பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Friday, November 27, 2009

“சிறிலங்காவுக்கு அன்றைய எதிரி பிரபாகரன்: இன்றைய எதிரி நான்” – முதன்முறையாக மனம் திறக்கிறார் பொன்சேகா

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை படுகொலை செய்வதற்கு திட்டம் வகுத்து கட்டளை வழங்கிய சிறிலங்கா தேசிய பாதுகாப்பு சபை இன்று என்னை படுகொலை செய்வதற்கு திட்டம் வகுத்து அதனை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துவருகிறது என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
‘டெய்லி மிரர் ஒன் லைன்’ செய்தி சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அந்த விரிவான செய்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:-
எனக்குள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் அரசுக்கு தெளிவாக தெரியும். எனக்கு மட்டுமல்லாமல் இந்த நாட்டில் முக்கிய அரசியல் புள்ளிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளுக்குள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் அனைவரும் உணர்ந்தவிடயம். அவ்வாறு இந்த நாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என்றால், அரச தலைவர் ஏன் 2000 பேரை தனது தனிப்பட்ட பாதுகாப்புக்கு வைத்திருக்கவேண்டும்? பாதுகாப்பு அமைச்சின் செயலர் ஏன் 500 பேரை பாதுகாப்புக்கு வைத்திருக்கவேண்டும்? வவுனியா கட்டளை தளபதியாக பதவி வகித்து, எந்த ஒரு வலிந்த தாக்குதலையும் நெறிப்படுத்தாத தற்போதைய இராணுவ தளபதி ஏன் நூற்றுக்கணக்கான படையினரை தனது பாதுகாப்புக்கு வைத்திருக்கவேண்டும்?
கடந்த நவம்பர் மாதம் நான் கலந்துகொண்ட எனது கடைசி தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் பேசிய புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பி.கஜநாயக்க, வவுனியாவிலிருந்து வெடிபொருள் நிரப்பிய லேடன் வாகனம் ஒன்று, வி.ஐ.பி. ஒருவரை படுகொலை செயவ்தற்காக கொழும்பு வந்துள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளது என்று கூறினார்.
இவ்வாறான நிலையில், எனது பாதுகாப்பு குறைக்கப்பட்டு நான் அரச பாதுகாப்பு இல்லத்திலிருந்து வெளியேற்றப்படவேண்டும் என்ற முனைப்புடன் அரசு செயற்படுவது, நான் படுகொலை செய்யப்படவேண்டும் என்ற நோக்கத்துடனேயே ஆகும்.
வீதியில் நான் இவ்வாறு குறைந்த பாதுகாப்புடன் சென்றுகொண்டிருக்கும்போது என்மீது தாக்குதல் நடத்தப்பட்டால், நான் மட்டுமல்ல என்னுடன் பாதுகாப்புக்கு வருபவர்கள், பாதசாரிகள் என நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழக்கநேரிடும். அவ்வாறு இடம்பெற்றால்கூட பரவாயில்லை, நான் படுகொலை செய்யப்படவேண்டும் என்ற நோக்கத்துடனேயே அரசு செயற்பட்டுவருகிறது என்பதனை இந்நாட்டு மக்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.
மே மாதம் நடைபெற்றது என்ன?
போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த கடந்த மே மாத பகுதியில் நான் நாட்டிலிருக்கவில்லை என்ற செய்தி அரச தரப்பினால் பரப்பப்பட்டுவருகிறது. உண்மையில் நடந்தது யாதெனில், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் தலைவராக உள்ள லங்கா லொஜிஸ்டிக்கஸ் என்ற சிறிலங்கா படையினருக்கு ஆயுதங்களையும் தளவாடங்களையும் கொள்முதல் செய்யும் நிறுவனம் சீனாவிலிருந்து நூறு இராணுவ வாகனங்களை கொள்முதல் செய்வதற்கு திட்டமிட்டிருந்தது.
இது தொடர்பான சகல நடவடிக்கைகளையும் பாதுகாப்பு அமைச்சே மேற்கொண்டது. நான் உட்பட சில மேஜர் ஜெனரல்கள்,பிரிகேடியர்கள் அடங்கிய இராணுல அதிகாரிகள் சீனாவுக்கு சென்று குறிப்பிட்ட இராணுவ வாகனங்கள் தொடர்பான தொழில்நுட்ப தரம்நோக்கும் பணிக்கு குறிப்பிட்ட சீன நிறுவனத்தினால் அழைக்கப்பட்டிருந்தோம்.
