இலங்கை கூட்டுப் படைகளின் தளபதி சரத்பொன்சேகா, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில், ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து களமிறங்கவிருக்கிறார் என்பதால் இலங்கை அரசியல் களம் சூடுபறந்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் திடீரென்று இந்திய பயணம் மேற்கொண்ட, இலங்கை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கேவை சென்னையில் சந்தித்து... இலங்கை அரசியல் தொடர்பான பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நக்கீரனுக்காக சுமார் ஒரு மணி நேரம் பிரத்யேகமாக பேட்டி அளித்தார் ரணில் விக்ரமசிங்கே. அந்த சந்திப்பிலிருந்து...
இலங்கையின் பிரதான எதிர்க்கட்சித் தலைவ ரான நீங்கள், ""இலங்கையில் என்ன நடக்கிற தென்றே தெரியவில்லை'' என இந்தியா வந்தவுடனே பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளீர்களே?
போருக்கு பின்பு, முள்கம்பிகளுக்கிடையே தமிழ் மக்கள் முடக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். முகாம்களில் பல்வேறு துயரங்களை எதிர்கொள்கின்றனர் என்று எங்க ளுக்கு தகவல். அதனால், தமிழ்மக்களின் வாழ்நிலையை அறிய, முகாம்களுக்குள் சென்று வர எதிர்க்கட்சி களை அனுமதிக்க வேண் டும் என்று ராஜபக்சே அர சாங்கத்திடம் கோரிக்கை வைத்தோம். ஆனால், இதனை ஏற்க மறுத்து விட்டார். முகாம்களுக் குள் ஊடகங்கள் செல்லவும், தடைவிதித்திருக்கிறார். இதுவரை, இரண்டு நாட்டு பிரதிநிதிகள் குழு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ஒன்று... பிரிட்டிஷ் பாராளுமன்ற குழு. அடுத்தது... இந்திய குழு. இலங்கையின் தற்போதைய சிக்கல்களில் முதன்மை யானது... முகாம்களில் உள்ள தமிழர் களைப் பற்றியதுதான். அதனை அறிந்துகொள்ளவே... எதிர்க்கட்சிகளுக்கு உரிமை இல்லை என்றால் என்ன அரசாங்கம் இது? அதனால்தான்... அப்படி கூறினேன்.
முகாம்களில் உள்ள தமிழர்களின் நிலை அறிய நீதிமன்றத்தை எதிர்க்கட்சிகள் நாடியிருக்கிறது.ராஜபக்சேவின் அரசியல் செயல்பாடுகள் குறித்து என்ன கருதுகிறீர்கள்?
ராஜபக்சேவின் நடவடிக்கைகளால் இலங்கை துண்டு துண்டாக உடைந்துவிடும். இந்தியாவைப் போல, இலங்கையிலும் அனைத்து இன மக்களுக்கும் ஒரு பொது அடையாளம் வேண்டு மென்றும், சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் ஆகியோரிடத்தில் ஒற்றுமை ஏற்படுவதற்கேற்ப அரசியல் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டு மென்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம். ஆனால், இந்த மூன்று இன மக்களிடையே ஒற்றுமையை உருவாக்குவதற்கு பதில், அதனை அடியோடு அழிப்பதற்கான முயற்சிகளில்தான் இருக்கிறார் ராஜபக்சே. ஒன்றுபட்ட இலங்கை என்கிற கோட்பாட்டை உடைத்தெறிந்து வகுப்பு வாதத்தை வளர்க்கிறது ராஜபக்சே அரசாங்கம். இலங்கையில் பத்திரிகைகளுக்கு சுதந்திரம் இல்லை. பத்திரிகை யாளர்கள் படுகொலை செய்யப்படுகிறார் கள். பத்திரிகை சுதந்திரம் இல்லாத ஒரு நாட்டில், அரசாங்கம் எப்படி செயல்படுமென்பதை சிந்தித்துப் பாருங்கள்.
ஈழத் தமிழர் பிரச்சனையில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமென்று பலமுறை முயற்சி எடுத்துள்ள நீங்கள், ராஜபக்சேவின் ராணுவ ரீதியி லான நடவடிக்கைகளை எப்படி பார்க்கிறீர்கள்?
போர் துவங்கியபோது புலிகளுக்கு ராணுவரீதி யாக பதில் தரவேண்டிய கட்டாயம் ராஜபக்சேவின் ராணுவத்திற்கு இருந்தது என்றாலும், அந்த பதிலடியை ராணுவத்திற்கே உரிய ஒழுக்கத்துடன் கொண்டு சென்றிருக்க வேண்டும். பொதுவாக, அப்பாவி மக்கள் கொல்லப்படக்கூடாது, தடை செய்யப்பட்ட குண்டுகள் வீசப்படக்கூடாது என்றெல்லாம் நடைமுறை ஒழுக்கம் இருக்கிறது. இறுதி போரின் போது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இறுதி போரின் போது, ராஜபக்சேவின் ராணுவ நடவடிக்கைகள், அந்த போர் நடந்தேறிய விதம், போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் குறித்தெல்லாம் இலங்கை அரசிடம் கேள்வி கேட்டிருக்கிறோம். ஆனால், ராஜபக்சேவிடமிருந்து இதுவரை பதில் இல்லை.
