பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Wednesday, November 18, 2009

புலிகள் எடுத்த அவசர முடிவுகளே இன்றைய விளைவுகளுக்குக் காரணம் - கருணாநிதி


சென்னை: விடுதலைப் புலிகள் அரசியல் கண்ணோட்டம் இல்லாமல், அவசரப்பட்டு எடுத்த முடிவுகளால் ஏற்பட்டுள்ளதே இன்றைய விளைவுகள். இதைக் கண்டு நாம் மெளனமாக அழுது கொண்டிருப்பது யார் காதில் விழப் போகிறது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.இதுகுறித்து முதல்வர் கருணாநிதி முரசொலியில் எழுதியுள்ளதாவது:ஈழத் தந்தை செல்வாவின் குரலோடு இணைந்து 1956 முதல்; தி.மு.க. தென்னிந்தியாவில் இலங்கை பிரச்சினைக்காக எழுப்பிய குரலும் - இலங்கையில் ஜனநாயகம் மலர வேண்டும் என்பதற்காக எடுத்து வைத்த வாதங்களும் - நடத்திய அறப்போராட்டங்களும் - சிறைகளை நிரப்பிய தியாகச் செயல்களும் - சட்டமன்ற உறுப்பினர் பதவிகளைத் தூக்கி எறிந்த நிலைகளும் - ஏன்;

இருமுறை ஆட்சியையே இழந்த சரித்திரச் சம்பவங்களும் -தி.மு.கழகத்தின் சார்பில் நிதியாக தமிழர்களிடமிருந்து சேர்த்துக் கொடுத்த மாசறு காசுகள்; செல்லாக் காசுகளாக மாறிய நிகழ்ச்சியும் -"டெசோ'' இயக்கத்தின் சார்பில் - நானும், தமிழர் தலைவர் வீரமணியும், பழ.நெடுமாறன், அய்யணன் அம்பலம் ஆகியோரும் முன்னின்று மாவட்டந்தோறும் நடத்திய பேரணிகளைத் தொடர்ந்து; 4-5-1986 அன்று மதுரையில் ஈழத் தமிழர் ஆதரவு மாநாட்டுக்கு டி.யு.எல்.எப். சார்பாக அமிர்தலிங்கம், புரோடெக் சார்பாக சந்திரகாசன், ஈராஸ் சார்பாக ரத்தினசபாபதி, டி.இ.எல்.எப். சார்பாக ஈழவேந்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பாக வரதராஜப்பெருமாள், பிளாட் சார்பாக வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பதும்,அந்த மாநாட்டில் அகில இந்திய ரீதியில் என்.டி.ராமராவ், வாஜ்பாய், பகுகுணா, ராம்வாலியா, உபேந்திரா, உன்னிகிருஷ்ணன், சுப்பிரமணிய சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர் என்பதும்,அந்த மாநாட்டிற்கு பல்வேறு போராளிக் குழுக்களின் தலைவர்கள் எல்லாம் வந்து கலந்து கொண்டு போராளிகளிடையே அடிக்கடி எழும் புயல் குறித்து விவாதித்து; அதனை நிறுத்த சகோதர ஒற்றுமை வேண்டுமென்று வலியுறுத்தினார்கள் என்பதும்,ஆனால் அந்த மாநாட்டிற்கு எல்.டி.டி.ஈ. சார்பாக திலகர் என்பவர் தான் வந்திருந்தாரே தவிர, பிரபாகரன் வரவில்லை என்பதும்;

அரசு பொறுப்பில் முதல்வராக இருந்து கொண்டே, அமைதிப்படை இந்தியாவிற்கு திரும்பி வந்ததை வரவேற்க செல்லாமல் புறக்கணித்து, தமிழ்நாட்டின் உணர்வை நான் வெளிப்படுத்திய நிகழ்வும் - இலங்கையில் நடந்த விடுதலை போராட்டத்திற்கு நமது தாய் மண்ணிலிருந்து நீட்டப்பட்ட ஆதரவுக் கரம் என்பதை நடுநிலையாளர்கள் யாரும் மறந்துவிட முடியாது.ஆனால் விடுதலைப் படைமுகத்திலே நின்ற ஒருசில தளகர்த்தர்களுக்கு - தளபதிகளுக்கு - தலைவர்களுக்கு நாமே வலுவில் சென்று வழங்கிய ஆதரவு; மிக லேசாகவே தெரிந்தது. நாம் எடுத்து வைத்த கருத்துகள் அலட்சியப்படுத்தக் கூடியவைகளாக ஆகிவிட்டன. வீரத்தைப் பயன் படுத்திய அளவுக்கு; இதுபோன்ற போர் முனைகளில் விவேகத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தியதை என்ன காரணத்தாலோ அலட்சியப்படுத்திவிட்டார்கள்.எல்லாம் முடிந்து மேலும் முடிவுறுமோ;

