பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Wednesday, December 9, 2009

ஜெகத் கஸ்பர் இந்திய உளவாளி -சீமான்
கனடாவில் மாவீரர் நாள் நிகழ்ச்சியில் பேசுவதற்காகச் சென்ற திரைப்பட இயக்குநரும், `நாம் தமிழர்' இயக்கத் தலைவருமான சீமானை கனடா போலீஸார் பேசவிடாமல் தடுத்து, நாட்டை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டிருக்கிறார்கள்.

27-ம் தேதி சென்னை திரும்பிய சீமானிடம் பேசினோம்.

கனடாவில் நீங்கள் கைது செய்யப்பட்டது ஏன்?

``கனடாவுக்குச் செல்லும்போதே உள்ளேயே நுழையவிடாமல் தடுத்து விடுவார்கள் என்று எதிர்பார்த்தோம். அங்கே சென்று தலைமறைவாகவே இருந்தேன். அவர்களும் என்னைத் தேடிக் கொண்டேதான் இருந்தார்கள். 26-ம் தேதி மாலை நிகழ்ச்சியில் பேசுவதாக இருந்தேன். தூங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பி அன்று காலையே கைது செய்தனர். முதுகிற்குப் பின்னால் என் கைகளைக் கட்டி, விலங்கிட்டு இழுத்துச் சென்றனர்.

நான் பேசினால் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போகும் என்று அங்கிருந்த அதிகாரி கூறினார். `இதே கனடாவில் 2007-ல் இதே மாவீரர் நாள் நிகழ்ச்சியில் பேசியிருக்கிறேன். அப்போது கெட்டுப் போகாத சட்டம் ஒழுங்கு இப்போது மட்டும் எப்படி கெட்டுப் போகும்?' என்று கேட்டேன். அதற்கு அந்த அதிகாரி, `தட் இஸ் பாலிடிக்ஸ்' என்றார். `கனடாவை விட்டு உடனே வெளியேறுங்கள்; மீறி இருந்தால் சிறையில் தள்ளுவோம்' என்று எச்சரித்தனர். என்னை வழியனுப்ப வந்த தமிழர்களையும் சந்திக்கவிடாமல் தடுத்துவிட்டனர். இலங்கை அரசு சொல்லி, ஓர் இந்தியனை கனடா அரசு திருப்பி அனுப்பாது. அங்கே என்னை விசாரித்ததே ஒரு சீக்கிய அதிகாரிதான். `ராஜிவ்காந்தி கொலையை நியாயப்படுத்துகிறீர்களா?' என்ற அவரிடம், `நீங்கள் இந்திரா காந்தி கொலையை நியாயப்படுத்துவீர்களா?' என்றேன்.''

அங்கு ஒரு நிகழ்ச்சியில் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியதற்காகவே நீங்கள் கைது செய்யப்பட்டு திருப்பி அனுப்பியதாக சொல்லப்படுகிறதே?

``புதன்கிழமை (25-ம் தேதி) பல்கலைக்கழக மாணவர்களுடன் பேசினேன். நிச்சயம் அந்தப் பேச்சுக்காக என்னைக் கைது செய்யவில்லை. மாவீரர் நாள் நிகழ்ச்சியில் நான் பேசிவிடக் கூடாது என்றே என்னைக் கைது செய்து திருப்பி அனுப்பினார்கள்.''
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக உங்கள், `நாம் தமிழர்' இயக்கத்தினர் மூன்று பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்களே?


