"தடக், தடக், தடக், தடக்' -பெரும் சத்தத்துடனும் கரும் புகையை வெளியிட்டபடியேயும் கோக், பெப்சி உற்பத்தி ஆலை இயங்கிக் கொண்டிருக்க "சர்ர்ரென... காற்றை கிழித்தபடி அங்கு வந்து நிற்கிறது அரசு ஜீப். பருத்தி ஆடையில் ரப்பர் செருப்பில் அதிகாரி ஒருவர் இறங்க அவரை கண்டு மிரண்ட நிர்வாகத்தினர் உள்ளூர் கவுன்சிலரிலிருந்து வெளிநாட்டு அதிகாரிகளின் பெயர்கள் வரை சொல்லி பார்க்க எதையும் சட்டை செய்யாமல் கேட்டை இழுத்து மூடி ஆலைக்கு சீல் வைத்து, மாவட்டத்தில் சாதாரண பெட்டிக்கடை உட்பட எங்கும் கோக், பெப்சி விற்கக் கூடாதென தடை விதிக்கிறார். உலகத்திலேயே முதன்முறையாக ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்கு சீல் வைத்து காஞ்சி புரத்தையே கலங்கடித்த அன்றைய டி.ஆர்.ஓ. அதிரடி சகாயம் தான் இன்றைக்கு நாமக்கல் கலெக்டர் "சக்சஸ்' சகாயமாகி இந்தியாவிலேயே முதல் கலெக்டராக தன் சொத்து கணக்கை வெளியிட்டு தேசத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
"மதுரையில் சொந்தமாக 9 லட்சத்தில் ஒரு வீடு, 7,172/- ரூபாய் வங்கி இருப்பு' இதுதான் சகாயத்தின் சொத்து. 4000 கோடி ரூபாய் பதுக்கி வைத்த மதுகோடாக்கள் தேசத்தில் இப்படியும் ஒரு அதிகாரியா? ஆச்சர்யத்தோடு "சக்சஸ்' சகாயத்தை பேட்டியெடுக்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வீட்டிற்கு சென்றோம். "பேட்டியா? ப்ளீஸ் அதெல்லாம் வேண் டாமே?' என மறுத்தவரை எப்படியோ பேசி ஒப்பக்கொள்ளவைத்து "வாழ்த் துக்கள்' சொல்லி "உங்கள் சொத்து விவரங்களை சொல்லுங்கள்' என் றோம். "மதுரையில் என் மனைவிக்கு அவங்க அப்பா 9 லட்சத்தில் வாங்கித் தந்த ஒரு வீடு உள்ளது. அதற்கு எல்.அய்.சி. லோன் ஏழரை லட்சம் இருக்கு. மாத தவணையாக ரூ.8,500/- கட்டி வருகிறோம். அதில்லாமல் வங்கியில ரூ.7,172/- இருப்பு இருக்கு.
பொது வாழ்வில் இருப்போர் தங்களது சொத்து விபரங்களை வெளியிடவேண்டும் என்ற கருத்து வலுவான பின்தான் நீங்கள் வெளியிட துணிந் தீர்களா?
சகாயம்: இல்லை. அப்படியில் லை. வருடம் ஒருமுறை அசையா சொத்துக்களை ஒவ்வொரு கலெக்டரும் அரசுக்கு தெரியப்படுத்த வேண்டு மென்பது அரசு விதி. கடந்த மாதம் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. அக்கூட்டத்திலேயே இதை வெளியிட்டேன். அத் தோடு சேர்த்து என் வங்கி இருப்பையும் வெளி யிட்டு அதை அப்பொழுதே எங்கள் மாவட்ட நிர்வா கம் பற்றிய இணையதளத்தில் வெளியிட்டுவிட்டேன்.
இதை வெளியிடும் நோக்கமென்ன?
சகாயம்: மக்கள்தான் நம் எஜமானர்கள். மக்களின் நம்பிக்கையை நாம் பெற்றாக வேண்டும். அதற்கு நாம் மக்கள்முன் வெளிப்படையாக இருக்க வேண்டும். அதிகாரிகள், அரசு அலுவலர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கையென்று ஒன்று கிடையாது. அவர்கள் மக்களில் ஒருவரே. மக்களுக்கான அவர் பணியில் மக்கள் முன் ஒளிவு மறைவில்லாமல் இருக்க வேண்டி என் கணக்கை வெளியிட்டேன்.
ஆனால் கடனில் ஒரு வீடு, 7,172 ரூபாய் பேங்க் பேலன்ஸ் என்பது நம்ப முடியவில்லையே?
சகாயம்: "ஹா ஹா ஹா' (சிரிக்கிறார்) பின், தொடர்ந்து... இவையில்லாமல் வேற சொத்துக்கள் என் பெயரிலோ, குடும்பத்தின் பெயரிலோ இருப்பதாக யாராவது கண்டுபிடித்தால் அதை அவர்களே எடுத்துக் கொள்ளட்டும்.
