பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Sunday, December 6, 2009

குழந்தைகளின் உயிரைக் குடித்த பணவெறி!

""நாங்கதான் படிக்காம இப்படி மழை, வெயில் பார்க்காம காத்துலேயும் மழையிலேயும் வயலிலும் வரப்பிலும் கிடக்குறோம். எங்க புள்ளைகளாவது படிச்சு இங்கிலீசு பேசி நல்ல வேலைக்குப் போகணும்னு பணத்தைக் கட்டி பள்ளிக் கூடத்துக்கு அனுப்பினோம்.


அய்யோ.. கடவுளே.. எதுவுமே பேசாம கிடக்குதுகளே எங்க தங்கங்க... இதுங்க இல்லாம இனி நாங்க எப்படி இருக்கப்போறோம்'' -வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் கேட்ட அழுகுரல், அந்த விபத்தின் கொடூரம் என்ன என்பதைக் காட்டியது.நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள கரியாப்பட்டினத்தில் உள்ள கலைவாணி மெகா மெட்ரிக் பள்ளிக்கு வாய்மேடு, மருதூர், கத்திரிப்புலம் உள்பட 10 கிராமங்களி லிருந்து மாணவ-மாணவியர் வந்து படிக்கிறார்கள். இவர்களை அழைத்து வரு வதற்காக 5 வாகனங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் டிசம்பர் 3-ந் தேதி, காலை 8.50 மணியளவில் டிரைவர் மகேந்திரன் ஓட்டிவந்த வேன்.
ஐந்துமே பள்ளி வாகனங்கள் அல்ல. தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்து ஓட்டுகிறார்கள்.சரியான நேரத்தில் பள்ளிக்கூடத்துக்குப் போய்ச் சேராவிட்டால் டிரைவரை மாற்றிவிடும் பள்ளி நிர்வாகம். அதனால், பிள்ளைகளை புளி மூட்டைபோல திணித்துக் கொண்டு வேக வேகமாக வண்டியை ஓட்டினார் மகேந்திரன்.

ஒரு வாரகாலமாக விடாமல் பெய்யும் மழையினால் சேறும் சகதியுமாக வழுக்கிய களிமண் சாலையில் தடுமாறிக்கொண் டிருந்தது வேன். ""டிரைவரண்ணே... நிறைய புள்ளைங்க இருக்குது.

பார்த்து ஓட்டுங்கண்ணே...'' -வேன் குலுங்கியதைப் பார்த்து எச்சரித்தார் பிள்ளைகளுடன் பயணித்த ஆசிரியை சுகந்தி.
பனையடிக்குத்தகையில் சாலை யை ஒட்டியபடி குமார் என்பவருக்கு சொந்தமான மீன் வளர்ப்பு குளம் இருக்கிறது. அதனருகே வேன் வந்தபோது, டிரைவர் மகேந்திர னின் செல்போன் சிணுங்கியது. ஏற்கனவே தடுமாற்றம். அதோடு, செல் போனை எடுத்துப் பேச ஆரம்பிக்க, ஸ்டியரிங் கட்டுப்பாட்டை இழக்க, அடுத்த நொடி. 20 குழந்தைகளுடன் குளத்துக்குள் விழுந்தது வேன். பிள்ளைகள் கதறக் கதற, 20 அடி ஆழத் தண்ணீருக்குள் வேன் மூழ்கியது. கண்ணாடியை உடைத்துக் கொண்டு டிரைவர் மகேந்திரன், க்ளீனர் சுப்ரமணியன், ஆசிரியை சுகந்தி மூவரும் வெளியே வந்தனர்.

குளத்துக்குப் பக்கத்தில், தன் பிள்ளையை வேனில் ஏற்றி அனுப்புவதற்காக காத்திருந்த ஒரு பெண்மணி, விபத்தைப் பார்த்துவிட்டு அலறியபடியே ஓடிவந்தார். தண்ணீருக்குள் சிக்கிய குழந்தைகளைக் காப்பாற்றும் முயற்சியில் அந்தப் பெண்மணியுடன் ஆசிரியை சுகந்தி, க்ளீனர் சுப்ரமணியன் ஆகியோர் ஈடுபட, டிரைவர் மகேந்திரனோ ஊர் மக்கள் திரண்டு வந்தால் தன்னை அடித்துக் கொன்றுவிடுவார்கள் என பயந்து, மீட்பு முயற்சியை விட்டுவிட்டு கரையேறி ஓடிவிட்டார்.

