டிசம்பர் 13. நள்ளிரவு. எரிபொருள் நிரப்பியாகவேண்டிய தேவை நிமித்தம் இல்யுஷின் 76 ரக சரக்கு விமானம் தாய்லாந்து நாட்டுத் தலைநகர் பாங்காக்-டன் முவாங் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. தரையிறங்கிய சில நிமிடங்களிலேயே அமெரிக்காவின் வெளிநாட்டு ராணுவப் புலனாய்வுப் பிரிவு வழங்கிய எச்சரிக்கைத் தரவுகளின் அடிப்படையில் சோதனை யிடப்பட்டது. அனைவருக்கும் அதிர்ச்சி. சுமார் 40 டன் அளவு எடை கொண்ட ஆயுதங்கள் நேர்த்தியாக மூட்டை கட்டி அடுக்கப்பட்டிருந்தன.
ஆயுதங்களின் விபரப்பட்டியலை தாய்லாந்து அதிகாரிகள் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. ஆனால் கிடைக்கிற தகவல்களின்படி எறிகணைகள், எறிகுண்டுகள், இவற்றோடு நச்சுத்தன்மை கொண்ட ரசாயன அழிவாயுதங்களும் இருந்திருக்கிறது. அந்த ரசாயன நச்சு ஆயுதங்கள் தமிழருக்கெதிரான இன அழித்தல் போரில் சீனா சன்மானம் தந்து சிங்கள ராணுவத்தால் முல்லைத்தீவில் பயன்படுத்தப்பட்ட அழிவாயுதங்களைப் போன்றவை என்று கிடைத்துள்ள தகவல் முக்கியத்துவ மானது. மட்டக்களப்பு- அம்பாறை மின்னேரியா காடுகளுக் குள் முற்றுகையிடப்பட்டு நிற்கும் விடுதலைப் போராட்டத்தில் மிஞ்சிய போராளிகளை எளிதாக அழித்தொழிக்கவேண்டி அவசரமாக கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்களோ என்ற ஐயத்தை இது எழுப்பியுள்ளது.
ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டது, வட கொரியாவில். அணு ஆயுதங்கள் உட்பட பல்வேறு அழிவாயுதங்களை உற்பத்தி செய்து பரிசோதித்துப் பார்க்கும் முக்கிய உலக நாடாக வடகொரியா இன்று திகழ்கிறது. வடகொரியாவின் உலகப் புரவலர், தாளாளர், அரசியற் பாதுகாவலனாக சீனா நாடு நிற்கிறது. அதே சீனாதான் இன்று ராஜபக்சே கும்பலுக்கும் புரவலர்- பாதுகாவலன் என்ற நிலையில், சீனாவின் ஏற்பாட்டில்தான் இந்த அழிவாயுதங்கள் இலங்கைக்காக கொள்வனவு செய்யப்பட்டிருக்கும் என்ற ஐயம் வலுப்படுகிறது.
இந்த ஆயுதங்களுக்கும் தனக்கும் தொடர்பில்லை என இலங்கை அரசு வெளியிட்ட அவசர தன்னிலை விளக்கம் யதார்த்தத்தில் ஐயங்களை அதிகரிக்கவே செய்துள்ளது. இந்த ஆயுத விமானத்தின் அதிகாரபூர்வ பயண வழி அதனை உறுதி செய்கிறது. உக்ரைன் நாட்டு தனியார் நிறுவனம் ஒன்றிற்குச் சொந்தமான இந்த விமானம் வடகொரியாவுக்கு ஆயுதம் ஏற்றிச் செல்லும் வழியில் எரிபொருள் நிரப்புவதற்காய் அசர்பைஜான், எமிரேட்ஸ் நாடுகளில் தரையிறங்கியுள்ளது. வடகொரியாவில் ஆயுதங்களை ஏற்றிவிட்டு திரும்பி வரும் வழியாக தாய்லாந்து, ஸ்ரீலங்கா இரு நாடுகளையும் பயணவழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். உக்ரைன் நாடு இவ் ஆயுதங்களை தான் வாங்கவில்லையென அறிவித்திருக் கிறது. அவ்வாறே தாய்லாந்தும் அறிவித்துள்ளது. உண்மையில் இத்தகு அழிவாயுதங்கள் பயன் படுத்தும் நிலையிலோ, தேவையிலோ அந் நாடுகள் இல்லை. எனில் ஆயுத விமானத்தின் பயண வழியில் குற்றவாளிகளாக மிஞ்சி நிற்கும் ஒரே நாடு ஸ்ரீலங்காதான். சீனாவின் உதவியோடு ஸ்ரீலங்காவுக்காக இந்த அழிவாயுதங்கள் வட கொரியாவிலிருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற தென்பதே புறச்சூழமைவுகள் காட்டும் உண்மை.
