பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Wednesday, November 25, 2009

தவிக்க முடியாத சவாலை முறியடிப்பாரா மஹிந்த: பகுதி 1

விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் உருவாக்கி விட்ட “வீர புருஷர்கள்” இருவருக்கிடையில் நிகழவிருக்கும் ஜனாதிபதிப்பதவிக்கான போர் குறித்து ஆழமாக அலசும் விதத்தில் அமைக்கிறது இக்கட்டுரை. விக்ரர் ஐவனால் எழுதப்பட்ட இவ் ஆய்வுக்கட்டுரை, கடந்த 15ஆம் திகதிய “ராவய” பத்திரிகையில் வெளியாகியுள்ளது. அதன் தமிழ் வடிவமே இது.
யுத்தத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஈட்டிக் கொண்ட வெற்றியானது அவரை இராட்சதப் பலவானாகவும் நாட்டின் ஏனைய அனைத்து அரசியல் தலைவர்களையும் சித்திரக் குள்ளர்களாகவும் ஆக்கிவிட்டுள்ளது. இந்த நிலைப்பாடானது அந்த இராட்சதப் பலவானுக்கு எதிராக ஜனாதிபதித் தேர்தலில் ஆற்றலுடன் போட்டியிடக் கூடிய எவரும் மேற்படி அரசியல் தலைவர்கள் மத்தியில் தென்படாததொரு நிலையையும் உருவாக்கி விட்டிருந்தது. அதேபோன்று, மஹிந்த ராஜபக்ஷ நிர்வாகத்துக்கே உரிய எவ்விதமான வரையறைகள் நிலவினாலும் கூட, கடும் போட்டியென்ற சவால் எதுவுமின்றியே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் இலகுவான வெற்றியை ஈட்டிக் கொள்ளத்தக்கதான நிலைப்பாடொன்றும் நாட்டில் உருவாகியிருந்தது.
மூன்று பிரபலங்கள்

இறுதியில் சம்பிரதாயமான எதிர்க்கட்சித் தலைவருக்குப் பதிலாக, யுத்தம் உருவாக்கி விட்ட மேலுமொரு இராட்சதப் பலவானை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் போட்டியில் நிறுத்தும் நிலைப்பாடொன்று உருவானதன் மூலம் அந்த இடைவெளி நிரப்பப்பட்டது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான வெற்றி யுத்தமானது மூன்று பிரபலங்களை உருவாக்கி விட்டிருந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோரே அந்த மூவரும்.
யுத்தத்தில் இந்த மூவரும் வகித்த பாத்திரங்கள் மிக விசேடமான மற்றும் அசாதாரணத் தன்மை கொண்டதாகவே இருந்தன. இராணுவத் தளபதியான ஜெனரல் சரத் பொன்சேகா அந்த யுத்தத்துக்கு அவசியமான யுத்தமயத் தலைமைத்துவத்தை வழங்கிநின்றார். பாதுகாப்புச் செயலாளரான கோத்தாபய ராஜபக்ஷ இவ்விரண்டு சாதக நிலைகளையும் ஒருமுகப்படுத்தி நின்றார். இவர்கள் அந்த யுத்தத்தில் வகித்த விசேடமான பாத்திரத் தன்மையின் காரணமாக யுத்தம் முடிவுக்கு வந்தபோது அம்மூவரும் அசாதாரணமான வீர புருஷர்களாக வரலாற்றில் இடம்பெற்றனர்.
அதேவேளை, இம் மூவருமே எதிர்க்கட்சியின் கடும் விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருந்தனர். இந்த யுத்தம் குறித்த எதிர்க்கட்சியின் பார்வை, தனது ஆளுமையின் இருப்பைப் பலப்படுத்திக்கொள்வதற்கு மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை ஒரு சாதனமாகப் பயன்படுத்திக்கொள்கிறார் என்பதாகவே இருந்தது. எதிர்க்கட்சியின் விமர்சனங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கோ பாதுகாப்புச் செயலாளருக்கோ ஒரு பொருட்டாக இருக்க வில்லை. தமது அரச பணியென்ற ரீதியில் இராணுவ வீரராகக் கருதக்கூடிய ஜெனரல் சரத் பொன்சேகா மீது எதிர்க்கட்சித் தலைவரிடமிருந்து மிகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்த சந்தர்ப்பங்களும் அமைந்தன. அத்தகைய சில விமர்சனங்களுக்கு கோபாவேஷத்துடன் இராணுவத் தளபதி பதிலடி கொடுத்த சந்தர்ப்பங்களும் இருக்கவே செய்தன.

