வன்னியிலிருந்த றோ முகவர்கள் ஐம்பது பேரை போர்முடிவடைந்த கையோடு றோ அமைப்பு இந்தியாவுக்குள் எடுத்துவிட்டது. வன்னியில் றோ முகவர்களாக செயற்பட்ட இந்த ஐம்பது பேரும் ஈழத்தமிழர்கள் என்றும் இவர்களை சிறிலங்கா அரசுடன் பேசி இரகசியமாக றோ இந்தியாவுக்குள் எடுத்துக்கொண்டது என்று சிறிலங்காவின் உயர் அரச மட்டங்களிலிருந்து கசிந்திருக்கிறது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:-
வன்னியில் பல காலமாக செயற்பட்டுவந்த றோ அமைப்பின் முகவர்கள் அங்கு அரச உயர்உத்தியோகங்களிலும் வர்த்தக நிறுவனங்களிலும் விவசாயிகளாகவும்கூட பணிபுரிந்துவந்தார்கள். போர் நடைபெற்ற கடைசிக்காலப்பகுதிவரை இவர்கள் அனைவரும் அங்கிருந்தவாறே புலனாய்வுத்தகவல்களை திரட்டி தமது உயர்பீடத்துக்கு அனுப்பிவந்துள்ளார்கள். இவர்களது செயற்பாடு சிறிலங்கா அரசுக்கோ படையினருக்கோகூட தெரிந்திருக்கவில்லை.
போர் முடிவடையும் தறுவாயில் இவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக இந்தியாவுக்குள் எடுப்பதற்கு தீர்மானித்த றோ அமைப்பு, இந்திய அரசின் ஊடாக சிறிலங்கா அரசுடன் பேச்சு நடத்தியது. இதன்பிரகாரம், இவ்வாறு வன்னிப்பகுதியிலிருந்து செயற்பட்ட றோ முகவர்கள் ஐம்பத பேரின் பெயர் பட்டியலை சிறிலங்கா அரசிடம் வழங்கி, அந்த பட்டியலில் உள்ள பெயர்களுடையவர்கள் வன்னியில் சிறிலங்கா அரச படையினரிடம் சரணடைவார்கள். அவர்கள் பாதுகாப்பாக இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவேண்டும் என்று சிறிலங்கா அரசிடம் இந்திய அரசு தெரிவித்தது.
இந்த விடயம் தொடர்பாக சிறிலங்கா அரசுடன் இந்திய பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் எம்.கே.நாரயணன் தலைமையிலான குழுவினரே பேச்சு நடத்தினர். இதேவேளை, சிறிலங்கா அரசுடன் சரணடைதல் தொடர்பாக பேச்சு நடத்தப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பான இடத்தில் சிறிலங்கா படையினரிடம் சரணடையும்படியும் வன்னியிலிருந்த றோ முகவர்கள் ஐம்பது பேருக்கும் அவர்களது தலைமைப்பீடத்திடமிருந்து தகவல் அனுப்பப்பட்டு, சரணடையும்போது கடைப்பிடிக்கவேண்டிய முறைகள் பற்றியும் தெளிவாக அறிவுறுத்தப்பட்டது.
இதனையடுத்து, சிறிலங்கா அரச படையினரிடம் சரணடைந்த ஐம்பது றோ முகவர்களும் பாதுகாப்பாக இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
- என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
--- puthinam