பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Thursday, November 5, 2009

மோகன் சேர்த்த சொத்து!


""எம்.பியோட கார் எங்கே நிக்குது?''""காரெல்லாம் கிடையாது. எம்.80 ஸ்கூட்டர்தான் எங்க எம்.பியோட வாகனம். பங்களாவோ தனி வீடோ கூட அவருக்கு கிடையாது. ஹவுசிங் போர்டு வீடுதான்.''-10 வருடம் தொடர்ந்து எம்.பியாக இருந்த ஒருவருக்கு பங்களாவோ காரோ இல்லை என்பது அரசியல் அதிசயம். மதுரை தொகுதி மக்களுக்கு அது பெருமிதம். அந்த பெருமிதத்திற்குக் காரணமான, சி.பி.எம் கட்சியின் முன்னாள் எம்.பி. மோகனின் மறைவு மதுரையில் கட்சி கடந்த கண்ணீரை வரவழைத்துவிட்டது.அல்சர் நோயினால் பாதிக்கப்பட்டு, கடந்த சில காலமாகவே சிகிச்சை பெற்று வந்தார் மோகன். கடந்த எம்.பி தேர்தலில் அந்த நோயுடனேயே களம் கண்டார். அல்சர் அதிகமான நிலையில், சென்னை அப்பல்லோ மருத்துவ மனை யில் அனுமதிக்கப்பட்ட மோக னின் உயிர், தேவர் குருபூஜை தினமான அக் டோபர் 30-ந் தேதி பிரிந்தது. முதல்வர் கலைஞர் நேரில் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு, மோகனின் இழப்பு குறித்து உருக்கமுடன் கருத்து தெரிவித்தார். அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெ.வும் இரங்கல் அறிக்கை வெளியிட்டார்.""தோழருக்கு அதுதாங்க சிறப்பு. அவரோட கட்சி சி.பி.எம். ஆனா, எல்லா கட்சித் தலைவர்கள்கிட்டேயும் தொண்டர் கள்கிட்டேயும் மதிப்பு உண்டு. அவரது ஜாதி, பிரமலைக்கள்ளர். ஆனா, எல்லா சமுதாயத்தினர்கிட்டேயும் சரிசமமா பழகுவார். மக்கள் நலன்தான் அவருக்கு முக்கியம். சொந்த விஷயங்கள் இரண்டாம் பட்சம்தான்'' என்கிற மதுரை சி.பி.எம் காரர்கள் ஒரு சம்பவத்தையும் விளக் கினார்கள்.""மோகனின் மனைவி பூங்காவனம் பள்ளி ஆசிரியை. அவர் விழுப்புரம் நகராட்சி பள்ளி ஒன்றில் வேலை பார்த்துவந்தார். மோகனோ மதுரை எம்.பி.யாகிவிட்டார். இரண்டுபேரும் ஒரே இடத்தில் இருந்தால் நல்லா இருக்கும்னு குடும்பத்தினர் நினைச் சாங்க. ""முறைப்படி எப்போது மாறுதல் கிடைக்குமோ அப்ப மதுரைக்கு வரட்டும். நான் சிபாரிசு செய்ய மாட்டேன். மக்களுக் காகத்தான் நான் எம்.பி. யாகியிருக்கேன். மனைவிக்காக அல்லன்னு மோகன் சொல்லிட் டார். மனைவி வேறு மாவட் டத்தில் இருந்ததால் ஓட்டல் சாப்பாடுதான். சில நேரங்களில் அவரே சமைப்பார். பிள்ளை களுக்கும் அவர் சமையல்தான். சாப்பாட்டு விஷயத்தில் கவனம் இல்லாமல் இருந்ததால் ஏற்பட்ட அல்சர்தான் இன்னைக்கு அவர் உயிரையே பறிச்சிடிச்சி'' என்று வேதனையோடு சொன்னார்கள் தோழர்கள்.அ.தி.மு.க கூட்டணியில் 1999-லும் தி.மு.ககூட்டணியில் 2004-லும் எம்.பியானார் மோகன். 2009 தேர்தலில் மதுரையில் அழகிரி போட்டியிடுகிறார் என் றதுமே அ.தி.மு.கவினர் பலரும் ஒதுங்கிக்கொள்ளத் தொடங் கினர். தொகுதி சி.பி.எம்.முக்கு ஒதுக்கப்பட, மோகன்தான் அழகிரியை எதிர்க்க சரியானவர் என போயஸ் கார்டனிலிருந்தே தெரிவிக்கப்பட்டது. எளிமை தான் மோகனின் பலம்.