பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Friday, November 13, 2009

யார் துரோகி?

மே 17. முள்ளிவாய்க்கால் கடற்கரை. பின் பகல். எங்கு பார்க்கினும் பிணங்களும் உயிர் ஏங்கும் காயமுற்றவர்களும். வெயிலின் வெம்மை ஒருபுறம், இடைவிடாது பொழியப்பட்ட வெடிகுண்டுகள்- எறிகணைகளின் தீ மறுபுற மென கடற்கரை மணல்வெளி கந்தகப் பரப்பாய் கிடக்கிறது. நிறைமாத கர்ப்பிணித்தாய், குனிய முடியாமல் குனிந்தும், ஊர்ந்துமாய் கொலைக் களத்தை கடக்க முயல்கிறார். வேகமாய் நகரவும் முடியாமல் அம்மணல்வெளியின் நெருப் புத் தணலை தாங்கவும் முடியாத வலியின் தவிப்பு. சற்று தூரத்தில் தன்னைப்போலொரு இளம்தாய் எறிகணை குண்டுக்கு இரையாகி இறந்து கிடக்கிறார். அவரது கால்களில் காலணி அப்படியே இருக்கிறது. ஊர்ந்து நகர்கையில் எறிகணை தாக்கியிருக்க வேண் டும். உயிரோடு தவிக்கும் இந்தத்தாய் மெல்ல மாய் பிணமாகக் கிடந்தவ ரின் காலணிகளை அகற்றி, தான் அணிந்து கொள்கிறார். மரண நிழல் கவிந்த மண்ணில் பயணம் தொடர்கிறது. உயிர்தப்பி வவுனியா வந்து, வதை முகாமில் பதிவாகி, ஆண்பிள்ளையொன்றை பெற்றெடுத்து தாயாகி, இப்போது உறவினர்களின் உதவியில் கொழும்பு வந்துவிட்டார். ஆனால் கந்தக நிலத்தில் தனக்கு காலணி தந்த உயிரற்ற அந்தத் தாயின் காட்சியும் நினைவும் சதா அவரைப் பிழிகிறது. ஆறுதலின்றித் தவிக்கிறார். ஆற்றுப்படுத்தல் (Counselling) அருட்பணி செய்துவரும் அருட் தந்தையொருவர் பகிர்ந்துகொண்ட அனுபவம் இது. போர்க்கொடுமைகளை அனுபவித்தும் பார்த்தும் வந்த அப்பாவி மனித ஜீவன்களின் கதைகளையும் அவர்களை ஆற்றுப்படுத்துவதிலுள்ள சவால்களையும் அவர் விவரிக்க மனது தாங்கவில்லை. ஒன்றல்ல, இரண்டல்ல... அவலத்தின் நெடுங்கதையாய்...
பதினாறு வயதில் விடுதலைப்போரில் இணைந்த அந்த மாணவன் இரு வாரங்களுக்கு முன்புவரை உயிரோடிருந்த இளைஞன். வயது 26. கடைசி சண்டையில் வீரமரணம் தழுவாது உயிரோடிருந்தவர்களில் ஒருவர். காடு கடலென அலைந்து பிறந்த ஊர் வந்திருக்கிறார். உறவுகள் உயிரோடிருக் கிறார்களா, இருந்தால் எங்கே என்ற விபரங் களெல்லாம் தெரியவில்லை. காட்டிக்கொடுக் கும் பலர் ஊருக்குள் ஊடுருவியிருப்பது மட்டும் அவனுக்குத் தெரிகிறது. சரணடைய முடிவெடுத்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியை நாடுகிறான். ""சண் டைக் களத்தில் மட்டுமே சரணடையும் ஒழுங்குகளை செஞ்சிலுவைச் சங்கம் செய்ய முடியும். போர் முடிந்ததாய் அறிவிக்கப்பட்ட பின் தங்களால் அதைச் செய்யமுடியாது'' என்பதை எடுத்துச் சொல்லும் அவர்கள் வேறொரு தொண்டு நிறுவனத்தோடு அவனை தொடர்புபடுத்திவிட்டார்கள். அந்நிறுவனம் அத்தமிழ் இளைஞனை காவல்நிலையத்தில் ஒப்படைத்து தயவு செய்து சித்ரவதை எதுவும் செய்யாதீர்கள், போர்க் கைதியாய் நடத்துங் கள் என மன்றாடி விடைபெறுகிறது. நான்கு நாட்களுக்குப்பின் அந்த இளைஞனின் பிணத்தை பெற்றுக்கொள்ளும்படி காவல்நிலை யத்திலிருந்து செய்தி வருகிறது. ""முல்லைத் தீவில் புலிகள் ஆயுதங்களை புதைத்து வைத் திருக்கும் இடங்களை அடையாளம் காட்டக் கூட்டிச் சென்றோம். தப்பியோடி நந்திக் கடலில் குதித்து தற்கொலை செய்துகொண் டார்'' என்று மிகச் சாதாரணமானதோர் செய்தியாகச் சொல்லி விடை கொடுத்திருக் கிறார்கள்.