பள்ளி வேன் குளத்தில் விழுந்ததைக் கேள்விப்பட்டு கிராம மக்கள் ஓடிவர, அவர்களிடம் க்ளீனர் சிக்கினால் பொளந்துவிடு வார்கள் என பயந்த பெண்மணி, அவரை ஒரு குடிசைக்குள் ஒளிய வைத்தார். இதனிடையே, குழந்தைகளைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட சுகந்திக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.தண்ணீரில் தத்தளித்த குழந்தைகளை கிராம மக்கள் காப்பாற்றி கிடைத்த வாகனங்களில் வேதாரண்யம் அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருந் தனர். வேதாரண்யம் தீயணைப்பு வாகனத்திற்கு காலை 9.10 மணிக்கே போன் செய்தும் 12 மணி வரை எட்டிப்பார்க்கவில்லை. கிராம மக்களே குளத்துக்குள் குதித்து, குழந்தை களின் உடலைத் தேடினர். நாகை கலெக் டர் முனியநாதன், எம்.எல்.ஏ வேத ரத்தினம் ஆகியோர் ஸ்பாட் டுக்கு வந்த பிறகு, நிதான மாக வந்து சேர்ந்த தீயணைப்பு வீரர்களும் தேடும் பணியில் ஈடுபட, ஆசிரியை சுகந்தி, யூ.கே.ஜி படிக்கும் ஜெயசூரி, ஒன்றாம் வகுப்பு படிக்கும் ஜெயப்பிரகாஷ், அஜய், மற்றொரு அஜய், எல்.கே.ஜி படிக்கும் ஹரிஹரன், மாணவிகள் விஜிலா, அபிநயா, மகாலட்சுமி, ஈஸ்வரி என 10 உடல்கள் தண்ணீரிலிருந்து கரைக்கு கொண்டு வரப்பட்டன. இவர்களில் ஜெயசூரியும் ஜெயப்பிரகாஷும் சகோதரர் கள். தன் இரண்டு மகன்களையுமே பறிகொடுத்த நாகமுடையான் கார்த்தி கேயன் கதறி அழுத காட்சி எல்லோ ரையும் கலங்க வைத்துவிட்டது. இறந்த குழந்தைகளின் பெற்றோர், உறவினர், ஊர்மக்கள் என எல்லோருமே அழுத வண்ணமிருக்க, வேதாரண்யம் பகுதியே சோகத்தில் மூழ்கியது.

கலைவாணி மெட்ரிக் பள்ளியை நடத்தி வருபவர் ஒன்றிய வைஸ் சேர்மன் சிவப்பிரகாசத்தின் அண்ணன் தங்கராஜ். 1998-ல் தேவி மழலையர் பள்ளி என்ற பெயரில் தொடங்கிய தங்கராஜ் அப்போது அரசுப் பள்ளியில் தலைமை யாசிரியராக இருந்த நிலையிலும் தனக்குள்ள செல்வாக்கால் இந்த தனியார் பள்ளியையும் நடத்தினார். பணி ஓய்வு பெற்றபிறகு, மெட்ரிக் பள்ளியாக விரிவாக்கம் செய்ய அனுமதி கோரி யிருந்தார்.

ஆனால், அனுமதி கிடைக்கும் முன்பே பெயர்ப் பலகை வைத்து மாணவர்களையும் சேர்க்க அனுமதித்துவிட்டார். தற்போது இந்தப் பள்ளியில் 476 பேர் படித்து வந்தனர் என விவரம் தெரிவிக்கிறார்கள் இப்பகுதியினர். ராமகிருஷ்ணன் என்பவர், ""பள்ளிக்கூடங்களுக்கு வியாபார நோக்கம் மட்டும்தாங்க இருக்குது. அவங்களுக்கு லஞ்ச அதிகாரிகள் துணை போறாங்க. வேன் கண்டிஷனா இருக்கா, டிரைவர் நல்ல பயிற்சி உள்ளவரா, மாணவர்களின் பயணம் பாதுகாப்பான தான்னு எதுவும் கவனிக்கப்படாததால 9 மாணவ- மாணவிகள் உள்பட 10 உயிர்கள் அநியாயமா பறி போயிடிச்சி'' என்றார் சோகத்துடன். வழக்கறிஞர் முரளி கணேஷ் நம்மிடம், ""பணம் கிடைச்சா போதும்னு அளவுக்கதிகமா புள்ளைகளை ஏத்திக்கிட்டு, கண்டிஷன் இல்லாத வண்டிய ஓட்டியதால இந்தக் கொடூரம் நடந்திருக்குது. இதுக்குப்பிறகாவது அதிகாரிகள் கவனமா இருந்து ஸ்ட்ரிக்ட்டா நடவடிக்கை எடுத்தா உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும்'' என்றார்.

கடைசி நேரம்வரை குழந்தைகளை காப்பாற்றி தன்னோட உயிரை விட்ட ஆசிரியை சுகந்தியின் செயலைக் குறிப்பிட்டு கண் கலங்கிய நாகமுடையான் சங்கர், இந்த அக்கறை பள்ளி நிர்வாகத்துக்கு இல்லையே'' என்றார் வேதனையுடன்.

