பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Thursday, December 10, 2009

புதிய குழு புருடா! - ஜெகத் கஸ்பர்


வேலுப்பிள்ளை பிரபாகரன் கருத்து வேறுபாடு களை விரும்பாதவர், விமர்சனங் களை வெறுத்தவர் என்றொரு பொய் தோற்றம் வலுவாக வனையப்பட்டிருக்கிறது.

தன் இனத்தின் எதிரிகளாகவும் துரோகிகளாகவும் அவர் கருதி யவர்களை அவர் வெறுத்தார் என்பது உண்மைதான். அது தான் பிறந்த தமிழ் இனத்தின் மீது கொண்ட தீராக் காதலாலும், பெருமிதத்தாலும். ஆனால் அவர் விமர்சனங்களை சகித்துக் கொள்ள முடியாதவர் என்று பலர் ஏற்படுத்தியுள்ள பிம்பம் உண்மை யல்ல.

1998-ம் ஆண்டு வாக்கில் என்று எண்ணுகிறேன். நான் மணிலா வேரித்தாசு வானொலியில் கடமையாற்றியிருந்த காலத்தில் நடந்த மறக்க முடியா நிகழ்வொன்று நினைவுக்கு வருகிறது.வானொலி நேயர் ஒருவர், "தங்கள் ஆளுகைப் பரப்புக்குள் குற்றம் சாட்டப்பட்ட பொதுமகன் ஒருவருக்கு விடுதலைப்புலிகள் உரிய நீதி விசாரணை நடத்தாமல் சர்வாதிகாரத்தன்மையோடு மரணதண்டனை தீர்ப்பு வழங்கியுள்ளனர். இப்படியான விடுதலைப்புலிகளை உங்கள் வானொலி ஆதரிப்பது பிழையான செயல்' -என்ற தொனியில் எழுதியிருந்தார்.

மரண தண்டனைக்கு எதிரான உலகு தழுவிய கருத்தியக்கத்தில் ஆர்வமுடன் பங்கேற்கிறவனென்ற வகையில் இந்த நேயர் எழுதிய கடிதத்தை முக்கிய பிரச்சனையாக முன்வைத்து வானொலியில் நீண்டதொரு விவாதம் நடத்தினேன். முறையான நீதி விசாரணை நெறிகளும், வழிமுறைகளும் இன்றி மரண தண்டனை போன்ற இறுதித் தண்டனையை வழங்குவதென்பது பாசிச அமைப்புகளால் மட்டுமே செய்யக்கூடியது என்ற ரீதி யில் மிகக் கடுமையான விமர் சனத்தை முன்வைத்தேன்.

ஒலிபரப்பு நிறைவுற்று இருமணி நேரத்திற்குள் வன்னிப் பகுதியி லிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது சண்டைக் காலமாயிருந்ததால் தங்களது வர்த்தகக் கப்பல்களின் பெயரில் பெறப்படும் செயற்கைக் கோள் தொலைபேசிகளை அவர்கள் காட்டுக்குள் வைத்து பாவித்து வந்தார்கள் என நினைக்கிறேன்.

அழைப்பில் வரும் சுமார் இருபது இலக்க எண்களைப் பார்த்தாலே புரிந்து விடும். அது வன்னிக்காடுகளிலிருந்துதான் வருகிறதென்பது. பேசுவதற்கு பெரும் செலவு ஆகும் எனவும் பின்னர் நான் அறிந்தேன். அன்றைய தினம் அழைப்பில் வந்தார்.

தன்னை பரா என்றும் தமிழீழ நீதித்துறை பொறுப்பாளராய் இருப்பதாயும் அறிமுகம் செய்து கொண்டார். ""என்ன ஃபாதர்... நீங்கள் ரேடியோவிலெ கதைச்சுப் போட்டீங்கள், இஞ்செ எங்களுக்குத்தான் மண்டையிடி. தலைவர் (பிரபாகரன்) அடியடா, பிடியடா என்று நிற்கிறார்.

