பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Sunday, December 6, 2009

மதவாச்சி சோதனை முகாம் நீக்கம்: பாதுகாப்பு அனுமதியின்றி வாகனப் போக்குவரத்துக்கு அனுமதி

வடபிராந்தியத்துக்கான நுழைவாசலாக விளங்கும் மதவாச்சி சோதனை நிலையத்தில், கடந்த மூன்று வருடங்களாக நடைமுறையில் இருந்த சகல போக்குவரத்துக் கட்டுப்பாடுகளும் நேற்றுப் பிற்பகல் 2 மணியுடன் நீக்கப்பட்டன.
இனிமேல் எந்தவித சோதனைகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி எவையும் இன்றி சகல வாகனங்களும் போக்குவரத்துச் செய்யலாம் என்று பாதுகாப்பு அமைச்சு நேற்று அறிவித்தது.
2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் வட பிராந்தியத்தில் இருந்து வெளிச் செல்பவர்களும், தெற்கில் இருந்து வடக்கு நோக்கி வருபவர்களும் மதவாச்சியில் வைத்து சோதனை செய்யப்பட்டனர்.
வாகனங்களும் மதவாச்சி ஊடாக செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. சகல வாகனங்களும் மதவாச்சியில் வைத்து சோதனை செய்யப்பட்டன.
பாதுகாப்பு அனுமதிகளும் பெறவேண்டும் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
தெற்கில் இருந்து வாகனங்கள் வடக்குக்கு நேரடியாக வர அனுமதிக்கப்பட வில்லை.
வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் வேறு வாகனங்கள் ஊடாகவே வடக்கே வரவேண்டியிருந்தது.
நேற்றுத் தொடக்கம் மதவாச்சியில் உள்ள தடைமுகாம் திறக்கப்பட்டுள்ளது என்றும், சகல வாகனங்களும் எந்தவித பாதுகாப்பு அமைச்சு அனுமதியும் இன்றி மதவாச்சித் தடை முகாம் ஊடாகப் பயணம் செய்யலாம் என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.