ஊரறியாமல் உலகறியாமல் இன்னும் எத்தனை தமிழ் உயிர்கள் அறுக்கப்படுகின் றன... எத்தனைபேரது தாய்மை மலடாக்கப் படுகிறதென்பதெல்லாம் நமக்குத் தெரியாது. உலக அளவில் மிகவும் மதிக்கப்படும் ""மனித உரிமைகள் கண்காணி (HRW) என்ற அமைப்பின் ஆசிய இயக்குநர் பிராட் ஆடம்ஸ் சமீபத்தில் இலங்கையின் இன்றைய மனித உரிமைகள் நிலை பற்றி குறிப்பிட்டுக் கூறியிருக்கிறார். ""மனித உரிமை களைப் பொறுத்தவரை உலகில் மிக ஆபத்தான நாடுகளில் ஒன்றாக ஸ்ரீலங்கா இன்று திகழ்கிறது. ஒரு தேசத்தின் உள்நாட்டுச் சட்டங் களுக்கு உள்ள அனைத்து தன்மை களும் மனித குலத்திற்குப் பொது வாகவென வார்க்கப்பட்டுள்ள அனைத்துலக மனிதாபிமானச் சட் டங்களுக்கும் உண்டு. அச்சட்டங் களை ஒருபொருட்டாக ஸ்ரீலங்கா மதிக்கவில்லை. மிகக்குறைந்தபட்சம் போர்க்கைதிகளையும், அகதி மக்களையும் முறைப்படி பதிவு செய்யும் கடமையைக்கூட ஸ்ரீலங்கா செய்ய வில்லை.''

பின் நவீனத்துவ (Post Modernism) கருத்தியல் விரிந்து வேரூன்றிய இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தையதான காலத்தில் மனிதகுலத் திற்குப் பொதுவான மனிதாபிமானச் சட்டங்களை அரசியற் களத்திற்கு நகர்த்துகின்ற ஆற்றலாக விழிப்புணர்வு பெற்ற குடிமக்களாலான "பொதுவெளிகள்'' (Civil Society) முன்னின்று முக்கிய பங்காற்றியுள்ளன. ஈழத்தமிழ் மக்களுக்கான அத்தகு பொதுவெளிகள் தமிழர் செறிவுடன் வாழும் ஐரோப்பிய - வடஅமெரிக்க நாடுகளில் இன்று வலுவாக உருவாகி வருவதை அவதானிக்க முடிகிறது. அப்படியான பொதுவெளி தமிழகம்-இந்தியாவில் வேண்டுமென்பதும், ஈழ மக்களுக்காய் இந்திய மக்களாட்சி அமைப்புகள், அலகுகள், அரசியற்கட்சி களுடன் உரையாடுகின்ற, வாதாடுகின்ற, மன்றாடுகின்ற பணியில் அத்தனை அரசியற் சக்திகளோடும் அப்பொதுவெளி ஈடுபட வேண்டுமென்பதுமே நம் அவா.நக்கீரன் படிக்கிறவர்களில் சிலர் என்னைக் கேட்பது ""நீங்கள் ஏன் கலைஞரை விமர்சிப்பதில்லை?'' இக் கேள்விக்கான பதில் இதுதான் : நாற்பதாண்டு கால விடுதலைப் போராட்டம் கொடூரமாகச் சிதையுண்டு, சகல நம்பிக்கைகளும் தகர்ந்து போய் எதிர்காலம் சூன்யமாகி நிற்கும் அம்மக்களுக்கு நாம் ஏதேனும் உண்மையில் செய்யக்கூடுமானால் அது "அம்மக்களுக் கானதோர் பொது அரசியல், மனிதாபிமானக்' கருத்தினை இங்கு உருவாக்குவது, அதை நம் நாட்டின் அரசாங்கக் கொள்கையாக மாற்றிட அரசியற் கட்சிகள், ஊடக வெளி, பாராளுமன்றம் என பன்முகக் களங்களூடே உழைப்பது. அதை விடுத்து ஈழமக்களின் பேரழிவை கலைஞருக்கும் தி.மு.க.