சனம் மணிலாவுக்கு குற்றக் கடிதம் எழுதுறமாதிரிதான் உங்கட நீதித்துறை செயல்படுதா என்று கேட்கிறார்...'' என்பதாக உரையாடலை தொடங்கியவர் மிகவும் பண்பாக, ""ஃபாதர், அந்த நேயர் உங்களுக்கு பிழையான தகவல் தந்திருக்கிறார். அதனை தலைவருக்கு நாங்கள் விளக்கிச் சொல்லியிட்டம். ஆனால் தலைவர் இந்த வழக்கு தொடர்பான விசாரணை- தீர்ப்பு விபரங்கள் மட்டுமல்ல, தமிழீழ நீதித்துறை அமைக்கப்பட்டபின் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனைத்து வழக்கு விபரங்களையும் உடனே உங்களுக்கு அனுப்பித் தரும்படி அறிவுறுத்தியுள்ளார்.

உங்கட ஃபாக்ஸ் (Fax) நம்பர் தாருங்கோ. எல்லா விபரங்களையும் அனுப்பிப் போட்டு இரவுக்கே தலைவருக்கு நான் பதில் சொல்லோணும்'' என்றார்.நானும் எனது அலுவலக தொலைநகல் (Fax) எண்ணை பரா அவர்களுக்குத் தந்தேன். சுமார் ஒன்றரை மணி நேரம் 140-க்கும் மேலான பக்கங்கள் எம் தொலைநகல் கருவியில் வந்து விழுந்து கொண்டிருந்தன.

வந்து முடிய அதிகாலை மூன்று மணி ஆயிற்று. வியப்பு என்னவென்றால் விடுதலைப் போராட்டத்திற்கு ""துரோகம்'' செய்பவர்களை மட்டும்தான் பிரபாகரன் அவர் களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. துரோகத்தின் சம்பளம் மரணம் என்றே அங்கு இருந்திருக்கிறது. அதே வேளை துரோகம் தவிர்த்த ஏனைய குற்றங்கள்- கொலைக்குற்றங்கள் உட்பட- யாவுமே சிவில் சட்ட அடிப்படையிலேயே விசாரிக்கப் பட்டு தண்டனைகள் வழங்கப் பட்டிருக்கின்றன. உண்மையில் 1995 இறுதி தொட்டு 1999 தொடக்கம் வரை வன்னிப் பகுதியில் தமிழீழ நீதித்துறை மொத்தத்தில் மரண தண்டனை வழங்கிய தீர்ப்புகள் நான்கு மட்டுமே என்றும், அவற்றிலும் கூட ஒன்று மட்டுமே நிறை வேற்றப்பட்டதாகவும் ஏனையவர் கள் தலைவரிடம் கருணை மனு சமர்ப்பித்துள்ளதாகவும் பரா கூறினார். பிரபாகரன் அவர்கள் மீதான என் தனிப்பட்ட மதிப் பினை மிகவும் உயர்த்திச் சென்ற நிகழ்வுகளில் இந்நிகழ்வு என்னைப் பொறுத்தவரை மிக முக்கியமான ஒன்றாக இருந்தது.

ஏனென்றால் நான் ஓர் சாதாரண ஒலிபரப் பாளன், எனது விமர்சனத்திற்கு உரிய பதில் தரப்பட வேண்டும் என்று பிரபாகரன் நினைத் திருக்கிறார் என்பது மிகப்பெரிய மனமுதிர்ச்சியாகவும், தலை மைத்துவப் பண்பாகவும் எனக்குப் பட்டது.

அதுவும் செயற்கைக்கோள் தொலைநகலி வழி தகவல் அனுப்புவ தென்பது ஒரு பக்கத்திற்கே பத்து டாலர்களுக்கு மேல் ஆகும் என பின்னர் அறிய வந்தேன். எனக்கு அன்று பரா அவர்கள் அனுப்பிய 140-க்கும் மேலான பக்கங்களுக்கு மட்டுமே சுமார் 1500 டாலர்கள் ஆகியிருக்கும். அன்றைய இலங்கை பண மதிப்பில் அது சுமார் ஒரு லட்ச ரூபாய்.