இலங்கை ராணுவம் நடத்திய இறுதி போரில், இந்தியாவின் பங்களிப்பு எப்படி இருந்தது?
இந்தியா, தனது உளவுத்துறை தகவல்களையெல்லாம் இலங்கைக்கு கொடுத்து உதவியது. இந்தியாவின் உதவி இல்லாமல் விடுதலைப் புலிகளின் ராணுவ பலத்தை இலங்கையால் உடைத்தெறிந்திருக்கவே முடியாது. இப்போதும் ராணுவ பலத்தில் மட்டுமே புலிகள் தோற் கடிக்கப்பட்டிருக்கிறார்களே தவிர, வேறொன்றுமில்லை. அதே நேரம், இலங்கை தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்தும் அதிகம் கவலை கொண்டிருந்தது இந்தியா. இந்தப் போரின் விளைவுகளுக்கு ஒரு வகையில் பிரபாகரனும் காரணம். தமிழர்களின் பிரச்சனைக்கு அரசியல் தீர்வுகாண வேண்டி முயற்சி நடந்த போதெல்லாம் அதனை தவிர்த்தார் பிரபாகரன். 2003-ல் நடந்த அமைதி பேச்சுவார்த்தையிலிருந்து தானாகவே வெளியேறினார். 2005-ல் டோக்கியோவில் நடந்த பேச்சுவார்த்தையிலும் தமிழர்களின் கோரிக்கைகள் என்னவென்பதை தெரிவிக்காமலே மாத கணக்கில் இழுத்தடித்தார். இறுதியில் அதில் கலந்து கொள்வதை தவிர்த்தார். மேலும் 2005-ல் நடந்த தேர்தலில், தமிழர்கள் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருக்க திட்டமிட்டே நடந்து கொண்டார். அந்த தேர்தலில் நீங்கள் தோற்றுப் போனீர்கள். உங்கள் தோல்விக்கு தமிழர்களின் தேர்தல் புறக்கணிப்புத்தான் காரணம் என்பதால்தானே பிரபாகரன் மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் முன்னிறுத்தினீர்கள்?அந்த தேர்தலில் தமிழர்கள் எனக்கு ஓட்டுப் போடுவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. அதே நேரம், அவர்கள் தேர்தலில் தங்கள் பங்களிப்பை செய்திருந்தால் தமிழர்களின் மனநிலை என்னவென்பதை அறிந்து கொள்ள முடிந்திருக்கும். அந்த ஜனநாயக வாய்ப்பை தமிழ் மக்களுக்கு தர பிரபாகரன் தவறிவிட்டார். இப்படி ஜனநாயக வழிகளெல்லாம் அடைக்கப்பட்டதால்தான் இன்றுள்ள சூழல் உருவானது. தற்போது இலங்கையில் அரசியல் களம் சூடு கண்டிருக் கிறது. ஜனாதிபதிக்கான தேர்தலை ராஜபக்சே முன்கூட்டியே நடத்த திட்டமிட்டிருப்பதாக வருகிற செய்திகள் குறித்து?
