பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Friday, November 13, 2009

சென்னை அருகே பெரும் ஆபத்து!

""அம்ம்மா... ப்பா... ம்மா...' ஏழு வயதாகும் ஜோதிகாவுக்கு இதைத்தவிர வேறெதுவும் சொல்லத் தெரியாது. ""பொறந்ததிலிருந்தே இப்படித்தாங்க. நாம சொல்றதை எதுவும் புரிஞ்சுக்கத் தெரியாது. பசிச்சாக்கூட சோறு வேணும்னு கேட்கத் தெரியாதுங்க. புள்ளைக்கு பசிக்குமேன்னு நாமளே ஊட்டிவிட்டாத்தான் உண்டு'' -வாய்பொத்தி அழுகிறார்கள் கற்பகமும் வெங்கடேசனும்.ஒன்றரை வயது குழந்தை புவனேஸ்வரி. பிறக்கும்போதே ஒரு காலும் ஒரு கையும் இல்லை. கீழே தட்டுத் தடுமாறி தவழும்போது அந்தக்குழந்தை படும் வேதனையைக் கண்ணால் பார்க்கவே கல்நெஞ்சம் வேண்டும்.ஒன்றரை வயது சஞ்சய், ""கழுத்து நிக்காம இப்படி தொங்கிக்கிட்டே இருக்குங்கய்யா'' குமுறுகிறார்கள் பெற்றோரான வாணியும் சுகனும். எட்டு வயது பாலாஜி. ""மூணு பசங்க. அதுல முதல் பையன்தான் இவன். இப்படி மூளை வளர்ச்சியில்லாம பொறந்துட்டான்.'' பத்து வயது கோகுலோ... ""ஆறாவது படிக்கிறேண்ணே. நல்லா படிப்பேன். ஆனா ஒரு கை இல்லாததாலதான் ரொம்ப கஷ்டப்படுறேண்ணே. நல்லவேளை என் அக்காவும் தம்பியும் மைசூர்ல பொறந்தாங்களாம். அவங்களும் இங்கேயே பொறந்திருந்தா இதே மாதிரி ஆகியிருக்கு மில்லண்ணே'' என்று பரிதாபமாய் கேட்கும் சிறுவனின் அப்பா நரசிம்மன் அணுமின் நிலையத்தின் டெம்ப்ரவரி சூப்பர்வைஸர்.பத்து வயது பவித்ரா. நிற்கும் போது சாதாரணமாகத்தான் தெரிவாள். ஆனால் நடக்கும்போது தான் விந்தி விந்தி காலை இழுத்துக்கொண்டு இடறி நடப்பது தெரியும். நான்கு மாத குழந்தை சுகாசின். பத்து விரல்களோடு இன்னும் இரண்டு விரல்கள் தேவையில்லாமல் ஒட்டிக் கொண்டு தொங்குகிறது பரிதாபமாக.பத்தொன்பது வயது ஷகீலா... ""அப்பப்போ வலிப்பு வந்து உசுரு போற அளவுக்கு அவ வேதனைப் படுவாங்க. பெரிய பொண்ணா ஆயிட் டாள்னுதான் பேரு. மூளை வளர்ச்சியில்லாம பொறந்ததால எல்லாமே நாம தான் கூடயிருந்து கவனிச்சுக் கணும். இதனால வேலைக்கும் போகமுடியாம, சாப்பாட்டுக்கும் வழியில்லாம கஷ்டப்படு றோம்ங்க'' -விசும்பு கிறார் அந்த இளம்பெண்ணின் தாய்.அணுமின் நிலையத்தில் டெம்ப்ரவரியாக வேலை செய்யும் பூந்தண்டலத்தின் பதினோரு வயது மகன் அஸ்வினுக்கு ஆறு விரல்கள் இருப்பதோடு, மூளை வளர்ச்சி யும் இல்லை. அதே இடத்தில் மெக் கானிக்காக பணிபுரியும் செங்கழனியின் பத்துமாத குழந்தை ஹரீஷுக்கும் காலிலும் கையிலும் ஒரு விரல் கூடுதலாக இருக்கிறது.முப்பத்தைந்து வயதாகும் லட்சுமிக்கோ குளிர் தாங்க முடியாது. தொண்டை கட்டிக் கிட்ட மாதிரி உணர்வு. இப்படி 2 வருடமாக போராடிக் கொண்டிருந்தவரை பரி சோதித்தபோதுதான் அவரை தாக்கியிருப்பது "ஆட்டோ இம்மின் தைராய்டு டிசீஸ்' என்று தெரிய வந்திருக்கிறது. அதைவிடக் கொடுமை அபிபுராணியின் நிலைமை. ""தைராய்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அஞ்சாறு வருஷமா ஹாஸ்பிடல், வீடுன்னு