பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Sunday, December 6, 2009

அப்பா வருவார்! - ஜெகத் கஸ்பர்

சில சிறு செய்திகள். நிறைவாய், நிம்மதியாய். இரவு கவிந்த பின்னரும் எங்கோ மூலையில் எரிந்து கொண்டிருக்கும் அகல் விளக்கு போல் வாடிப் போகாத நம்பிக்கையாய்.ஈழத்தமிழுலகம் தேசியத் தலைவரென வணங்கிப் போற்றும் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தனது தனிப் பட்ட திருக்கோயிலாயும், தன் நெஞ்சுறங்கும் தாய்மடித் தொட்டிலாயும் கருதி வளர்த்துப் பேணிய செஞ்சோலை குழந்தைகள் இல்லமும் இனவாத யுத்தத்தின் கோரப்பசிக்கு இரையானதை நாம் அறிந்திருந்தோம். கிளிநொச்சியிலிருந்து ஜனவரி மாதம் புறப்பட்ட சிங்களப் பேரினவாதத்தின் ராணுவப் பூதங்களால் கூடு கலைக்கப்பட்ட நான்கு லட்சம் தமிழர்களில் செஞ்சோலைப் பிள்ளைகளும் உள்ளடக்கம். இடைவிடா குண்டுவீச்சு, தொடர் தப்பியோட்டம், பசி, தாகம், அச்சம், பிணங்கள் என்றாகிய இறுதிகட்டப் போரில் எல்லோரையும் போல் இந்தப் பிஞ்சுகளும் கூடு கலைந்து ஓடினார்கள். சுமார் 60 பிள்ளைகள் தப்பி ஓடுகையில் எறிகணை வீச்சுக்கு கோரமாய் பலியானார்கள் என்றொரு செய்தி முன்னர் கிடைத்திருந்தது. எஞ்சியவர்களைப் பற்றின தொடர் விசா ரணைகளில் செஞ்சோலையிலிருந்த ஆண்பிள்ளைகள் தென் னிலங்கை குருநாகல பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்ட தாகவும், அவர்களை சிறுவர் போராளிகளென்றே சிங்களம் உலகிற்குக் கணக்குக் காட்டியதாகவும் சிலர் சொன்னார்கள். ஆனால் உறுதி செய்ய முடியவில்லை. அதேவேளை செஞ்சோலையின் பெண் குழந்தைகள் என்னவானார்கள் என மனம் தவித்து பலரை வினவியும் நிலை தெரியவில்லை. அதற்கான பதில், தவிப்பினை தீர்த்து கடந்த வியாழனன்று கிடைத்தது.செய்தியைச் சொல்லுமுன் செஞ்சோலை பற்றித் தெரியாதவர்களுக்காய் சில வரிகள். சிங்களப் பேரினவாதம் அனாதைகளாக்கிய தமிழ்ப் பிஞ்சுகள், சிறார் யாவருக்கும் தானே தாயும், தகப்பனும், தெய்வமுமாகி வேலுப்பிள்ளை பிரபாகரன் தனது நேரடி பார்வையிலும், பராமரிப்பிலும் உருவாக்கிப் பேணிய இல்லம்தான் செஞ்சோலை. சதிகள், துரோகச் சகதிகள், இடர்கள், மனக்குழப்பங்கள் என அம்மாமனிதன் சுமைப்பட்ட பொழுதுகளிலெல்லாம் தாய்மடித் தஞ்சம் நாடியது இச்செஞ்சோலை மலர்களிடம் தான். எனது நேர்காணலில் கூட அதனை அவர் ரம்யமாகக் குறிப்பிட்டார். ""அங்கு போனால் மனம் அமைதியாயிருக்கும். நிம்மதி கிடைக்கும்''. இறுக்கமான போர்முனைகளில் நின்ற தரு ணங்களில் கூட, ஒருவாரம் செஞ்சோலைக்குச் செல்ல முடியாதென்றால் முன்னதாகவே தனிப் பட்ட முறையில் அப்பிள்ளைகளுக்கு இனிப்புகள், பரிசுகள் அனுப்பி வைப்பாராம். தமிழீழத்தின் ஒவ்வொரு குழந்தையையும் தன் சொந்தக் குழந்தை போல் பேணிய அந்தத் தாயுமானவர்.