அரசியல் சாசனமைப்புப்படி அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தோடு தற்போதைய பாராளுமன்றத்தின் காலம் முடிகிறது. அந்த சூழலில், பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடத்தி முடித்த பிறகுதான் ஜனாதிபதிக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், முன்கூட்டியே ஜனாதிபதிக்கான தேர்தலை நடத்துவேன் என்கிறார் ராஜபக்சே. ராணுவத்திற்கு கிடைத்துள்ள வெற்றியை தனது வெற்றியாகக் கூறி மீண்டும் ஜனாதிபதியாக நினைத்திருக்கிறார் அவர். அதற்காகத்தான் அந்த திட்டம். ஜனாதிபதி தேர்தலில், அவர் தோற்கடிக்கப்படுவார்.ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சிகளின் சார்பாக முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக கொண்டு வர முயற்சிக்கும் நீங்களே ஏன் போட்டியிடக்கூடாது?என் தலைமையில் உள்ள ஐக்கிய தேசிய கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி, மங்கள சமர வீரா போன்ற பலர் இணைந்து, "ஐக்கிய ஜனநாயக முன்னணி'யை உருவாக்கியிருக்கிறோம். எதிர்க்கட்சிகள் சார்பில் இப்படியொரு முன்னணி உருவாக் கப்பட்டிருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் சார்பில் சரத்பொன்சேகாதான் பொது வேட்பாளர் என்று எந்த முடிவும் எடுக்கப் படவில்லை. அவர்தான் பொதுவேட்பாளர் என்று நானும் எந்த இடத்திலும் கூறவில்லை. ஆனால் பத்திரிகைகள்தான் அப்படி எழுதுகின்றன. தமிழகத்திலிருந்து வெளிவரும் ஒரு ஆங்கில தேசிய இதழின் இலங்கைக்கான நிருபர் முரளிதரரெட்டி, "சரத்பொன்சேகாதான் பொதுவேட்பாளர் என ஒரு கூட்டமொன்றில் நான் பேசியதாக' நான் இந்தியாவரும் வேளையில் எழுதியிருக்கிறார். அது தவறானது. ஜனாதிபதி பதவியைப் பொறுத்தவரை இந்தியாவைப் போன்ற அமைப்பு உருவாக வேண்டும் என நினைக்கிறேன்.இந்தியாவைப் போல் என்றால்?ஜனாதிபதிக்கு அதிகாரம் கூடாது. அதிக எம்.பி.க்கள் கொண்ட கட்சியிலிருந்து தேர்வு செய்யப்படும் பிரதமரின் கையில் தான் அதிகாரம் இருக்க வேண்டும். இந்த முறையை கொண்டு வர முயற்சிப்போம். புதிய அமைப்பு முறையில், நான் தேர்தலை சந்திப்பது பற்றி கட்சி முடிவு செய்யும்.ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து களம் இறங்க சரத்பொன்சேகா முடிவு செய்துவிட்டாரா?
இதனை அவரிடம்தான் கேட்கவேண்டும். தற்போதைக்கு தனது பதவியை மட்டும் ராஜினாமா செய்திருக்கிறார். அதேநேரம் ராஜபக்சே அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் சரத் பொன்சேகா மீது தாக்குதல் பிரச்சாரத்தை துவக்கிவிட்டார்கள். இதுதான் அவரைப் பற்றிய இன்றைய நிலை.ராஜபக்சேவை எதிர்த்து சரத்பொன்சேகா அரசியலில் குதித்தால், அவரை பொது வேட்பாள ராக நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?அனைத்து எதிர்க்கட்சிகளும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்த வேண்டுமென்று ஒரு விவாதத்தை உருவாக்கியிருக்கிறார்கள். பொது வேட்பாளராக தேர்ந்தெடுக்கப் படுகிற நபரிடம் சில நிபந்தனைகள் முன்னிறுத்தப்படும். அந்த நிபந் தனைகளை அந்த நபர் ஏற்கும் பட்சத்தில் ஏற்றுக்கொள்வோம். எதிர்க்கமாட்டோம். அத்தகைய நிபந்தனைகள்தான் சரத்பொன் சேகாவுக்கும்.நீங்கள் முன்வைக்கும் நிபந்தனைகள் என்ன?நான் சொன்னது போல, விஷேச அதிகாரங்களுடன் கூடிய ஜனாதிபதி பதவியை ரத்து செய்ய வேண்டும், பாராளுமன்றத்தின் ஒப்புதலுடன் அதை செய்ய வேண்டும், தமிழர்கள் உட்பட அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியவராக இருக்க வேண்டும், இலங்கையின் எதிர்க்கட்சிகள் மற்றும் தமிழர் கட்சிகளுடன் கலந்து பேசி கருத்தொற்றுமை உருவாக்கி, அதன் அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்படவேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனைகளை முன்னிறுத்துகிறோம். அந்தவகையில், இலங்கை முழுவதுக்குமான ஒரு பொதுவான நபர் கிடைப்பாரா என்பதில் எனக்கு சந்தேகம் உண்டு.