
சென்னை மெமோரியல் ஹால் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள் பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். கைகளில் கண்டன அட்டைகளும் வைத்திருந்தனர்.
இது குறித்து சீமான் கூறுகையில்,"கடந்த மாதம் 26-ம் தேதி ஈரோட்டில் வைத்து தமிழரின் தேசிய தலைவர் பிரபாகரனின் படத்தை கிழித்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவமானப்படுத்தினார். இந்த சம்பவம் இங்குள்ள தமிழர்களின் உணர்வை பாதிக்கும் என்று தெரிந்தும் அவர் இப்படி நடந்து கொண்டார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் வீட்டின் மீது யாரோ பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். இது தொடர்பாக நாம் தமிழர் இயக்கத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆனால் கைது செய்யப்பட்ட 4 பேரும் எந்த தவறும் செய்யாதவர்கள். அவர்கள் அராஜகமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 4 பேரின் மீதும் போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற்று அவர்களை விடுதலை செய்யவேண்டும்.
அவர்கள் விடுதலை செய்யப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.." என்றார்.