பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Wednesday, November 18, 2009

யார் இந்த பொன்சேகா? who is Sarath Fonseka?


படை அதிகாரிகளின் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேகா பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு அனுமதி கோரி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைத்த கடிதம் ஊடகங்கள் மூலமாகப் பகிரங்கப்படுத்தப்பட்டிருக்கிறது. கடந்த மே மாத நடுப்பகுதியில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் தன்னை ஓரங்கட்டுவதற்கு அரசாங்க உயர்மட்டத்தினால் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்திருப்பதாக கவலை வெளியிட்டிருக்கும் ஜெனரல் ஓய்வுபெறுவதற்குத் தன்னை நிர்ப்பந்தித்த காரணிகளைக் கடிதத்தில் விளக்கமாகக் கூறியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
படைகளின் விவகாரங்களுடன் தொடர்புடைய அம்சங்களுக்குப் புறம்பாக அரசியல் ரீதியில் சர்ச்சைக்குரியவையாகியிருக்கும் சில பிரச்சினைகள் குறித்தும் அவர் தனது அபிப்பிராயத்தை வெளியிட்டிருக்கிறார். குறிப்பாக, போரின் இறுதிக் கட்டத்தில் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களின் அவலம், போரின் முடிவுக்குப் பின்னர் தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்வதற்கு உருப்படியான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுக்கத் தவறியமை, ஊடக சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் தொடர்ந்தும் கட்டுப்படுத்தப்படுகின்றமை போன்ற விடயங்கள் அவற்றில் முக்கியமானவையாகும்.
தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என்று அரசாங்கத்தின் மீது ஜெனரல் பொன்சேகா சுமத்தும் குற்றச்சாட்டை நோக்கும் போது ஒருவருடத்துக்கும் கூடுதலான காலத்துக்கு முன்னர் அதாவது 2008 செப்டெம்பர் பிற்பகுதியில் அவர் இராணுவத் தளபதியாக இருந்த வேளையில் கனடாவின் “நாஷனல் போஸ்ட் பத்திரிகைக்குஅளித்த பேட்டியில் இலங்கையில் சிறுபான்மை இனங்களுக்கு இருக்கக்கூடிய அந்தஸ்து தொடர்பில் தெரிவித்த கருத்துகளே நினைவுக்கு வருகின்றன.
வன்னியில் போர் தீவிரமடைந்திருந்த காலகட்டத்தில் ஜெனரல் பொன்சேகா அளித்த பேட்டியென்பதால் இலங்கைப் பத்திரிகைகள் அதற்குப் பெரு முக்கியத்துவம் கொடுத்து மறுபிரசுரம் செய்திருந்தன. “தமிழர்கள் தங்களுக்கென ஒரு தாயகத்தை அமைக்கவிரும்பி அதற்காக இலங்கையைத் தெரிவு செய்தமையினாலேயே போர் மூண்டது. தமிழ்ச் சிறுபான்மை இனத்தவர்கள் இலங்கையைத் துண்டாடுவதற்கு பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்கள் ஒருபோதுமே அனுமதிக்கப் போவதில்லை. இந்த நாடு சிங்களவர்களுக்குச் சொந்தமானது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

ஆனால், சிறுபான்மை இனத்தவர்களும் இலங்கையில் வாழ்கிறார்கள். எமது மக்களைப் போன்று அவர்களையும் நாம் நடத்துகிறோம். நாட்டு சனத்தொகையில் 75 சதவீதத்தினராக இருக்கும் சிங்களவர்களாகிய நாம் ஒரு போதுமே விட்டுக்கொடுக்க மாட்டோம். நாட்டைப் பாதுகாப்பதற்கான உரிமை எமக்கிருக்கிறது. நாமும் ஒரு பலம் வாய்ந்த தேசத்தவர்கள். சிறுபான்மை இனத்தவர்கள் எம்முடன் சேர்ந்து வாழலாம். ஆனால், சிறுபான்மையினர் என்ற போர்வையில் அவர்கள் தகாத கோரிக்கைகளை முன்வைப்பதற்கு முயற்சிக்கக்கூடாது” என்று அந்தப் பேட்டியில் ஜெனரல் பொன்சேகா குறிப்பிட்டிருந்தார்.