பொது வேட்பாளர் என்ற கான்செப்ட்டுக்குள் தமிழர்களை அழித்தொழித்த சரத்பொன்சேகா வந்தால், அவரை தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் தமிழர்களும் ஏற்றுக்கொள்வார்களா?ஜனாதிபதிக்கான தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அறி விப்பு வரட்டும். அதன்பிறகு நிறைய பேசுகிறேன். ஆனால் ஒன்று... சரத்பொன்சேகாவை தமிழர்கள் ஏற்பார்களா என்ப தில் நம்பிக்கை இல்லைதான். பொதுவான, விரிவான புரிதலை கொண்டுவந்தால் மட்டுமே பொதுவேட்பாளர் கான்செப்ட் சாத்தியம். தெற்காசிய பிராந்தியத் தில் சீனாவின் செல்லப்பிள்ளையாக மாறிவிட்ட ராஜபக்சேவை வீழ்த்தி தங்களுக்கு ஆதரவான ஒரு ஆட்சியை சரத்பொன்சேகா மூலம் இலங்கையில் கொண்டுவர அமெரிக்கா திட்டமிடுவதாகவும் அந்த திட்டத்தை முறியடித்து அதே திட்டத்தின்படி தங்களுக்கு ஆதரவான ஒரு ஆட்சியை கொண்டுவர இந்தியா திட்டமிட்டிருப்பதாகவும் அதற்கேற்பத்தான் நீங்கள் இந்தியா வந்துள்ளீர்கள் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்களே?இந்தியாவுக்கு நான் வருவது புதிதல்ல. மூன்று மாதத்திற்கு ஒருமுறை வந்துபோகிறேன். சரத்பொன்சேகாவையோ, வேறு யாரையோ இந்தியா முன்னிறுத்தவில்லை. அப்படி ஒரு திட்டமும் இந்தியாவுக்கு இல்லை. இலங்கைக்கு அனைத்து நாடுகளுடன் நட்புறவு உண்டு. அந்தவகையில் தான் சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் சார்க் அமைப்பில் உள்ள மற்ற நாடுகளுடனும் தொடர்பு வைத்திருக்கிறது இலங்கை. இந்தியா எங்களது பக்கத்து நாடு. எங்களுடைய கலாச்சாரம், பாரம்பர்யம் எல்லாம் இந்தியாவில் இருந்து வந்ததுதான். உறவுகளில் சிக்கல் வந்தால், கவனமாக பேசித் தீர்க்கவேண்டும். ஆனால், அப்படி சிறப்பான நட்புறவை ராஜபக்சே பராமரிக்கவில்லை. லிபியா, ஈரான், பர்மா ஆகிய நாடுகளுடன் மட்டும்தான் நட்பு பாராட்டுகிறார். மற்ற நாடுகளை புறக்கணிக்கிறார். இதனால் எதிர்ப்புகள் வலுக்கிறது. அரசியலில் குழப்பங்கள் உருவாகிறது. இப்படி பெரும்பாலான நாடுகளின் எதிர்ப்புகளை ராஜபக்சே சம்பாதித்து வைத்திருப்பதை நாங்கள் கண்டித்து வருகிறோம். சரத்பொன்சேகா மூலம் அமெரிக்கா திட்டமிடுகிற செயல் பற்றி என்னிடம் எந்த தகவலும் இல்லை.இந்தியா, அமெரிக்கா நாடுகளை ராஜபக்சே புறக்கணிப்பதற்கு பிரத்யேக காரணங்கள் இருக்கிறதா?
இந்திய, அமெரிக்க நாடுகளை புறக்கணிக்கும் ஒரு வெளியுறவுக் கொள் கையை இலங்கை முன்னெடுக்க முடி யாது. முன்னெடுக்கவும் கூடாது. ஆனால் ராஜபக்சே அதனை செய்துவரு கிறார். இறுதிப்போரின்போது, மனித உரிமை மீறல்கள் நடந்தன என்று இந்தியாவும் அமெரிக்காவும் குற்றச்சாட்டு கூறிய தால் அமெரிக்காவை யும் இந்தியாவையும் ராஜபக்சே பகைமை பாராட்டுகிறார்.தற்போதைய சூழலில் ஈழ மக்களுக்கான தீர்வு?இலங்கை தமிழர் களைப் பொறுத்தவரை, முள் கம்பிகளுக்கிடையே முடக்கி வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அனைவரும், அவரவர் வாழ் விடங்களுக்கு மீண்டும் குடி யமர்த்த வேண்டுமென்பதுதான் முக்கிய பிரச்சனையாக இருக் கிறது. முதலில் அதற்கு தீர்வு காணப்படவேண்டும். ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் அனைத்து உரிமைகளும் பெறக்கூடிய வகையில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டியது அவசியம். அரசியல் தீர்வுக்காக தமிழகத் தலைவர்கள் பொன் னம்பலம், செல்வா போன்றவர் கள் நிறைய போராடியிருக் கிறார்கள். தமிழர்கள் எதிர் கொண்ட துன்பங்களின் விளை வாக பிறந்த குழந்தைதான். விடுதலைப்புலிகள் இயக்கமும் அதன் தலைவர் பிரபாகரனும். தமிழர்களின் துன்பங்கள் பிரபா கரனால் உருவானது அல்ல. அந்த துயரங்களுக்கு அரசியல் ரீதியான தீர்வுதான் சரியானதாக இருக்க முடியும். அரசியல் ரீதியாக தீர்க்கப்படாவிட்டால், தமிழர்களின் பிரச்சனைகளும் போராட்டங்களும் நிற்கப்போவ தில்லை. போராட்டங்கள் வேறு வழியில் திரும்பும். அரசியலில் தீர்வுகாண, ராஜபக்சேவிடம் எந்த திட்டங்களும் இல்லை என்பது துயரங்களின் உச்சம்.