புலம்பெயர் தமிழர்களிடையே உரையாற்றுகையில் இதனை நான் முக்கியமாகக் குறிப்பிடுவதுண்டு. அப்போதெல்லாம் நான் சொல்ல விரும்பியது, ""தூர விலகி நின்று, எவ்வித பங்களிப்புகளும் விடுதலைக்குச் செய்யாமல் மேதாவித்தனமாக விமர்சித்துக் கொண்டிருப்பவர்களைத்தான் பிரபாகரன் அவர்களுக்குப் பிடிக்காதேயன்றி, விடுதலையை நேசித்து ஈடுபட்டிருக்கிறவர்களின் விமர் சனங்களை அவர் மதித்து மிகக் கவனமாகக் கேட்கிறார் என்பதே எனது அனுபவம்'' என்ற செய்தியை.இதனை இன்றைய காலத்தில் மிக முக்கியமானதாகக் குறிப்பிட்டு எழுதக் காரணங்கள் உண்டு. விடுதலைப் போராட்ட இயக்கம் மிகப்பெரிய பின்னடைவினைக் கண்டுள்ள இக்கால கட்டத்தில், போராட்ட இயக்கத்தின் கட்டளைக் கட்டமைப்பு (Command Structure) பற்றின தெளிவின்மையும் ஐயங்களும் நிலவுகிற நிலையில், ரணம்பட்ட தமிழ்மக்களின் உணர்வுகள் கொந் தளித்துப் போயிருக்கிற சூழமைவில் விடுதலைப் போராட்டக் களத்தினை கட்டுப்படுத்தி நெறியாழ்கை செய்ய விழைகிறவர்களின் திட்டங்கள், செயல் முறைகள் நேர்மையானவையா, உண்மை யானவையா என்பதை பொறுப்புணர்வோடு விவாதிக்கிற வெளியொன்று அத்தியா வசியமாகிறது. அத்தகைய விவாத வெளி ஒருசிலருக்கு எரிச்சல் தருகிறதென்பதே நம் ஐயங்களையும், அச்சங்களையும் மேலும் அதிகமாக்குகிறது.

இரு வாரங்களுக்கு முன் ஈழத்திலிருந்து என் பழைய வானொலி முகவர் மின் அஞ்சல் அனுப்பியிருந்தார். போர் உக்கிரமாய் நடந்த களங்களின் செய்திகளை துணிவுடன் தாமதமின்றி அந்நாட்களில் எமக்குத் தந்து கொண்டிருந்த துணிவாளர். 2002-க்குப் பின் அவரோடான தொடர்புகள் இல்லாதிருந்தது. மீண்டும் மின் அஞ்சல் மூலம் தொடர்புக்கு வந்த அவர் தனது குறுமடலில் குறித்திருந்த சில உணர்வுகள் கசப்பான இன்றைய உண்மைகள். இவ்வாறு அவர் எழுதியிருந்தார்:

""தமிழீழ விடுதலையின் எதிர்காலம் பற்றின கவலை எம்மையெல்லாம் இங்கு ஆட்கொண்டுள்ளது. ஒருவகையான மர்மத் தன்மையை உணர முடிகிறது. இங்கிருந்து பார்க்கிறபோது எல்லாமே மாயையோ என எண்ணத் தோன்றுகிறது'' என்பதாக எழுதியிருந்தார்.

அவரது கூற்று உண்மை. விடுதலைப்புலிகள் இயக்கம் கட்டுக்கோப்பான பேரியக்கமாய் உலகின் கசப்பான வியப்பாய் நின்ற காலத்திலேயே சதிகளும், ஊடுருவல்களும், துரோகங்களும் வெற்றிகரமாய் இலங்கை-உலக சக்திகளால் நடத்தமுடிந்ததென்றால், இன்றைய சூழலில் அது எளிது. உண்மையில் புலம்பெயர் தமிழர் மத்தியில் அதனை இலங்கை -உலக சக்திகள் எளிதாக நடத்துமெனவும் முன்னர் ஒருமுறை எழுதியிருந் தேன். எனவேதான் கூச்சல்வாதிகள், சுயநலப் பேர்வழிகளிடமிருந்து விடுதலைக் களத்தை காப்பாற்ற ஜனநாயக ரீதியான, வெளிப்படையான இயங்குதலே இன்றைய காலகட்டத்திற்கு உகந்ததாயிருக்க முடியும்.உதாரணமாக ஒன்றைச் சொல்கிறேன்.

