2001 மே 14.
முதல்நாள்தான் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருந்தன. அவசர அவசரமாக கவர்னர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்ட பதவியேற்பு விழாவில் முதல்வராகப் பொறுப்பேற்கிறார் ஜெயலலிதா. சென்னை நகரமே இருளில் மூழ்குகிற அளவுக்கு பவர்கட். தமிழகத்தின் இருண்ட காலம் ஆரம்பம் என்பதை குறிப்பால் உணர்த்தியது ஜெ.வின் பதவியேற்பு விழா. பழிவாங்கும் நடவடிக்கைகளை 1991-96 ஆட்சிக்காலம் போலவே உடனடியாகத் தொடங்கினார். ஜெ.வின் டார்கெட் இரண்டு பேர்தான். 1. கலைஞர். 2. நக்கீரன். ஜூன் 30. ஆட்சியமைந்து ஒன்றரை மாதங்கள்தான் ஆகியிருந்தது. தேனிலவு காலம் என்பார்களே, அதுகூட முடிந்தபாடில்லை. இந்தியாவையே அதிர வைத்த அந்த நள்ளிரவு கைது அரங்கேறியது. போலீசுக்கு கொடுக்கப் பட்ட அசைன்மென்ட்டே கலைஞரை கைது செய்து தூக்கிவந்து, போயஸ்கார்டன் வாசலில் நிறுத்தி, ஜெ பார்க்கும்படி செய்துவிட்டு, அப்புறம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்பதுதான். சன் டி.வி. குழுவுடன் முரசொலி மாறன் ஆலிவர் ரோடு வீட்டிற்கு அந்த நள்ளிரவு நேரத்தில் வராமல் போயிருந்தால் இன்று கலைஞர் நமக்கு முதல்வராக வாய்த்திருக்கமாட்டார். நாம் அவரைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.கைது நடந்த நாளின் மாலையிலிருந்தே நக்கீரன் மீது கைது நடவடிக்கை என்றுதான் சோர்ஸ்கள் சொல்லிக் கொண்டிருந்தன. நாமும் அலர்ட்டாக கவனித்தபோதுதான், யாரோ ஒரு வி.வி.ஐ.பி.யைத் தூக்க திட்டம் போடப் பட்டிருப்பது தெரிந்தது. யார், யார் என தொடர்ந்து கவனித்துக்கொண்டிருந்த நேரத்தில், இணையாசிரியர் தம்பி காமராஜ்தான் முதல் ஆளாக, ""அண்ணே... கலைஞரை அராஜகமா கைது பண்ணிட்டாங்க'' என்று தகவல் தந்தார். பத்திரிகையாளர்களிலேயே இந்தக் கைது நடவடிக்கையை முதலில் தெரிந்துகொண்டு மற்றவர்களுக்குச் சொன்னவரும் தம்பிதான். உடனடியாக, சி.பி.சி.ஐ.டி அலுவலக வளாகத்திற்கு அந்த நள்ளிரவுநேரத்திலும் போய்விட்டார். அங்கிருந்து, துணையாசிரியர் லெனினுக்கு போன் பண்ணி வரச் சொல்லிவிட்டார். தம்பியைப் பார்த்த ஒரு போலீஸ் அதிகாரி, பத்திரிகையாளர்கள் மூலம் தகவல் கசிந்து விடக்கூடாது என்ற வெறியுடன் நெருங்கி வந்து, தம்பியை அங்கிருந்து வெளியேறச் சொன்னார். ""நாங்க எங்க வேலையை செய்கிறோம்'' என்று தம்பி சொல்ல, அவரை அந்த போலீஸ் அதிகாரி பிடித்து தள்ளித் தாக்கினார். சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு வந்த பத்திரிகையாளர்கள் விரட்டப்பட்டனர். நமது போட்டோகிராபர்கள் சுந்தரும் சம்பத்தும் அந்த இடத்திற்கு விரைந்து வந்திருந்தனர்.