அக்கரைப்பற்றிலுள்ள முதலமைச்சரின் காரியாலயத்திலிருந்து த.ம.வி.பு கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மூன்று வாகனங்களில் விநாயகபுரத்திலுள்ள மரண வீடு ஒன்றுக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் வழியில் திருக்கோவில் என்னுமிடத்தில் வைத்து மாற்று அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களால் தாக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த பரமநாதன் சிவராஜ்(வயது 28), லிங்கசாமி கேதீஸ்வரன்(வயது 32), மார்க்கண்டு ஜீவாகரன்(வயது 31) ஆகியோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த த.ம.வி.பு கட்சி ஆதரவாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் தேவையொன்றின் நிமித்தம் திருக்கோவில் இலங்கை வங்கிக் கிளைக்கு முன்பாக நின்று கொண்டிருந்த வேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் நபர்கள் கம்பு, இரும்புக் கம்பி போன்றவற்றால் தாக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, இச்சம்பவத்தின் பின்னர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளைச் சேர்ந்த ஒரு சிலர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களைத் தேடிச் சென்ற போதே முதலமைச்சரின் பிரத்தியேக வாகனம் நேற்று மாலை தீ வைக்கப்பட்பட்டு முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள்களில் தங்களின் முகத்தை அடையாளம் காட்டாதவாறு வாகனத்தைப் பின் தொடர்ந்த நபர்கள், வழிமறித்து சாரதியைக் கலைத்து விட்டு வாகனத்திற்குள் குண்டை வெடிக்கச் செய்து தீ வைத்துள்ளனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட குண்டர்களையும் இச்சம்பவத்திற்கு தூண்டுதலாக இருந்த நபர்களையும் இனம் கண்டு மக்கள் முன் நிறுத்து வேண்டும் என பொலிசார் பல தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.