தமிழீழத்துக்கான வாக்கெடுப்பினால் அதிர்ச்சி! முறியடிப்பதற்கு சிங்கள புத்திஜீவிகள் அரசுக்கு ஆலோசனை!!
புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களினால் எல்லா நாடுகளிலும் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழீழத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பு ஐக்கிய இலங்கைக்கு பாரிய ஆபத்தாக மாறவுள்ளது. ஆகவே, புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் மேற்கொண்டுவரும் இந்த நடவடிக்கைக்கு சமாந்தரமாக சிறிலங்கா அரசு வடக்கு கிழக்கில் சிங்கள குடியேற்றங்களை தேர்தல் முடிவடைந்த கையோடு வேகமாக ஆரம்பிக்கவேண்டும் என்று சிங்கள புத்திஜீவிகள் சிலர் சிறிலங்கா அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
வெளிநாடுகளில் உள்ள சிங்கள மக்கள் மத்தியில் இனவாத கருத்துக்களை விதைத்துவரும் குமார் மேசஸ், வோல்டர் ஜெயவர்த்தன போன்ற சிங்கள இனவாத புத்திஜீவிகள் குழுவே இந்த ஆலோசனையை சிறிலங்கா அரசுக்கு வழங்கியுள்ளது.
அந்த ஆலோசனையில் அவர்கள் மேலும் தெரிவித்திருப்பதாவது:-
புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் எனப்படும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் சிறிலங்காவில் விடுதலைப்புலிகளின் அமைப்பின் வீழ்ச்சிக்கு பின்னர் சளைத்துவிடவில்லை. தமது மக்களுக்கான சுயநிர்ணய உரிமைக்கு சர்வதேச அளவில் ஆதரவு தேடும்வகையில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்திவருகிறார்கள்.
அந்தந்த நாடுகளில் உள்ள அரச அதிகாரிகளின் அனுசரணையுடன் அந்நாட்டு தேர்தல் கண்காணிப்புடன் முறையான தேர்தலாக இதனை நடத்தி அந்த முடிவுகளை அந்நாட்டு அரசுக்கு சமர்ப்பித்துவருகிறார்கள். இது அவர்களது மிகப்பெரிய ஒரு நடவடிக்கையாகவே சிறிலங்கா பார்க்கவேண்டியுள்ளது.
ஏற்கனவே இவ்வாறான தேர்தல்கள் இரண்டு நடைபற்று முடிந்துவிட்டன. இன்னொன்று எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அடுத்த 12 மாதங்களினுள் மொத்தம் நான்கு தேர்தல்களை நடத்தி முடிக்கும் நோக்குடன் துரித கதியில் புலம்பெயர்ந்துவாழும் மக்கள் செயற்பட்டுவருகிறார்கள்.
நீதியாகவும் நேர்மையாகவும் நடத்தப்பட்ட இந்த தேர்தல் முடிவுகள் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களின் உண்மையான அபிலாஷை என்ற விடயத்தை சர்வதேச சமூகத்தை நம்பவைப்பதற்கான முயற்சியாகவே இந்த தேர்தல்கள் மேற்கொள்ளப்படுகிறது.
ஆனால், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைக்கு சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் பதில் நடவடிக்கை மிக மெதுவானதாகவே காணப்படுகிறது.
தேர்தல்கள் முடிவடைந்த கையோடு உடனடியா – துரித கதியில் – வடக்கு கிழக்கில் சிங்கள குடியேற்றங்களை ஆரம்பிக்கவேண்டும். அங்கு தமிழ்மக்களின் அடையாளங்களை முற்று முழுதாகவே அழித்தொழிக்கும் வகையில் காரியங்களை நிறைவேற்றிவிட்டால், சர்வதேச ரீதியில் தமிழ்மக்களின் உணர்வுகள் இயற்கை மரணத்தை அடைந்துவிடும். அதற்கு பிறகு சிறிலங்கா அரசே ஏதாவது தமிழ் மக்களுக்கு தருவதாக அறிவித்தால் கூட அதனை ஏற்றுக்கொள்வதற்கு அவர்கள் தயாராக இருக்கமாட்டார்கள்.
சிறிலங்காவின் தேசப்பற்றாளர்கள் அனைவரும் அரசு மேற்கொள்ள வேண்டிய இந்த நடவடிக்கைக்கு வேகமாக உழைக்கவேண்டும். விடுதலைப்புலிகளை அழித்தொழித்த அதே வேகத்துடன் இந்த நடவடிக்கையும் அமையவேண்டும்.