``இந்தக் கைதின் மூலம் எங்கள் இயக்கத்தை ஒரு பயங்கரவாத இயக்கம்போல் ஜோடிக்கப் பார்க்கிறார்கள். பெரும் திரளான இளைஞர்கள் என் பின்னால் திரண்டு வருவதைத் தடுக்கும் வேலைதான் இது. கனடாவில் இருந்து நான் விமான நிலையத்துக்கு வரும்போது, அதிகாலை (27-ம் தேதி) ஒன்றரை மணி. இரண்டரை மணிக்கு வெளியே வந்தேன். விருகம்பாக்கம் அருகே வரும்போது எங்களுடன் வந்த இரண்டு வாகனத்தை காவல்துறையினர் மறித்து அழைத்துச் சென்றனர். அந்தத் தகவல் எனக்குத் தெரிந்ததும் என்னருகில் இருந்த தம்பிகளிடம், `என்னவென்று பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். தேவையென்றால் நான் வருகிறேன்' என்றேன். அப்படி விசாரிக்கப் போன அந்த மூன்று தம்பிகள்தான் இன்றைக்கு சிறையில் இருக்கிறார்கள்.
விமான நிலையத்தில் பேட்டி எடுக்க வந்திருந்த ஊடகவியலாளர்களின் காணொளியில் அந்தத் தம்பிகள் என்னுடன் இருப்பது பதிவாகியிருக்கிறது. அப்படியிருக்கும்போது, அவர்கள் எங்கிட்டுப் போய் குண்டு வைத்திருக்க முடியும்? மீனம்பாக்கம் எங்கிருக்கிறது? என் அலுவலகம் எங்கிருக்கிறது? ஈ.வி.கே.எஸ். அவர்களின் வீடு எங்கிருக்கிறது? குண்டு வீசவும், கொலை செய்யவும், கட்டப்பஞ்சாயத்து செய்யவும் `நாம் தமிழர்' இயக்கத்தை நான் தொடங்கவில்லை. மிக உயர்ந்த லட்சியமும், நோக்கமும் எங்களுக்கு இருக்கிறது.
இதே ஈ.வி.கே.எஸ். பிறந்தநாள் சுவரொட்டியை என் அலுவலக வாசலில் ஒட்டிவிட்டு, என் வாகனத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசினார்கள். அதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. பாரதிராஜா அப்பா அலுவலகத்தை அடித்து நொறுக்கியதற்கும், தா.பாண்டியன் கார் எரிக்கப்பட்டதற்கும் இன்னும் ஒருவர்கூட கைது செய்யப்படவில்லை. இப்போது கைது செய்யப்பட்ட என் தம்பிகளுக்கும் அந்த சம்பவத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று நான் நிரூபிக்கிறேன். குண்டு வீசியதாகச் சொல்லப்படும் நேரத்தில் அந்தத் தம்பிகள் என்னுடன் இருந்ததற்கு ஆதாரங்கள் இருக்கின்றன.''


இளங்கோவனுக் கும், உங்களுக்கும் அப்படியென்ன பிரச்னை?


``ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது எங்களுக்கு வருத்தம் உண்டு. பிரபாகரன் படத்தை அவர் கிழிக்க வேண்டிய அவசியம் என்ன? அவருடன் வந்த ஒரு பெண், பிரபாகரன் படத்தை மிதித்திருக்கிறார். அதை அவர் அனுமதித்திருக்க வேண்டியதில்லை. இங்கே பிரபாகரனின் படத்தை அட்டைப் படத்தில் போட்டு அவரைப் பற்றி கட்டுரை எழுதாத பத்திரிகைகளே இல்லை. அவரைப் பற்றி பேசினால் மட்டும் கைது செய்வார்கள் என்றால், எழுத்துச் சுதந்திரம் இருக்கும் அளவுக்கு இந்த நாட்டில் பேச்சு சுதந்திரம் இல்லையா?''


என்னுடைய அறையில் தான் உங்களுடைய `நாம் தமிழர்' இயக்கம் உருவானது. சீமான் செயல்பாடுகள் எனக்குப் பிடிக்காததால் அவரைவிட்டுப் பிரிந்துவிட்டேன்' என்று ஜெகத் கஸ்பர் கூறியிருக்கிறாரே?