நேர்மையாக இருந்தால் சராசரியாக தான் இருக்க முடியுமா?
சகாயம்: ஆம் அதிலென்ன சந்தேகம். ஆடம்பரமாக இருக்க முடியாது. ஆனால் அழகான வாழ்க்கையாக இருக்கும். ஆசைக்கான வருமா னத்தை அமைத்துக் கொள்வதை விட தேவைக் கான வருமானம், அந்த வருமானத்திற்குள்ளேயே வாழ்க்கையை அமைத்து கொள்வது நமக்கு மனநிம்மதியை தரும். என் 20 வருட அனுபவம் இதுவே. இதுவே யதார்த்தனமானது.
நேர்மையாக இருக்க யார் இன்ஸ்பிரேசன்?
சகாயம்: என் அம்மாவும் என் துணைவி யும்தான். விவசாயம் செய்யும்போது வரப்புக்கு அருகே ஒரு அங்குல புறம்போக்கு இடமிருந்தா கூட அதை பயன்படுத்த மாட்டாங்க எங்கம்மா. "எது நமக்கு உரியதோ அதை மட்டுமே நாம் அனுபவிக்க வேண்டும்' எங்கம்மா சொல்லிக் கொடுத்தது. அப்புறம் என் துணைவி. 2003-ல என் குழந்தை யாழினிக்கு பயங்கர வீசிங் பிரச்சனை. மருத்துவமனையில சேர்க்கிறோம். அப்ப நான் கோவை கலால் துறையில டெபுடி கமிஷனரா இருக் கேன். யாழினி சீரியசா இருக் காள். நாலாயிரம் ரூபாய் கட்டணும். மாத கடைசிங்கற தால சுத்தமா பணமில்லை. என் துணைவி ஆஸ்பிடல்ல துடிச்சிக்கிட்டு இருக்காள். அக்கம்பக்கத்தில் உள்ளவங்களோ "உங்க வீட்டுக்காரர்தானே கலால் துறையில இருக்காரு. சிக்னல் காண்பிச்சாலே பிராந்தி கடைக்காரங்க லட்சம் ரூபாயினாலும் வந்து கொட்டிடுவாங்களே'னு சொன்னாங்க. ஆனா என் துணைவியோ "லஞ்சப் பணத்தில் என் குழந்தை உயிரோடு வாழ்றதை விட இங்கே சாவுறது பெரிய சுமையில்லை'னு சொன்னாங்க. என் கொள்கைக்கேற்ப துணைவி கிடைத்ததில் பெருமகிழ்ச்சி. அப்புறம் ஆசிரியர் நண்பர் ஒருவரிடம் கடன் பெற்று குழந்தையை காப்பாற்றினோம்' எனும்போதே ""ஆனா சாருக்கு கோபம்தான் ஜாஸ்தி'' என்றபடியே தேநீர் கொடுத்து உபசரித்த கலெக்டர் மனைவி விமலா, ""போனவாரம் மதுரைக்கு குடும்ப விழா ஒன்றுக்கு என்னை போக சொன்னாரு. பஸ் ஏறி ஸ்டேன்டிங்க்ல போறேன். கொஞ்ச நேரத்திலேயே போன் செய்து "இன்னும் அங்கு போய் சேரலையா'னு கோபமா பேசுறாரு. கூட்டம் அதிகம்ங்கிறதால பஸ் மெதுவா போனதுக்கு நான் என்ன செய்வேன்' முகம் சுருக்க "சரிம்மா நம்ம நக்கீரன். முன் னாலேயே சுயவிமர்சனம் செய்து வருத்தம் தெரிவிச்சுக்கிறேன் போதுமாம்மா' வேடிக்கையாக கேட்டவர் தொடர்ந்து ""If you have Power, use it for Poor' அதாவது "உனக்கு அதிகாரம் இருந்தால் அதனை ஏழைகளுக்கு பயன்படுத்து' என்பதுதான் என்னுடைய கொள்கை. அந்தடிப்படையிலேயே நானும் நேர்மை யோடு என் பணியை தொடர்கிறேன்'' என்றார் சிந்திக்கும்படி.உண்மைதான். ஒருபக்கம் நாள் ஒன்றுக்கு ஒருவேளை உணவு கூட சரியாக கிடைக்காமல் 45 கோடி மக்கள் இருக்கும் வறுமை இந்தியா. மறுபக்கம் 4000 கோடி பதுக்கல் செய்யும் ஊழல்வாதிகளின் வளமை இந்தியா -சகாயம் போல ஒவ்வொரு குடிமகனும் நேர்மையோடு செயல்பட்டால் வறுமை ஒழிந்த "சமத்துவ இந்தியா'வாக தேசம் ஒளிருமே!