கலைஞரை நீதிபதி அசோக்குமார்முன் ஆஜர்படுத்து கிறார்கள் என்ற தகவலை தம்பி சொன்னதால், நீதிபதியின் வீடு இருந்த அபார்ட்மெண்ட் அருகே அப்பாவு கார்டன் ஏரியாவில் நான் காத்திருந்தேன். வேப்பேரி போலீஸ் ஸ்டேஷனில் நிருபர் பிரகாஷ் உள்ளிட்ட நக்கீரனின் மற்றொரு டீம் இருந்தது. கலைஞரை போலீசார் தாக்கி இழுத்துச்சென்ற காட்சி, அதிகாலை நேரத்தில் ஒவ்வொரு வீட்டிலும் இருந்த டி.வி.யில் ஒளிபரப்பாக தமிழகமே அதிர்ந்துபோனது. ஆங்கிலச் சேனல்களும் இதை ஒளிபரப்பியதால் இந்தியா முழுவதுமே பதட்டம். மூத்த பத்திரிகையாளர் அய்யா சின்னக்குத்தூசி, இந்த செய்தியைப் பார்த்து பதறிப் போய், உடனடியாக முரசொலி அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டார். 1996-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அங்கு பணியிலிருந்து விலகிய அவர், 2006 ஜூன் 30-ல் நடந்த கைதுக் கொடுமையைப் பார்த்ததும், முரசொலி அலுவலகம் சென்று பணியைத் தொடர்ந்தார். கைதுக் கொடுமையைக் கண்டித்து சன் டி.வி.யில் பேசுவதற்கு தலைவர்கள் பலரையும் அழைத்திருக்கிறார்கள். யாரும் உடனடியாக வரமுடியவில்லை. ஏனென்றால், சன் டி.வி.யை சுற்றி ஆயிரக்கணக்கான போலீசாருடன் நின்றிருந்தார் அன்றைய சென்னை போலீஸ் கமிஷனர் முத்துக் கருப்பன். சன் டி.வி.யை துவம்சமாக்கிவிடவேண்டும் என்பதுதான் அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த அசைன்மென்ட். சன் டி.வி.யில் பேச நமக்கும் அழைப்பு வந்திருந்தது.நான், தம்பி காமராஜ், பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் மூவரும் சென்றபோது முத்துக்கருப்பன் தடுத்து, ""போகக்கூடாது'' என்றார். ""அப்படி ஏதாவது ஆர்டர் இருக்கிறதா?'' என்றேன். ""போகக்கூடாதுன்னா கூடாதுதான்'' -அதிகார தோரணையில் பதில் வந்தது. ""ஒரு டி.வி. அலுவலகத்திற்குள் போகக்கூடாதுன்னு தடுக்க நீங்க யார்?'' என்றோம். ""விபரீதங்களை சந்திக்க வேண்டி யிருக்கும்'' என காக்கி உடையில் மிரட்டிப் பார்த்தார் முத்துக்கருப்பன். நாங்கள் அதையும் மீறி, அப்போது அறிவாலயத்தில் இருந்த சன் டி.வி. அலுவலகத்தின் பின்வாசல் வழியே உள்ளே சென்றோம். ""கைது நடவடிக்கையை கண்டித்து 5 நிமிடம் பேசுங்கள்'' என்றனர். லைவ் ரிலே.""இப்ப நாம பார்த்திருக்கிற இந்த கொடுமை, இந்த கொடுங்கோல் ஆட்சியின் 5 விழுக்காடுதான். இன்னும் 95 விழுக்காடு கொடுமைகளைப் பார்க்கப் போறோம். இதுதான் ஜெயலலிதாங்கிறதை தேர்தல் நேரத்திலேயே சொன்னோம். இப்ப தேர்ந்தெடுத்துவிட்டு அவஸ்தைப்படுகிறோம். 