பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Saturday, November 21, 2009

தமிழீழ மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் – எங்கள் வீரர்களுக்கு, எங்கள் காவல் தெய்வங்களுக்கு அவர்கள் புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்று சுதந்திரமாக வீர வணக்கம்


1982 ம் ஆண்டு நவம்பர் 27 தாயகத்தின் முதல் வித்து 2ம் லெப்ரினன்ட் சங்கர் சத்திய நாதன் இந்தியாவில் தலைவர் மடியில் சாய்ந்தான் அந்த நாளே மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வாக, எழுச்சியாக, புனிதமாக உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

மாவீரர் வாரத்தின் தொடக்க நாளான இன்று 1989 ம் ஆண்டு இந்த காலப்பகுதியில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று இங்கு பதியப்படுகின்றது.1989 ம் ஆண்டு ஐப்பசி மாதம் முதல்வாரம் அளவில் இரண்டு போராளிகள் அந்த குளிர்கால கும் என்ற இருட்டிலும் கூட வீட்டை ஒருவாறு தேடி கண்டுபிடித்து வந்து சேர்ந்து விட்டனர். எங்குமே இந்திய அமைதி காக்கும்படை என்ற பெயரில் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் அதற்கிடையே காட்டிகொடுப்போர்கள், துணை இராணுவ குழுக்கள் என நிறைந்திருந்திருந்தது தேசம். இரண்டு போராளிகளில் ஒருவர் எமது ஊர்காரர் மற்றவர் முல்லை மாவட்டம் என சொன்னார் ஆனால் இடம் சொல்லவில்லை. ஒருவர் சந்திரன் மற்றவர் பெயர் ஞாபகம் இல்லை. சந்திரன் அரைகாற்சட்டையும் சேட்டும் மற்ற போராளி சாரம் கையில் டோர்ச் லைட் ஆனால் ஆயுதம் எதுவும் கைகளில் இல்லை களைத்து விழுந்தடித்து வந்தவர்கள் எனது அப்பாவையும் அம்மாவையும் தான் சந்திக்கவேண்டும் என கேட்டனர்.

நான் அவர்களை எங்கள் வீட்டிற்கு உள்ளேயே இருக்க சொல்லிவிட்டு குசினிக்குள் இருந்த அம்மா அப்பா ஆகியோரை கூப்பிட்டு கொண்டு வந்து அவர்கள் முன் விட்டேன் ஆச்சரியம் எதுவும் இல்லை ஏனென்றால் அவ்வளவு நெருக்கடிக்குள்ளும் கிழமைக்கு இரண்டு தடவை போராளிகள் வந்து போவார்கள் ஆகையால் அம்மா கேட்டார் என்ன ஐய்யாக்கள் இந்த நேரம் ஏதும் பிரச்சினையோ என்று சி..சீ அப்படி ஒண்டும் இல்லை அம்மா இந்த கடிதத்தை உங்களிட்ட கொடுக்க சொன்னவை அண்ணையின்ர இடத்தில் இருந்து வந்தது. சரி நாங்கள் போவிட்டு வாறம் என்றனர்.