அச்செஞ்சோலையின் 150-க்கு மேலான பெண் குழந்தைகளும், பிள்ளைகளும் பாது காப்பாய் இருக்கிறார்கள், அதுவும் பிரபாகரன் அவர்களைப் போலவே அரவணைப்பும் நேசமும் அப்பிள்ளைகளுக்குத் தருகிற அன்னை தெரசாவைப் போன்ற இதயமும் அர்ப்பணமும் கொண்ட கத்தோலிக்க அருட்கன்னியர்களின் பராமரிப்பில் இருக்கிறார்கள் என்ற செய்தி கடந்த வியாழனன்று கிட்டியது. ஓடி ஓடிக் களைத்த இச்சிறு புள்ளிமான் கூட்டம், வெறிபிடித்த சிங்கக் கூட்டத்திடமிருந்து தப்பி ஆறுதலின் நீரோடையை அன்னை தெரசா போன்ற அருட்சகோதரியர்களிடம் கண்டிருக் கிறார்களென்பதில் நம் அனைவருக்கும் நிம்மதியே. அவ்வாறே எங்கோ இருக்கிற செஞ்சோலையின் ஆண் பிள்ளைகளும் அன்புடையோர் பராமரிப்பிற்கு வந்து சேர வேண்டுமென இறையருளை மன்றாடுவோம்.


பிரபாகரன் அவர்களை ""அப்பா'' என உரிமையுடன் அழைத்து வளர்ந்தவர்கள் இந்தப் பிள்ளைகள். இப்போது அவர்கள் இருக்கும் இல்லத்தில் முகமலர்ச்சியோடு அவர்கள் ஓடித் திரிந்து விளையாடினாலும் தங்கள் "அப்பா'வின் நினைவாகவே இருக்கிறார்களாம். அதுபோலவே அங்கிருக்கும் அருட்சகோதரியர்களிடத்தில், ""அப்பா உயிரோடுதான் இருக்கிறார். முக்கிய வேலையாய் அவர் வெளியே தூரத்தில் நிற்கிறார். நிச்சயம் எங்களை அவர் பார்க்க வருவார்'' என்று நம்பிக்கை யோடும், ஐயமற்ற உறுதி யோடும் சொல்கிறார்களாம்.


செஞ்சோலைச் சிறார் களில் ஒரு பகுதியினரேனும், தலைவனின் பாசப் பிள்ளை களாய் உயிர் பிழைத்திருக் கிறார்கள். அதுவும் அன்புடை யோரின் அரவணைப்பில் இருக்கிறார்கள் என்ற செய்தி உலகத் தமிழர் பலரை நிம்மதி கொள்ளச் செய்யும் என்பதால்தான் இதனை முக்கிய செய்தியாய் இங்கு பதிவு செய்ய விழைந்தேன்.


இதுபோலான இன்னுமொரு சிறிய நற்செய்தி. எமது ""நாம்'' அமைப்பு செஞ்சோலை போன்ற பிறிதொரு திட்டத்தை ஈழத்து நண்பர்கள் சிலருக்குப் பரிந்துரைத்து கடந்த இருமாத காலமாய் அதனை விவாதித்து வந்தோம். பேரினவாதம் நடத்திய யுத்தத்தில் கணவன், பிள்ளைகள், உடன் உறவுகள் யாவரையும் இழந்து தனிமரமாய் நிற்கிற விதவைத் தாய்மார்கள் பலர் அங்கு இருக்கிறார்கள். அவ்வாறே தாய்-தந்தை இருவரையும் பறித்தெடுத்து யுத்தம் அனாதைகளாக்கிய பல்லாயிரம் பிள்ளைகளும் இருக்கி றார்கள். இப்படி பெற்றோரை இழந்த பிள்ளைகளும், பிள்ளைகளை இழந்த தாய்மார்களும் இணைந்து வாழும் நந்தவனமொன்று உருவாக்குங்களேன் என்றுதான் அந்த நண்பர்களோடு உரையாடி, விவாதித்து வந்தோம். அதனை எடுத்துச் செய்ய அவர்கள் முன்வந்துள்ளார்கள்.


