பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Monday, November 2, 2009

அறுக்கப்படும் தமிழச்சிகளின் கர்ப்பப்பைகள்.

முள்வேலி முகாமில் உள்ள தமிழர்களை நிபந் தனைகளின்றி விடுவிக்க வேண்டும்- இதுதான் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் கோரிக்கை. ராஜபக்சேவிடம் இந்த கோரிக்கையை வைப்பதால் எந்தப் பலனுமில்லையென்று தமிழக மக்களிடம் பிரச்சாரம் செய்து இந்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக 4 திசைகளிலிருந்து தொடங்கிய பரப்புரை பயணம் திருச்சியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்துடன் அக்டோபர் 29-ந் தேதி நிறைவடைந்தது.தூறிக்கொண்டே இருந்த மழையிலும் உணர் வாளர்கள் திரண்டிருக்க, இயக்கத்தின் ஒருங்கிணைப் பாளர் பழ.நெடுமாறன், ""விடுதலைப்புலிகள் என்று 12500 தமிழர்களை தனியாக ஒரு முகாமில் வைத்திருக்கிறார்கள். இவர்களின் கதி என்ன என்றே தெரியாது. இலங்கை சென்ற குழு இவர்களைப் பற்றி விசாரித்ததா? வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தால் நம்மை வரலாறு மன்னிக்காது. நம்மால் முடிந்தவரை ஏதாவது வழிகளில் உதவுவோம்'' என்றார்.சி.பி.ஐ. கட்சியின் மூத்த தலைவர் நல்ல கண்ணு, ""இங்கே பெய்யும் சாதாரண மழைக்கே நாம் ஓடி ஒளிகிறோம். ஆனால், இலங்கையில் ஈசானி மூலையில் மழை எப்படி இருக்கும்? அவர்கள் படும் கஷ்டங்களை எண்ணிப்பார்க்க வேண்டும்'' என்றார் சோகமான குரலில். சி.பி.ஐ.யின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனின் வார்த்தைகள் சூடாக இருந்தன. ""முள்வேலி முகாம்களில் உள்ள இளம்கர்ப்பிணிகளின் கர்ப்பப் பைகளை சிங்கள டாக்டர்கள் அறுத்து எறிகிறார்கள். தினமும் 60 கர்ப்பப்பைகள் அறுக்கப்படுகின்றன. அறுக்க மறுத்த 2 சிங்கள டாக்டர் களை கொன்றுவிட்டார்கள். எல்லா விவரமும் ஐ.நா.சபைக்கு தெரிவிக் கப்பட்டுள்ளது. தேதி குறிப்பிட்டு, முகாமில் உள்ள தமிழர்களை விடுதலை செய்யாவிட்டால் தமிழகம் சும்மா இருக்காது'' என்றார் தா.பா.ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தனது ஆவேசப் பேச்சில், ""தமிழக இளைஞர்கள் கணினி மூலமும் செல்போன் மூலமும் இலங்கை அவலங்களை வீட்டுக்கு வீடு போட்டுக் காண்பித்து தமிழக மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்த வேண் டும். புலிகள் இல்லை என்று யார் சொன்னது? புலிகளுக்கு நாம் எல்லா உதவியும் செய்வோம். உங்கள் தடையெல்லாம் எங்களுக்கு கால் தூசுக்கு சமம்'' என்றார். அவர் பேசியதும் கூட்டம் லேசாக கலைந்தபோதும், உணர்வாளர்களும் கொங்கு இளைஞர் பேரவை தனியரசு திரட்டிவந்திருந்த ஆட்களும் நிறைந்திருந்தனர். நெடுமாறன், தா.பா., வைகோ ஆகியோரது பேச்சில் கலைஞர் தாக்குதல் காரசாரமாக இருந்தது.பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ""தமிழகத்தில் 7 கோடி மக்களில் சரிபாதி பேர் பெண்கள். அவர்களில் 99% பெண் களுக்கு இலங்கைப் பிரச்சினை பற்றி தெரியாது. தமிழகத்தில் 72 கட்சிகள் இருக்கின்றன. இந்த மேடையில் இருக்கும் கட்சிகளைத் தவிர வேறு யாருக்கும் இப்பிரச்சினையில் அக்கறையில்லை. ஐந்தாம் கட்டப் போர் நடத்தவேண்டிய நிலையில் இருக்கிறோம். தனிநாடுதான் அந்த மக்களுக்குத் தீர்வு'' என்றார் அழுத்தமான குரலில். உணர்வாளர்களின் நெஞ்சில் நம்பிக்கையை விதைத்துள்ளது இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் பிரச்சாரப் பயணம்.