பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Tuesday, December 15, 2009

நஞ்சூறிய தொப்புழ் கொடி உறவு

நாம் மிகவும் மோசமானதொரு மனநிலையிலும் பரிதாபகரமான சிந்தனை முறையிலும் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறோம். எஞ்சியிருக்கிற வாழ்வில் நம்பிக்கை வைத்துக்கொள்ள நம்மில் பலருக்கு எதுவுமில்லாமல் இருக்கிறது. நடந்து முடிந்த யுத்தம் ஈழமக்கள் அனைவருக்கும் மிகக் கொடிய அனுபவங்களையே தந்து விட்டிருக்கிறது. நாம் விரும்பியோ விரும்பாமலோ இன்னுமொரு சந்ததி யுத்த தளும்புகளுடனேயே வாழ்வைக் கழிக்க வேண்டியிருக்கிறது. 2006 யூன் 26இல் மாவிலாறில் தொடங்கிய இறுதி யுத்தம் முள்ளிவாய்க்காலில் முடியும் வரையான மூன்று வருடத்தில் தமிழ் மக்களது இழப்பு என்பது எந்த அளவீடுகளைக் கொண்டும் அளவிடமுடியாதளவுக்கு கொடூரமானது.

யுத்தப்பிரதேசங்களில் வாழந்திருந்த ஒவ்வொரு குடும்பங்களிலும் பாரிய உயிரழிவுகள் நடந்தேறியிருக்கிறது. மே 18 வரையான இறுதி மூன்று மாதங்களில் கும்பல் கும்பலாய் அப்பாவித் தமிழர்கள் யுத்தகளத்தில் பலியாகினார்கள். விடுதலைப்புலிகளுக்கெதிரான யுத்தம் அப்பாவித் தமிழ் மக்களுக்கெதிரானதாக மாற்றப்பட்டுக் கொண்டிருந்ததை உலகம் பார்த்துக்கொண்டிருக்க யுத்த வெற்றியின் உச்சத்தில் மிதந்த இலங்கை அரசும் சிங்கள மக்களும் தலைநகரில் வெடிகொழுத்திக் கொண்டாடிக் கொண்ருந்தார்கள். ஏறத்தாள இருபதாயிரம் மக்களை கொன்று மூன்று இலட்சம் மக்களை அகதிகளாக்கிவிட்ட ஒரு யுத்தம் குறித்து நாம் மவுனமாக இருந்து விடமுடியாது. நமது சமூகம் கட்டிவைத்திருந்த வீரம் பற்றியும் தேசியம் பற்றியுமான பலவித கதையாடல்களின் புனிதங்களை கேள்விக்குட்படுத்த வேண்டியதும் நம்மீது கட்டிவைக்கப்பட்ட கட்டுக்கதைகளைத் தகர்க்க வேண்டியதுமான காலகட்டத்தில் இருக்கிறோம்.

நீண்ட காலமாகவே புனைகதைகளுக்குப் பழகிப்போன நமது மனம் நிசத்தை நம்ப மறுக்கிறது. உண்மை எதுவெனத் தெரிந்தும் ஒத்தக்கொள்ளமுடியாத இயலாமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. புதிய புதிய பொய்களைக் கண்டுபிடிக்க வேண்டிய தேவையில் இருக்கிறது நமது இனம். இது நல்லதொரு மாற்றத்தை ஒருபோதும் நமக்குத் தந்துவிடப் போவதில்லை. ஈழவிடுதலைப் போராட்டத்தை தனது குறுகிய நலனுக்கான தேவையோடு கையகப்படுத்திய விடுதலைப்புலிகள் கடந்த 25 வருடங்களில் தமிழ் மக்களது விடுதலை சார்ந்து எவ்வித ஆக்கபூர்வமான முன்னெடுப்புக்களையும் செய்யவில்லை என்பதை நாம் பல இடங்களில் சொல்லியிருக்கிறோம். இங்கை இராணுவத்துடன் பலமான மோதல்களைச் செய்து கொண்ட அளவுக்கு தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியாக கைகூடிவந்த பல தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை அவர்களால்.