80 வயது முதியவரான கலைஞரை இந்த ஆட்சி கைது செய்ததுபோல இந்தியாவில் எந்த முன்னாள் முதல்வரையும் யாரும் கைது செய்தது கிடையாது. இதே ஜெய லலிதாவையும் தி.மு.க ஆட்சியில் கைது செய்தாங்க. அந்த கைது எப்படி நடந்தது?உயர்நீதிமன்ற நீதிபதி சிவப்பா, "ஏன் இன்னும் இந்தம்மாவை கைது பண்ணலை. உங்களுக்கு பயமா?' என ஓப்பன் கோர்ட்டில் அரசு வழக்கறிஞரைப் பார்த்து கேட்டார். சம்மன் கொடுத்தால் கைது செய்கிறோம்னு பி.பி. பதில் சொன்னார். அந்த சம்மனோடு துக்கையாண்டிங்கிற எஸ்.பி. தலைமையில் ஜெ வீட்டுக்குப் போலீஸ் டீம் காலையில ஏழரை மணிக்குப் போனது. ஜெயலலிதா குளிச்சிட்டு ரெடியாக 1 மணிநேரம். சாமி கும்பிட 1 மணி நேரம். டயம் ஆகிக்கொண்டே இருந்தது. போலீசார் மேலிடத்திற்கு தகவல் சொல்ல, ""வெயிட் பண்ணுங்க. அவங்க மேலே கை படாம மரியாதையா கைது செய்யணும்'' என உத்தரவு வந்தது. மறுபடியும் 1 மணிநேரம் லேட் பண்ணிட்டு ஜெயலலிதா வந்தபிறகுதான் , அவர் மேல் துரும்புகூட படாமல் அன்போடு அரெஸ்ட் செய்தது கலைஞர் அரசு. இதுதான் கைது செய்யும் முறை. ஆனா, கலைஞரை ரொம்ப கொடூரமா நடத்தியது மாதிரியான ஒரு கைதை இதுவரை யாரும் பார்த்ததில்லை'' என்றேன். தமிழகத்தின் தலைவர்கள், பொதுமக்கள் ஆகியோரின் ஒட்டுமொத்த மனசாட்சியாக என் குரல் பிரதிபலித்தது.பொதுமக்கள் இதை பார்த்ததுபோலவே, ஜெயலலிதாவும் போயஸ்கார்டனில் டி.வி.யில் பார்த்திருக்கிறார். நமக்கு எதிரான வார்த்தைகளை டி.வி.யைப் பார்த்து வீசினார் என அங்கிருந்த சோர்ஸ்கள் நமக்கு உடனடியாக தகவல் தெரிவித்தன. கைது நடவடிக்கை குறித்து பொதுமக்களிடம் சன் டி.வி. தொடர்ந்து கருத்துகேட்டு ஒளிபரப்பியது. அப்போது பலரும், ""நக்கீரன் கோபால் பேசியதை மறுபடியும் ஒளிபரப்புங்க''ன்னு சொன்னாங்க. மீண்டும் அது ஒளிபரப்பானது. நமக்கு எதிரான நடவடிக்கைகள் பற்றி ஜெயலலிதா ஆலோசிக்கத் தொடங்கி விட்டார் என போலீஸ் பட்சிகளிடமிருந்து தகவல் வந்தது.ரிடையர்டாகி ஒதுங்கியிருந்த தேவாரத்துக்கு மீண்டும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அதிரடிப் படையின் தலைவராக விஜயகுமார் நியமிக்கப் பட்டார். சந்தன கடத்தல் வீரப்பன் சம்பந்தமான வழக்குகளை விசாரிப்பதற்காக தனி டீம் உருவாக்கப்பட்டது. சதுரங்கப் பலகையின் படைவரிசைகளைப்போல காய்களை அடுக்கினார் ஜெயலலிதா.ஆட்டம்... வெறியாட்டம்...ஆரம்பமானது. முதல் குறி...?