என்ற துயர நேரத்திலே ஜனநாயக ரீதியாகக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு வாய்ப்பு வாசற்படி வரையிலே வந்தபோது கூட, அதை எட்டி உதைத்து விட்ட தவறான காரியம் நடைபெற்றதையும் - நடைபெற்றதற்கான காரணத்தையும் - நான் அல்ல; என்னைப் போன்றவர்கள் அல்ல; இதோ மவுன வலி உணர்ந்து, அதனை நமக்கு உரைக்கும் அருமை நண்பர்களாம், தமிழ் எழுத்தாளர்களில் தலைநிமிர்ந்து நிற்கும் தன்மானத் தோழர், கோபாலுக்கு; அண்மையில் சென்னைக்கு வந்த இலங்கை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், இன்றைய இலங்கை எதிர்க்கட்சி தலைவரும், இலங்கையின் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கே 18-11-2009 தேதியிட்ட நக்கீரன் வார இதழுக்காக அளித்த பேட்டியில்,"இந்தப் போரின் விளைவுகளுக்கு ஒரு வகையில் பிரபாகரனும் காரணம்.

தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண வேண்டி முயற்சி நடந்தபோதெல்லாம் அதனை தவிர்த்தார் பிரபாகரன். 2003-ல் நடந்த அமைதி பேச்சுவார்த்தையிலிருந்து தானாகவே வெளியேறினார்.2005-ல் டோக்கியோவில் நடந்த பேச்சுவார்த்தையிலும் தமிழர்களின் கோரிக்கைகள் என்னவென்பதை தெரிவிக்காமலே இழுத்தடித்தார். இறுதியில் அதில் கலந்து கொள்வதை தவிர்த்தார்.மேலும் 2005-ல் நடந்த அதிபர் தேர்தலில் தமிழர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல்;

பிரபாகரன் தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கச் செய்தார். அதே நேரம் அவர்கள் தேர்தலில் தங்கள் பங்களிப்பை செய்திருந்தால் தமிழர்களின் மனநிலை என்னவென்பதை அறிந்து கொள்ள முடிந்திருக்கும். அந்த ஜனநாயக வாய்ப்பை தமிழ் மக்களுக்குத் தர பிரபாகரன் தவறி விட்டார்.''என்று ரணில் கூறியிருப்பதைக் கூர்ந்து கவனித்தால் விடுதலைப்புலிகள் போர்த் தந்திரத்தை எதிர்காலக் கணிப்போடு கடைப்பிடிக்காதது தான் காரணம் என்பதை புரிந்து கொள்ள முடியும்.விளைந்த நிலைமையை எண்ணிப்பார்ப்பதற்கு இந்த விடுதலைப் போரின் பின் விளைவுகளுக்கு; சகோதர யுத்தத்தின் காரணமாக; மாவீரன் மாத்தையாவிற்கு விடுதலைப்புலிகள் இயக்கமே மரண தண்டனை விதித்து அதை நிறைவேற்றியும்;டெலோ சிறீ சபாரத்தினத்தை சவமாக ஆக்கியும்;பத்மநாபாவையும், அவரோடு இணைந்து பத்து போராளிகளையும் கொன்று குவித்தும்;தொடக்க காலத்திலிருந்து போராளிகளின் துணைவராக விளங்கிய அமிர்தலிங்கத்தையும், யோகேஸ்வரனையும் இந்த நிகழ்ச்சிகளில் உச்சகட்டமாக பலியாக்கியும்;டெலோ இயக்கத்தைச் சேர்ந்த மனோமாஸ்டர் என்ற பஞ்சலிங்கத்தையும், அந்த இயக்கத்தின் தலைவர் குலசேகரம் தேவசேகரத்தையும், தலைசிறந்த அரசியல் அறிஞர் நீலன் திருச்செல்வத்தையும், சுந்தரம் எனப்பட்ட சிவசண்முகமூர்த்தியையும், ஜார்ஜ், சபாலிங்கம், சாம்தம்பிமுத்து, கலாதம்பிமுத்து மற்றும் பிளாட் இயக்கத்தைச் சேர்ந்த யோதீஸ்வரனையும், வாசுதேவாவையும், மரணக் குழியிலே தள்ளியும்;

