இந்தியா முழுவதும் உள்ள, ரகசிய குறியீட்டு எண் இல்லாத இரண்டரை கோடி செல்போன்களின் இணைப்புகள் நாளை மறுநாள் முதல் துண்டிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. கொரியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து மலிவு விலை செல்போன்கள் ஏராளமாக இறக்குமதி செய்யப்படுகின்றன. விற்பனையிலும் இவைதான் இன்று முன்னணியில் உள்ளது!செல்போன்களில் ஐ.எம்.இ.ஐ. (சர்வதேச செல்போன் குறியீட்டு எண்) என்ற ரகசிய குறியீட்டு எண் உள்ளது. இந்த எண் 15 இலக்கங்களை கொண்டது ஆகும்.
ஒவ்வொரு செல்போனுக்கும் ஒவ்வொரு ஐ.எம்.இ.ஐ. குறியீட்டு எண் இருக்கும்.ஒரு செல்போன் எந்த இடத்தில் இருந்து பேசப்படுகிறது என்பதை இந்த எண்ணின் மூலம்தான் கண்டுபிடிக்க முடியும். மேலும் செல்போன் தொலைந்து விட்டால், உரிமையாளர் அதன் செயல்பாட்டை நிறுத்தி வைக்கவும் இந்த எண்தான் உதவும்.ஆனால் கொரியா, சீனாவில் இருந்து கள்ளத்தனமாக கொண்டு வந்து விற்கப்படும் ஏராளமான செல்போன்களில் ஐ.எம்.இ.ஐ. என்ற சர்வதேச ரகசிய குறியீட்டு எண் இருப்பது இல்லை. இந்தியா முழுவதும், ரகசிய குறியீட்டு எண் இல்லாத சுமார் 2.5 கோடி செல்போன்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த குறியீட்டு எண் இல்லாத செல்போன்களை பயன்படுத்துவதில் பாதுகாப்பு தொடர்பான பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இந்த வகை செல்போன்களில் இருந்து பேசும் போது எங்கிருந்து பேசுகிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியாது. இது தீவிரவாதிகளுக்கு மிகவும் வசதியாக போய் விடுகிறது.எனவே, சமீப காலமாக தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்து இருப்பதாலும், நாட்டின் பாதுகாப்பு கருதியும் சர்வதேச குறியீட்டு எண் இல்லாத செல்போன்களின் செயல்பாட்டை முடக்க மத்திய அரசு முடிவு செய்தது.இதைத்தொடர்ந்து, அத்தகைய செல்போன் வைத்திருப்பவர்கள் அதை மாற்றிக் கொள்வதற்கு வசதியாக வருகிற 30-ந் தேதி (திங்கட்கிழமை) வரை 'கெடு' விதித்திருந்தது மத்திய அரசு.அந்த 'கெடு' முடிய இன்னும் 2 நாட்களே உள்ளன. எனவே, திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணி முதல், சர்வதேச ரகசிய குறியீட்டு எண் இல்லாத செல்போன்களின் இணைப்புகள் துண்டிக்கப்படும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு துறை ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது.செல்போன் உபயோகிப்பாளர்கள், 57886 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) அனுப்பி தங்கள் செல்போனின் ரகசிய குறியீட்டு எண்ணை உறுதி செய்து கொள்ளலாம்.