விற்கும் எதிரான அரசியலாக இங்கு கட்டமைக்க முயல்வது அம் மக்களுக்கு எப்பயனையும் தந்துவிடப் போவதுமில்லை, இன்றைய சூழலில் அத்தகு அணுகுமுறை ஏற்புடையதுமல்ல. கட்சி அரசியல், தேர்தல் அரசியல் என்ற முரண்பாடுகளுக்குள் சிக்கி கந்தலாகிக் கிடக்கும் ஈழப்பிரச்சனையில் மிச்சமிருக்கிற சன்னமான சிறு நம்பிக்கைகளையும் பட்டுப்போகச் செய்கிற அணுகுமுறையாகவே அது அமையும். இன் னொன்று கலைஞருக்கோ, தி.மு.க.விற்கோ துரோகி என்று பட்டம் சுமத்துகிற பவித்திர நிலையில் இங்கு எந்த அரசியற் கட்சி களும், தலைவர்களும் இல்லை.ராஜபக்சே கும்பலின் இனவெறி உச்சம் தொட்டு பேரழிவின், தமிழின அழித்தலென்ற ஊழிக்கூத்து முள்ளிவாய்க்காலை நெருங்கிக் கொண்டிருந்த தருணத்தில், யாருடைய பாதங்களில் விழுந்து அப்பேரழிவைத் தடுக்கலா மென கட்சி பலமெல்லாம் இல்லாத சாதாரண உணர்வாளர்கள் இரவு பகலென அங்குமிங்கும் அலைந்து திரிந்த காலை ""இந்தக் கூட்டணிக்கு ஆதரவாய் அறிக்கையொன்று விடுங்கள்'' என விடுதலைப்புலிகள் இயக்க அரசியற்பிரிவு பொறுப் பாளர் நடேசன் அவர்களுக்கு உரைத்தவர்களுக் கெல்லாம் நிச்சயமாய் அந்த ஒழுக்க தார்மீகம் இல்லை.மிக முக்கியமாக ஈழ விடுதலைப் போராட் டத்தின் வேதனையான பின்னடைவுக்குக் காரணம் ஏதோ தமிழகமும் தமிழகத் தலைவர் களும்தான் என்பது போன்ற விவாதம் பிரச் சனையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திடத் தேவையான புரிதல்களையும் சுருக்குகிறது. விடு தலைப் போராட்ட பின்னடைவுக்கும் அம்மக்களின் அவலங்களுக்கும் முக்கிய காரணங்கள் பல. வெறிபிடித்தாடும் பௌத்த சிங்களப் பேரினவாதம் முதற் காரணம். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் என உலகம் ஏற்றுக்கொள்ள வைத்ததில் சிங்களப் பேரினவாதம் பெற்ற வெற்றியும் அக்களத்தில் ஒன்றிணைந்து திறம்பட இயங்கி தமிழரின் அரசியல் சுயநிர்ணய உரிமையை உலகம் அங்கீகரிக்கச் செய்வதில் உலகத்தமிழ்ச் சமுதாயம் தவறியமையும் இரண்டா வது காரணம். இந்தியப் பெருங்கடல் அரசியலில் அமெரிக்க மேலாதிக்கத்தை இடைமறிக்கவேண்டி சீனா, ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகள் ஸ்ரீலங்கா வுக்கு அள்ளித்தந்த பேராயுதங்களும், பெருநிதியும் உலக ராஜதந்திர உதவிகளும் மூன்றாவது கார ணம். ஈழம் மலர்ந்தால் தமிழகத்தில் பிரிவினை வாதம் தலைதூக்குமென்ற கருதுகோளினடிப்படை யில் தமிழினம் அழிந்தாலும் பரவாயில்லை விடு தலைப்புலிகள் இயக்கம் நசுக்கப்படவேண்டுமென நிலையெடுத்து ஸ்ரீலங்காவுடன் போரில் இணைந்து நின்ற இந்தியாவின் கொள்கை நிலைப்பாடு நான்காவது காரணம்.