மட்டக்களப்பு-அம்பாறை மின்னேரியா அடர்ந்த காட்டுப் பகுதிகளுக்குள் நிற்கும் புலிகளின் அணிகளை முற்றாக அழித்தொழிக்கும் நோக்குடன் கருணா-பிள்ளையான் கூலிப் படைகளின் உதவியோடு மிகப்பெரிய ராணுவ நடவடிக்கை யொன்று இப்போது நடந்துகொண்டிருப்பது பற்றி கடந்த இதழில் எழுதியிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கும். இந்நடவடிக்கையில் பயன்படுத்த வேண்டித்தான் வடகொரியாவிலிருந்து அழி வாயுதங்கள் வாங்கப்பட்டனவா என்ற கேள்வியும் இதனால் வலுவாக எழுகிறது.
முல்லைத்தீவு இறுதி யுத்தத்தின்போது முல்லைத்தீவு ஆனந்தபுரம் தென்னந்தோப்பில் நடந்த வரலாற்றுச் சமரில் புலிகளின் வியப்பூட்டும் எதிர்த் தாக்குதலை முறியடிக்க உதவிய அதே அழிவாயுதங்கள் -தீபன், விதுஷா, கடாஃபி போன்ற மகத்தான தளபதியர்களை காவு கொண்ட அதே ஆயுதங்கள்தான் இந்த விமானத்திலும் வந்து கொண்டிருந்ததாய் கதைக்கப்படுகிறது. தளபதி பால்ராஜ் ஓயாத அலைகள் நடத்திய வதிரையன் பாக்ஸ் சண்டையைப்போல் பன்மடங்கு சாகசங்கள் நடந்த ஆனந்தபுரம் தென்னந் தோப்பு சண்டை, அம்முற்றுகையை உடைத்து வேலுப்பிள்ளை பிரபாகரன் வெற்றிகரமாய் வெளியேறியது எப்படியென்ற மெய் சிலிர்க்கும் உண்மைகளை தமிழுலகம் அறியவேண்டும். அதனை பிறிதொரு தருணத்தில் பதிவு செய்வேன். ஆனால் அந்தக் களத்தில் பயன்படுத்திய அழிவாயுதங்களை இப்போது மீண்டும் பெற இலங்கை ராணுவம் முயன்றிருப்பது மின்னேரியா காடுகளில் நிற்கும் போராளிகளை ரசாயன ஆயுதங்கள் கொண்டு அழிக்கும் நோக்குடன்தான் என்ற கருத்து வலுவாக முன்வைக்கப்படுகிறது.
எத்தனை நூற்றாண்டுகளுக்குப் பின்னாலும் இலங்கைக் குள் இனியொரு தமிழர் விடுதலை எழுச்சி பிறந்துவிடாதபடி ஆணிவேரின் அடி எல்லை சல்லி வேர் வரைக்கும் சென்று அழித்து முடித்துவிடவேண்டுமென்பதில் ராஜபக்சே-கோத்த பய்யா கும்பல் மிகவும் தெளிவான- மூர்க்கம் தணியாத முடிவில் தொடர்ந்து இயங்குவதாகவே விஷயமறிந்த பலரும் கூறுகிறார் கள். மின்னேரியா முற்றுகை மட்டுமல்லாது வேறு பல நடவடிக்கை களையும் ராஜபக்சே கும்பல் செய்து வருவதாய் சொல்லப்படுகிறது.
