
இதுகுறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
விடுதலைப் போரில் வீழ்த்தப்பட்ட வேங்கை பிரபாகரனுக்காக என் விழிகள் நீரைப் பொழிகின்றன. அதே நேரத்தில் ராஜீவ் காந்தியும், நாவலர் அமிர்தலிங்கமும், யோகேஸ்வரனும், முகுந்தனும், சிறிசபாரத்தினமும், பத்மநாபாவும் கொல்லப்பட்ட போது, அவர்களை இழந்த மனைவி மக்களும், உற்றார் உறவினர்களும், நண்பர்களும் கண்ணீர் பெருக்கினர். அவர்களோடு சேர்ந்து கண்ணீர் சிந்த எனக்கு உரிமை இல்லையா?
புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவராக இருந்த தமிழ்ச்செல்வன் மறைந்த போது இரங்கல் கவிதை எழுதினேன்.
இறந்த ஒருவருக்கு அனுதாபம் தெரிவித்ததைக் கூட ஜெயலலிதாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. என்னைக் கண்டித்து அவர் அறிக்கை வெளியிட்டார்.
இப்படி அறிக்கை விட்டவர்களைப் பற்றி எதுவும் சொல்லாமல், சொல்ல மனம் இல்லாமல் அல்லது துணிவு இல்லாமல் என் மீது பாய்கிறார்களே?
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பிரபாகரன் முதல் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளதால் அவரை சிறை பிடித்துக் கொண்டு வர வேண்டும் என்று பேரவையில் தீர்மானத்தை முன்மொழிந்தார் ஜெயலலிதா.
இப்போது நல்லதை எண்ணி நடுநிலையுடன் நான் எழுதினேன். இதற்காக, என் மீது பாய்கிறார் ஜெயலலிதா.
பிரபாகரனை என்றைக்கும் ஆதரிப்பேன் என்று சொல்லிக் கொண்டிப்பவர்களும், ஜெயலலிதாவுக்கு துணை போய் என்னைத் தாக்கி அறிக்கை விடுகிறார்கள்.
இலங்கை அகதிகளுக்காக... தமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதிகளின் மேம்பாட்டுக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில், அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.45 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதர நலத் திட்ட உதவிகளை வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட துறைகள் பொறுப்பேற்று உடனடியாக நிறைவேற்றவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டது.
ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.100 கோடியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான செலவுகள் போக, மீதமுள்ள தொகையில் தக்கதொரு கட்டட வடிவமைப்பை ஏற்படுத்தி தகுதியான நிலத்தைத் தேர்ந்தெடுத்த பின்னர், புதிய கான்கிரீட் வீடுகள் ஊரக வளர்ச்சித் துறை மூலம் கட்ட தனியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.