பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Monday, November 2, 2009

ஒரு போராளியின் கடிதம்! - ஜெகத் கஸ்பர்

ஈழவிடுதலைப்போராட்ட அரசியற் களத்திற்குள் நான் அறிமுகமாகியது மிகப்பெரியதோர் பின்னடைவின், நெருக்கடியின் காலத்தில். வெளியேறியது புலிகள் ஆனையிறவில் ஈழக்கொடி உயர்த்திய வெற்றியின் நாளில். மீண்டும் உள் நுழைந்தது பேரிடர் சூழ்ந்த இறுதிப்போர் நாட்களில். நக்கீரன் வாசகர்கள் சந்திக்கையில் கேட்கும் கேள்வி- ""இத்தனை விபரங்கள் எப்படி உங்களுக்கு சாத்தியமாயிற்று?'' என்பது. கடந்த ஆகஸ்ட் மாதம் துஷாந்தன் என்ற போராளி எழுதிய கடிதத்தினை பதிலாகப் பதிவு செய்ய விழைகிறேன்.

12.08.2009அன்பின் ஜெகத் அண்ணா,

தங்களது "மறக்க முடியுமா?' தொடர் வெளிவரத் தொடங்கியதில் இருந்து, தொடர்ந்து படித்து வருகிறேன். ஈழ விடுதலைப் போராட்டத்தை வைத்துப் பிழைத்துக்கொண்ட பல சந்தர்ப்ப வாதிகளை இனம் காணக்கூடியதான இந்தப் போர் ஓய்ந்து, எம்மினம் அவல வாழ்வு வாழும் நாதியற்ற நிலையில், தங்களது எழுத்துக்கள் எம்மை புத்தெழுச்சி கொள்ள வைக்கின்றன. காலத்தின் தேவையான பலவற்றை உங்கள் நலன் பற்றியும் கவலை கொள்ளாது, அறத்துடன் முன்வைக்கிறீர்கள். "ஜெயசிக்குறுய்' ராணுவ நடவடிக்கை காலத்தில் தாங்கள் செவிவழியால் ஆற்றுப்படுத்தியது போலவே, தற்போதைய சூனிய நிலையிலும் தங்கள் எழுத்துக்கள் மருந்திடுகின்றன.பத்து வருடங்கள் கழிந்த நீண்டதோர் காலப் பகுதியின் பின் முற்றிலும் மாறுபட்ட பல சூழல்களைத் தாண்டிய பிறகு உங்கள் நினைவுகள் மடைதிறக்கின்றன. கம்பீரமான, நம்பிக்கை வரிகள் சுமந்து சந்தத்துடன் எம் காதுகளில் தங்கள் குரல் ஒலித்த ஞாபகங்கள், ஓடி வருகின்றன.தங்கள் குரலும், குரலைக் கேட்க உதவிய வேரித் தாஸ் வானொலி தமிழ்ப்பணியும் என்னுடன் ஒன்றித்துப் போய்விட்ட நினைவுகளைச் சொல்ல, கொஞ்சம் எனது சுய புராணத்தையும் சொல்லிவிடுகிறேன்.

