Saturday, November 14, 2009
விமானத்துறையில் கால் பதிக்கும் கலாநிதி மாறன்!
சென்னை: சன் டிவி குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் ஸ்டார் ஏவியேஷன் நிறுவனத்தை ரூ. 1,000 கோடிக்கு வாங்கவுள்ளதாகத் தெரிகிறது.ஸ்டார் ஏவியேஷன் நிறுவனம் தென் இந்தியாவில் விமான சேவையைத் துவக்க அனுமதி பெற்றுள்ள நிலையில் இன்னும் தனது சேவையைத் துவக்கவில்லை.இந் நிலையில் அந்த நிறுவனத்தை கலாநிதி வாங்கவுள்ளதாகத் தெரிகிறது.சன் குழுமத்தின் மூலமாக அதை வாங்காமல் தனிப்பட்ட முறையில் இந்த நிறுவனத்தை கலாநிதி வாங்கவுள்ளார்.ஆனால், அப்படிப்பட்ட திட்டம் ஏதும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று சன் நெட்வோர்க் தரப்பும், ஸ்டார் ஏவியேஷன் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.43 வயதான கலாநிதி மாறன் போர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியலில் 601வது இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 1.2 பில்லியன் டாலர்களாகும்.ஸ்டார் ஏவியேஷன் நிறுவனம் துபாயைச் சேர்ந்த தமிழரான தொழிலதிபர் சையத் முகம்மதுக்கு சொந்தமானது. இவர் உலகம் முழுவதும் பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருபவர். 3.8 பில்லியன் டாலர் மதிப்பிலான பல தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் சையத் தான் கால் பதித்த அனைத்துத் துறைகளில் வெற்றிக்கொடி நாட்டியவர்.சர்வதேச அளவில் விமானத்துறையில் நிலவி வரும் பெரும் நெருக்கடிகள் காரணமாகவே ஸ்டார் ஏவியேஷன் தனது சேவையை துவக்குவதை தாமதப்படுத்தி வருகிறது. இந் நிலையில் தான் இதை கலாநிதி வாங்குவதாக தகவல்கள் வெளியாகின்றன.கலாநிதி வாங்கினாலும் இல்லாவிட்டாலும் ஸ்டார் ஏவியேஷன் தனது சேவையை வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் துவக்கிவிடும் என்று கூறப்படுகிறது. இந்த சேவையைத் துவக்க 2010ம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஸ்டார் ஏவியேஷன் நிறுவனத்துக்கு கால அவகாசம் உள்ளதாகத் தெரிகிறது.இதற்காக பிரேசிலிடம் ஏழு E170 ரக விமானங்களை வாங்கவுள்ளது இந்த நிறுவனம்.சன் டிவி குழுமத்திடம் குளோபல் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் விமான சேவையை இயக்க ஏற்கனவே லைசென்ஸ் உள்ளது. இந்த லைசென்சின் கீழ் சார்ட்டர்ட் விமானங்கள் மற்றும் ஏர் டாக்ஸிகளை சன குழுமம் இயக்க முடியும். வர்த்தகரீதியிலும் விமான சேவையை இயக்க தனது பங்குதாரர்களின் அனுமதியை சன் குழுமம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பெற்றுவிட்டதும் குறிப்பிடத்தக்கது.மேலும் சன் ஏவியேஷன் என்ற பெயரில் விமான நிறுவனத்தை நடத்தவும் ஏற்கனவே கலாநிதி மாறன் பதிவும் செய்து வைத்துள்ளதாகத் தெரிகிறது.முன்னதாக பாரமவுண்ட் ஏர்வேஸ் நிறுவனம் ஸ்டார் ஏவியேஷனை வாங்கவுள்ளதாக செய்திகள் வந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனால், அப்படியேதும் நடக்கவில்லை.இதனால் இப்போது கலாநிதி இந்த நிறுவனத்தை வாங்கவுள்ளதாகக் கூறப்படுவதும் கூட ஸ்டார் ஏவியேஷன் உறுதிப்படுத்தினால் மட்டுமே நிச்சயமாகும்.