ஜெனரலின் இந்தக் கருத்துகள் இலங்கையின் சிறுபான்மை இன மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகள் தொடர்பில் எத்தகைய சிந்தனையை அவர் கொண்டிருக்கிறார் என்பதைத் தெளிவாக உணர்த்தியிருந்தன.

இலங்கை சிங்களவர்களுக்கே சொந்தமானது என்ற சிங்கள பௌத்த பேரினவாத அபிப்பிராயத்தையே ஜெனரல் பொன்சேகாவும் கொண்டிருக்கிறார்.

எந்தவொரு சிறுபான்மை இனத்தவரும் நாட்டின் எந்தவொரு பகுதியையும் தங்களின் பாரம்பரிய வாழ்விடம் என்று உரிமை கோரமுடியாது. சிறுபான்மை இனத்தவர்களுக்கு தனித்துவம், சுய உரிமை என்று எதுவுமே இருக்க முடியாது என்பதே அந்தப் பேரினவாத நிலைப்பாட்டின் அடிப்படை அர்த்தமாகும்.

அந்த நிலைப்பாட்டை நியாயப்படுத்தி கனடா பத்திரிகைக்கு தன்னால் அளிக்கப்பட்ட பேட்டி இலங்கை சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த மக்களின் மனங்களை எந்தளவுக்கு புண்படுத்தியிருக்கும் என்பதே ஜெனரல் பொன்சேகா அறியமாட்டார்.
இன்று அவர் அரசாங்க உயர்மட்டத்தினால் தனக்கு அவமதிப்பு நேரும் போது தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்வது குறித்து பேசப் ஆரம்பிக்கும் விசித்திரத்தைக் காண்கிறோம். தனது தலைமையின் கீழ் போரில் இராணுவம் வெற்றி பெற்றபோதிலும், அரசாங்கம் சமாதானத்தை இன்னும் வென்றெடுக்கவில்லை என்று ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் ஜெனரல் பொன்சேகா தமிழ் மக்களின் மனங்களை வெற்றி கொள்வதற்கு அரசாங்கத்திடம் தெளிவான கொள்கை இல்லை என்றும் இதனால் போரில் கண்ட வெற்றி பாழாகி எதிர்காலத்தில் இன்னொரு கிளர்ச்சி மூளக்கூடிய ஆபத்து தோன்றும் என்றும் அவர் எச்சரிக்கை செய்திருக்கிறார்.
இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் எதிர் நோக்குகின்ற அவலங்கள் குறித்து தனக்குப் பெரும் வேதனையாக இருப்பதகக் கூறும் ஜெனரல் அந்த மக்களுக்கான வசதிகளைச் செய்து கொடுப்பதற்கு அரசாங்கத்திடம் உகந்த திட்டங்கள் இல்லை என்று குற்றஞ்சாட்டுகிறார். நாட்டின் ஏனையபகுதிகளில் உள்ள உறவினர்கள், நண்பர்களுடன் வாழ்வதற்கு இடம் பெயர்ந்த மக்களை அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுக்கிறார்.
எல்லாவற்றுக்கும் மேலாக போரின் முடிவுக்குப் பிறகு முழுநாடுமே எதிர்பார்த்த சமாதானத்தின் பலாபலன்களை அனுபவிக்க முடியவில்லையே என்ற பெருங் கவலை அவருக்கு!
பொருளாதார நெருக்கடியினால் மக்கள் திணறிக் கொண்டிருக்கும் அதேவேளை ஊழல்,மோசடி, விரயம் ஆகியவை தலைவிரித்தாடுகின்றன என்றும் ஜனாதிபதிக்கு கூறியிருக்கும் ஜெனரல் பொன்சேகா ஊடக சுதந்திரம், ஜனநாயக உரிமைகள் தொடர்ந்தும் கட்டுப்படுத்தப்படுவதையும் வெறுக்கிறார். இராணுவச் சீருடையைக் கழற்றிய பின்னரே அரசியலில் ஈடுபடுவதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கப் போவதாக ஜெனரல் கூறியிருக்கின்ற போதிலும், கடிதத்தில் கூறப்பட்டிருக்கும் மேற்படி விடயங்களை நோக்கும் போது சரத் பொன்சேகாவிற்குள் இருக்கும் அரசியல்வாதி சீருடை களற்றப்படும் வரை காத்திருக்காமல் பேச ஆரம்பித்து விட்டார் என்றே கூற வேண்டியிருக்கிறது.