அண்ணா, (உங்களை அருட்தந்தை என மத அடையாளத்தில் சுருக்கிட மனம் ஒப்பவில்லை) எனக்கு வயது 24. (85-ல் பிறந்தவன்) பிறந்தது வல்வெட்டித் துறையில் இருந்து ஒரு கிலோமீற்றர் தூரமேயான "கெருடாவில்' எனும் சிற்றூர். என் அம்மாவின் அப்பா (தாத்தா - ஐயா என அழைப்போம்), ஒரு தமிழ் ஆசிரியராக இருந்தவர். வல்வெட்டித் துறை யின் மையப் பள்ளியான "சிவகுரு' வித்தியாசாலை யில் இருபது வருடங்களாக கற்பித்தவர். (அறுபது, எழுபதுகளில்) பின்னாளில் போராட்டத்தின் முது கெலும்புகளாக விளங்கிய பலர் (கிட்டு, மாத்தையா, வினோத் என பலர்) அவரிடம் படித்தவர்கள்.வீட்டில் அம்மம்மாவும் தமிழாசிரியையாகவே இருந்ததால் இயல்பாகவே தமிழ், ஈழவிடுதலை, தமிழுணர்வு என்பன என் சிறுவயது முதலே என்னுள் முளைவிட்டிருந்தது. ஐயாவின் இறுதி காலத்தில் கண் தெரியாது போய்விட, அவருக்கு செய்தித்தாள் படித்துக் காட்டும் வேலை எனக்கு. இதே காலத்தில் செய்தி ஊடகங்கள் என்றால் (92, 93-களில்) பி.பி.சி.தான். ஆனந்தி அக்காவின் குரலில், ஓரளவு நடுநிலையான நம்பகமான செய்திகள், விரும்பிக் கேட்போம். இந்த வேளையில்தான் சபா அண்ணாவின் குரலில் வேரித்தாஸ் வானொலி எனக்கு அறிமுகமானது.என்ன வேலை இருந்தாலும், 7.45-ற்கும், 9.15-ற்கும் ஐயாவின் "றழி' சைக்கிளின் பக்கத்தில் கூடிவிடுவோம். சைக்கிள் டைனமோவில் இருந்து உண்ர்க்ங்/Diode/Transister உபயத்துடன் கிடைக்கும் சிறிது இரைச்சலுடனான சிற்றலை மீற்றர்களின், உண்மையின் தூதுவர்களாய் பல்லாயிரம் கிலோ மீற்றர்களுக்கு அப்பாலுள்ள வேரித்தாஸ் தமிழ்ப் பணி செய்திகளை கேட்போம். வேரித்தாஸில் சபா அண்ணா ஓய்வு பெற்று செல்லும்போது புதிதாக வருபவரின் குரல் எப்படியோ? என ஏங்கி யிருந்தபோதுதான் -தெளிவான நீரோட்டம் போன்ற, கம்பீரமான, சந்தத் தமிழில் செய்தி வழங்கும் உங்களைப் பெற்றோம்.தங்கள் மந்திரக் குரலில் உறவுப் பாலச் செய்திகள் ஒலிபரப்பாகும் அந்த ஐந்து, ஆறு நிமிடங்களும் Sielence Bell இங்ப்ப் ஒலித்தது போலவே இருக்கும். டைனமோவின் இரைச்சல், பழைய வானொலிப் பெட்டியின் சிற்றலை செய்யும் குளறுபடிகள் என எல்லாவற்றையும் தாண்டி செய்தி "பிடிக்க' எல்லோராலும் முடியாது. சிலவேளைகளில் சரி யான பீற்றர் கிடைக்காது, அக்கம் பக்க பீற்றர்களின் விரோதமான ஒலிகளைக் கேட்டு, எரிச்சலுடன் வானொலியை அணைத்துவிட்டு அயல் வீடுகளுக்கு ஓடிச்சென்று செய்தி கேட்போம். வலிகள் மட்டுமே தெரிந்த, வசந்தங்கள் ஒருபோதும் எட்டிக்கூடப் பார்த்திராத, அவலங்கள் சுமந்த எம் இனத்திற்காய், எந்த முன்தொடர்பும் இன்றி சரிவர எம் மனநிலை புரிந்து மருந்திட்டுத் தடவி, அரவணைத் தது தங்கள் குரல். மணிக்கூட்டில் 7.58, 7.59 என நேரம் ஓடும்போது மிக விரைவாக ஆனால் தெளிவு குன்றாது செய்தி வாசிக்கும் இலாவகம் தங்களுக்கு மட்டுமே