``ஜெகத் கஸ்பருக்கும், எனக்குமான உறவு துண்டிக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்; பெருமை அடைகிறேன். அவர், `சீமானுக்கு என்ன நாணயம் இருக்கு?' என்றும் பேசியிருக்கிறார். யாரைக் கேட்டு `மௌனத்தின் வலி' என்ற அவருடைய புத்தகத்தில் என்னுடைய கவிதையை வெளியிட்டார்? அவருக்கு என்ன நாணயம் இருக்கு?
எங்களுடைய `நாம் தமிழர்' இயக்கத்துக்கு இவர்தான் பெயர் வைத்தாராம். மதுரையில் கூட்டம் நடத்த `நாம் தமிழர் இயக்கம்' என்ற பெயரில் அனுமதி கோரலாம் என்றவர், வழக்கறிஞர் காமராஜ். அது விவாதிக்கப்பட்டது, இயக்குநர் மணிவண்ணன் அப்பா வீட்டில். இவர், அரசியல் கட்சியா தொடங்க வந்தார்? தொண்டு நிறுவனம் போல் பேசினார். அறக்கட்டளை நிறுவி, அதற்கு `ஜஸ்டிஸ் ஃபண்ட்' திரட்டலாம்' என்றார். திடீரென `நான் பின்னால் இருந்து இயங்குகிறேன்' என்றவர், மருத்துவர் எழிலனுடன் வந்து ஆர்வமே இல்லாமல் பேசிவிட்டுச் சென்றார். என் ஓட்ட வேகம் வேறு. அவரது ஓட்ட வேகம் வேறு. `நாம் தமிழர்' என்று அவர்தான் பெயர் வைத்தாரென்றால், அந்தப் பெயரில் அவரும் ஒரு இயக்கத்தை நடத்தட்டும்; ஒரு கூட்டம் போடட்டும். நானும் கூட்டம் போடுகிறேன். மக்கள் எங்கே வருகிறார்கள் என்று பார்க்கலாம். `ஜெகத் கஸ்பர் இருந்தால் இந்த இயக்கத்தில் சேர மாட்டேன்' என்று நிறையப் பேர் என்னிடம் சொன்னார்கள்.''


கஸ்பர் உங்களையும், புலிகளையும் விமர்சிக்கும் நோக்கம் என்ன?

``முழுக்க முழுக்க அவர் இந்திய உளவுத்துறையின் ஆள். நான் அலைபேசியில் யார் யாருடன் பேசுகிறேன் என்று ஜெகத் கஸ்பர் ஒட்டுக் கேட்கிறார். அவரது நிஜமுகம் புரிந்ததும், அவரைவிட்டு விலகி விட்டேன். அமைதிப் பேச்சு வார்த்தை என்கிற பெயரில் பிரபாகரன் சிறுபிள்ளைத்தனமாக முடிவெடுத்து விட்டார் என்று கஸ்பர் எழுதுகிறார். அதை பிரபாகரன் களத்தில் போராடிக் கொண்டிருந்தபோது அவர் ஏன் எழுதவில்லை? பிரபாகரன் உணர்ச்சிவயப்பட்டுவிட்டார்; அப்படிச் செய்திருக்க வேண்டும், இப்படிச் செய்திருக்க வேண்டும் என்று, பிரபாகரனுக்கு இன்று பாடம் நடத்துபவர், அவரைச் சந்தித்தபோதே ஏன் சொல்லவில்லை? பிரபாகரனைச் சந்தித்த ஒருசில வினாடிகளைப் பெரிதுபடுத்தி, சுயவிளம்பரம் தேடுவதாக இவர் மீது எழுந்த விமர்சனத்துக்கு இன்று வரை பதிலில்லையே!''


தேவர் ஜெயந்தி விழாவில் நீங்கள் கலந்துகொண்டதற்கு உங்கள் இயக்கத்திலேயே எதிர்ப்புக் கிளம்பியுள்ளதாகக் கூறப்படுகிதே?