தங்கள் துணைகளை தாங்களே திட்டமிட்டு, தொலைத்து விட்ட காரியங்களாக அமைந்தன என்பதை இந்தப் போர்முனை சரித்திரம் இன்னமும் சொல்லிப் புலம்பிக் கொண்டு தானிருக்கிறது.நான் யார் மீதும் குற்றம், குறை சொல்வதற்காக இதையெல்லாம் எழுதவில்லை. இலங்கையில் 2004-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முடிந்து புதிய அரசு அமைந்த ஒரு சில நாட்களுக்குள் - 9-4-2004 அன்று கிழக்கு இலங்கையிலே சகோதர யுத்தம் - பிரபாகரன், கருணா படைகளிடையே ஏற்பட்டு அதிலே 20 போராளிகளும், 2 சிவிலியன்களும் கொல்லப்பட்டார்கள்.இப்படி சகோதர யுத்தம் காரணமாக - நம்மை நாமே கொன்று குவித்துக்கொண்டது மாத்திரமல்ல - முறையாக திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொள்ளத் தவறிய காரணத்தால் - நம்முடைய பலத்தையும், மாற்றார் பலத்தையும் துல்லியமாக கணிக்காத காரணத்தால் - நம்முடைய தமிழ் மக்கள் எத்தனை பேர் மாற்றாரின் தாக்குதலுக்கு உள்ளாகி தங்கள் உயிரை இழக்க நேரிட்டது. இளம் சிறார்கள் எத்தனை பேர் தங்கள் பிஞ்சு வயதிலேயே வெந்து மாண்டனர்?

அவர்களை இழந்த அவர்களுடைய பெற்றோர் எத்தனை வேதனைப்பட்டிருப்பார்கள்? எத்தனை பேர் தங்கள் சொத்து சுகங்களை இழந்து நாடு விட்டு நாட்டிற்கு பஞ்சைகளாக, பராரிகளாகச் செல்ல நேரிட்டது? தங்கள் வாழ்க்கையைத் தொடர அவர்கள் எங்கெங்கு அலைந்து திரிய வேண்டியதாயிற்று? எத்தனை பேர் அகதிகள் முகாம்களில் ஆண்டுக்கணக்கில் வாட நேர்ந்தது? இதற்கெல்லாம் காரணம் என்ன? ஏன் பிரபாகரனின் மனைவி, மக்கள் குடும்பத்தாரின் கதி தான் என்ன? இப்படி எத்தனை குடும்பங்கள்? இன்னும் பல ஆண்டுகள் அனைவரும் அமைதியோடு வாழ்ந்து - தமிழர்களின் உயர்வுக்காகப் பாடுபட வேண்டியவர்கள் - தங்கள் உயிரை அற்ப ஆயுளில் முடித்துக் கொண்டு போய் விட்டார்களே என்ற ஆதங்கத்தில் தான் இதனை நான் எழுத நேரிட்டது. வாழ வேண்டிய ஆயிரக்கணக்கான இளந்தளிர்கள் வாடி வதங்கி விட்டார்களே என்ற வேதனையில் இதனை எழுதுகின்றேன்.