தமிழ் தேசியவாதிகள் சொல்வது போல் தமிழ் மக்களுக்கு இருக்கின்ற கடைசி நம்பிக்கை விடுதலைப் புலிகள் தான். இலங்கை அரசிடம் இருந்து தமிழ் மக்களுக்கு ஏதாவது ஒரு தீர்வு கிடைக்க வேண்டுமென்றால் அது விடுதலைப் புலிகள் காலத்தில் தான் முடியும் என்று சொன்ன வார்ர்தைகள் இன்று எப்படிப் பொய்த்துப் போனது? இலங்கை அரசுடன் பலமேசைகளில் பேச்சுவார்த்தை நடாத்தியவர்களை இனி ஒருவித அரசியலிலும் இயங்க முடியாதபடி ஒன்றுமில்லாமல் செய்துவிட்டதற்கு காரணம் யார்? இவற்றிற்கு நாம் விடையை எப்போது தேடுவது?
ஆனால் நமது தமிழ் சமூகம் இவற்றிற்கான விடையைத் தேடுவதில் கொஞ்சம் கூட அக்கறை காடட்வில்லை. மீளவும் மீளவும் பொய்மையிலும் கட்டுக்கதையிலும் பிரளயம் பண்ணிக் கொண்டிருக்கிறது. சம்பூர், வாகரை, தொப்பிகலை என்று நடைபெற்ற யுத்தத்தில் விடுதலைப் புலிகள் கிழக்கிலிருந்து முற்றாக வெளியேற்றப்பட்டபின் 2007 மார்ச் 27இல் சின்னப்பண்டிவிரிச்சானுக்கூடாக இராணுவம் வன்னியை நோக்கி நகர்ந்தது. புலிகள் தமது பலவீனத்துடன் முள்ளிவாய்க்காலுக்குள் ஒதுங்க இரண்டுவருடமாகியது. இந்த யுத்தத்திலிருந்து புலிகளைக் காப்பாற்ற யாருமற்றுப் போக புலம்பெயர் தமிழ்ச்சமூகம் தன்னைக் களத்திலிறக்கியது. தமிழர்கள் பெரும்பாலும் வாழுகின்ற லண்டன், பாரிஸ், சுவிஸ், கனடா,அவுஸ்ரேலியா என்று அனைத்து நகரங்களையும் தனது போராட்டங்களால் நிறைத்திருந்தது. உண்ணாவிரதப் போராட்டம், அமைதிப் பேரணி, நடைபவனி, மெழுகுவர்த்தி ஊர்வலம், என்று என்னவகையான போராட்டங்களை முன்னெடுக்க முடியுமோ அவ்வளவு வகையாகவும் போராட்டம் செய்தார்கள். கனடாவிலும் இலண்டனிலும் பெருந்தெருவை வழிமறித்தும் தமது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தினார்கள்.

இதில் பின் நின்று இயக்கியது புலம் பெயர் புலி அமைப்புக்கள் என்றாலும் பெருந்திரளான மக்கள் பங்கேற்றார்கள். ஈழத்தில் இன அழிப்பு ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற புலம்பெயர் தமிழ் மீடியாக்களது பிரச்சாரம் அவர்களைக் கொதிநிலைக்குக் கொண்டு சென்றது.