அவசரப்படவேண்டாம் ஏதாவது சாப்பிடுங்கோ அல்லது தேத்தண்ணியாவது குடிச்சிட்டு போங்கோ என்றார் அம்மா. அப்பா சொன்னார் இந்த இருட்டுக்க எங்க போகப்போறியள் மழையும் இருட்டு கட்டி கிடக்கு என்றார். ஆனால் அவர்கள் இல்ல இல்ல நாங்கள் போகவேண்டும் என அடம்பிடித்தனர்; சென்றனர். ஆனால் ஏன் அடம் பிடித்தார்கள் என்பது எனக்கு அடுத்த நாள் தான் எனக்கு தெரிந்தது. அத்தோடு எங்கள் வீட்டில் அழுகை ஒலியும் கேட்கவே அயலவர்கள் வீட்டில் கூடிவிட்டனர்.
அந்த கடிதம் இதுதான் அதாவது ஒரு தபால் அட்டை பருமனில் சிவப்பு ரோஜா படத்தின் அருகே ஊன்றப்பட்ட துப்பாக்கி அதில் மாவீரர் நாள் 1989 கார்த்திகை 27 என அச்சிடப்பட்ட எழுத்துக்கள் என நினைக்கின்றேன். ஆனால் அடுத்த பக்கத்தில் எழுதப்பட்டவைதான் எம்மை எல்லோரையும் எனது குடும்பம் அனைவரையும் தூக்கிவாரிப்போட்டது. ஆம் அதில் எழுதப்பட்டு இருந்தது என்னவென்றால் மேஜர் ———– குடும்பத்தினருக்கு என எழுதப்பட்டு இருந்தது. ஆம் அன்றுதான் எங்கள் சகோதரன் வீரச்சாவு உறுதிப்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வமாக தெரிவிக்கப்பட்ட நாள்.
அதற்கு முன்னர் மேஜர் —– வீரமரணம் என செய்தி வந்தது ஆனால் எவரும் உறுதியாக சொல்லவில்லை என்பதால் அடிக்கடி வரும் வதந்திகள் என்றே வீட்டில் நினைத்தார்கள் ஏனென்றால் எப்போ வீரமரணம்? எந்த சண்டையில்? நாள்? நேரம்? என்ன நடந்தது? என்ற எந்தவிபரமோ அல்லது வித்துடலோ எங்கே அடக்கம் செய்தது என்ற விபரமோ சொல்லவில்லை ஆகையால்தான் வதந்தி என நாம் இருந்துவிட்டோம்.
ஆனால் வதந்தி அல்ல உண்மை 1989 ம் ஆண்டு பங்குனி மாதம் 3ம் திகதி நித்திகை குளத்தில் நடந்த மோதலில் வீரமரணம் அடைந்திருந்தார் மேஜர் —– அவர்கள். தமிழீழ தேசிய தலைவருக்கு மெய்பாதுகாவலராக இருந்தவர்களில் இவரும் ஒருவர். இந்த காலப்பகுதியில் இந்தியப்படையினரால் ஒப்பரேசன் செக்மேற் 3 என்ற நடவடிக்கையினை முறியடித்து தாக்கிய சமரில் வீரச்சாவு அடைந்தார். இவரின் வித்துடலும், இவருடன் வீரச்சாவடைந்த ஏனைய போராளிகளினதும் வித்துடல்களும் தலைவர் முன் நிலையில் தேசிய தலைவரின் முகாம்களில் ஒன்றான (பின் நாளில் கமல் பேஸ்) மணலாற்று காட்டுப்பகுதியில் விதைக்கப்பட்டது.
ஆம் முதலாவது தமிழீழ மாவீரர் நாள் நினைவு கூரப்படுவதற்கு முன்பாகவே எமக்கு இந்த விடயம் அனைத்தும் தெரிந்தது. இதனால் எனது அம்மா கட்டாயம் நான் என் பிள்ளை புதைக்கப்பட்ட இடத்தை பார்க்கவேண்டும் என அடம்பிடித்தார். இதனால் 1989 நவம்பர் மாதம் அளவில் சில போராளிகள் வந்து வடமராட்சியில் இருந்து எம்மை அழைத்து சென்றனர். முல்லைதீவு வரை சென்றோம் எங்குமே இந்திய இராணுவம் நின்றாலும் அதைப்பற்றி யாரும் பொருட்படுத்தவில்லை. நாம் முல்லைத்தீவு வரை பஸ் இல் பயணம் செய்து பின்னர் அளம்பில் பகுதி கடற்கரையில் ஒரு தென்னம் தோட்ட பகுதிவரை ஒரு கன்ரர் வானில் சென்றோம். இரண்டு