பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Saturday, December 12, 2009

புலிகள் சரணடைந்தபோது என்ன நடந்தது? தேர்தல் பிரசாரத்தில் உண்மையை அம்பலமாக்க பொன்சேகா திட்டம்

போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் அரசியற்பிரிவினர் சிறிலங்கா படையினரிடம் சரணடைவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் அவர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது போன்ற விடயங்களை எதிர்வரும் அரச தலைவர் தேர்தல் நெருங்கும் காலப்பகுதியில் வெளியிடுவதற்கு முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தரப்பினர் ஆலோசித்துவருவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அரச தரப்பு தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு பொன்சேகாவினால் முன்வைக்கப்படும் எந்த குற்றச்சாட்டுக்களையும் எதிர்கொள்வதற்கு தாம் தயார் என்றும் அரச தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கையில் -
விடுதலைப்புலிகளின் அரசியற்பிரிவினர் சிறிலங்கா அரச படையினரிடம் சரணடைவதற்கு நோர்வே அரசின் ஊடாக பசில் ராஜபக்சவுடன் தொடர்புகொண்டமை, அதனை கேள்வியுற்ற கோத்தபாய ராஜபக்ச எவ்வாறு நடந்துகொண்ட விதம் ஆகியவை குறித்து மக்களுக்கு உண்மை கூறப்போவதாக புறப்பட்டுள்ளார் என்று அரசு தரப்புக்கு தகவல் கிடைத்துள்ளது.
சரணடைய முடிவெடுத்த விடுதலைப்புலிகள் செஞ்சிலுவை சங்கத்தின் ஊடாக எந்த கோரிக்கையையும் முன்வைக்கவில்லை. அதுவே அக்காலப்பகுதியில் சரியான ஏற்பாடாக இருந்திருக்கும்.
விடுதலைப்புலிகள் சரணடைவதாக அறிவித்த காலப்பகுதியானது சிறிலங்கா படையினர் மீளத்திரும்ப முடியாத புள்ளிக்கு சென்றுவிட்ட நாட்கள் ஆகும். இவை குறித்தெல்லாம் அரசு சரியாக சிந்தித்துத்தான் முடிவெடுத்தது.
இவை பற்றி பொன்சேகா என்ன கூறினாலும் அதற்கு பதிலளிக்க அரசு தயார். இந்த விடயத்தையே தனது பிரதான தேர்தல் பிரசார மூலோபாயமாக பொன்சேகா திட்டமிட்டு வருகின்றார் என்பதும் எமக்கு தெரியும் – என்று கூறியுள்ளன.