இதைத் தொடர்ந்து மனம் வருந்தக்கூடிய செய்தி ஒன்று. இலங்கையில் ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டிருக்கிற அதிபர் தேர்தலும் அதனை எதிர்கொள்வதில் தமிழ் மக்களுக்கான அரசியல் வெளிப்படுத்தும் பரிதாப நிலையும் நமது தொடரும் அவலத்தின் அடையாளங்கள் மட்டுமல்ல, தமிழீழ மக்களின் அரசியல் சுயநிர்ணய உரிமையை உலகம் கரிசனையோடு பரிசீலிக்கிற வாய்ப்புகளையும் விரைவாகச் சுருங்கிப் போகவைப்பவை.
முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகள் அறிவித்த ஆயுத மௌனிப்பு அதுவரை நாளும் தமிழருக்காய் இருந்த தவிர்க்கவும் அசைக்கவும் முடியாத ஓர் அரசியல் பலத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. மீண்டும் அப்படியொரு நிலைக்கு ஆயுதப் போராட்டத்தினூடாய் தமிழருக்கான அரசியற்பலத்தை கட்டியெழுப்ப மிக நீண்ட காலம் ஆகலாம். ஒருவேளை பழைய ராணுவச் சமநிலைக்கு தமிழர்கள் திரும்பி வர முடியாமலே கூட போகலாம். அதுவரை தமிழருக் கான அரசியற்களம் வெற்றிடமாக இருக்கக்கூடாது. அரசியலைப் பொறுத்தவரை வெற்றிடங்களை அது அனுமதிப்பதில்லை. நல்லவர்கள் அதனை நிரப்பாவிட்டால் துரோகி களும், தரகர்களும் சுயநலப் பேர்வழிகளுமே அவ்வெற்றிடத்தை நிரப்புவார்கள்.
இன்றைய நிலையில் தமிழரின் அரசியல் இடைக்குரலாய் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளை புலம்பெயர் தமிழர்கள் செய்திருக்கலாம். அவர்களில் நம்பகத் தன்மையும் நாணயமும் கொண்டவர்களை கடந்து போன மாவீரர் நினைவு நிகழ்வுகளுக்கு அழைத்து அவர்களின் அரசியற் தகுதியை மேலும் வலுச்செய்திருக்கலாம். அவ்வாறே பன்முனை உரையாடல்கள், முயற்சிகள் மூலம் தமிழ் -மலையகத் தமிழ் - இசுலாமிய மக்களின் பொதுவேட்பாளராக திரு.சம்பந்தன் ஐயா போன்ற மூத்த வேட்பாளர் ஒருவரை நிறுத்தியிருக்கலாம். அதேவேளை இன்று இலங்கை ராணுவப் பிடியில் இருக்கிற பாலகுமாரன், யோகி உள்ளிட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க அரசியல் -பொருண்மிய -புனர்வாழ்வுப் பிரிவுகளின் முக்கிய தலைவர்களை விடுதலை செய்ய வைத்து அவர்களை தமிழீழ விடுதலையின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் முகங்களாக்கிட அனைத்துலக அழுத்தத்தினை புலம்பெயர் தமிழர்களால் செய்திருக்க முடியும். இத்தகையதோர் செயற்பாட்டின் மூலம் தமிழரின் அரசியல் சுயநிர்ணய உரிமைக்கான ஓர் அடிப்படையை அன்று வட்டுக்கோட்டை தீர்மானத்திற்குப் பின் நடந்ததுபோல் இப்போதைய அதிபர் தேர்தலிலும் தமிழர்கள் நிகழ்த்திக் காட்டியிருந்தால் நமது அரசியற் தோற்றப்பாடும் உலகத்தின் பார்வையில் மதிப்பிற்குரியதாய் இருந்திருக்கும்.