ஐ.தே.க. ஜே.வி.பி. இணைப்பு

இவையனைத்தும் அவ்வாறிருக்கையிலும் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்த தமது வசத்தில் எவரொருவரும் இல்லாததொரு நிலையிலிருந்த எதிர்க்கட்சியானது, யுத்தம் உருவாக்கி விட்டிருந்த எஞ்சியிருந்த வீரர்களுள் ஒருவரை மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஜனாதிபதித் தேர்தல் களத்தில் நிறுத்துவதற்குத் திறன் பெற்றுள்ளமையானது எதிர்க்கட்சி ஈட்டிக்கொண்டுள்ளதொரு வெற்றியேயெனக் கருதமுடிகிறது. இங்கு புதுமையானதொரு நிகழ்வாகக் கொள்ளத்தக்கது, இணைசேர்ந்து செயற்பட இயலாததொரு நிலையில் இருந்துள்ள ஐ.தே.கட்சிக்கும் ஜே.வி.பிக்கும் ஒரு முகப்பட்டுச் செயற்படத்தக்கதொரு பின் புலத்தை இத் தெரிவு வழங்கியுள்ளதேயாகும்.
முக்கியமாக பொதுமக்கள் ஐக்கிய முன்னணி வசத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பலம் கிட்டியிருந்தபோது, ஐ.தே.கட்சிக்கு நாடாளுமன்றப் பலம் கிட்டியிருந்த சந்தர்ப்பத்தில் ரணில் விக்கிரம சிங்கவின் நாடாளுமன்றப் பலத்துடனான அரசுக்குச் சாவுமணியடித்து விடுவதற்கு கச்சை கட்டிக் கொண்டு களமிறங்கி நின்றது இந்த ஜே.வி.பி. கட்சியேயாகும்.
தமது அக் கைங்கரியம் குறித்த ஜே.வி.பி யின் அன்றைய பார்வை, தேசத்துரோக அர சொன்றை நாட்டிலிருந்து நீக்கிவிடும் உத்தமமான தொரு பெரும் பணியென்பதாகவே இருந்தது. அதன்பின்னர் மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதிக் கதிரையில் அமர்த்திவிடும் அரசியல் செயற்பாட்டில் ஜே.வி.பியானது சுகப்பிரசவமொன்றுக்காகப் போராடும் மருத்துவ மாதொன்றின் பாத்திரம் வகித்துச் செயற்பட்டது.
இன்று அதே ஜே.வி.பி ., தேசப்பற்று மிக்க இரட்சகனாகக் கருதித் தம்மால் பதவியில் அமர்த்தப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவின் அரசுக்கு அரசியல் சவக்குழி தோண்டும் பாத்திரத்தையும், தம்மால் தேசத்துரோகி என முத்திரை குத்தப்பட்டு அதிகாரத்திலிருந்து துரத்தி விடப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவை வேறு விதத்தில் பதவியில் அமர்த்திவிடும் அரசியல் செயற்பாடொன்றையும் வகிக்க வேண்டி நேர்ந்திருக்கிறது. ஜே.வி.பி. மற்றும் ஐ.தே.கட்சியென்ற இவற்றுக்கிடையில் நிலவிய பகை அதன் மூலமாகவேனும் தீருமானால் அதை நாட்டின் அரசியல் மேம்பாட்டுக்குக் காரணமாகும் சாதகமொன்றாகக் கருதமுடியும்.