புலிகளது பினாமியாகச் செயற்படும் அத்தனை தமிழ் மீடியாக்களும் முள்ளிவாய்க்காலிலிருந்த புலிகளைப் பேட்டி எடுத்து பிரச்சாரம் பண்ணின. மே மாதம் 12ந் திகதி புலிகளின் கடற்படைத் தளபதி சூசையின் பேட்டியில் புறச்சூழலை விளங்கிக் கொள்ளாத சூசை அவர்கள் நாம் இறந்து கொண்டிருக்கிறோம் நீங்கள் தெருவில் இறங்கிப் போராடுங்கள் அதுதான் விடுதலையை வேண்டித்தரும் என்று கேட்டுக் கொண்டார். சூசை அவர்கள் தனது மனைவி பிள்ளைகளைக் கூட இராணுவத்திடம் அனுப்பிவிடும் அளவுக்கான இறுதித் தருணம் அது. அந்த நிலையைக்கூட நமது தமிழ் மீடியாக்கள் விளங்கிக் கொள்ளவில்லை. தமிழின அழிப்பு என்ற கொதிநிலையிலிருந்து மக்களை மீட்க யாருக்கும் விருப்பம் இருக்கவில்லை. இரவு பகலாக தொடர் போராட்டங்களை நடாத்தி சர்வதேச உலகிற்கு இலங்கை அரச இராணுவத்தின் கொடூரங்களைத் தெரியப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஆரம்பத்தில் மிகவும் ஆர்ப்பாட்டத்துடனும் ஆக்குரோசத்துடனும் போராட்டம் செய்தவர்கள் புலிகளின் இறுதி நாட்களில் மெதுமெதுவாக மண்டியிட்டு மனித சங்கிலிப் போராட்டம், மெழுகுவர்த்தி நடைபவனி என கெஞ்சும் நிலைக்கு வந்தார்கள். ஆனால் சர்வதேசம் இந்தப் போராட்டங்கள் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. சர்வதேச அரங்கில் போராட்டம் நடாத்திய தமிழ் மாணவர் அமைப்புக்களை விட பொதுவாக சர்வதேச அரசுகள் உள்ளிட்ட மற்றய அனைவருக்கும் ஈழத்தில் நடந்து கொண்டிருந்த உண்மை நிலை நன்றாகத் தெரிந்துகொண்டிருந்தது.
புலிகளால் உருவாக்கப்பட்ட சர்வதேச தமிழ் மாணவர் அமைப்புக்களுக்கும் சரி தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கும் சரி சிந்தனைமுறையில் பெரிய வேறுபாடுகளைக் காணமுடியவில்லை. இவர்கள் இருபகுதியினரும் தமிழ்த் தேசிய வெறியை உள்வாங்கியவர்களாகவும் வெறுமனே உணர்ச்சிவசப்பட்ட கருத்துக்களை மட்டுமே உரைக்கத் தெரிந்தவர்களாகவுமே இருந்தார்கள். இவர்கள் இருபகுதியினரும் ஈழவிடுதலையின் பெரும்பாலான பக்கங்களை அறியாதவர்கள். விடுதலைப்புலிகளது தொடர் வன்முறைக்கலாச்சாரம் தமிழ் மக்களது ஒட்டுமொத்த அழிவுக்கு ஆரம்பத்திலிருந்து எப்படி வித்திட்டது என்பதை இவர்கள் அறியாதவர்கள்.
இவர்களே தமக்காக சர்வதேசத்தில் தம்மை முன்நிறுத்தத் தகுதியானவர்கள் என்று விடுதலைப் புலிகளால் அடையாளம் காணப்பட்டார்கள். ஆகையால் தான் பல புலம்பெயர் மாணவர்களும் தமிழ்நாட்டிலிருந்து திருமாவளவன் உள்ளிட்ட சினிமாக்காரர்களும் வன்னிக்கு அழைக்கப்பட்டவர்கள். இவர்கள் யாருக்குமே ஈழத்தமிழர்களது உண்மையான பிரச்சனைகள் குறித்தோ அதன் வரலாறு குறித்தோ அக்கறையிருக்கவில்லை.