எம்.80 வாகனத்தில் காலையில் கிளம்பினால் கட்சி யினர், பொதுமக்கள் ஆகியோரை சந்தித்துப் பேசி, அவர்களின் பிரச்சினைகளைக் கேட்பார். அதிகாரத்தில் இருப்பவர்களிடம் மக்கள் பிரதிநிதி என்ற முறையில் பேசி, தொகுதிக்கு வேண்டியதை செய்து தருவது மோகனின் வழக்கமாக இருந்தது. கூட்டணி மாறுபட்டிருந்த நேரத்திலும் கலைஞரிடம் பேசி, மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றச் செய்தார். உத்தபுரத்திற்கு பிருந்தாகாரத் வந்தபோது போலீசுடன் பிரச்சினை ஏற்பட, அதை முதல்வரின் கவனத்திற்குக் கொண்டுசென்று நிலைமையை சுமுகமாக்கியவர் மோகன்தான்.மதுரையில் அவரது உடலுக்கு ப.சிதம்பரம், மு.க.அழகிரி உள்ளிட்ட பெருந்தலைகளும் கட்சித் தோழர்களும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்த நேரத்தில், கண்ணீர் மல்க நின்றுகொண்டிருந்தார் பாப்பா பட்டி ஊராட்சித் தலைவர் பாலுசாமி. சாதி ஆதிக்கத்தால் 10 வருடமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடியாமல் இருந்த தலித் ஊராட்சிகளான பாப்பா பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலத்துக்கு 2006-ல் தேர்தல் நடத்த ஆட்சியாளர்களுடனும் அப்போதைய மாவட்ட கலெக்டர் உதயச்சந்திரனுடனும் தோளோடு தோள் நின்று பணியாற்றி, அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றதில் முக்கிய பங்கு மோகனுக்கு உண்டு.அந்த நினைவலைகளே கண்ணீராகப் பெருகியதால் உணர்ச்சிபொங்க நம்மிடம் பேசினார் பாலுசாமி. ""முக்குலத்தோர் நிறைந்துள்ள பகுதியில் ஒரு தலித் ஊராட்சித் தலைவரா நான் இருக்கிறேன்னா, என்னை அந்த பதவி யில் உட்கார வைத்த பெருமை கலைஞருக்கும் மோகனுக் கும்தான். தன்னோட சாதி அடையாளத்தை தோழர் மோகன் எங்கேயுமே வெளிப்படுத்தியதில்லை. சாதாரண வட்டச்செயலாளர்கூட ஸ்கார்ப்பியோ காரில் பவனி வருகிற காலத்தில், 10 வருசம் எம்.பி.யா இருந்தவர் எம்.80யிலே தொகுதியை சுற்றி சுற்றி வந்ததை நாங்க பார்த்தோம். எங்க எம்.80 எம்.பி போல ஏழேழு ஜென்மத்துக்கும் இன்னொரு எளிமையான எம்.பி.யை பார்க்க முடியுமான்னு தெரியலீங்க. அவர் எங்களைவிட்டு தற் காலிகமா பிரிஞ்சிருக்கிறதாகத்தான் நினைக்கிறோம். எங்க நெஞ்சில் அவர் நிரந்தரமா இருக்காரு'' என்றார் கண்ணீரைத் துடைத்தபடி.மோகன்-பூங்காவனம் தம்பதியருக்கு 5 பிள்ளைகள். நேர்மையும் மக்கள் செல்வாக்கும்தான் தங்களின் அப்பா சேர்த்து வைத்துள்ள சொத்து என்பதை மோகனின் குடும்பம் பெருமையோடு நினைக்கிறது. இறுதி ஊர்வலத்திலும் அது வெளிப்பட்டது. மதுரையில் பி.டி.ஆர். மறைவுக்கு 50ஆயிரம் பேர் திரண்டனர். அதன்பிறகு, மோகனுடைய இறுதி ஊர்வலத்தில்தான் பொதுமக்கள் தன்னெழுச்சியாகக் கலந்துகொண்டதைப் பார்க்க முடிந்தது. கட்சியின் செங்கொடி, தோழர்களின் வீரவணக்கம், மக்களின் கண்ணீர் இவற்றிற்கிடையே தன் கடைசிப் பயணத்தை மேற்கொண்டார் முன்னாள் எம்.பி. மோகன்.நேர்மையும் எளிமையுமான அரசியல்வாதியை சுமந்து சென்ற அந்த எம்.80 வாகனம் , இனி இப்படிப்பட்ட ஒருவர் தன் மீது சவாரி செய்வாரா என்ற ஏக்கத்துடன் நின்று கொண்டிருக்கிறது.