப் பிள்ளையையும் பார்வதி அம்மாளையும் தனித்தனியே பிரித்து வைத்திருக்கிறார்கள் என்கிற உண்மை. அதனால்தான் வேலுப்பிள்ளை மரணமடைந்த சம்பவம் அவருக்கு தெரிந்திருக்கவே இல்லை.
வல்வெட்டித்துறைக்கு வந்ததும் சிவாஜிலிங்கம் சொன்னபிறகுதான் தெரிந்தது.வல்வெட்டித்துறையில் எங்குதிரும்பினாலும் 100 அடிக்கு 2 ராணுவத்தினர் துப்பாக்கிகளை ஏந்தி கொண்டு நின்றிருந்தனர். ராணுவம் நிற்கும் தோரனையே மக்களை மிரட்டுகிற தொனியில்தான் இருந்தது. இதனால் அந்த பகுதி மக்களிடம் சொல்லமுடியாத பயம் சூழ்ந்திருந்தது. அதையும் மீறி ஏராளமானோர் அஞ்சலி செய்ய திரண்டு வந்திருந்தனர். இதில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் தலைமையில் தமிழ் எம்.பி.கள் பலரும் வந்திருந்து கண்ணீர் அஞ்சலி செய்தனர். தேசியத்தலைவர் பிரபாகரன் பிறந்து வளர்ந்த வீடு சிதிலமடைந்திருந்தது. பல ஆண்டுகளாக கவனிப்பாரற்று இருந்ததால் அந்த வீடு சிதைந்திருந்தது. மக்கள் திரண்டு அந்த வீட்டை துப்புரவு செய்தனர்.
அதேபோல பிரபாகரனின் அக்காள் ஜெகதீஸ்வரியின் வீடும் சிதைந்திருந்தது. அந்த வீட்டையும் சுத்தப்படுத்தினர் மக்கள்.10-ந்தேதி ஜெகதீஸ்வரியின் வீட்டிற்கு வேலுப் பிள்ளையின் உடலை கொண்டு சென்று அங்கு சைவ முறைப்படி சில சடங்குகள் நடந்தன. சைவ மதத்தில் வேலுப்பிள்ளை தீட்சைப் பெற்றிருக்கிறார். அதனால் சைவ கடவுளான சிவபெருமானுக்கு எப்படி அபிஷேகம் செய்யப்படுமோ அந்த முறைகளில் சடங்குகள் நடந்தன. இந்த சடங்குகள் நடக்கிறபோது தேவாரம், திருவாசகத்தின் பாடல்களை பாடினர்.வேலுப்பிள்ளையின் உடல் "பாடம்' செய்யப்பட்டு சவப்பெட்டியில் வைத்திருந்தனர். முகத்தை ஷேவ் செய்து உடலுக்கு புதிய உடையை உடுத்தியிருந்தனர்.
பாடம் செய்யப்பட்ட உடல் என்பதால் உடலை மீண்டும் ஒருமுறை தண்ணீரால் சுத்தம் செய்வது சரியாக இருக்காது என்பதால் மிகப்பெரிய நிலைக்கண்ணாடி கொண்டு வரப்பட்டு சவப்பெட்டிக்கு முன்னால் நிறுத்தப்பட்டது. கண்ணாடியில் தெரிந்த உடலை சைவ சித்தாந்தப்படி தண்ணீர் விட்டு கழுவினர். தனது கணவர் வேலுப் பிள்ளையின் தலைமாட்டிலேயே அமர்ந்துகொண்டு கணவரின் முகத்தையே கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார் பார்வதி அம்மாள். அவரது கண்களில் இருந்து தாரைதாரையாக கண்ணீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது. எல்லாவித சடங்குகளும் முடிந்ததும் பார்வதி அம்மாளின் கழுத்திலிருந்து தாலியை அகற்றினர். ஓ..வென்று கதறினார்.
நெஞ்சே வெடித்து விடும் போலிருந்தது எங்களுக்கு. பார்வதி அம்மாளின் கதறலுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் மக்களும் வேலுப் பிள்ளையின் உறவினர்களும் கதறினர்.
அதன்பிறகு இரங்கல் உரை. தமிழகத்திலிருந்த வைகோ, பழ.நெடுமாறன், சீமான் ஆகியோரை சிவாஜிலிங்கம் தொடர்பு கொள்ள அவர்கள் வாசித்த இரங்கல் உரைமைக்கில் ஒலிபரப்பப்பட்டது. அதன் பிறகு நான், சிவாஜிலிங்கம், கஜேந்திரன் ஆகியோர் இரங்கல் உரை வாசித்தோம். இதனையடுத்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஊரணிக்கு உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது.
வழி நெடுகிலும் மக்கள் தங்கள் வீடுகளின் இருபுறமும் நின்றுகொண்டு மலர் தூவி வணங்கினர். ஊர்வலத்தில் வந்த இளைஞர்கள் "மாவீரனை இந்த மண்ணுக்கு ஈந்த மாமனிதரே... உங்கள் ஆன்மா அமைதி கொள்ளட்டும். அந்த மாவீரனின் (பிரபாகரன்) கனவு ஒரு நாள் நிறைவேறும். தமிழீழம் கிடைத்தே தீரும்....' என்று வீரமாக கோஷமிட்டுக்கொண்டே வந்தனர். ஊரணியில் வேலுப்பிள்ளையின் உடல் எரியூட்டப்பட்டது.
அவரது உடலுக்கு வேலுப்பிள்ளையின் உறவினர் ராமசாமி தீ மூட்டினார்.ராமசாமிக்குத்தான் அந்த உரிமையை தரவேண்டும் என்று கனடாவில் உள்ள பிரபாகரனின் அக்காள் வினோதினி சொல்லியிருந்ததால் ராமசாமி கொள்ளி வைத்தார். வேலுப்பிள்ளையின் பிறந்த நாள் ஜனவரி 10. அதே நாளில் அவரது உடலும் தகனம் செய்யப்பட்டது'' என்று அந்த துயர நினைவுகளை பகிர்ந்து கொண்டார் திருமா.