தமது இருப்புக்காக வெறும் உணர்ச்சிவசப்பட்ட கருத்துக்களை உதிர்த்துக் கொள்ளக்கூடியவர்களாகவே இருந்தார்கள். இவர்களது இந்தமாதிரியான உணர்ச்சிவசப்பட்ட கொதிநிலைக் கருத்துக்களை அப்படியே உள்வாங்கி அப்பாவிப் புலம்பெயர் மக்களிடத்தில் கொண்டு செல்வதில் தமிழ் மீடியாக்கள் முக்கிய பங்காற்றின. ஈழப் போராட்டம் பற்றி மிக முட்டாள்தனமான கருத்துக்களை சீமான் திருமாவளவன் போன்றவர்கள் உரைத்துக் கொண்டதைக் கூட இவர்களால் விளங்கிக் கொள்ளமுடியவில்லை.
வன்னியில் போர் நடைபெற்ற காலத்தில் அங்கே தனது சாதிக்காரர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று வன்னிமக்கள் அனைவரையும் வன்னியர்சாதி என தவறாக நினைத்து டாக்டர் ராமதாஸ் அவர்கள் கருத்து வெளியிட்ட கொடுமையை என்னவென்பது.
இதுதான் ஈழம் பற்றிய தமிழ் நாட்டு அரசில்வாதிகளது அறிவு. தமது அரசியல் இலாபங்களுக்காக முத்துக்குமார் போன்ற 30க்கும் மேற்பட்ட அப்பாவிகளைப் பலிகொடுத்துவிட்டு வெள்ளை வேட்டியுடன் மனங்கூசாமல் உலாவந்தவர்கள் வை. கோபால்சாமியும், திருமாவளவனும். இந்தவருடம் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு முத்துக்குமார் என்று பெயரிடவேண்டும் என்று குழந்தைத் தனமாகக் கதைத்தவர்தான் பாரதிராஜா என்ற திரைப்படத்துறைத் தலைவர்.
சீமான் அவர்கள் கனடாவிற்கு புலிகளால் வரவழைக்கப்பட்டிருந்தார். அவர் நிகழ்த்திய உரையை இங்குள்ள புலிகளது தமிழ் மீடியாக்கள் ஒலிபரப்புச்செய்தன. வெறும் உணர்ச்சிவசப்பட்ட கதறல். புலிகள் பற்றி சாதாரண தமிழ்நாட்டு குடிமகனுக்குத் தெரிந்த விடையம் கூட அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.
வெறும் தமிழ்த் தேசிய வெறியூட்டக்கூடிய பேச்சு அது. அதைக் கேட்டு வாயூற ரசித்துக் கொண்டிருந்தது ஈழத்தமிழ் மனங்கள். திருமாவளவன் சீமான் போன்றவர்களது திடீர் ஈழப்போராட்ட ஆதரவு குறித்து கருத்து வெளியிட்ட கருணாநிதி அவர்கள்; முதலில் ஈழப்போராட்டத்தில் முக்கியமான முகுந்தன் ரஞ்சன் போன்றவர்களைத் தெரியாமல் ஈழப்பபோராட்டம் பற்றிபேசமுடியாது என்று அவர்களை நோக்கிக் கிண்டலாகச் சொல்லியிருந்ததை நாம் கவனிக்க வேண்டும்.
ஆனால் இந்தவகையான சீரழிந்த தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைக் கொண்டே நமது மக்களுக்கு இங்கிருக்கின்ற தமிழ்மீடியாக்கள் அதிகமாகப் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறது. நடந்து முடிந்த யுத்தம் தந்த பாடம் நமது மக்கள் ஒவ்வொருவருக்கும் கைகளிலிருக்கும்போது தமிழ்நாட்டு அரசியல்லாதிகளை தமிழ் மீடியாக்கள் அறிவுசார் தளத்தில் வைத்து பாடம் நடாத்த வைப்பது மிகவும் கேலியானது. காலையிலிருந்து இரவுவரை வெறும் சினிமாப்பாடல்களோடு மட்டும் காலந்தள்ளும் வானொலிகளையும், வெறும் விளம்பரங்களையும் புலிகளது செய்திகளையும் மட்டும் பிரசுரம் செய்யும் பத்திரிகைகளையும் யாரும் இனிவருங்காலங்களில் கணக்கெடுக்கப்பேவதில்லை. நடந்து முடிந்த போரின் உண்மை முகங்களை அநேக மக்கள் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள். இதை முன்கூட்டியே உணர்ந்த திரு.திருச்செல்வம் போன்ற புலிகளது கனடிய அரசியல் ஆய்வாளர்கள் தாமாக ஒதுங்கிக் கொண்டது மிகமிக நல்லதொரு விடையம். புலிகளும் இந்நாள் இல்லையேல் மண்ணில் எலிகளும் தின்னும் இத்தமிழர் இனத்தையே என்று எழுதிய முழக்கம் பத்திரிகை நின்று போனது மிக முக்கியமான ஒன்று.
