பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Wednesday, December 9, 2009

முட்கம்பிச் சிறையிலிருந்து விடுதலை; ஆனால், தமிழர்கள் கொடுத்த விலை...


தன்னைக் கொலை செய்ய முற்பட்ட ஒருவரைக் கச்சிதமாகப் பழி தீர்ப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் - முட்கம்பி வேலியின் பின்னால் அந்தச் சமையல்காரருக்கு எதிர்பாராத விதமாகக் கிடைத்தது.
அந்த வாய்ப்பு வந்த போது - சிறிலங்கா அரசினால் நடத்தப்பட்ட தடுப்பு முகாமில் 280,000 தமிழ் மக்களுடன் மக்களாக ஒரு கைதியாக அவர் இருந்தார்.
கடந்த மே மாதத்தில் - விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசிச் சிறு நிலத் துண்டில் இருந்து அவர் தப்பி வந்த அந்த நாளின் நினைவுகள் இன்னமும் அவர் மனதில் ஒளிர்ந்துகொண்டு உள்ளன.
“மக்கள் ஒரு குழுவாகத் தப்பி ஓட முயற்சித்த போது - அவர்களில் 20 முதல் 30 வரையானோரைப் புலிகள் சுட்டுக் கொன்றார்கள்; அந்த மக்கள் குழுவில் நானும் இருந்தேன்” என்று நினைவு கூருகின்றார் வி.சிவலிங்கம்.
கடந்த செவ்வாய்க் கிழமை (டிசெம்பர் 1, 2009) வவுனியா தடுப்பு முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டு வெளியே வந்த கடைசித் தமிழ்க் கைதிகளில் ஒருவர் அவர்.
“அங்கே அவர்கள் நான்கு அல்லது ஐந்து பேர் இருந்தார்கள். முதலில் அவர்கள் எங்களுடன் வாக்குவாதப்பட்டனர். சற்று நேரத்தில், அவர்களைச் சுற்றி இருந்த மக்கள் கூட்டம் பெரியதாகத் தொடங்கியது; அவர்கள் பயப்படத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் மக்கள் அவர்களைத் தள்ளிக் கடந்து கொண்டு வெளியேற முயன்றனர்.
உடனே அவர்கள் மக்களை நோக்கித் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்; மிக நெருக்கமாக, இடுப்பளவு உயரத்தில், எங்களை நோக்கி சரமாரியாகச் சுட்டனர். பெரும் அல்லோல கல்லோலமாக ஆகி விட்டது. அதேநேரத்தில் - படையினர் கூட எம் மீது பீரங்கிக் குண்டுகளைக் கொட்டிக்கொண்டிருந்தனர்” என்றார் சிவலிங்கம்.
சிவலிங்கம் முல்லைத்தீவைச் சேர்ந்த சமையல்காரர். தனது மனைவி மற்றும் ஐந்து குழந்தைகளுடன் தெய்வாதீனமாக உயிர் தப்பி வெற்றிகரமாகப் படையினரின் முன்னணி நிலைகளை வந்தடைந்தவர்; 10 மணி நேரமாகக் கழுத்தளவு கடல் நீரில் நடந்து வந்து அவர்கள் இந்தக் காவியத்தைப் படைத்தனர்.
அதன் பின், சில நாட்களிலேயே - வவுனியா "மெனிக்" பண்ணை முகாம் வளாகத்தில் உள்ள 'வலயம் - 2' [ Zone - 2 ] பகுதியில் சிறிலங்கா படையினரால் அவரும் அவரது குடும்பத்தினரும் அடைக்கப்பட்டனர்.
கடந்த செவ்வாய்க் கிழமை வரை அவர்கள் அங்கேயே இருந்தனர். அவருடன் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் பலரும் முன்னாள் போராளிகள்; அற்புதமான நாள் ஒன்றில் தனக்குத் தெரிந்த முகம் ஒன்றை சிவலிங்கம் அங்கே கண்டார்.
“அவர் ஒரு விடுதலைப் புலிப் பேராளி. அன்றைய தினம் பலரைச் சுட்டுக் கொன்றவர்களில் ஒருவர்” என்கிறார் சிவலிங்கம். “அவர் இளம் வயதில் உள்ளவர்; எப்படியோ ஒரு வழியாகத் தப்பி விட்டார்; இப்போது பொதுமக்களுள் ஒருவராகக் கலந்து இருந்தார்.
நான் அவரை அணுகி ‘என்னைத் தெரிகிறதா...? நீங்கள் சுட்ட அந்த மக்கள் கூட்டத்திற்குள் நானும் இருந்தேன். என்னால் இப்போது உங்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்’ என்றேன். அந்த இளைஞன் தலையைத் தொங்கப் போட்டான்” என்று மேலும் விபரிக்கிறார் சிவலிங்கம்.