ரணிலின் தந்திரம்

ஐ.தே.கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க பிரச்சினைகள் மலிந்த இச்சிக்கலினுள் பல வர்ணங்கள் கொண்ட தொரு பாத்திரதாரியாகவிருப்பது தெரிகிறது.இதற்கு முன்னர் அவரது நிலை இலகுவில் வெளியேற இயலாத கழுத்தளவுக்கு சேற்றுக் குழியில் அமிழ்ந்துபோயிருந்ததொரு நிலைப் பாடாகியிருந்தது. இந்த ஜனாதிபதித் தேர்தலில் வலுவானதொரு போட்டியாளராகி விடும் திறனாற்றலை அவர் பெற்றிருக்கவில்லை. விடுதலைப் புலிகளுக்கு எதிரான அந்த யுத்த வெற்றியானது மஹிந்த ராஜ பக்ஷவை ராட்சதப் பலவானாகவும் அவரைச் சித்திரக்குள்ளனாகவும் ஆக்கிவிட்டிருந்தது. சம்பிரதாய ரீதியில் நோக்கும்போது இப் போட்டியில் அடுத்த போட்டியாளராக அமைய வேண்டியது அவரேயாவார். இருந்தபோதிலும், போட்டியின் மூலம் கிட்டும் தோல்வியானது அவரது எதிர்கால அரசியல் இருப்பை அற்றுப்போகச் செய்வதற்கு இடமிருந்தது. மறுபுறத்தில், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை கட்சியின் வேறுமொரு பிரமுகருக்கு வழங்கும் கொள்கையை அவர் பின்பற்றினாலும் கூட, அதன் மூலமும் கட்சித் தலைமைத்துவத்தை அவர் இழந்துவிடும் நிலை மற்றும் அரசியல் எதிர்காலமொன்று அற்றுப்போகும் நிலை உருவாகவும் இடமிருந்தது. இந்நிலையில், தனது கட்சித் தலை மைத்துவத்தையும் பேணிப் பாதுகாத்துக் கொண்டு, அதேசமயம், மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகக் கடும் போட்டியை முன்னிறுத்திவிடும் முறைமையொன்றை இச்சந்தர்ப்பத்தில் கண்டறிந்து கொள்வதற்கு ரணில் திறனாற்றல் பெற்றுள்ளமையானது, தனது அரசியல் வாழ்க்கையில் அவர் ஈட்டிக் கொண்டுள்ள முகியத்துவம் பெறும் வெற்றி யொன்றாகவே கருதமுடியும். ஜெனரல் சரத் பொன்சேகா இந்த ஜனாதிபதிப் போட்டியில் வெற்றிபெற்றதாக ஊகித்துக்கொண்டு, அதன் பின்னர் ரணில் விக்கிரம சிங்கவின் எதிர்பார்ப்புக்கு அமைய அனைத்துச் செயற்பாடுகளும் நிகழுமானால், வெற்றிப் புருஷரான ஜெனரல் சரத் பொன்சேகாவை அந்த வெற்றியின் சின்னமாகக் கருதச் செய்யும் முக்கியத்தும் பெறும் வரையறைக்கு உட்படும் பதவியொன்றில் நிறுத்திவைத்து, நாட்டை நிர்வகிக்கும் அதிகார பலத்தைத் தன தாக்கிக்கொள்ளும் ஆற்றல் அவருக்குக் கிட் டக்கூடும்.வெற்றியீட்டிக் கொள்பவர் தனது வெற்றி யின் பின்னர் ரணில்விக்கிரமசிங்கவின் அரசியல் செயற்றிட்டத்தை நிராகரித்துவிட்டாலும் கூட, குறைந்தபட்சம் கட்சித்தலைமைத்துவத்தையாவது பாதுகாத்துக்கொள்ளும் திறனாற்றல் ரணிலுக்குக் கிட்டக்கூடும். அந்த அர்த்தத்தில் நோக்கும்போது இத் தேர்தலில் கிட்டும் பெறுபேறு எவ்வாறானதாக அமைந்தாலும் கட்சித் தலைமைத்துவத்தைப் பேணிப் பாதுகாத்துக்கொள்ளும் திறனாற்றல் ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கிட்டுகிறது.