``முத்துராமலிங்கத் தேவர் என்ன மராட்டியரா? மார்வாடியா? குஜராத்தியா? மலையாளியா? அவர் தமிழர் இல்லையா? இந்த மாதிரி பழிபோடுவதை நான் மதிக்கிறேன். இதை நான் தொடர்ச்சியாகச் செய்வேன். நான் என் முன்னோர்களை மதிக்கிறேன். இம்மானுவேல் சேகரனுக்கும், அம்பேத்கருக்கும், ரெட்டைமலை சீனிவாசனுக்கும் வீரவணக்கம் செலுத்தியபோது வராத சாதியம், முத்துராமலிங்கத் தேவரிடம் மட்டும் ஏன் வந்தது?
தீரன்சின்னமலைக்கும், காமராஜருக்கும், வீரநங்கை வேலு நாச்சியாருக்கும், மருது பாண்டியருக்கும் வீர வணக்கம் செலுத்தினாலும் சாதியம் பார்ப்பீர்களா? மதுரை வீரனுக்கு வீரவணக்கம் செலுத்தினால் அந்த சாதியைத் தூக்கிப் பிடிக்கிறேன் என்று சொல்வீர்களா? அங்கே போய் `தேவரின மக்களே திரண்டு வாருங்கள்' என்றா அழைத்தேன்? `முத்துராமலிங்கத் தேவரைவிட சிறந்த தலைவர் இந்த மண்ணில் இல்லை' என்று அங்கே பேசிவிட்டு வரவில்லை. நான் அனைத்து மக்களையும் தமிழர்களாகவே பார்க்கிறேன். என் முன்னால் நிற்பவர்களில் இவன் பள்ளர், பறையர், சக்கிலியர், நாடார், முதலியார் என்று பார்க்க மாட்டேன். என் பின்னால் வந்த பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த தம்பிமார்கள் முத்துராமலிங்கத் தேவருக்கு வீரவணக்கம் செலுத்தினார்கள். அதேபோல் தேவர் சமூகத்தைச் சேர்ந்த தம்பிகள் என்னால் இம்மானுவேல் சேகரனுக்கு வீரவணக்கம் செலுத்தினார்கள்.
இருபெரும் மோதல் சக்தியாக இருக்கிறவர்களை இணைப்பது யார்? என்னால்தானே அது நடந்தது.


அந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ரௌலட் சட்டம் என்கிற வாய்ப்பூட்டுச் சட்டம் போட்டு குற்றப் பரம்பரை என்று அறிவித்து வைத்திருந்ததை எதிர்த்துப் போராடிய முத்துராமலிங்கத் தேவரை ஏன் போராளியாகப் பாாக்க மறுக்கிறீர்கள்? அவர் என்ன, மொத்த சாதி அடையாளத்தையும் குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கிறாரா? வேறு எவன்கிட்டயும் சாதி இல்லையா என்ன? பேனா இருக்கு, பேப்பர் இருக்கு, அரிப்பு இருக்கு என்பதற்காக சீமான் சாதியத்தைக் கையில் எடுத்துவிட்டார் என்று எழுதுவதை நிறுத்துங்கள்! நான் சாதி வெறியனா இல்லையா என்பதை காலம் சொல்லும்.''


பிரபாகரன் சொல்லித்தான் `நாம் தமிழர்' இயக்கத்தைத் தொடங்கினீர்களாமே?

``அண்ணன் (பிரபாகரன்) சொன்னபோது எனக்கு ஆர்வம் இல்லை. தமிழ்த் தேசிய தளத்தில் அண்ணன் திருமாவளவன் போன்றவர்கள் இருக்கிறார்கள் என்று அவர்களிடம் எடுத்துச் சொன்னேன். அங்கே இருந்த போராளிகள் கூட `திருமாவளவன் மீது எங்களுக்கு நல்ல புரிதலைக் கொண்டு வந்தீர்கள்' என்றார்கள். அந்த மண்ணில் திருமாவளவன் போய் நின்றிருந்தாலும் அவரைப் பற்றி அங்கே அதிகமாக நான்தான் எடுத்துப் பேசியிருக்கிறேன். இங்கே இருக்கிற அரசியல் இயக்கங்கள் மீது எனக்கு நம்பிக்கை இருந்ததால், ஓர் அரசியல் இயக்கத்தின் தேவை அப்போது ஏற்படவில்லை.''
பிரபாகரன் சொல்லித்தான் இயக்கம் தொடங்கினீர்கள் என்றால், தமிழக அரசியலில் பிரபாகரன் தலையிடுகிறார் என்கிற இந்திய அரசின் குற்றச்சாட்டு உண்மையாகிவிட்டதே?
``அவர் தலையிட வேண்டும் என்பது இல்லை. அவர் சொல்லித்தான் இதைச் செய்யணும் என்பதும் இல்லை. இந்த மண்ணில் எங்கள் மக்களுக்கு ஓர் அரசியல் இயக்கம் வேண்டும் என்று தோன்றியது. அதைக் கட்டமைக்கிறோம். அவர் சொல்லித்தான் ஒவ்வொன்றையும் செய்யணும் என்பது இல்லை.''


