முறிகண்டிப் பிரதேசத்தில் இன்னமும் 15நாட்களுக்குள் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்படவுள்ள நிலையில் முறிகண்டிப் பிள்ளையார் கோவில் நேற்று முன்தினம் முதல் பொதுமக்களின் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புளொட் தலைவர் த.சித்தார்த்தன் தலைமையிலான புளொட் பிரதிநிதிகள் கிளிநொச்சி மாவட்டத்தின் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்ட உருத்திரபுரம், ஜெயந்திநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு (13.12.2009) நேற்றுமுன்தினம் பிற்பகல் விஜயம் செய்திருந்தனர். அங்கு மீள்குடியமர்த்தப்பட்ட மக்களின் நிலைமைகள் மற்றும் அவர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டனர். விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியாத நிலைமை, உரிய வீட்டுவசதிகள் இல்லாமை, போக்குவரத்துப் பிரச்சினைகள் ஆகியவற்றையும் அங்கு காணக்கூடியதாக இருந்தது. இப்பிரச்சினைகளை அரச உயர்மட்டத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கைகளை எடுக்க முயற்சிப்பதாக புளொட் தலைவர் அம்மக்களிடம் தெரிவித்தார். அத்துடன் மீள்குடியேறிய மக்களுக்கான வீடமைப்புக்கென 45ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு கிராம அதிகாரிகளின் ஊடாக அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருப்பதையும் அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. அனைத்து வசதிகளும் பூர்த்தி செய்யப்படாத நிலையிலும், தமது சொத்துக்களை இழந்த நிலையிலும் முகாம்களிலிருந்து தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பி வந்துள்ளமை தமக்கு சற்று ஆறுதலளிப்பதாக அம்மக்கள் புளொட் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளனர்.