நாள் அங்கு தங்கி இருந்தபின்பு ஒரு பச்சை நிற டற்சன் பிக் அப் வாகனம் வந்து எம்மை அழைத்து சென்றது நீண்ட தூரம் சென்றபின்பு ( இரவு) ஒரு முகாமுக்குள் நுழைந்தோம். பின்னர் அங்கு போராளிகள் எமக்கு தே நீர் தந்தார்கள். அதன்பின்னர் போராளிகள் சொன்னார்கள் இனிதான் கவனமாக இருக்கவேண்டும் என்றார்கள். ஏனென்றால் ஆபத்து நிறைந்ததும், குன்றும் குழியும்,சேரும் சுரியும், மழை நீரும் அதேவேளை கும் என்ற இருட்டும் எனது பெற்றோருக்கு பயத்தினை ஏற்படுத்தினாலும் மகனின் இடத்தை பார்க்கவேண்டும் என்ற வீச்சும், போராளிகள் பக்கத்தில் இருந்ததாலும் பயம் கலைந்தது. 05 அல்லது 06மணித்தியாலம் கழிந்து அந்த முகாமை அடைந்தோம்.
அங்கு மண்குவியலால் கல்லறைகள் அமைக்கப்பட்டு இருந்தது. மழைவெள்ளத்தில் அவை கரைந்தும் இருந்தது. ஒவ்வொரு மாவீரர்களது தலைமாட்டிலும் ஒரு தடி நாட்டப்பட்டு இருந்தது அதில் ஒரு பலகை துண்டில் சிவப்பு பெயின்ற் இனால் ஒவ்வொருவரது பேரும் எழுதப்பட்டு இருந்தது. டோர்ச் வெளிச்சத்தில் ஒவ்வொன்றாக பார்த்துகொண்டிருந்தோம் இதே நேரம் எனது தம்பி (போராளி) சொன்னான் அம்மா அண்ணாவின்ர 7வதாக இருக்கு பாருங்கோ என்றான் ஆம் மேஜர் —– என்ற பெயர் எழுதப்பட்டு இருந்தது. குந்தியிருந்து எல்லா மாவீரர்களது பெற்றோர்கள் போலவும் மண்ணில் அடித்து, நெஞ்சில் அடித்து கதறி அழுதார்கள் எனது பெற்றோர். பூக்கள் தூவினோம்.மெழுகுவர்த்தி ஏற்றினோம். எல்லோரும் கவனமா இருங்கோ பிள்ளையள் என்ற எனது பெற்றோரின் எச்சரிக்கையோடு அந்த இடத்தை விட்டு புறப்பட்டோம். ஒரு கிழமை பயணத்துடன் எங்கள் முதலாவது தமிழீழ மாவீரர் நாளை நினைவு கூர்ந்து மணலாற்று காட்டில் இருந்து புறப்பட்டோம் புறப்படும் போது எமது சகோதரர் விதைக்கப்பட்ட வீடியோ பிரதியினையும் தந்தார் எனது இளைய சகோதரர்.
அந்த வீடியோ கொப்பியினை வீட்டிற்கு கொண்டுவந்து எங்களூரில் டி.வி வைத்திருக்கின்ற ஒருவரிடம் சென்று அதனை போட்டு பார்த்தோம். அதில் பெற்றோ மாக்ஸ் வெளிச்சத்தில் கிடங்கு வெட்டி வரிசையாக அதே உடுப்புடன் வீரர்கள் விதைக்கப்படுவதும் அதனை வீடியோ பிடிப்பதனையும்பார்க்கும் போது அதிசயமாக இருந்தது சண்டை உக்கிரமாக நடந்த வேளையிலும் கூட தேசியத்தலைவர் அவர்களுடன் கேணல் சங்கர் அண்ணா, கேணல் கிட்டண்ணா, பிரிகேடியர் சொர்ணம் அண்ணா, மேஜர் சோதியா அக்கா ஆகியோர்கள் இறுதிவரை நின்று 07 மாவீரர்களுக்கும் மண் தூவி வீரவணக்கம் செலுத்தியிருந்தார்கள். அதே போன்றுதான் முள்ளிவாய்க்கால் இறுதி போரிலும் வீரச்சாவடைந்த போராளிகளும் மக்களும் அப்படியே புதைக்கப்பட்டதும் வணக்கம் செலுத்தியதனையும் ஒப்பீடு செய்து பார்க்கின்றேன்.
எங்கள் வீரர்களுக்கு, எங்கள் காவல் தெய்வங்களுக்கு அவர்கள் புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்று சுதந்திரமாக வீர வணக்கம் செலுத்தும் நாள் இனி எப்போது வரும்? வரவேண்டும். வரும்.