விபத்தில் உயிர் பிழைத்த மாணவன் ஸ்ரீராம், ""வேன் ஓட்டிக் கிட்டிருக்கும்போது டிரைவருக்கு போன் வந்துச்சி. எடுத்தார். வண்டி உடனே குளத்துக்குள்ளே விழுந் திடிச்சி. நாங்க கத்தி னோம். 4 பேரை டிரைவர் வெளியே தூக்கிட்டு வந் தார். அப்புறம் போயிட்டார். டீச்சர்தான் மத்தவங் களையெல்லாம் காப்பாத்தினாங்க'' என்றான் அதிர்ச்சி விலகாமல்.பள்ளி நிர்வாகி தங்கராஜிடம் பேசினோம். ""நாங்களும் ரொம்ப கஷ்டமான மனநிலையிலே தான் இருக்கோம். எங்களுக்கு வேன் வாங்கி ஓட்டுற அளவுக்கு வசதி இல்லாததாலதான் வாடகைக்கு வேன் எடுத்து ஓட்டினோம். டிரைவரும் நல்ல ஆளுதான். இப்படி ஆயிடிச்சி'' என்றார் ஒரு பார்வையாளரைப் போல. ஸ்பாட்டில் இருந்த கலெக்டர் முனியநாதன் நம்மிடம், ""பள்ளிக்கூடத்துக்கு அனுமதி இல்லை. இது பள்ளிக்கூட வாகனமும் இல்லை. டிரைவர்கிட்டே லைசென்சும் இல்லை. முழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது'' என்றார் பொறுப்பாக.""10 உயிர்கள் பறிபோனபிறகு, இத்தனை பொறுப்பாக பேசுபவர்கள், இதையெல்லாம் கவனிக்க வேண்டிய பொறுப்பு தங்களுக் குத்தான் உள்ளது என்பதை உணர்ந்து செயல்பட்டிருந்தால் இந்தப் பிஞ்சுகளோட உயிரைப் பறிகொடுத்திருக்க மாட்டோமே... இத்தனை நாள் எங்கேய்யா போயிருந்தீங்க...'' -என கண்ணீரும் சாபமுமாக கேள்வி எழுப்புகிறார்கள் பொதுமக்கள்.பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வேன்கள் விபத்துக்குள்ளாவது தொ டர்ந்து நடந்துகொண்டி ருக்கிறது.வேதாரண்யம் அருகே வேன் விபத்து நடந்த அதே நாளில், சேலம் மாவட்டம் ஆத்தூர் அம்மாபாளையத்தில் உள்ள சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு சொந்த மான டாடா மோட்டார்ஸ் பஸ்ஸும் விபத்துக்குள் ளானது.28 மாணவர்களுடன் நரிக்குறவர் காலனியிலிருந்து புறப்பட்டது அந்த பஸ். மண் சாலையில் செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்ததால், தென்னை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதுல டிரைவர் மணி உள்பட 29 பேர் காயமடைந்தனர்.

டிரைவர் தன் அருகிலிருந்த மாணவிகளுடன் பேசியபடியே வண்டி ஓட்டியதால் இந்த விபத்து நடந்ததாக சக மாணவர்கள் சொல்கிறார்கள்.கடந்த வாரத்தில் கடலூர் -சிதம்பரம் சாலையில் பெரியகிணற்றுப் பாலத்தின் அருகே சென்றுகொண்டிருந்த பரணி ஸ்கூல் வேன் கட்டுப்பாட்டை இழந்து 10 அடி பள்ளத்தில் உருண்டு தண்ணீருக்குள் கவிழ்ந்தது. பின்னால் வந்த பஸ்ஸில் இருந்தவர்கள் இதைப் பார்த்துவிட்டு பதறிப்போய், தண்ணீரில் விழுந்தவர் களை மீட்டனர்.39 மாணவர்களும் ஒரு டீச்சருமாக 40 பேரை ஆம்புலன்சில் ஏற்றி கடலூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில், 4 வயது சிறுவன் ராமு சிகிச்சை பலனின்றி இறந்து போனான். பணத்தாசை பள்ளி நிர்வாகம் -மெத்தன அதிகாரிகள் -பொறுப்பற்ற டிரைவர்கள்- விதிமுறைகளுக்குட்படாத வாகனங்கள் என உயிர் பறிப்புக்கான காரணங்கள் நீண்டு கொண்டிருக்கின்றன.

இதே காரணங்களால் வேதாரண்யத்தில் பறிக்கப்பட்ட 10 உயிர்களுக் காக கையில் விளக்குடன் மவுன ஊர்வலமும் கண்ணீர் அஞ்சலியும் நடத்திக்கொண்டி ருக்கிறார்கள் நாகை மாவட்ட மாணவ- மாணவிகள்.