டைடானிக் படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனின் அடுத்த பிரமாண்டமான படம் தயாராகிவிட்டது.
12 ஆண்டுகள் ஜேம்ஸ் கேமரூன் பெரும் பொருட்செலவு மற்றும் ஆராய்ச்சி செய்து உருவாக்கியுள்ள படம் 'அவதார்'. வரும் வெள்ளிக்கிழமை உலகமெங்கும் வெளியாகிறது.இந்தப் படம் இந்தியாவில் மட்டும் 700 பிரிண்டுகளுடன், தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகிறது.
ரூ. 1200 கோடி செலவில் தயாராகியுள்ள இந்த அவதார், இதுவரை உலகில் வெளியான அனைத்து கிராபிக்ஸ் படங்களையும் விட மிகச் சிறந்த படம் என்று 'டைம்' பத்திரிகை பாராட்டியுள்ளது.
இந்தப் படத்துக்காக தனி கிரகம் ஒன்றையே உருவாக்கினார்களாம் கேமரூன் மற்றும் குழுவினர். அதில் வித்தியாசமான விலங்குகள், மரங்கள் போன்ற தோற்றங்களை உருவாக்கி அவற்றைத்தான் முப்பரிமாணத்தில் அவதாரமடுக்க வைத்துள்ளனர்.உயிரற்ற பொருட்களையும், அசைவுகளுடன் உயிரோட்டமாகக் காட்டும் புதிய தொழில்நுட்பத்தின் துணையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்தினர் இந்தப் படத்தை இந்தியாவில் வெளியிடுகின்றனர்.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் சிஇஓ விஜய் சிங் கூறுகையில், "அவதார் படத்துக்கு இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்தியாவில் இதுவரை எந்த ஹாலிவுட் படத்துக்கும் இந்த அளவு கிராண்டான ரிலீஸ் இருந்ததில்லை என்று வியக்கும் வகையில் அவதார் படத்தை வெளியிடப் போகிறோம்" என்றார்.தமிழில் நேரடியாக வெளியாகும் முதல் ஹாலிவுட் '3 டி' படம் என்ற பெருமையைப் பெறுகிறது அவதார்.
உலகம் முழுக்க வரும் டிசம்பர் 18ம் தேதி 2 டி மற்றும் 3 டி வடிவங்களில் வெளியாகும் அவதார், தமிழில் மட்டும் 100 பிரிண்டுகளுடன் வருகிறது.தமிழகம் முழுக்க சத்யம் சினிமா வெளியிடுகிறது. இதுகுறித்து அதன் இயக்குநர் ஸ்வரூப் ரெட்டி கூறுகையில்,இந்த பத்தாண்டு காலத்தில் உலகம் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தது இந்தப் படத்துக்காகத்தான்.
டிஜிட்டல் '3 டி' வடிவத்தில் வெளியாகும் இந்தப் படம் பெரிய வரலாறு படைக்கும் என நம்புகிறோம்" என்றார்.இந்தப் படத்தின் மூலம் 'அவதார்' என்ற இந்திய வார்த்தை உலகெங்கும் தெரிந்த வார்த்தையாகப் போகிறது.