பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Thursday, November 19, 2009

யுத்தம் 2 - நக்கீரன் கோபால்

வம்பர் 20, 2001.

தினம் தினம் நெருக்கடி செய்திகள் வந்து கொண்டே இருந்ததால், சட்டரீதியாக எதிர்கொள்வது தொடர்பாக நமது வக்கீல்களிடம் ஆலோசித்து அதற்குத் தகுந்தபடி செயல்பட்டுக்கொண்டிருந்த நேரம். மதிய சாப்பாட்டுக்காக மாலை 5 மணிக்குத்தான் வீட்டுக்குப் போயிருந்தேன். சோற்றில் கைவைத்த நேரம். ஒரு செல்போன் அழைப்பு. தம்பி சிவசுப்ரமணியனின் துணைவியார் ஜெயந்தியின் குரல் பதற்றமாக கேட்டது.""அண்ணே.. மாமாவை காலையிலிருந்து காணலை. யாரோ கடத்திட்டதா சொல்றாங்க.''சேலம் ஆத்தூரிலிருந்து அவர் பேசியதைக் கேட்டதும் என் குரலிலும் அதிர்ச்சி வெளிப்பட்டது. ""என்னம்மா சொல்றீங்க... காலையிலிருந்து காணோம்னு இப்பதான் போன் பண்றீங்க.''

""காலையில குமுதம் ரிப்போர்ட்டர் கதிரவனுக்கு ஒரு கேஸில் ஷ்யூரிட்டி கொடுக்க சேலத்துக்குப்போறேன்னு சொல்லிட்டு கிளம்பினார். அப்புறம் தகவல் இல்லை. செல்போனும் ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருக்குது.வீட்டுக்குப் பக்கத்திலேயே அவரை யாரோ கடத்திட்டுப் போயிட்டதா இப்பதான் தகவல் கிடைச்சதுங்கண்ணே'' என்றார் ஜெயந்தி.



