கைகள் கட்டப்பட்ட நிலையில் முழு நிர்வாணமாக தமிழ் இளைஞர்களை இலங்கை இராணுவம் சுட்டுக்கொல்லும் காட்சிகள் ஆகஸ்ட் மாதம் வெளியாகியிருந்தது.
உலகில் அதிர்வலைகளை கிளப்பியிருந்த அந்த வீடியோக் காட்சிகள், போலியானவை என இலங்கை அரசாங்கம் கூறியது மட்டுமல்லாது, அவுஸ்திரேலியாவில் உள்ள நிபுணர்களைக் கொண்டு தான் அந்த வீடியோவை பரிசீலித்ததாகவும் அதன் பெறுபேறுகளின்படி அது போலியானது என நீரூபிக்கப்பட்டதாகவும் இலங்கை தெரிவித்திருந்தது.
இந்த ஆய்வை நடத்தியவர் ஒரு அவுஸ்திரேலியா வாழ் சிங்களவர் என்பது பின்னர் தெரியவந்தது.
இருப்பினும் தற்போது அமெரிக்காவில் இயங்கிவரும் சுதந்திரமான அமைப்பொன்று இந்த வீடியோக் காட்சிகளை ஆராய்ந்து அவை உண்மையானவை எனக் கூறியுள்ளனர். டைம்ஸ் நிறுவனம் இந்த வீடியோவை தொழில் நுட்பரீதியாக ஆராயத் திட்டமிட்டு இதனை பிரட்ரிக் எனப்படும் நபரிடம் கையளித்துள்ளனர்.
பிரட்ரிக் என்பவர் அமெரிக்க FBI க்கு தொழில்நுட்ப ஆலோசனை வழங்குபவரும், வீடியோக் காட்சிகளை , நுண் தொழில்திறன் கொண்டு பகுத்தாய்வு செய்பவரும் ஆவார்.கொலை நடைபெறும் போது எடுக்கப்பட்ட தொடர் காட்சிகள் நொக்கியா போனில் எடுக்கப்பட்டது எனவும், நொக்கியா போனில் உள்ள படத்தை பதிவுசெய்யும் மென்பொருளுடன் (software) இந்த வீடியோ ஒத்துப்போவதாகவும் முதலில் அவர் கண்டுபிடித்துள்ளார். காட்சிகள் எடுக்கப்பட்ட விதம் ஒருவர் கமராவை அசைக்கும் வேகம் என்பனவற்றையும் அவர் துல்லியமாக அளந்து, பிணங்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளையும் அளந்து அதன் உண்மைத் தன்மையை விளக்கியுள்ளார்.இந்த வீடியோ முழுவதும் செல்போனில் உள்ள கமராவால் எடுக்கப்பட்டது என்றும், இதில் எந்தவிதமாகவும் வேறு ஒளிப்பதிவுகள் எதுவும் சேர்க்கப்படவில்லை எனவும் அவர் உறுதியாகக் கூறியுள்ளார்.
அமெக்காவில் உள்ள கொலராடோ மாநிலத்தில் இயங்கும் ஒலி ஒளி தடய நிபுணர்கள் இந்த வீடியோ குறித்து தமது ஆய்வுகளையும் பூர்த்திசெய்துள்ளனர். அவர்களும் இந்த வீடியோ முற்றாக உண்மையானவை எனக் கூறியுள்ளனர்.
அமெரிக்காவில் இயங்கிவரும் தமிழின அழிப்பிற்கு எதிரான அமைப்பினரே மிகுந்த சிரமத்தில் இந்த வீடியோவை, பல தடயவியல் நிபுணர்களிடம் கொடுத்து அதன் உண்மைத் தன்மையை வெளிக்கொண்டுவர பாடுபட்டுள்ளனர் என்பது, குறிப்பிடத்தக்க விடயம், அதுமட்டுமல்ல பாராட்டிற்குரிய விடயமும் ஆகும்.