வாய்ந்த ஒன்று. மேலும் அடிக்கடி எமக்காக நீங்கள் செய்யும் பிரார்த்தனையும், வெந்துபோன எம் உள்ளங்களுக்கு மருந்திட்டன. முகம் தெரியாது தங்கள் குரலால் மட்டுமே தொடுப்பு பெற்ற நாங்கள் உங்கள் குரலுக்கு அடிமையானோம். பின்னர் போராளி ஆகி களங் களில் நின்றபோதும், யாரின் தயவிலாவது கிடைக்கும் பற்றரிகளை வேரித்தாஸ் கேட்கவென கவனமாக வைத் திருந்தேன். (காவலரண்களில் சைக்கிள் கிடைக்காது). செய்திகள் கேட்டபின் பற்றரிகளை கழற்றி வெளியில் வைத்தும், பவர் குறையும்போது வெயிலில் வைத்தும் வாயால் கடித்தும் கூடிய காலம் அவற்றைப் பாவிப்போம்.நாம் எடுத்த உறுதிமொழிகளும் அடிக்கடி பொறுப்பாளர்களுடன் நடக்கும் கலந்துரையாடல்களின் போது கிடைக்கும் ஊக்கமும் இலக்கு நோக்கி எம்மை எவ்வாறு உறுதியுடன் பயணிக்க வைத்ததோ, அதேயளவு பங்கு தங்கள் குரலுக்கும் இருந்தது.கடுமையான களங்களின் பின்பும், தோழர்களை இழந்த துயரின்போதும் கசியாத கண்கள் தங்கள் செய்தியறிக்கைகளின்போதும், உறவுப்பால நிகழ்ச்சிகளை வழங்கும்போதும் கசிந்து விடுவதுண்டு.இப்படியாக தங்கள் குரலை வைத்து, கம்பீரமான, நெடிதுயர்ந்த, ஒரு "பயில்வான்' தோற்றத்துடன் (எங்கள் சொர்ணத்தார் போல) ஒருவரையே என் மனதில் கற்பனை செய்திருந்தேன். இவ்வேளையில் தங்களுக்கு எழுதி வேண்டியதின்படி தங்கள் கலண்டர் புத்தகம் ஒன்றைப் பெற்றிருந்தேன். (98 ஆக இருக்க வேண்டும்) அதில் குரலுக்கும், தோற்றத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லாத தங்களைப் பார்த்து ஏமாற்றமே மிஞ்சியது. இறுதியில் இப்பள்ளி மாணவன் போன்ற உருவத்திற்கா அந்தக் குரல் சொந்தமானது என திகைப்படைந்தேன். கையடக்கமான அந்தக் கலண்டர் இன்றும் யாழிலுள்ள எங்கள் வீட்டு நூலகத்தில் உள்ளது.

மலேனியத்தின் தொடக்கத்தில் அற்றுப்போன தங்களுடனான தொடர்பு (குரல்) பின் எப்போதுமே எனக்கு கிடைக்கவில்லை. வேரித்தாஸ் பணி முடிந்து, புலம்பெயர் ஈழத்தமிழர்கள் மத்தியில் சுற்றுப்பயணம் செய்து தாங்கள் ஆற்றிய பணிகள் பற்றி அறிந்திருந்தேன். தங்கள் உரைகளைக் கேட்ட உறவுகள், நெகிழ்ந்து போய் எமக்கான ஆதரவுகளை அள்ளி வழங்கியதையும், கேட்டு மகிழ்ந்தேன். இப்பணிகள் காரணமாக சில நாடுகளுக்கு தங்களுக்கு விசா மறுக்கப்பட்டதாயும் கேள்விப்பட்டிருந்தேன். பின் (2002 புரிந்துணர்வு உடன்படிக்கை காலத்தின்பின்) வெளியிடங்களில் நின்றபோது, தாங்கள் வன்னி வந்து சென்ற சேதி அறிந்தேன்.இடையிடையே tamilnaatham.com இணைய தளத்தில் தங்கள் நேர்காணல்களை கேட்டிருந்தேன். "அண்ணைக்கு' எழுதியிருக்கக் கூடிய கடிதங்களுக்கும் பின் உங்களுக்குத்தான் மனம் திறந்து எழுத வருகிறது. தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களை "அண்ணை' என விளிக்கும் பாக்கி யம் பெற்றவன் நான். அந்த உறவில்தான் எம் உறுதியும் மாசுபடாது இருந்தது.