ராணுவ மொழியில் ""காடுகளை தூய்மை செய்தல்'' என்பார்கள். வன்னிக்காடுகள்தான் தமிழீழ விடுதலைப்புலிகளின் தாய்மடி, தெய்வமடி என்பது அவர்களுக்குத் தெரியும். முல்லைத்தீவு காடுகள் எங்கிலும் ராணுவத்தின் சிறப்பு அணிகள் விரிந்து பரந்து, சிறு சிறு குழுக்களாக ஒருங்கிணைய முயன்றுவரும் விடுதலைப்புலிகளை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாய் இயங்கி வருவதாய் கூறப்படுகிறது. வன்னிக்காடுகளை தூய்மை செய்துவிட்டால் விடுதலைப்புலிகளின் மீள் எழுச்சிக்கு நித்திய தடை நிகழ்த்திவிட முடியுமென்பது அவர்களின் கணக்கு.
முல்லைத்தீவு காடுகளுக்குள் இலங்கை ராணுவம் எதிர்பார்த்த அளவிலான விடுதலைப்புலிகளை காண முடியாததால், அவர்கள் ஒருவேளை அம்பாறை காடுகளுக்குள் மின்னேரியாவை நோக்கி நகர்ந்திருப்பார்களோ என ராணுவம் சந்தேகிக்கிறது. இப்போதைய பெரும் ராணுவ நகர்வுக்கு அதுவும் ஓர் முக்கிய காரணம்.
ஆக, மின்னேரியா காட்டுப் பகுதிகளில் யார் தலைமையில் புலிகள் நிற்கிறார்கள் என்பதிலும்- புலிகள் நிற்கிறார்கள் என்பது முக்கிய செய்தியாக விடிகிறது. கேணல் ராம் தொடர்பான கடந்த இதழைப் படித்தபின் பல திசைகளிலிருந்து பலவிதமான தரவு கள் வந்தன. கேணல் ராம் ராணு வத்தால் கைது செய்யப்பட்டது உண்மையே என்றும், அதற்கு உதவி புரிந்தவர்கள் புலிகளின் ராணுவ புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றி இப்போது துரோகியாய் மாறியுள்ள பிரபா குழு என்றும், ராமுடன் கைது செய்யப்பட்டவர்களை சித்ரவதை செய்து அவர்களைப் பயன்படுத்தி ராமுக்கு வலதுகரமாய் நின்ற தளபதி நகுலனையும் கைது செய்துவிட்டார்கள் என்றும் ஒரு தரப்பு தரவுகள் வந்து குவிந்தன. அதற்கு நேர்மாறான தரவுகள் பிறிதொரு தரப்பிடமிருந்து வந்தன. கேணல் ராம் ராணுவத்துடன் இணைந்துவிட்டதாய் முன்பு வந்த செய்திகளின் பின்னணியில் உண்மையில் நடந்தது என்னவென்றால் -காயமுற்றிருந்த ஒரு தொகுதி போராளிகளை செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்க காட்டுக்குள் இருந்து கொண்டு கருணா குழுவின் உதவியை நாடினார்கள். அந்த வாய்ப்பினை பயன்படுத்தி கேணல் ராம் மற்றும் உடன் நின்ற தளபதியர்களை முற்றுகையிடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்கிறார்கள். முன்பு நாம் கூறியதுபோல் எது உண்மை, எது பொய் என்பதை காலம் தெளிவுபடுத்தும். ஆனால் இன்றைய நிலையில் ஒன்று மட்டும் தெரிகிறது. புலிகள் முற்றாக அழிந்துவிடவில்லை. இன்னும் அவர்கள் இருக்கிறார்கள், இயங்குகிறார்கள். மின்னேரியா காடுகளில் மட்டுமல்ல -உலகின் பல்வேறு பகுதிகளிலும்.