அந்த முன்னாள் பேராளியைத் தாக்குவதற்கு அல்லது சிறிலங்கா படை ஆட்களிடம் காட்டிக் கொடுப்பதற்குப் பதிலாக “நான் எதுவும் செய்யவில்லை; அவரைப் பற்றி எவரிடமும் சொல்லவில்லை; புலிகள் எங்களுக்காக நீண்ட காலமாகக் கடுமையாகப் போராடி இருக்கிறார்கள். ஆனால் கடைசிக் காலத்தில் அவர்கள் செய்தவைகள் எல்லாம் பயங்கரமானவை தான் – அது எங்களுக்குத் தெரியும். இருப்பினும் அந்த நேரத்தில் அவர்களுக்கும் வேறு வழிகள் எதுவும் இருக்கவில்லை" என விபரிக்கிறார் அவர்.




பெரும்பாலான தமிழர்களிடம் - விடுதலைப் புலிகளால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களிடம் கூட - புலிகளை நோக்கிய இத்தகைய இரட்டை மனப்போக்கு காணப்படுகின்றது.
தடுப்பு முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் - தமது எதிர்கால வாழ்க்கை குறித்த போராட்டங்களை இனி எப்படி எதிர்கொள்ளவது என்று தெரியாமல் திணறி வரும் சமயத்திலும் - அந்த மக்கள் மத்தியில் இத்தகைய போக்கு நீடிக்கிறது.



வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து 6 மாதங்கள் தடுப்பு முகாமில் இருந்து, டிசெம்பர் 1ஆம் திகதி விடுவிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் தற்காலிக வதிவிடம்.




“பிரபாகரன் இறந்துவிட்டார் எனக் கேள்விப்பட்ட போது, அது பற்றி எத்தகைய உணர்வும் எனக்கு எற்படவில்லை" எனத் தெரிவித்தார் ஜெகதீஷ் சித்தார்த்தன் (34). கிளிநொச்சியைச் சேர்ந்த ஆசிரியையான இவர், "மெனிக்" பண்ணை தடுப்பு முகாமில் கடந்த 6 மாதங்களாக கணவர் மற்றும் ஆண் குழந்தைகளுடன் அடைத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் இப்போது தான் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்.




“ஆனால், பின்னர் - ஒரு தமிழ்ப் பெண்ணாக, அவரது சாவுக்காக நான் மிகவும் வருத்தப்பட்டேன். 30 வருடங்களாக எமது உரிமைக்காகப் புலிகள் போராடினார்கள். அழிவைச் சந்தித்த இறுதித் துளி வரைக்கும் அவர்கள் போராடினார்கள்” என விபரித்தார் அவர்.