உலகில் சிங்களவர் எண்ணிக்கை ஒரு கோடி. தமிழர்களோ எட்டு கோடிக்கும் மேல். எனினும் இனத்தைக் காக்கும் அக்கறையில் இணைந்து நிற்க முடியாத இந்த தமிழினத்தின் குறிப்பாக இந்தியத் தமிழகத்தின் சாபக்கேடு இறுதி காரணம். இன்னும் சிறு சிறு, சில பல காரணங்களையும் சேர்க்கலாம். ஆக, பெரியதோர் வரைபடத்தில், ஈழ விடுதலைப் போராட்ட பின்னடைவுக்கான காரணங்கள் மிகப்பல. தொடர்ந்த பயணத்திற்கு இந்தப் புரிதல் மிக முக்கியமானதென்பதால்தான் நமக்குள்ளேயே ஒருவருக்கொருவர் துரோகப் பட்டங்கள் சுமத்துவதைத் தவிர்த்தல் நலமென்றும், இணைந்து குறைந்தபட்ச பொதுக்கருத்தும் திட்டமும் வகுத்தல் சிறப்பென்றும் நம்பி, வலியுறுத்தி அதற்காக வாதிடுகிறோம்.எனவேதான் அரசியல்மாச்சரியங்களுக்கு அப்பால் பொதுவெளிகள் (Civil Society) உருவாவதை முக்கியமானதாய் அடிக்கோடிடுகிறோம். அத்திசையில் ""போருக்கெதிரான பத்திரிகையாளர்'' என்ற அமைப்பின் சுமார் இருபது பத்திரிகையாளர்கள் இணைந்து ஆக்கியுள்ள ""ஈழம் : நமது மௌனம்'' என்ற புத்தகத்தை பற்றி கடந்த இதழில் குறிப்பிட்டிருந்தோம். அப்புத்தகத் தில் நடிகர் கமல்ஹாசன் அவர்களின் பதிவு செறி வுடைத்ததாயிருந்தது.
காக்க ஒரு கனக (AK) 47நோக்கவும் தாக்கவும் ஒரு நொடி நேரம்தோற்கவும் அதே கண நேரம்தான்ஈயம் துளைத்துக் கசிந்து சிவந்தகாயம் தொட்டுக் கையை நனைத்துவிண்ணே தெரிய மண்ணில் சாய்ந்தேன்முன் காக்க மறந்த அமைதியைக் காத்து.மாட்டுத் தோலில் தாய்மண் அறைபடபூட்ஸுக் கால்களால் கடந்தனர் பகைவர்.விட்ட இடத்தில் கதையைத் துவங்கச்சட்டென இன்னொரு குழந்தை பிறக்கும்அதுவரை பொறுத்திரு தாயே, தமிழேஉதிரம் வடியும் கவிதை படித்து...சத்குரு ஜக்கி வாசுதேவ்-""வாழ்க்கையை இழந்தவர்களுக்காகவும்இனி வாழ இருப்பவர்களுக்காகவும்அநீதியை சுட்டிக்காட்டும் துணிவை நாம் பெறுவோம்''
-என தனது பதிவில் நம் அனைவரையும் அழைத்திருந்தார். ...இப்படி புகழ்பெற்ற நூறுபேர் ஈழத்து மானுடத்திற்காய் அணிவகுக்கிறார்கள்.புத்தக வெளியீடு வரும் நவம்பர் 14 சனி மாலை 4.30 மணிக்கு, 13 காசா மேஜர் சாலை, எழும்பூரிலுள்ள டான்போஸ்கோ பள்ளி அரங்கில் நடைபெறும். அனைவரும் வாருங்கள். உடன் பலரை அழைத்தும் வாருங்கள்.