அலைஞ்சுக்கிட்டிருந்தேங்க. சென்னையில இருக்கிற அடையார் புற்றுநோய் ஆஸ்பத்திரிக் கெல்லாம் போயிட்டு வந்துட்டேன். அணுமின் நிலையத்தோட கதிர்வீச்சாலதாம்மா உனக்கு இப்படி ஆகியிருக்கு'ன்னு சொல்லி அனுப்பிட்டாங்க. இந்த மாதிரி ஏகப்பட்டபேர் பாதிக்கப்பட்டிருக்காங்க. சிலர் இறந்தும் போயிட்டாங்க. நானும் ஒரு வருஷமா படுத்த படுக்கையாய் கிடக்குறேன். நான் இன்னும் எத்தனை நாளைக்கோ?'' என்று அவர் கண்ணீர் வடிக்க... இளம் வயதிலேயே வாழ்க்கையை தொலைத்து விட்டு படுத்த படுக்கையாய் கிடக்கும் சந்தோஷ் குமாரின் நிலைமை நம்மை பதைபதைக்க வைக்கிறது.""சம்பளம் கொஞ்சம்... கூட கொடுக்குறாங் களேன்னு வயித்துப் பொழைப்புக்காக அணுமின் நிலையத்துக்கு டெம்பரவரி வெல்டரா வேலைக்குப் போனேங்க. 45 வயசுக்குமேல வர்ற பெருங்குடல் புற்றுநோய் 34 வயசிலேயே வந்துடுச்சு. ஒருநாளைக்கு இன்ஜெக்ஷன் மட்டுமே 450 ரூபாய் செலவாகுது. தினமும் வாந்தி, மயக்கம். பாத்ரூம், லெட்ரின் எல்லாமே வயித்துல டியூப் மூலமாத்தான் போறேன்'' என்று அவர் வேதனையோடு சொல்லும்போதே அவரது மனைவி குழந்தைகளின் முகத்தில் கண்ணீர் தாரையாய் ஓடுகிறது.-இப்படி புற்றுநோய்கள், பெண்களைத் தாக்கும் தைராய்டு பிரச்சனைகள், பிறவி ஊனம், இதய பாதிப்பு, மூளை வளர்ச்சியின்மை, வலிப்பு நோய்... என மிகக்கொடுமையான நோய்களுடன் குழந்தைகள் பிறப்பதும், பெரியவர்கள் பாதிக்கப்படுவதும் வெவ்வேறு இடங்களில் அல்ல. காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையம் அருகில் 16 கிலோமீட்டர் சுற்றளவுள்ள கிராமப் பகுதிகளில்தான்.""நீங்க பார்த்தது வெறும் சாம்பிள்தாங்க. இந்த மாதிரி பாதிக்கப்பட்டவங்க இன்னும் நெறைய பேரு இருக்காங்க'' என்று வேதனையுடன் சொல்லத் தொடங்குகிறார் அணுமின் நிலையத்திலிருந்து வெளியாகும் அணு கதிர்வீச்சு (ரேடியேஷன்)கள் குறித்து ஆய்வு செய்து... அப்பகுதி மக்களை அதன் பாதிப்பிலிருந்து மீட்கப் போராடிவரும் பொதுநல மருத்துவர் டாக்டர் வீ.புகழேந்தி.""மின்சாரம் மற்றும் அணுகுண்டுகளை தயார் பண்ணி நாட்டை காப்பாற்றத்தான் அணுமின் நிலையத்தை அமைச்சதா மத்திய அரசு சொல் லுது. அதே நேரத்துல இந்தப் பகுதி மக்களின் பாதுகாப்பும் முக்கியம்ங்கிறதை அரசாங்கம் புரிஞ்சுக்கணும்.அணு உலையிலிருந்து வெளியாகுற ரேடியேஷன் மூலமா... அணுமின் நிலையத்துல வேலை பார்க்கிற ஊழியர் களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் "மல்டிபிள் மைலாமா'ங்கிற எலும்பு மஜ்ஜை புற்றுநோய் இருப்பதும் அதன்மூலமா பலர் உயிரிழப்பதையும் 2003-ல் நான் செய்த ஆய்வின் மூலமா தெரிவிச்சிருக்கேன். இதற்கு மருத்துவ ஆராய்ச்சி புத்தகங்களுமே ஆதாரம். அதனாலதான் அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள்ல அணுக்கதிர் வீச்சால் ஏற்படும் மல்டிபிள் மைலாமா புற்று நோயால் பாதிக்கப்படுற பணியாளர் களுக்கும், பொதுமக்களுக்கும் மருத்துவ இழப்பீட்டுத்தொகை வழங்க சட்டமே இருக்கு.