""நல்லகாலம் பொறக்குது... நல்லகாலம் பொறக்குதுன்னு... குடுகுடுப்பை அடிச்சி... ஊருக்கெல்லாம் பலன் சொல்லி வாழ்க்கை நடத்திவரும் எங்களுக்கு.... எப்ப நல்ல காலம் பொறக்கும்னு தெரியலைங்க. நாங்க அடிமை வாழ்க்கையையும் அசிங்கமான வாழ்க்கையையும் சந்திக்கவேண்டியிருக்கு'' என கண்கலங்கினார்கள் ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் புகார் கொடுத்துவிட்டு வெளியே வந்த அந்த கோடங்கிகள்.
எதற்கு இந்தப் புலம்பல்? யார் மீது புகார்? என நாம் விசாரித்த போது... தங்கள் துயரத்தைப் பட்டியலிடத் தொடங்கினார்கள் அவர்கள்.... “""குடுகுடுப்பை அடிச்சி அர்த்த ஜாமத்திலும்... ஊரே எழாத அதிகாலை வேலைகள்லயும் வீடுவீடா போய்... ஜக்கம்மா அருளால... எல்லாருக்கும் நடக்கப் போற பலன்களைச் சொல்லி... ஜனங்க கொடுக்குறதை வச்சி பிழைப்பை ஓட்டறவங்க நாங்க.
எங்களைக் குடுகுடுப்பைக்காரர்.. கோடங்கின்னு கூப்பிடுவாங்க. தமிழ்நாட்ல எடுத்துக் கிட்டா... ஈரோடு, திருப்பூர், நாமக்கல், தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், சேலம்னு பல பகுதிகள்லயும்... பல கிராமங்கள் லயும் ஏறத்தாழ 40 ஆயிரம் பேருக்கு மேல்... நாங்களும் எங்க சொந்த பந்தங்களும் வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். இதில் இப்ப பெரும்பாலோர் குலத்தொழிலை விட்டுட்டு... லோக்கலில் கிடைக்கும் வேலைகளைச் செய்து...
பிள்ளைக் குட்டிகளைப் படிக்கவைக்கும் முயற்சியில் இருக்கோம். அப்படிப்பட்ட எங்க ஒட்டு மொத்த சமூகத்தையும்... நாட்டாமை என்ற பெயரில் ஆட்டிப் படைச்சிக்கிட்டு இருக்கார் ஒரத்தநாட்டைச் சேர்ந்த தாள.கணேசன். அவரோட அடாவடிகளை சகிக்கமுடியாம நாங்க தவிச்சிக்கிட்டு இருக்கோம். அவர் எங்களை அடிமையா நடத்தி... கட்டைப் பஞ்சாயத்து பண்ணிகிட்டு இருக்கார். எங்க சமூக ஜனங்க வாழ்ற பகுதிகள்ல பட்டக்காரர், கொத்துக்காரர்னு ரெண்டுபேரை நியமிச்சி...
அவங்க மூலம் எங்க ஜனங்களுக்குள் நடக்கும் பிரச்சினைகளைத் தன்னிடம் பஞ்சாயத்துக்குக் கொண்டுவரச்செய்து... மனம்போன போக்கில் எங்களைத் தண்டிக்கிறார்'' என்றார்கள் கோரஸாய்.""இப்படி மொட்டையாச் சொன்னா எப்படி? அப்படி என்னதான் அடாவடி பஞ்சாயத்து பண்றார்?'' என்றோம் அவர்களிடமே.அவர்களில் ஒருவ ரான முருகேசனோ, ""சின்ன சின்ன பிரச் சினை என்றாலும் தாள.கணேசன்கிட்டதான் நாங்க போகணும். அவர் முழுசா விசாரிக்காமலே.... 2 ஆயிரம், 3 ஆயிரம்னு அபராதத்தை விதிப்பார். அதோட செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேட்டு.. மேல் சட்டை இல்லாம அந்தந்த ஏரியாவின் பட்டக்காரர், கொத்துக்காரர் கால்ல நாங்க விழுந்து மன்னிப்பு கேட்கணும். அப்படி கேட்காட்டி.. எங்க ஜனங்க யாரும் எங்ககூட பேசக்கூடாது. பேசினா அவங்களுக்கும் அபராதம்தான்.
