பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Friday, November 13, 2009

யுத்தம் சேலஞ்ச் - II


க்கீரன் மீது ஜெயலலிதா என்கிற ஜெயா வழக்குகளைப் போட்டு முடக்கப் பார்த்தார். டெஹல்கா மீது ஜெயா ஜெட்லி என்ற ஜெயா வழக்குகளைப் போட்டபடியே இருந்தார். வழக்குகளைத் தாக்குப் பிடிக்க முடியாமல் எங்கள் டெஹல்கா நிறுவனத்தி லிருந்து பலரும் வெளியேறத் தொடங்கினர். பத்திரிகையின் எதிர்காலம் குறித்த அச்சம், அவர்களின் சொந்த எதிர்காலம் குறித்ததாக மாறியது. அதன் விளைவு, 125 பேர் இருந்த எங்கள் நிறுவனத்தில் என் சகோதரி லீனா தேஜ்பால் மற்றும் சோமா சௌத்ரி, பிரிஜ் கிஷோர், பிரயாக் இந்த 4 பேர் மட்டுமே மிச்சமிருந்தனர். ஆனால், ஜெயலலிதா போட்ட வழக்குகளை எதிர்த்து உங்கள் நக்கீரன் நிறுவனம் வலுவாக இருந்தது. வழக்குகளைத் துணிச்சலாக எதிர்கொண்டது. நக்கீரன் நிறுவனத் தைச் சார்ந்தவர்கள் உறுதியோடு நின்றதை இந்தியாவின் பெரிய பெரிய பத்திரிகை நிறுவனத் தினரே ஆச்சரியத்தோடு பார்த்தனர்.

-தருண் தேஜ்பால்ஆசிரியர்-டெஹல்கா

எங்கள் நிறுவனத்திற்கு உள்கட்டமைப்புகள் அதிகம். எல்லா வசதிகளும் இருக்கிறது. நினைத்தால் ஃப்ளைட்டில் பறந்து சென்று எந்த செய்தியையும் எடுப் பதற்கான வசதி உள்ளது. அதற்குத் தகுந்தது போல எங்களிடம் பலம் வாய்ந்த ஆட்கள் இருக்கி றார்கள். ஆனால், எந்தவித கட்டமைப்பு வசதிகளும் இல்லா மல் பெரிய அரசாங்கத்தை எதிர்த்துப் போராடி ஜெயித்த நக்கீரன் பத்திரிகையின் துணிச்சலைக் கேள்விப்படும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

-பிரணாய் ராய்தலைமை நிர்வாகி- என்.டி.டி.வி

நேர்மைத்திறத்துடன் செயல்படும் ஊடக சாதனையாளர்களே வியக்கும் போராட்டத்தை எதிர்கொண்டது உங்கள் நக்கீரன். திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்பட்டது அன்றைய ஆட்சி. 2001 ஆம் ஆண்டு சட்ட மன்றத் தேர்தலுக்கு முன் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஜெயலலிதா. அதில் நக்கீரன் மீதான அவரது வஞ்சகம் தெளிவாகவே பதிவாகியிருந்தது. வீரப்பனின் பிடியில் 108 நாட்கள் சிக்கியிருந்த கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்கும் போராட்டத்தில் அரசுத்தூதராக நக்கீரன் செயல்பட்டு, கர்நாடகத் தமிழர்களின் நிம்மதியான வாழ்வுக்கு உத்தர வாதத்தை ஏற்படுத்தி, மீட்புப் பணியில் வெற்றி பெற்றது. அதைப் பொறுக்க முடியாத ஜெ, தன் தேர்தல் அறிக்கையில், நக்கீரன் கோபால் என என் பெயரைக் குறிப்பிட்டு, "ஆட்சிக்கு வந்தால் நக்கீரன் மீது உறுதியாக நடவடிக்கை எடுப்போம். மைய அரசையும் நடவடிக்கை எடுக்க வற்புறுத்துவோம்" என தெரிவித்திருந்தார்.தேர்தல் அறிக்கையிலேயே பொறி வைக்கப்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் ஜெ.வுக்கு சாதகமாக அமைந்தன. தேர்தலில் போட்டியிடும் தகுதியிழந்தும் அவசரகதியில் முதல்வராகப் பொறுப்பேற்றார்.ஆரம்பமானது பேயாட்டம்.அசரவில்லை நக்கீரன்.அய்யன் திருவள்ளுவர் சொல்லுவார்...

கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்ஆற்றல் அதுவே படை.

உயிரைப் பறிக்கும் எமனே எதிர்வந்து நின்றாலும் அதனைத் துணிவுடன் எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதுதான் படை. நக்கீரன் படை அந்த ஆற்றலுடன் எமனை எதிர்த்து நிற்கத் தொடங்கியது... யுத்தம்!