அதேமாதிரி அணு உலையிலிருந்து வெளியாகும் அயோடின் 131 என்னும் கதிர்வீச்சால் "ஆட்டோ இம்மின் தைராய்டு டிசீஸ்' என் னும் நோய் வராது என்று மறுக்கிறது அணுமின் நிலைய நிர் வாகம். ஆனால் அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் எபி டெமியாலஜி 2006 நவம்பர் புத்தகத் தில் அயோடின் 131 கதிர்வீச்சால் அப்படிப்பட்ட பிரச்சனை வரும் என்பது தெளிவாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.குறைவான கதிர்வீச்சு வெளி யேறுவதால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாதுன்னு தவறான பிரச்சாரத்தை செய்யுறாங்க. ஆனா, கதிர்வீச்சைப் பொறுத்த அளவில் பாதுகாப்பான அளவு (நஹச்ங் க்ர்ள்ங்) என்பது ஒன்று இல்லவே இல்லை என்பதும் எக்ஸ்ரே காமா கதிர்கள், நியூட்ரான்கள் போன்றவை புற்றுநோயை ஏற்படுத்தும் என்பதும் விஞ்ஞானிகளுக்கு நன்றாகத் தெரியும்.அப்படியிருக்க புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ஆல்ஃபா கதிர்வீச்சு, கல்பாக்க கடற்கரையில் அதிகமா இருக்குங்குறதும் உண்மை. கதிர்வீச்சால் பாதிப்பு இருக்குன்னு ஆய்வின் மூலமும் பாதிக்கப்பட்டவர்களை கண்ணால் பார்த்தும் தெரிந்து கொள்ள முடியுது. இதற்காக அணுமின்நிலையத்தையே நாங்க அகற்ற சொல்லலை. பாதிக்கப்படுவது தமிழர்களாக இருப்ப தால் மத்திய அரசின் அணுமின் நிலைய நிர்வாகத்துடன் தமிழக அரசும் இணைந்து 16 கிலோமீட்டர் சுற்றளவுள்ள புதுப்பட்டினம், வயலூர், மணமை, வெங்கம்பாக்கம், பூந்தளம்னு அத்தனை கிராமங்களுக்கும் மருத்துவக் குழுவை அனுப்பணும். அனுசக்தி வீச்சு மூலம் நோயினால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு அணுமின்நிலையத்துல பணிபுரியும் நிரந்தர பணியாளர்களுக்கு கொடுப்பதுபோல தனி அடையாள அட்டை கொடுத்து இலவச மருத்துவப் பரிசோதனைகள், மருந்துகள், சிகிச்சைகள் அளிக்கணும். தைராய்டு நோயை கண்டறிந்து சிகிச்சை செய்யும் நவீன வசதியை கல்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே ஏற்படுத்தணும்.ஜப்பான், அமெரிக்கா போன்ற மேலைநாடுகள்ல புற்றுநோய் போன்ற பெருநோய்களால் தாக்கப்பட்டால் இழப்பீடு வழங்கப்படுவது சட்டமாக இருப்பதுபோல் நம்ம நாட்டிலும் சட்டமாக்கணும். இதையெல்லாம் சொல்லிப் போராட ஆரம்பித்தால் என்னை பலர் மிரட்ட ஆரம்பிச்சிடுறாங்க. மக்களின் நலனுக்காக நான் எதையும் சந்திக்கத் தயார்'' என்கிறார் அதிரடியாக.அணுமின்நிலைய கதிர்வீச்சால் ஆபத்து மக்களுக்கு... ஆதாயம் யாருக்கு? என்ற கேள்வியோடு மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளது மனித நேய மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் அப்துல் சமது தலைமையில். ம்... இவ்வளவு எதிர்ப்புகள் பாதிப்புகளின் மத்தியிலும் "இன்னும் அணுமின்நிலையங்களை அமைக்கப் போகிறோம்... கதிர்வீச்சால் பாதிப்பு இல்லை' என்று ஆய்வு செய்து நிரூபிக்காமலேயே சமாளித்துக்கொண்டி ருக்கிறது அணுமின்நிலைய நிர்வாகம். உண்மை வெளிவரும் வரை அப்பகுதி மக்களின் நிலைமை?