தமிழினம், மொழி என்று பேசுவதால் உங்கள் இயக்கத்தின் மீதும், உங்கள் மீதும் பிரிவினைவாதிகள் என்ற பார்வை விழாதா?


``நாங்கள் தனித் தமிழ்நாடு கோரவில்லை. இந்திய தேசிய ராணுவத்தில் என் அண்ணன், தம்பி இருக்கிறார்கள். இலங்கை தேசிய ராணுவத்தில் தமிழர்களை அந்நாடு சேர்த்துக் கொள்ளுமா? அந்த உரிமையை இந்தியா பெற்றுத் தருமா? இந்த மண்ணில் நாங்கள் கேட்கும் இந்தக் கேள்விக்கு இந்த நாடு பதிலே சொல்லவில்லை. தனித் தமிழீழம் ஏன் கேட்கிறோம் என்று, இப்படியான காரணங்களை எங்களால் அடுக்க முடியும். தங்கள் மொழியை உயர்த்திப் பிடிப்பதால் பால்தாக்கரேவும், ராஜ்தாக்கரேவும் பிரிவினைவாதிகள் அல்ல. தமிழர்களுக்கு உரிமை உள்ள தண்ணீரைத் தர மறுப்பதால் மலையாளிகளும், கன்னடர்களும் பிரிவினையைத் தூண்டுகிறார்கள் என்று ஆகிவிடுமா? தமிழன் மட்டும் தேசிய உணர்வோடு இருக்கணும். மற்றவர்கள் எல்லாம் அவரவர் மொழியுணர்வோடு இருக்கலாம் என்பது சரியா? விடுதலைக்குத் தமிழனும் சேர்ந்துதான் போராடினான். ஆனால், இந்தி மட்டும் ஆட்சி மொழியானது எப்படி?
சுதந்திரத்தை அவன் கையில் கொடுத்து விட்டோம். மொத்த அதிகாரத்தையும் அவன் எடுத்துக்கொண்டான். இலங்கையிலும் தமிழனும், சிங்களவனும் போராடி விடுதலை பெற்றார்கள். அதன்பிறகு, சிங்களம் மட்டும் ஆட்சி மொழி; சிங்களவன் மட்டும் அதிபர் என்று திருத்திக் கொண்டான். அதேதான் இங்கேயும் நடக்கிறது. இந்திய நாடாளுமன்றத்தில் தமிழில் பேச இன்னும் அனுமதி இல்லையே.''

தமிழீழ விடுதலைப் போராட்டம் தோல்வி அடைந்ததற்கு சகோதர யுத்தம்தான் காரணம் என்று முதல்வர் கூறியிருக்கிறாரே?

``கருணாநிதி எப்போதும் இதைத்தான் சொல்லி வருகிறார். அவரது கருத்தை யாரும் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை. சகோதர யுத்தத்தைத் தூண்டிவிட்டதே இந்திய உளவுத் துறைதான். விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை ஒப்படைக்கச் சொன்னார்கள். புலிகள் ஒப்படைத்த ஆயுதங்களை மாற்றுக்குழுவிடம் கொடுத்து, புலிகளுக்கு எதிராக உசுப்பிவிட்டு, தாக்குதலை நடத்த வைத்தது, இந்திய அரசுதான். கருணா என்கிற துரோகியைக் கொல்லாமல் விட்டதால்தான், இந்த மிகப்பெரிய பின்னடைவைப் புலிகள் சந்திக்க வேண்டியதாகிவிட்டது!'' என்று முடித்தார், சீமான்.
நன்றி குமுதம்