மின்னேரியா முற்றுகையை புலிகளின் எஞ்சிய அணிகளால் தாக்குப்பிடிக்க முடியுமா என கொழும்பு நகரிலுள்ள தமிழ் ஆய்வாளர் ஒருவரை தொலைபேசி உரையாடலின்போது கேட்டேன். அதற்கு அவர் தந்த பதில் : ""நாம் கதைப்பது போல் எளிதானதல்ல. உணவு, மருத்துவ சிகிச்சை, பொது மருந்து தேவைகள், ஆயுத-எரிபொருள் சப்ளை ஆகியவை அவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். கசப்பானதோர் நிஜம் என்னவென்றால் ராணுவ முற்றுகை நீடிக்கும் காலம்வரை தீயில் வெந்த உணவை அவர்கள் உண்ண முடியாது. நெருப்புப் புகை, இருக்கும் இடத்தை எளிதாகக் காட்டிக் கொடுத்துவிடும். மற்றபடியும் வெளியிலிருந்து அரிசி போன்ற உணவுப் பொருட் களை அடர்ந்த காட்டுக் குள் கொண்டு செல்வதும் இன்றைய நிலையில் அவர்களால் இயலாத காரியம். காட்டு விலங்குகளின் பச்சைக்கறியும், இலைகளும் உண்டுதான் உயிர்வாழ வேண்டும்'' என்றார்.
கிளிநொச்சியில் நான் நின்றிருந்த நாட்களில் சிறப்பு அதிரடிப்படையணியின் தளபதியொருவர் கூறியது என் நினைவுக்கு வந்தது : ""காட்டுக்குள் முற்றுகையிடப்பட்ட நிலையில் போராடுவதென்பது அனுபவித்துப் பார்த்தால் மட்டுமே புரியும். புற்பூண்டுகளை மட்டும் தின்று வாழ்கின்ற நாட்களாய் சில அமையும். குடிநீர்கூட கிடைக் காது. காட்டுத்தேனை வடித்தெடுத்து , மரங்கொத்தி மரத்தில் துளையிடுவது போல் பெரிய மரங்களில் துளையிட்டு, மான்-மிளா போன்ற விலங்குகளை வேட்டையாடி கறித்துண்டு களாக்கி அம் மரப்பொந்துகளில் தேனையும் கறித்துண்டு களையும் இட்டு நிரப்பி மூடிவிடுவோம். இரண்டு மாதங்கள் கடந்து எடுத்து உண்டால் தேவாமிர்தம்போல் இருக்கும். முக்கியமாக ஒரு நாளைய உடல் சக்தி தேவைக்கு ஓரிரு துண்டுகள் சாப்பிட்டாலே போதும்'' என்றார்.
காடுசார் சிறப்பு நடவடிக்கைகளுக்கான அத்தளபதி தன் உரையாடலினூடே குறிப்பிட்ட மறக்க முடியாத வரிகள் இதனை எழுதுகையில் என் கண் முன் விரிகின்றன: ""காடுகளுக்குள் அப்படிக் கஷ்டப்பட்டு, சகல துன்பங்களையும் உள்வாங்கி முறுக்கேறும் புலிகள்தான் வெளியே முனைக்கு வரும்போது சூறாவளியாய் சுழல்வார்கள், வெயிலோடு கரைவார்கள், இரவோடு விழிப்பார்கள், கடற்புயலோடும் களமாடுவார்கள்.'' ஆம் அம்பாறை, மணலாறு, மின்னேரியா காடுகளில் புடமிடப்பட்டு முறுக்கேறும் புலிகள் ஒவ்வொருவரும் ஒருநாள் கேணல்களாய், பிரிகேடியர்களாய் வெளியே வருவார்கள்.