இதில் என்ன கொடுமைன்னா.. யாராவது யார் மனைவியையாவது இழுத்துட்டுப் போய்ட்டாக்க... அந்த நபருக்கு சின்னதா ஒரு அபராதத்தைப் போடுவார். அபராதம் கட்டத் தயாரா இருக்கவன்.. அடுத்தவன் மனைவிகளை மடக்கி அவங்களோட தைரியமா வாழலாம். இதனால யார் வேணும்னாலும் எந்தப் பெண்ணோட வேணும்னாலும் அபராதத்தைக் கட்டிட்டு வாழலாம்னு ஆகிப் போச்சு. இதனால் எங்க சமூக ஒழுக்கமும் தலைகீழா மாறிக் கிட்டு இருக்கு'' என்றார் சங்கடமாய்.""சேலத்தை சேர்ந்த ஒரு முதியவருக்கு ஏற்கனவே ஐந்து மனைவிகள். காலம் போன கடைசியில்... அவர் 17 வயசு பொம்பளைப் பிள்ளையைக் கட்டிக்கிட்டார்.
இது தவறுன்னு தடுக்காத நாட்டாமை... அந்தப் பெரியவருக்கு ஒரு அபராதத்தைப் போட்டுட்டு... நல்லபடியா சேர்ந்து வாழுங்கன்னு அனுப்பிட்டார். அந்தப் பெரியவர் மாறிமாறி ரவுண்டுகட்டி விளையாடிக்கிட்டு இருக்கார். தாள.கணேசனைப் பொறுத்தவரை... யாரும் யாரோடவும் வாழலாம்ங்கிறதுதான் சித்தாந்தம். இந்த விவகாரங்கள்ல அபராதம்ங்கிற பேர்ல வசூலாகிற பணத்தையும் தாள.கணேசனே எடுத்துக்குவார். இவரது அடாவடிகளைக் கண்டு நொந்துபோன நாங்க..
"இனியும் கேடுகெட்டத் தனமா-அடிமைத்தனமா நாட்டாமைக்குக் கீழ வாழக்கூடாதுன்னுதான்... அவரின் பிடியில் இருந்து விடுவியுங்கள்னு' காவல்துறையிடம் மனு கொடுத்துட்டு... விடுதலைக்காகப் போராடிக்கிட்டு இருக்கிறோம்'' என்கிறார் வடிவேல் எரிச்சலாய். கோடங்கிகளுக்காகக் குரல்கொடுத்துவரும் வழக்கறிஞர் குஞ்சம்மாளையும் நாம் சந்தித்தோம். அவர் நம்மிடம், ""எப்போதோ இருந்த வழக்கத்தை இப்பவும் பிடிச்சிக்கிட்டு.. "நாட்டாமைத் தலைவன் நான்தான். நான் சொல்றதுதான் சட்டம்.
அதைத்தான் நீங்கள்லாம் கேட்கணும்'னு ஒருத்தர் கட்டைப் பஞ்சாயத்து பண்றாருன்னா... அதை எப்படி சட்டம் வேடிக்கை பார்க்குது? பஞ்சாயத் துங்கிற பேரில்... சரியான தம்பதிகள் பிரியவும்... தப்பான ஜோடிகள் சேரவும் உதவுறது எந்த வகையில் சரியானது? அதனால்தான் காவல்துறை அந்த அடாவடிப் பேர்வழி மீது நடவடிக்கை எடுக்கணும்னு பாவப்பட்ட கோடங்கி களுக்காக நான் குரல்கொடுத்துக்கிட்டு இருக்கேன். கோடங்கிகளுக்கு நீதி கிடைக்கும்வரை ஓயமாட்டேன்'' என்றார் அழுத்தம் திருத்த மாய். இது தொடர்பாக கோடங்கிகளின் நாட்டாண் மை என சொல்லிக் கொள்ளும் தாள. கணேசனிடமே நாம் கேட்டபோது...
’""என் மேல் சொல்லப்படும் புகார்கள் எல்லாமே பொய்யானது. இந்தக் காலத்தில் நாட்டாமை... மரத்தடிப் பஞ்சாயத்துன்னு நாம நடத்த முடியுமா? ஒரு காலத்தில் அதெல்லாம் நடந்திருக்கலாம். இப்ப அப்படி எதுவும் இல்லை. வருஷத்துக்கு ஒரு தரம் எங்க ஜனங்க எல்லாரும் திருவிழாவில் கூடுவோம். அப்ப நல்லது கெட்டதைப் பத்திப் பேசிக்குவோம். இதைக் கட்டைப் பஞ்சாயத்துன்னு சொன்னா என்ன பண்றது?'' என்கிறார் கூலாய்.ஊருக்கெல்லாம் பலன் சொல்லும் கோடங்கிகளுக்கு இனியாவது நல்லகாலம் பிறக்குமா?