நக்கீரன் டீம் மொத்தமும் பரபரப்பானது. ஜனாதிபதியில் தொடங்கி பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், மாநில கவர்னர், பிரஸ் கவுன்சில், காவல்துறை உயரதிகாரிகள் என எல்லா இடங்களுக்கும் தந்திகள் கொடுக்கப்பட்டன. பத்திரிகை நிறுவனங்களுக்கும் தொலைக்காட்சி சேனல்களுக்கும் செய்தி தெரிவிக்கப்பட்டது. நமது வழக்கறிஞர் பெருமாள் மூலம் ஹேபியஸ் கார்பஸ் மனு போடுவது பற்றியும் உடனடியாக ஆலோசிக் கப்பட்டது. சேலம் மாவட்ட காவல்துறை, சென்னை மாநகர காவல்துறை, அதிரடிப்படை போலீசார் என பல இடங்களிலும் நாம் தொடர்ந்து விசாரித்தபடியே இருந்தோம். ""நாங்க எதுவும் அரெஸ்ட் பண்ணலையே...'' என்றுதான் ஒவ்வொரு அதிகாரியிடமிருந்தும் பதில் வந்தது. அப்படியென்றால் சிவா எங்கே? இரவு முழுவதும் நமது தேடுதல் பணி தொடர்ந்துகொண்டே இருந்தது. பதட்டமும் கூடிக்கொண்டே இருந்தது. எல்லா இடங்களுக்கும் தந்தி கொடுத்து, சிவா கடத்தப்பட்டதை பதிவு செய்தபடியே இருந்தோம். நமது தொடர் தேடலின் ஒரு கட்டமாக, ஆத்தூரில் என்ன நடந்தது என்று விசாரித்தோம்.
அன்று காலையிலிருந்தே தம்பி சிவாவின் வீட்டுக்கு சற்று தூரத்தில் ஒரு மகேந்திரா வேன் நின்றிருக்கிறது. வேனில் வந்திருந்தவர்கள் அந்த ஏரியாவுக்குப் புதியவர்கள். அக்கம்பக்கத்தில் சிவாவைப் பற்றிக் கேட்டிருக்கிறார்கள். சிவா சேலம் போவதற்காக வீட்டைவிட்டு வெளியே வந்தபோது, ஒரு ஆள் அவர் பக்கத்தில் வந்து, ஏதோ பேசிக்கொண்டே போனார். எங்கே போனார் என்ற ஒரு விவரமும் தெரியவில்லை.நவம்பர் 21-ந் தேதி பகல் பொழுது முழுக்க தேடுதல் பணியை பல வகையிலும் நீடித்தோம். அன்றைக்கு மாலையில்தான் சிவசுப்ரமணியத்தின் குரலை அவரது தாயாரும் மனைவியும் செல்போனில் கேட்டனர்.
""நான் நல்லா இருக்கேன். என்னை அரெஸ்ட் பண்ணியிருக்காங்க. எந்த இடத்திலே வச்சிருக் காங்கன்னு எனக்குத் தெரியலை- இதுதான் சிவா சொன்ன தகவல். கைது செய்யப்பட்ட 24 மணிநேரத்தில் குடும்பத்தினருக்கு முறைப்படி தெரிவிக்கவேண்டும் என்ற அடிப்படையில்தான் சிவாவை பேச அனுமதித்திருக்கிறார்கள் போலீஸ்காரர்கள். அதைத் தொடர்ந்து ஒரு தந்தியும் சிவா குடும்பத்தினருக்கு வந்தது. அதில்தான், சிவாவை கர்நாடகப் போலீசார் கைது செய்திருக்கிறார்கள் என்பதும், அந்த மாநிலத்தில் உள்ள கொள்ளேகாலில் இருந்து தந்தி அனுப்பப்பட்டிருக்கிறது என்பதும் தெரியவந்தது. ஆனாலும், சிவாவை எங்கே வைத்திருக்கிறார்கள், என்ன நிலையில் அவர் இருக்கிறார் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.நக்கீரன் தம்பிகள் சுப்பு, ஜெயப்பிரகாஷ், ஆத்தூர் சேகர் ஆகியோர் உடனடியாக கர்நாடகாவுக்கு விரைந்தனர்.
கர்நாடக போலீஸ் தரப்பில் அவர்கள் விசாரித்தபோது, கொள்ளேகால் சப்-இன்ஸ்பெக்டர் ஒய்.எம்.பிரசாத் காக்கிகளின் கதை சொல்லும் பாணியில் ஒரு தகவலை வெளியிட்டார். அவரும் கான்ஸ்டபிள்களும் வழக்கமான ரோந்து பணியை ஏரஹன்னஹள்ளியில் மேற்கொண்டிருந்த போது, 2 பேர் கையில் பையுடன் சந்தேகத்துக்கிடமான முறையில் காட்டுப்பகுதியில் போய்க் கொண்டிருந்தார்களாம். போலீஸ் வாகனத்தைப் பார்த்ததும் இருவரில் ஒருவர் தப்பி விட்டாராம். பிடிபட்ட இன்னொருவரிடம் விசாரணை நடத்தியபோது, தான்தான் நக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியம் என்றாராம். அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது அதில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் இருந்ததாம். வீரப்பனிடம் இதைக் கொடுப்பதற்காக காட்டுக்குள் வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் கைது செய்தார்களாம். இதுதான் கர்நாடக போலீசார் சொன்ன கைது கதை.
ஆனால் உண்மையில் என்ன நடந்தது? அது, கர்நாடக போலீசார் சொன்ன கதைக்கு நேர் எதிரானது.சேலம் செல்வதற்காக, ஆத்தூர் வீட்டிலிருந்து வெளியே வருகிறார் சிவா. அடையாளம் தெரியாத ஒரு நபர் அவரிடம் வந்து, க்யூ பிராஞ்ச் டி.எஸ்.பி. முத்துசாமி உங்களைப் பார்க்க வந்திருக்கிறார் என்று சொல்லியிருக்கிறார். முத்துசாமியை சிவாவுக்கு நன்றாகத் தெரியும். ஒரு வகையில் அவருக்கு சோர்சும்கூட. அதனால், எங்கே முத்துசாமி என்று, அந்த அடையாளம் தெரியாத நபரிடம் சிவா கேட்கிறார். ""உங்க வீட்டுக்கிட்டே வர்றப்ப வண்டி பிரேக்டவுன் ஆயிடிச்சி. ஒர்க் ஷாப்பில் உட்கார்ந்திருக்கிறார்'' என்று அந்த ஆள் சொல்லியிருக்கிறார்.
சிவா வீட்டுக்குப் பக்கத்தில் நிறைய ஒர்க் ஷாப்புகள் இருக்கின்றன. அதனால், அந்த ஆள் சொன்னதை சிவா நம்பவேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. அந்த ஆளுடன் நடந்து போய்க் கொண்டிருக்கும்போது, ஒரு சிமெண்ட் கலர் மகேந்திரா ஜீப் நிற்பதை சிவா பார்த்திருக்கிறார். ஏதோ ஒரு வண்டி என நினைத்தபடி அவர் அதை கடந்தபோது, சிவாவின் பிடரியில் சரியான அடி. அந்த ஆள்தான் அடித் திருக்கிறான். ஜீப் அருகில் அதுவரை கேஷூவலாக நின்று கொண்டிருந்த இரண்டு பேர் கூடவே சிவாவை ஜீப்பை நோக்கித் தள்ள, ஜீப் கதவுகள் சடாரென திறந்தன. உள்ளே இரண்டு பக்கமும் உட்கார்ந்திருந்த ஆட்கள், சிவாவை உள்ளே இழுத்து, ஒரு துணியை அவர் வாயில் வைத்து, கத்த முடியாமல் அடைத்து விட்டனர். ஜீப் ஆட்கள் யாரையும் சிவா அதுவரை பார்த்ததில்லை. ஜீப் உடனடியாக கிளம்ப, ஒருவன் ஒரு துணியை எடுத்து சிவாவின் முகத்தை மூடிவிட்டான். இரு கைகளையும் பின்னால் சேர்த்துவைத்து ஒரு துணித்துண்டால் கட்டி விட்டார்கள். சிவாவை ஜீப்பின் கீழே குப்புற போட்டு 4 தடி மாடுகளும் தங்கள் கால்களால் மிதித்து திமிறாமல் பார்த்துக் கொண்டனர். துண்டால் மூடியதால் சிவாவுக்கு மூச்சுத் திணற ஆரம்பித்துவிட்டது. எங்கே செத்து விடுவாரோ என்று பயந்து, கண்ணை மட்டும் கட்டி, மூச்சுவிட மட்டும் வசதி செய்திருக்கிறது ஜீப்பில் இருந்த கும்பல். எந்த திசையில் செல்கிறோம் என்ற விவரம் எதுவும் தெரியாமல் சிவா உள்ளே உட்கார்ந்திருக்க...
மகேந்திரா ஜீப் மணிக்கணக்கில் ஓடிக்கொண்டி ருந்தது.
அது போய் நின்ற இடம் .....!