மிகக் கொடூரமான போர்க் களத்தின் கொடுமைகளைத் தாங்கிக் கொண்டு - கடல் ஊடாகத் தனது இரண்டரை வயது மற்றும் 7 மாதக் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு - கணவருடன் நடந்து வந்த ஒரு பெண்ணிடம் இருந்து இந்த வார்த்தைகள் வந்தன.
ஒரே சமயத்தில் விடுதலைப் புலிகளும் சிறிலங்கா படையினரும் நடாத்திய துப்பாக்கிச் சூடுகளுக்கு மத்தியில் தப்பி ஓடி வரும் போது - வானூர்தி மற்றும் பீரங்கிக் குண்டுகளின் தாக்குதல்களால் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழர்களின் உடலங்களைத் தாம் கண்டதாக ஜெகதீஷ் சித்தார்த்தன் கூறினார்.
“பெரும் கூட்டமாக நாங்கள் தண்ணீரில் இறங்கிய போது எங்களை நோக்கி விடுதலைப் புலிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்; தாக்குண்டவர்கள் தண்ணீரில் வீழ்ந்தார்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.
சண்முகர் ராஜா லூத்மேரி தனது குழந்தைகளுடன் தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டார்; ஆனால், அவரது கணவர் புலிகள் இயக்க உறுப்பினர் என தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.மே 2009-இல் கிடைத்த போர் வெற்றியை நிலையான அமைதியாக மாற்றுவதற்கு சிறிலங்கா அரசு வேகமாக முயற்சிக்க வேண்டும். இல்லையேல் - இரட்டை மனப்பாங்கோடு உள்ள இத்தகைய மக்கள் அரசுக்குப் பெரும் சவாலாகவும் குழப்பமாகவும் அமைவார்கள்.
“வரலாற்றில் மிகப் பெரிய பணயக் கைதிகள் மீட்பு நடவடிக்கை” என்று பறை சாற்றி விடுதலைப் புலிகளிடம் இருந்து மக்களை விடுவித்ததாகத் தெரிவித்தவர்கள் - 280,000 மக்களை 6 மாதங்களாகத் தடுத்து வைத்திருந்தது அந்த மக்களது மனங்களை வெல்லக் கூடிய ஒரு சாதகமான தொடக்கமாக அமையவில்லை.
தடுப்பு முகாம்களில் திட்டமிட்ட ரீதியிலான துன்புறுத்தல்கள் இல்லை என்ற போதும் - அளவுக்கு அதிகமான சன நெருக்கடி மற்றும் மோசமான சுகாதாரச் சீர்கேடுகள் காரணமாக அந்த மக்களது வாழ்க்கை மிகக் கடினமான ஒன்றாக அமைந்திருந்தது.
“குறிப்பாக, எமது முகாம் மோசமானது” என்றார் சிவலிங்கம். “தண்ணீருக்காகவும் உணவுக்காகவும் தமக்கென ஒர் இடத்திற்காகவும் மக்கள் சண்டை போட வேண்டியிருந்தது.
கைதிகளாகத்தான் எங்களை நாங்கள் அங்கே உணர்ந்தோம். ஏனெனில், அப்படித்தான் நாங்கள் வைக்கப்பட்டிருந்தோம்: கீழ்த்தரமான மக்களாக” என அவர் விளக்கினார்.
கடந்த செவ்வாய்க் கிழமை விடுவிக்கப்பட்ட 130,000 மக்கள் உள்ளடங்கலாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைவருக்கும் - ஏதோ ஒரு வகையில் - உடனடி மீள்குடியமர்வு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
சிறு தொகைப் பணம், போர்வைகள் போன்ற உணவு-அல்லாத அத்தியாவசியப் பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் போது குறைபாடுகள் ஏற்படுகின்றன.
சிலர் காசையும் நிவாரணப் பொருட்களையும் பெற்றுள்ளனர்; சிலருக்கு எதுவும் கிடைக்கவில்லை: திருகோணமலைக்குத் திரும்பி இருப்பவர்களில் ஒருவரால் கூட இதுவரை வாராந்த நிவாரணத்தைப் பெற முடியவில்லை.
“அதிகாரிகளிடம் செல்லும் ஒவ்வொரு தடவையும், எங்களுக்குக் கொடுப்பதற்கான நிவாரணப் பொருட்கள் இன்னும் வந்து சேரவில்லை என்றே கூறுகிறார்கள்” எனச் சொன்னார் ராஜினிதேவி விசுவலிங்கம் (32).
விவசாயியான 40 வயது நிரம்பிய இவரது கணவருக்கு இரண்டு கண்களுமே போய்விட்டன; கடந்த ஏப்ரல் மாதத்தில் குண்டுத் தாக்குதல் ஒன்றில் அவர் தனது கண்களை இழந்துவிட்டிருந்தார். அப்படி இருந்த போதும், மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்பு - அவர் "மெனிக்' பண்ணையின் வலயம் 4-இல் இருந்த அவரது குடும்பத்தினருடன் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.


தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட குடும்பம்: கந்தையா விசுவலி்ங்கம் சிறிலங்கா படையின் பீரங்கிக் குண்டில் இரண்டு கண்களையும் இழந்துவிட்டார்.