வெறும் ஏமாற்றுத் தனங்களையே நீண்டநாட்களாக செய்து கொண்டிருக்க முடியாது. கனடாவில் வரும் மற்றய பத்திரிகைகளும் வெறும் தமிழ்த் தேசிய வெறியூட்டலில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்ள வேண்டியதருணம் வந்து விட்டது. ஒவ்வொரு அரசியல் நிகழ்வுமீதும் ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றம் இன்று அவசியமாகிறது. முப்பது வருடங்களுக்கு மேலால் கட்டிவைக்கப்பட்ட தமிழ்த்தேசிய கதையாடல் இன்று நம் கண்முன்னால் உருக்குலைந்துள்ளது.
இங்கிருந்து நமது கடந்தகாலத் தவறுகள் குறித்த மீள்பார்வையைத் தொடங்கமுதல் இனிவரப்போகும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் பரந்த மனதளவில் இருந்து எதிர்கொள்ள வேண்டியது மிகமுக்கியமானதாகும். முதலில் விடப்பட்ட தவறுகளை நாம் எல்லோருமே அவரவர் நிலை சார்ந்து ஏற்றுக் கொள்ளுதல் என்பது மிக முக்கியமானது. விடுதலைப்புலிகளது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வாழநேர்ந்தவர்கள் செய்த தவறுகளை விட பலமடங்கு அவமானமானது புலம்பெயர் சூழலில் இழைக்கப்பட்ட தவறுகள்.
தங்களுடைய வருமானங்களுக்காக தமிழ் மக்களது வாழ்வைக் கேலிக்கூத்தாக்கியவர்கள் இந்தத் தமிழ்த்தேசியவெறியர்கள். இவர்களே இன்னும் எஞ்சியிருக்கும் மக்களது வாழ்வை கேள்விக்குள்ளாக்கிக் கொண்டிருப்பவர்கள். இன்று எமக்கு முன்னிருக்கும் முக்கிய தேவை மக்களது வாழ்வியலை அடுத்தகட்டத்திற்கு நகர்த்துவதற்கான வார்த்தைகள். மிகப்பெரிய ஏமாற்றத்தின் பின் அனைத்தையும் தவறவிட்டு உயிரைத் தொலைத்து நிற்கும் மக்களுக்கான இருப்பிடம்.
இதுவே இன்றைய உடனடித்தேவை. அதைவிடுத்து சிங்கள அரசின் அத்து மீறிய சிங்களக் குடியேற்றம் பற்றியும், புத்தவிகாரை கட்டுவது பற்றியும், இராணுவமுகாம் அமைப்பது பற்றியும், அல்லது மகிந்த அரசை யுத்தக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்றெல்லாம் பேசுவதால்ஆவதென்ன? இன்று அனைத்தையும் இழந்து நிற்கும் அவல நிலையில் அந்த மக்களுக்கு என்ன கவலை இருந்து விடப் போகிறது.
