விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக நிதி திரட்டியதாக குற்றம்சாட்டப்பட்ட 21 தமிழர்களுக்கு பிரான்ஸ் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. நடராஜா மதீந்திரன் என்பவருக்கு ஏழாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ஐரோப்பிய நாடுகளில் விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், பிரான்சில் உள்ள தமிழ் சமுதாயத்தினரிடம் இருந்து விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டியதாதக் கூறி 20க்கும் மேற்பட்டோரை பாரிஸ் நகர போலீசார் கைது செய்தனர்.இவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடந்துவந்தது.
இவ்வழக்கில் விடுதலைப் புலிகளின் பிரான்ஸ் நாட்டுப் பொறுப்பாளரான நடராஜா மதீ்ந்திரன் முக்கிய குற்றவாளியாக இணைக்கப்பட்டிருந்தார்.இந்த வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
பிரான்சில் தமிழ் சமுதாயத்தினரிடம் சட்ட விரோதமாக நிதி திரட்டியதாகக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், 21 விடுதலைப் புலிளுக்கு சிறை தண்டனை விதிக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டது. அதிகப்பட்ச தண்டனையாக நடராஜா மதீந்திரனுக்கு ஏழாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அரசு தரப்பில் வாதாடிய வக்கீல், பிரான்சில் குடியேறியுள்ள தமிழர்களிடம் இருந்து புரட்சி வரி என்ற பெயரில் விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டியதாகவும், பிரான்சில் உள்ள 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வசதி படைத்த தமிழர்களிடம் இருந்து இவ்வாறு மொத்தம் 5 மில்லியன் யூரோக்கள் திரட்டப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.பிரான்சில் செயல்பட்டு வந்த தமிழர்-ஃபிரென்சு ஒருங்கிணைப்பு கமிட்டி என்ற அமைப்பு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானதாக இருப்பதாகக் கூறி அந்த அமைப்பையும் நீதிமன்றம் தடை செய்துவிட்டது.