“அகதிகளுக்கான ஐ.நா. தூதரகத்திற்கு (UNHCR - United Nations High Commissioner for Refugees) இது தொடர்பில் கடிதம் கொடுத்தேன்:
எனக்கு மூன்று குழந்தைகள், என் கணவருக்குப் பார்வை கிடையாது, எங்களுக்குச் சொந்தமாக வீடும் கிடையாது. கையில் காசும் கிடையாது என அந்தக் கடிதத்தில் எழுதி இருந்தேன்.
அவர்கள் என்னை அனைத்துலக குடிபெயர்வோர் அமைப்பு (IOM -International organisation for Migration) அலுவலகத்திற்கு அனுப்பினார்கள்.
ஐ. ஓ. எம் ஆட்கள் அங்கிருந்து என்னை மாவட்டச் செயலக அதிகாரிகளிடம் திருப்பி அனுப்பினார்கள்; அவர்கள் என்னை வெறுங்கையுடன் வெளியேற்றி விட்டார்கள்.
அரசாங்கம் எங்களைக் கைகழுவி விட்டுவிட்டது” எனப் பொருமினார் ராஜினிதேவி.
“நிலைமை தாறுமாறாகக் கிடக்கிறது” எனச் சொன்னார் அருட்தந்தை வி.யோகேஸ்வரன்.
கிறிஸ்த்தவ மதகுருவான அவர், திருகோணமலையில் உள்ள மனித உரிமைகளைப் பாதுகாத்து ஊக்குவிப்பதற்கான மையத்தின் [ Centre for Promotion and Protection of Human Rights in Trincomalee ] இயக்குனராகப் பணியாற்றுகின்றார்.
“மீள்குடியமர்வு அல்லது புனர்வாழ்வு நடவடிக்கைக்கெனத் தெளிவான நடைமுறைகள் எவையும் இங்கு இல்லை; அவை பற்றி எங்களுக்கு எதுவும் தெரியவில்லை; ஊர் திரும்பி இருப்பவர்களுக்கும் எதுவும் தெரியாது.
ஐ.நா.சபை கூட தெளிவான திட்டங்கள் எதுவும் இல்லாமலே இருக்கின்றது... ஏன் இப்படி...? இவற்றுக்கெல்லாம் யாருக்கும் பதில் தெரியாது.
கண்தெரியாத ஒருவர் இருட்டு அறைக்குள் இருந்து வெயியேறுவதற்குத் தட்டுத் தடுமாறி கதவு தேடுவது போல இருக்கிறது நிலைமை” எனப் படபடத்தார் அருட்தந்தை.
தடுப்பு முகாமில் வைக்கப்பட்டு இருந்தோருக்கு வழங்கப்பட்டிருந்த ஒரு வகை அடையாளப் பட்டிநாட்டின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்திய சிறிலங்கா அரசு, அதன் பின் ஏற்பட்ட குழப்ப நிலைமையைச் சமாளிப்பதற்கான சொந்த வழிகளைக் கண்டறியத் தவறிவிட்டது.
மீள்குடியமர்வுப் பணிகளுக்கான உதவிகளை வழங்குவதில் உள்ளூர் அரச அதிகாரிகளை விடவும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மிகத் திறமையாகச் செயற்படக் கூடியன.
அதேசமயத்தில், முகாம்களில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட 130,000 தமிழ் மக்களின் நடமாட்டச் சுதந்திரம் குறித்தும் தெளிவு இல்லை; அவர்களில் பெரும்பாலானவர்கள் செல்லுவதற்கு வீடுகள் கூட இல்லை.
"மெனிக்" பண்ணை தடுப்பு முகாமிலிருந்து வந்த சிலருக்கு - 10 நாட்களில் திரும்பி வந்துவிட வேண்டும் எனச் சொல்லப்பட்டுள்ளது; வேறு சிலருக்கோ 15 நாட்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
கடைசியாக கடந்த செவ்வாய்க்கிழமை ( டிசம்பர் 1, 2009) விடுவிக்கப்பட்டவர்கள் - 6 மாத சிறை வைப்புக்குப் பின்னர் ஏதோ ஓரளவு சுதந்திரமாவது கிடைத்ததே என்று மகிழ்ச்சி அடைகிறார்கள்.
ஆனால், சமையல்காரர் சிவலிங்கம் போன்ற சிலருக்கு அது ஒர் உணர்ச்சியைப் பிழியும் நாள்.
“அன்று முகாம் வாசலைக் கடந்து நான் வெளியே வந்த போது - ‘போய் வருகிறேன்’ என்று எனது மனைவியிடம் கடைசியாகச் சொல்லிவி்ட்டு வந்தேன்.
நல்லது கெட்டது எல்லாவற்றையும் நாங்கள் இருவரும் சேர்ந்தே கடந்து வந்தோம்; போருக்கு நடுவே தப்ப முயற்சி்த்த போது கூட - 'செத்துப்போய் விடுவோம்' என்று தெரிந்தும் ஒன்றாகவே தப்பி ஓடி வந்தோம். ஆனால், பின்பு உயிர் தப்பி வந்த போது ஒன்றாகவே நிம்மதியடைந்தோம். நான் அவளைக் காதலித்தேன்.


- செய்தியும் படங்களும்: நன்றி - தி ரைம்ஸ் இணையம் [ The Times Online ]