தமிழ் அரசியல் கட்சிகள்

ஆறுமுகன் தொண்டமான், டக்ளஸ் தேவானந்தா மற்றும் கருணா போன்றோர் அரச தரப்பிலேயே உள்ளனர். மனோ கணேசன், ஜெனரல் சரத் பொன்சேகாவைச் சார்ந்து நிற்கிறார். இங்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்பு யாருக்குக் கிட்டப் போகின்றது என்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைபின் தலைவர்கள் அரசியல் கண்ணோட்டத்தில் ஆழமான தொரு மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தாலும் கூட, இந்த ஜனாதிபதிப் போட்டியில் அவர்கள் கைக்கொள்ளவிருக்கும் கொள்கை எதுவென்பது தெளிவற்றதாகவே உள்ளது.
அவர்கள் புறம்பானதொரு ராச்சியம் அல்லது அதற்குப் பதிலாகக் கோரிநின்ற சமஷ்டி ஆட்சி முறைமை தொடர்பான எண்ணத்தைக் கைவிட்டிருந்தாலும் கூட தமது இனம் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு நியாயமானதும் நீடித்து நிலைத்து நிற்பதுமான தீர் வொன்றைக் கோரி நிற்கின்றனர். ஆனாலும், அவர்களது நம்பிக்கைக்குப் பாத்திரமாகும் ஆக்கபூர்வமான தீர்வொன்றை முன்வைக்க இன்னமும் அரசு திறன்பெற்றிருக்கவில்லை.
யுத்த காலத்தில் மிகப்பெரும் சாதனை படைத்து அதன்மூலம் வீரபுரஷரென்ற பெயரைத் தட்டிக்கொண்ட பிரமுகராக ஜெனரல் சரத் பொன்சேகா திகழ்கின்றார். யுத்தத்தில் கிட்டிய கௌரவம் அந்த யுத்தம் உருவாக்கிய வீரபுரஷர்கள் மூவரிடையில் எவ்விதத்தில் பகிரப்பட வேண்டியுள்ளது என்பது குறித்துப் பல்வேறு கருத்துகள் வினவினாலும் கூட, அவர் யுத்தகளத்தில் வழங்கியுள்ள பங்களிப்பு மிக விசேடமானதாகும். ஜெனரல் சரத் பொன்சேகா களமிறங்கவுள்ளார் என்ற சலசலப்பு வரும் வரையிலும் எதிர்க் கட்சியினால் விடுக்கப்படும் கடும் சவா லொன்று இல்லாத தனிப்பயணத்தையே மஹிந்த அரசு மேற்கொண்டு வந்திருந்தது. ஆனால், ஜெனரல் சரத் பொன்சேகாவின் வருகையானது, அந்த நிலைப்பாட்டில் ஏதோவொரு மாற்றத்தை ஏற்படுத்திவிடக் காரணமாகியுள்ளதோடு, அதைச் சற்று ஆழமாக நோக்கும்போது, அதை நல்லதொரு நிலைப்பாடாக அன்றி தீயதொன்றாகக் கருத இயலாது. பலமிக்க தொரு அரசு, பலமிக்கதொரு எதிரணி அமைப் பினால் விடுக்கப்படும் சவால்கள் மற்றும் விமர்சனங்களுக்கு மத்தியிலேயே முன்னோக்கிப் பயணிக்க நேர்ந்துள்ளது.
இருந்தபோதிலும், தமது பார்வைக்கு எட்டும் தீவிர சக்திகளோடு அல்லாது, அதற்கு முற்றிலும் மாறான கருத்து நிலைப்பாடுகளைக் கொண்டுள்ள தீவிர சக்திகளுடன் இணைந்தே ஜெனரல் சரத் பொன்சேகா செயற்பட வேண்டி நேர்ந்துள்ளது. முக்கியமாக, தாம் முன்னெடுத்துச் சென்ற யுத்தத்துக்குச் சார்பாக நின்று செயற்பட்ட தரப்புடன் அல்லாது, கடும் எதிர்ப்பைக் காட்டிச் செயற்பட்டுள்ள தரப்பொன்றுடன் இணைந்தே அவர் செயற்பட வேண்டி நேர்ந்துள்ளது. இந்தப் பொருந்தாத தன்மை தெளிவாகப் புலப்படும் நிலைப் பாடே நிலவுவதோடு, அது இக்கூட்டமைப் புக்கேயுரிய பலவீனமான இலட்சணமெனவும் கொள்ள முடிகிறது.
மேலும், ஜெனரல் சரத் பொன்சேகா முதிர்ந்ததொரு அரசியல் தலைவரல்ல. தேர்ச்சி பெற்றதொரு இராணுவத் தலைவரேயா வார்.இராணுவத் தலைவரொருவரிடத்தில் அரசியல் தலைவரொருவருக்கு அமையாத சீரொழுக்கக் கட்டுக்கோப்பு அமைந்திருந்தாலும், அரசியலில் போன்றல்லாது யுத்தமொன்றில் முக்கியத்துவம் பெறுவது கட்டளைகளைப் பிறப்பித்தல் மற்றும் கட்டளைகளைப் பின்பற்றலேயாகும்.