பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Friday, November 27, 2009

தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றது மகிழ்ச்சி: ஹாட்லிக் கல்லூரி கணிதப்பிரிவு மாணவன் பெருமிதம்

பொறியியலாளராக வேண்டும் என்ற இலக்குடன் கல்வி பயின்றுவந்த நான் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெறுவேன் என்று நினைத்திருந்தேன்.ஆனால் இன்று தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றதையிட்டு அளவற்ற மகிழ்ச்சி கொள்கிறேன். இவ்வாறு ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையில் தேசிய மட்டத்தில் தமிழ் மொழி மூலம் கணிதப்பிரிவில் முதலிடம் பெற்ற பரு. ஹாட்லிக் கல்லூரி மாணவன் ஜோன் நிராஜ் தெரிவித்தார்.
மாவட்ட மட்டத்திலும் தமிழ் மொழி மூலம் தேசிய மட்டத்திலும் கணிதத்துறையில் முதல் இடங்களைப் பெற்ற அன்ரன் கிறிஸ்டர்ஸ் ஜோன் நிராஜ் உதயனுக்கு தெரிவித்ததாவது:
சின்னவயதில் இருந்ததே பொறியியலாளராக வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் துளிர்த்தது. அந்த இலக்குடன் இலட்சியத்துடன் தொடர்ந்து பயின்று வந்தேன்.
எனக்குச் சிறுவயதில் இருந்து கல்வி புகட்டிய ஆசிரியர்கள் எனது பெற்றோரும் வழங்கிய ஊக்கம்தான் சிறந்த பெறுபேற்றைப் பெற உதவியது.
பாடசாலையிலும், தனியார் கல்வி நிறுவனங்களிலும் பெற்ற கல்விக்குப் புறம்பாக எனது நண்பர்களுடன் சேர்ந்து சுயமாக பயிற்சிகளை மேற்கொண்டதும் எனது பெறுபேறு சிறப்பாக அமையக் காரணமாக அமைந்தது.
எனது முன்னேற்றத்தில் எனது அப்பா, அம்மா, அக்கா, அத்தான் ஆகியோர் அதிக அக்கறை காட்டினார்கள். அவர்கள் எனக்கு வழங்கிய ஊக்குவிப்பு, ஒத்துழைப்பு என்பன காரணமாக இப்படியொரு சாதனையை நிலைநாட்ட முடிந்தது.
தொடர்ந்து கல்வியில் உயர்ந்து முன்னேற்றப் பாதையில் சாதனைகள் படைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளேன் என்றார்.