இராணுவ தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டது முதல், சிங்கப்பூருக்கு எனது மருத்துவ சோதனக்காகவும் இந்திய, பாகிஸ்தான், பங்களாதேஷ் இராணுவ தளபதிகளை சந்திப்பதற்காக மட்டுமே, கடந்த இரண்டு வருடத்தில் நான் வெளிநாடு சென்றிருந்தேன். போர் நடவடிக்கைகளை ஒருங்கமைக்கும் பொறுப்புக்களை நான் மேற்கொண்டுவந்த காரணத்தினால், சீன நிறுவனத்தின் அழைப்பை பிற்போட்டுக்கொண்டே வந்தேன்.
ஆனால், மே மாதமும் நான் சென்று அந்த வாகனங்கள் தொடர்பான பணியை மேற்கொள்ளாவிடின் கொள்முதல் நடவடிக்கையை சீன நிறுவனம் ரத்து செய்திருக்கும். சிறிலங்கா அரசுக்கு பாரிய நட்டம் ஏற்படும்.
கடந்த மே 10 ஆம் திகதி எமது படைகள் ஆறு கிலோமீற்றர் பகுதியே கைப்பற்றவேண்டியிருந்தது. போர் ஆரம்பித்து 150 கிலோ மீற்றருக்கு படைகளை நான் வழிநடத்தியிருந்தேன். அப்போதெல்லம் நான் வவுனியாவிலிருந்து போரை நெறிப்படுத்தவில்லை. வரைபடங்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள், செய்மதி தொலைபேசிகள் ஆகியவற்றிக் அடிப்படையில் எனது கட்டளைகளை களத்திலிருந்த படைகளுக்கு வழங்கிவந்தேன்.
நான் கொழும்பிலிருந்தாலென்ன சீனாவிலிருந்தாலென்ன அமெரிக்காவிலிருந்தாலென்ன எனது கட்டளைகள் களத்தில் நிறைவேற்றப்பட்டுக்கொண்டிருந்தன. படைநடவடிக்கை தொடர்ந்து நடைபெற்றது. சுமார் 20 ஆயிரம் விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மீட்கப்பட்டனர்.
நான் சீனா செல்வதற்கு முன்னர்கூட சகல திட்டங்களையும் எனது தளபதிகளுக்கு விளக்கி நடைமுறைப்படுத்துமாறு உத்தரவிட்டுவிட்டுத்தான் சென்றேன். அதன்பிரகாரம், 17 ஆம் தகதி மாலை நாடு திரும்பி, 19 ஆம் திகதி காலை வரை களத்தில்நின்று போரை வெற்றிகரமாக நிறைவேற்றினேன்.
நான் சிறிலங்காவில் இல்லாதசமயம் எனக்குத்தெரியாமல் பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்ட ஒரு படைநடவடிக்கையால் அநியாயமாக 25 படையினர் உயிரிழந்தனர். 18 பேர் காயமடைநதனர். மற்றும்படி, நான் திட்டமிட்டவாறே போர் நிறைவேறியது.
நண்பர்களின் துரோகம் வேதனையளிக்கவில்லை
ஒரு காலத்தில் எனது நண்பர்களாக திகழ்ந்த அரச அதிபர் மகிந்த, பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய, இராணுவ தளபதி ஆகியோர் தற்போது எனக்கு எதிரிகளாக மாறியிருப்பது குறித்து எனக்கு கவலையில்லை. நல்ல மனம் படைத்தவர்கள் பிழையாக நடந்தால் வேதனையாக இருக்கும்.
ஆனால், இவர்கள் எனக்கு செய்யும் வேலைகள் குறித்து நான் வேதனையடையவில்லை. என்னைப்போல இந்தக்கூட்டத்தினரால் பாதிக்கப்படப்போகும் ஏனையோரை நினைத்தே எனக்கு கவலையாக உள்ளது. மகிந்த தலைமையிலானவர்கள் எனக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எதிர்கொண்டு அவற்றை முறியடிக்கும் துணிவும் தைரியமும் எனக்கு உண்டு. ஆனால், என்னைப்போன்று பாதிக்கப்படவுள்ள ஏனையோருக்கு அது இருக்குமா என்பது குறித்தே நான் கவலையடைகிறேன்.
எனக்கு எதிரான பல்வேறு குற்றச்சாட்டுக்களை அரச தரப்பு தற்போது பரப்பிவருகிறது. எத்தனையோ விசாரணைகளையும் ஆரம்பித்திருக்கிறது. நான் இராணுவத்திலிருக்கும்போத ஏதாவது தவறு செய்திருந்தால் அது தொடர்பாக அரசு அப்போதே எனக்கு எதிராக அரசு உடன் நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும்.
அவ்வாறு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அந்த தவறை அரச தரப்பின் ஆசீர்வாதத்துடனேயே நான் புரிந்திருக்கிறேன் என்றுதான் அர்த்தம். ஆகவே, நான் பதவி விலகிய நாள் முதல் என் மீது குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசி பிரசாரம் செய்வது எந்த வகையிலும் அர்த்தமற்றது.
- என்று அவர் கூறியுள்ளார்.