ஆனால் நிஜத்தில் இன்று நாம் காணும் கவலைக் காட்சி என்ன? தமிழரை இன அழித்தல் செய்த யுத்தத்திற்கு அரசியற் தலைமை தந்த ராஜபக்சேவுக்கு சில தமிழ் குழுக்களும், அதனை ராணுவ களத்தில் ஈவிரக்கமின்றி நடத்தி முடித்த பொன்சேகாவுக்கு வேறு சில தமிழ் குழுக்களும் ஆதரவு செய்து களப்பணியும் ஆற்றுகிற அசிங்கக் காட்சியின் அரசியல் அரங்கு நம்முன் விரிகிறது. காரணம் யார்? எல்லாவற்றிற்கும் சிங்களப் பேரினவாதத்தின் மீதும் அந்நிய சக்திகள் மீதும் பழி போட்டுக்கொண்டு நாம் மட்டும் தூய யோக்கியவான்கள் என்பதுபோல் படம் காட்டிக்கொண்டு தொடர முடியாது. நமக்குள் இன்று நடந்து கொண்டிருக்கும் உட் சண்டைகளின் உள் நோக்கங்களை விவாதிக்கும் பொறுப்புணர்வு நமக்கு இல்லையெனில் பேசா பொருளை பேசும் துணிவு பெற வில்லையெனில் தமிழீழம் என்ற கனவையும் நாம் முன் நகர்த்த முடியாது.
தோழர்கள் சிலர் இந்த வாரம் நான் இந்திய உளவாளி என உளறிக்கொட்டியிருந்த ஒருவரைப் பற்றியும், எந்தக் கட்டுரைக்கு எதிர்வினை எழுதுகிறோம் என நன்றாகவே தெரிந்தும் மெனக்கெட்டு திசை திருப்பல் செய்திருந்த ஒருவரைப் பற்றியும் கேட்டார்கள். முதலாமவரது பேட்டியும் இரண்டாமவரது கட்டுரையும் பதிலுக்குத் தகுதியுடையன அல்ல.
இனவிடுதலைப் போராட்டத்தை ரசிகர் மன்றச் செயற் பாடுபோல் ஆக்கும் இவர்களை ஒரு பொருட்டாகக் கருதாமல் இயங்குவதே சரியானது. ஆயி னும் தூய உள்ளத்தோடு களப்பணிகள் ஆற்றும் உணர்வாளர்களிடையே இக்குழப்பங்கள் சலிப்பேற்படுத்துவதால் ஒரு மிகச்சிறிய பதில் தேவைப்படுகிறது: தமிழகத்தில் ஈழ விடுதலையைப் பொறுத்தவரை எவ்வித அரசியல், சுயநல நோக்குகளுமின்றி மிக நீண்ட காலமாய் இயங்கி வரும் கொளத்தூர் மணி, கோவை ராம கிருஷ்ணன், விடுதலை ராஜேந்திரன் போன்ற பல தோழர்களும், ஈழ விடுதலைக்காய் பல தியாகங்கள் செய்து, எண்ணிலா இன்னல்களை சந்தித்து அதேவேளை தங்களின் சுய விருப்பு வெறுப்புகள் அரசியற் தேவைகளுக்கேற்றபடி ஈழச் சிக்கலை வளைத்து அதன் அழிவுக்கும் காரணமான தலைவர்கள் இன்னொரு புறம்... தேசியத் தலைவருக்குத் துரோகம் செய்து, கடைசிவரை அவருக்குத் தவ றான தகவல்கள் தந்து, போரின் அழிவு களைக் காட்டி பெரும்பணம் கொள்ளை யடித்து, தமது பெண்டு பிள்ளைகளை யெல்லாம் வெளிநாடுகளில் "செட்டில்' செய்துவிட்டு இன்று பண, அதிகார நலன்களுக்காய் விடுதலைப் போராட்ட தியாக களத்தை கபளீகரம் செய்ய வரிந்து நிற்கும் ஓர் சிறு கூட்டத்தின் கூலிக்குரல்களாய் மேடைகளிலும் இணையதளங்களிலும் சலப்பும் ஓர் புதிய கூட்டம்... காலம் யாவற்றையும் வெளிப் படுத்தும், விரை வாகவே.