வெறுமனே ஆயுதம் தாங்கிய மனித இயந்திரங்களாய் எம்மை ஆக்காது நல்ல பண்பு களை எம்மில் வளர்த்து, சமூகம், அரசியல், வரலாறு, மருத்துவம், விஞ்ஞானம் என எதிலுமே தேடலுடன் கற்கும் ஆர்வத்துடன் எமை வளர்த்தவர். பல்வேறு தேவைகளைக் கருதி உலக நாடுகளெங்கும் தன் பிள்ளை களை அனுப்பி, "தமிழீழம்' என்ற நெடுங்கனவு கண்டவர் எம் தலைவர்.தவறான நடத்தை, போதை எதற்கும் அடிமையாகாது, "அரசன் எவ்வழி அவ்வழி குடிகள்' என்பதற்கு இலக்கணமாய் வாழ்ந்து காட்டியவர். குழந்தைகள், இயலாதவர்கள், அனாதைகள், காயமடைந்த போராளிகள், முதியோர் என மனித படைப்புகளிலேயே கடவுளை தரிசித்து போராளிப் பிள்ளைகளுக்கு ஆதர்சமாய் இருந்தவர்.தெளிவற்ற, கரடுமுரடான, சதிகளும்- சகதிகளும் நிரம்பிய பெரும் குழிகள் கொண்ட பாதையில் பலர் முயன்றும் ஓட்ட முடியாது போய்விட்ட "தமிழீழ தேசம்' என்ற வண்டியை மூன்று தலைமுறைகளுக்கும் மேலாய், விடாப்பிடியாய் ஓட்டிச் சென்ற ஓட்டியாய் அவரைப் பார்க்கிறேன்.மிக நீண்ட பாரம்பரியமாய் தொடர்ந்த, இறுக்க மான, மனிதாபிமானங்களைத் தூரவைத்துப் பார்க்க சாதியக் கட்டமைப்புகள் சிதைந்து போகவும், பெண் ணடிமை ஒழிப்பு, சீதன ஒழிப்பு போன்ற முற்போக்கு விடயங்கள் பக்கவிளைவுகளாக தொடரவும், நிலப் பரப்பிலும் எண்ணிக்கையிலும் சுண்டுவிரல் அளவேயான ஈழத்தமிழ் இனத்தை உலகெங்கும் பேசச் செய்ததும், தமிழினத்தின் பாரம்பரிய குணங்களை மீண்டும் எழுச்சி பெற வைத்ததும்... கடமை, கண்ணியம், கட்டுப்பாடுடன் கூடிய புதியதொரு சமுதாயத்தை வழங்கியதும் ஆயுதப் போராட் டம் என்பதற்கு அப்பால், போராட் டம் எமக்கு வழங்கியவை.அண்ணா, ஏறத்தாழ ஒரு தலைமுறைக்கும் மேற்பட்ட கால வரலாறு தொக்கிப்போய் எம்முன் சூனியப்பெருவெளி சூழ்ந்து போயுள்ளது. இருந்தும் தடை களையும் சோதனைகளையும் கண்டு சோர்வடையாது, எஞ்சிய வர்களுடன் எம் இலக்கு எட்டப் படும். தன் இன விடிவு ஒன் றையே மனதில் விரித்து சாவை அணைத்த இருபத்தைந்தாயிரம் மாவீரர்களதும், தம் பொருளை, இருப்பிடங்களை, அவயவங் களை, உயிரைக்கூட அர்ப்பணித்த ஆதரவாளர்களதும் மக்களதும் கனவுகள் வீண்போகா. மீண்டும் யாருமற்றிருந்த இவ்வேளையில் நக்கீரன் எழுத்துக்கள் ஆறுதல் அளிக்கின்றன. தொடர்ந்து எழுதுங்கள். இதுவரை வெளிவராத உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வாருங்கள்.
நன்றி!நண்பர்களே!விடுதலைப் போராட்டம் கண்டுள்ள பின்னடைவும் அது எழுப்பியுள்ள சில வெற்றிடங்களும் முதலில் பலிகொள்வது உண்மையைத்தான். எப்போதோ நிறைவாகி யிருக்கிற இந்த "மறக்க முடியுமா' பகுதி தவிர்க்க முடியாமல் தொடர்வதும் சிங்கள பேரினத்திற்கு எதிரான போரில் ஓர் அங்கமாக உண்மைக்கான போரையும் எடுத்துச் செல்வதற் காகத்தான். உண்மைகள் நமது முழு விடுதலையை சாத்தியப்படுத்தும்.