பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Monday, November 9, 2009

வடக்கில் பாதுகாப்பு வலயங்களை அகற்றும் பேச்சுக்கே இடமில்லை - அமைச்சுச் செயலாளர் தகவல்

தமிழர் பிரதேசங்களில் குறிப்பாக வடக்கில் அதியுயர் இராணுவப் பாதுகாப்பு வலயங்கள் எக்காரணம் கொண்டும் அகற்றப்பட மாட்டா என்று
இலங்கை அரசு நேற்றுத் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இலங்கை அரசின் சார்பில் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் அனர்த்த நிவாரண மற்றும் மனித உரிமைகள் அமைச்சுச் செயலாளர் ரஜீவ விஜேசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
புலிகள் இயக்கம் மீண்டும் புத்துயிர் பெறக்கூடிய ஆபத்துக் காணப்படுவதால், இலங்கை இராணுவத்தினர் அந்த ஆபத்தை எதிர்கொள்வதற்கு ஏற்றவகையில் எப்போதும் தயார் நிலையிலேயே இருப்பார்கள் என்றும் இந்நிலையில் தமிழர் பிரதேசங்களிலுள்ள இராணுவ அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படவே மாட்டா என்றும் அவர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் நேற்று ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

புலிகளின் கதை முடிந்துவிட்டது. ஆனால் அவர்களின் தற்கொலைக் குண்டுதாரிகள் இன்னமும் கொழும்பில் இருக்கின்றார்கள். நாம் அவர்கள் குறித்து மிகவும் விழிப்பாக இருக்கவேண்டியுள்ளது. நாம் புலிகளால் அநேக கஷ்டங்களை அனுபவித்துள்ளோம். எனவே அந்தக்கஷ்டங்கள் இனிமேலும் தொடர்வதற்கு அனுமதிக்க முடியாது.

பலமான நிலையில் புலம் பெயர் தமிழர்கள்.

ஆனால் புலி ஆதரவுக் கொள்கையுடன் வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தமிழர்கள் மிகவும் பலமான நிலையில் உள்ளார்கள். வெளிநாடுகளைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் எமக்குப் பெரிய அளவில் ஆதரவாகவோ, உதவியாகவோ இல்லை. எது எப்படி இருப்பினும் வெளிநாடுகளின் குறிப்பிடத்தக்க அளவு தலையீடு இல்லாமல் புலிகளால் மீண்டும் புத்துயிர் பெறவே முடியாது. இலங்கையில் புலிகளுடனான யுத்தத்தின் போது 1983 இற்கும் 2009 இற்கும் இடைப்பட்ட கால கட்டத்தில் சுமார் 90 ஆயிரம் பொதுமக்கள் உயிரிழந்துள்ளார்கள்.
சமஷ்டி இல்லை
இலங்கை அரசு சிறுபான்மை இன மக்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கத் தயாராகவே இருந்தது. அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளது. ஆனால் சமஷ்டி முறையிலான தீர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏனெனில், சமஷ்டி முறையிலான தீர்வு இலங்கையில் பிரிவினைவாதத்துக்கு சட்ட அந்தஸ்தைப் பெற்றுக்கொடுக்கக்கூடிய ஆபத்து ஒன்று நிலவுகிறது.
மேலைத்தேய நாடுகளின் அழுத்தம்
அரசினால் நடத்தப்படும் நலன்புரி முகாம்களில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை அரசு பாரதூரமான அழுத்தங்களை வெளிநாடுகளிலிருந்து எதிர்கொள்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. குறிப்பாக மேலைத்தேய நாடுகளின் அழுத்தம் மிகவும் கூடுதலாக உள்ளது. ஆனால் இந்தியா, பாகிஸ்தான், சீனா, எகிப்து, கியூபா, பிரேஸில் ஆகிய நாடுகள் இலங்கையின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைப் புரிந்து வைத்துள்ளன. மேற்படி நாடுகள் அகதிகளின் நிலை மற்றும் அகதிகளின் புனர்வாழ்வு, அதிகாரப் பகிர்வு மூலமான அரசியற் தீர்வு விடயத்தில் எம்மைக் கேள்வி கேட்டுள்ளன. ஆனால் எம்மீது அழுத்தங்களைப் பிரயோகித்திருக்கவில்லை.
எதிர்வரும் ஜனவரி மாத இறுதிப்பகுதிக்குள் முகாம்களிலுள்ள அகதிகளின் எண்ணிக்கை 40 ஆயிரத்துக்கும் 50 ஆயிரத்துக்கும் இடையில் குறைக்கப்படும். இந்தத் தமிழ் அகதிகளுக்கான மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் பாதுகாப்பு விடயங்கள், நிலக்கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கைகள், அகற்றுவதிலுள்ள தாமதங்கள், யுத்தத்தால் வடக்கு, கிழக்கில் அழிந்த பிரதேசங்களை மீளக் கட்டியெழுப்புவதில் உள்ள தாமதங்கள் ஆகியன எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால் நாம் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை அதிரடியாக மேற்கொண்டு வருகிறோம்.
இந்த மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் நாம் தற்போது வெற்றியடைந்து வருகிறோம் என்று உணர்கிறோம். ஆனால் அகதிகளுக்கான மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் பங்குபற்ற அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை. இதை நாம் நிதியுதவி வழங்கும் நாடுகளுக்கு குறிப்பாக மேலைத்தேய நாடுகளுக்குத் தெளிவாகவே சொல்லியுள்ளோம்