தமிழீழ விடுதலையை நேசித்தவர்கள் அதற்காக தன்பிள்ளைகளை காவுகொடுத்த அந்த வன்னிமக்கள் விடுதலைப்புலிகளாலேயே கணக்கில்லாமல் கடைசி நாட்களில் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னால் இங்கை அரசினது வன்முறை பற்றியும் புதிய புரட்சி பற்றியும் புலம் பெயர் தமிழ் மீடியாக்கள் அந்த மக்களுக்கு வகுப்பெடுப்பது என்பது எவ்வளதூரம் கொடுமையான கேவலம்.
கடந்த மூன்று மாதங்களின் முன்னர் யூனிசெப் கணக்கின்படி 850 குழந்தைகள் இறுதி யுத்தத்தில் மாத்திரம் தமது பெற்றோரை இழந்து அநாதையாக நிற்பதாக அறிவித்திருக்கிறது.
எதிர்காலம் யார்கையில் என்பது தெரியாத நிலையில் தமிழினம் தமது வாழ்வைத் தொலைத்திருக்கிறது. ஆனால் புலம் பெயர் புலிப் பினாமிகளுக்கும் தமிழ் நாட்டு திரைப்படத்துறையினருக்கும் மாத்திரம் புலிகளது தலைவர் திரும்பிவரும் திகதி தெரிந்திருக்கிறது.
மீண்டுமொருதடவை ஈழத்தமிழ் மக்கள் மீது இவர்கள் சவாரிவிடத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.
அண்மையில் வை.கோபால்சாமி அவர்கள் தமிழீழம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அசிங்கமாக அறிக்கை விட்டிருந்தார். அதுதான் புலம் பெயர் தமிழ் மீடியாக்களுக்கு மிகப் பெரிய செய்தியாக இருந்தது. அகதியாக தமிழ்நாட்டில் தஞ்சம் கேட்டிருக்கும் பல இலட்சம் மக்களுக்கு ஒரு துணி வேண்டிக் கொடுக்காதவர்கள் இவர்கள். மண்டபம் முகாம்பற்றி இவர்கள் பேசியது கிடையாது. முள்ளுக்கம்பிகளுக்குள்ளே சேலம் மாவட்டத்திலுள்ள கிராமங்களில் 20வருடங்களுக்கு மேலாக வாழும் இலங்கைத் தமிழ் அகதிகள் பற்றி இவர்கள் என்றும் வாய்திறந்தது கிடையாது.
இவர்கள் சொல்லும் ஈழத்தமிழ் மக்களது தொப்புழ்கொடி உறவு இப்படித்தன் நஞ்சூறிப் போயிருக்கிறது.
தாம் தற்போதுதான் புலிகளின் தலைவருடன் பேசிவிட்டு வருவதாக திருமாவளவனும் நெடுமாறனும் சொல்வதைக் கேட்பதற்கு அங்கே ஆட்கள் இருக்கிறார்கள்.
தேவையும் இருக்கிறது. நமக்கு எங்கே போனது புத்தி என யோசிக்க வேண்டாமா? திருமாவளவன் வை. கோபால்சாமி உள்ளிட்ட தமிழ்நாட்டு அரசியல் வாதிகளிடம் நாம் இரங்கிக் கேட்பது எல்லாம் தயவுசெய்து எங்களை விட்டுவிடுங்கள் எங்களது தொப்புழ்கொடி உறவாக இருந்து நீங்கள் ஆதரவு தந்தது போதும். எப்போதும் நாம் உங்களுக்கு நன்றியுடையவர்களாக இருக்கிறோம். இனிவருங்காலங்களில் நீங்கள் அங்கே தனிநாடு கேட்டுப் போராடுங்கள் உங்களுக்கு நாம் தொப்புழ் கொடி உறவாக இருந்து ஆதரவு தருகிறோம். இவ்வளவு காலமும் நாம் இழப்பதற்கும் மேலால் இழந்து விட்டோம் தயவு செய்து கெஞ்சிக் கேட்கிறோம் எங்களை விட்டுவிடுங்கள்.
(கற்சுறா)
நன்றி: வைகறை கனடா