ஓரிரு நாட் களுக்கு முன்பு மீண்டும் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக ஏதோ ஒரு புதிய குழு அறிவித்திருந்தது. அதனை தமிழ் சார்ந்த இணைய தளங்களெல்லாம் ஏதோ புதிய விடியலுக்கான பூபாளம் போல் விசிலடித்துக் கொண்டாடி யிருந்தது.

ஆனால் விசாரித்தால் இச்செய்தியின் பின்னணியில் இருப்பது இலங்கை ராணுவப் புலனாய்வுப் பிரிவும், செத்துப்போனதாய் கருதப்பட்ட பழைய ஓர் தமிழ் இயக்கமும் எனத் தெரிய வருகிறது. இச்செய்தியின் நோக்கம் இதுதான்: ""வவுனியா முகாம்களிலிருந்து மக்கள் விடுதலையான பின் அரசியல் தீர்வு பற்றின அழுத்தங் களை உலகம் இலங்கை மீது ஏற்படுத்தும். அதில் தமிழீழ தாயக நிலப்பரப்பில் நிலைகொண்டுள்ள ராணுவத் தினரை கணிசமாக வெளியேற்றுவதும் உள்ளடங்கும். அந்நிலை வருகையில் ராணுவ ஆக்கிரமிப்பை தொடர வைக்கத் தேவையான வாதிடல்களுக்காகவே இப்படியான புதிய ஆயுதக்குழுக்கள் அறிவிப்புகள்.

எனவேதான் விடுதலைப் போராட்ட களம் ஜனநாயகத்தன்மை கொண்டதாகவும் வெளிப் படைத்தன்மை கொண்டதாகவும் நிறுவப்பட வேண்டுமென்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.

சமீபத்தில் அனைத்துலக மனித உரிமைகளுக்கான நீதி விசாரணையாளர் ஒருவர் -பெயர் மறந்துவிட்டேன். தனது உரையொன்றில் கூறியிருந்தார், ""உலகின் ஜனநாயக அமைப்புகளும், உபகரணங்களும் தருகிற அசாத்தியமான வாய்ப்புகளை தமிழர்கள் உரிய முறையில் பயன்படுத்தவில்லையென்பது கவலையளிக்கிறது'' என்று.

உண்மை, கசப்பான உண்மை.ஜனநாயக அலகுகளின் உபகரணங்களின் வலுவினை, வளங்களை எவ்வாறு உணர்ந்துகொள்வது? கடந்த வாரம் இந்திய பாராளுமன்ற இரு அவைகளிலும் ஈழத்தின் இன்றைய நிலை குறித்து நடந்த விவாதங்களைப் பார்த்தாலே போதுமானது. பாரதிய ஜனதா கட்சியின் சுஷ்மா ஸ்வராஜ், வெங்கைய நாயுடு இருவரின் உரைகளும் கண்களில் நீர்மல்க வைத்தன. வெறும் அரசியல்வாதிகளாக அவர்கள் பேசவில்லை. உண்மையில் தமிழர்களாக நின்று அவர்கள் பேசியது போலவே இருந்தது.

அவர்களது உரைக்கு நிகராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் ராஜா அவர்களது உரையும் இருந்தது. தோழர் ராஜா மிகவும் அடிப்படையான, முக்கிய கேள்விகள் சிலவற்றையும் முன் வைத்தார்.தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட எல்லா கட்சிகளும் ஓருணர்வில் நின்ற காரணத்தால் வெளியுறவு அமைச்சர் பதில் சொல்ல நிர்பந்திக் கப்பட்டார்.

அதுதானே நாட்டின் கொள்கையாகவும் மாறும்.