என்னையும், மாறனையும் 15-3-1989 அன்று; அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி டெல்லிக்கு அழைத்து - விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பற்றியும், ஈழப் பிரச்சினை குறித்தும் இரண்டு நாள் உரையாடி - அதுபற்றிய விவரங்களை சுமார் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் தமிழ்நாடு மாளிகையில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் நட்வர்சிங் மூலமாக எங்களுக்கு தெரிவித்து - நீங்களும், மாறனும், வைகோவும் தேவைப்பட்டால் இலங்கை சென்று கொழும்பிலோ அல்லது உங்களுக்கு விருப்பமான இடத்திலோ முகாமிட்டு - பிரபாகரனுடன் இந்த பிரச்சினை குறித்து விரிவாகப் பேசுங்கள், எத்தனை நாள் வேண்டுமானாலும் அதற்காக நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள், இலங்கையில் நீங்கள் அவர்களைச் சந்திக்கவோ அல்லது அவர்கள் நீங்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு வந்து சந்திக்கவோ தேவையான ஏற்பாடுகளை நான் இங்கிருந்து செய்து தருகிறேன், அதிகபட்சம் அவர்களது கோரிக்கை என்ன என்பதை விவரமாகத் தெரிந்து கொள்ளுங்கள், இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைகளை நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன் - என்றெல்லாம் எங்களுக்கு சொல்லி உறுதியளித்த அந்த இளந்தலைவர் ராஜீவ் காந்தி இந்திய மண்ணில் அதுவும் தமிழ் மண்ணிலேயே கொலையுண்டார் என்பது ஒரு மாபெரும் சோகச் சம்பவம். அந்த சம்பவமும் ஈழ விடுதலைப் போராட்டத் தீயில் தண்ணீர் விட்டு அணைத்தது போல் ஆயிற்று என்பதை உலகம் மறந்து விடவில்லை.

இதோ ஒரு நிகழ்ச்சி. 17-11-2005 அன்று இலங்கை அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. 13 பேர் போட்டியிட்டனர். அந்த தேர்தலில் அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சேவும், அவரை எதிர்த்து முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் முக்கியமாக போட்டியிட்டார்கள். அந்த தேர்தலை சிறுபான்மையினரான தமிழர்கள் புறக்கணிக்க வேண்டுமென்று விடுதலைப்புலிகள் அறிவுறுத்தினர். அந்த தேர்தலின்போது, தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், விடுதலைப்புலிகளுடன் அமைதிப் பேச்சைத் தொடருவதற்கு முன்னுரிமை அளிப்பேன் என்றார் ரணில். அப்போது ரணில் சொன்னதைத் தான் இப்போதும் நக்கீரன் இதழுக்கு அளித்த பேட்டியிலும், "2005-ல் நடந்த அதிபர் தேர்தலில் தமிழர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் பிரபாகரன் தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கச் செய்தார். அதே நேரம் அவர்கள் தேர்தலில் தங்கள் பங்களிப்பை செய்திருந்தால் தமிழர்களின் மனநிலை என்னவென்பதை அறிந்து கொள்ள முடிந்திருக்கும். அந்த ஜனநாயக வாய்ப்பை தமிழ் மக்களுக்குத் தர பிரபாகரன் தவறி விட்டார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.2005-ம் ஆண்டு நடைபெற்ற அந்த தேர்தலில், இலங்கையின் ஐந்தாவது அதிபராக, பிரதமராக இருந்த ராஜபக்சே வெற்றி பெற்றார். ராஜபக்சேவுக்கு 48,87,152 (50.29 சதவிகிதம்) வாக்குகளும், ரணிலுக்கு 47,06,366 (48.43 சதவிகிதம்) வாக்குகளும் கிடைத்தன. சுமார் 1 லட்சத்து 81 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ரணில் தோல்வி அடைந்தார். ஏறத்தாழ ஏழு லட்சம் தமிழ் வாக்காளர்கள் தேர்தலைப் புறக்கணித்த காரணத்தால், அவர்கள் வாக்களிக்கவே இல்லை என்பதை எண்ணிப் பார்க்கும்போது - விடுதலைப்புலிகள் சார்பாக அவசரப்பட்டு அன்று எடுக்கப்பட்ட அரசியல் முடிவின் விளைவுகள் எப்படி ஆயின; எங்கே போய் முடிந்தன; என்பதை எண்ணிப் பார்த்து நாம் மவுனமாக அழுவது யார் காதிலே விழப் போகிறது? நம்முடைய மவுன வலி தான் யாருக்குத் தெரியப் போகிறது? என்று கூறியுள்ளார் கருணாநிதி.கருணாநிதி வேதனைக்கு என்ன காரணம்...கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈழம்- மெளனத்தின் வலி என்ற பெயரில் நூல் ஒன்று வெளியிடப்பட்டது. அதில் பல்வேறு தரப்பினரும் ஈழம் குறித்த தங்களது கருத்துக்களைக் கவிதைகளாக பதிவு செய்துள்ளனர்.இதற்குப் பதிலளிக்கும் வகையில்தான் முதல்வர் கருணாநிதி தனது வேதனையை வெளிப்படுத்தி தற்போதைய கடிதத்தை முரசொலியில் எழுதியுள்ளார்.