பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Monday, November 9, 2009

இந்தியில் பதவியேற்பு- எம்எல்ஏவை அறைந்த ராஜ் தாக்கரே கட்சி எம்எல்ஏக்கள்

மும்பை: மகாராஷ்டிர சட்டசபையில் இந்தியில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட, சமாஜ்வாடிக் கட்சி எம்.எல்.ஏ. அபு ஆஸிம் ஆஸ்மியை ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மான் கட்சி எம்.எல்.ஏக்கள் ஆவேசத்துடன் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.மகாராஷ்டிர சட்டசபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் மராத்தியில்தான் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ராஜ் தாக்கரே கட்சி ஏற்கனவே எச்சரித்திருந்தது.
ஆனால் தான் இந்தியில்தான் பதவியேற்பேன் என்று அபு ஆஸிம் ஆஸ்மி கூறியிருந்தார். அப்படியானால் ஆஸ்மி உ.பிக்குப் போக வேண்டும், இங்கு இருக்கக் கூடாது. இந்தியில் பதவியேற்றால் தடுத்து நிறுத்துவோம் என ராஜ் தாக்கரே கட்சி மிரட்டியிருந்தது.
இதனால் பரபரப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் இன்று சட்டசபையில் புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது.
அப்போது, ஆஸ்மி பதவியேற்க வந்தபோது ஏற்கனவே அறிவித்தபடி இந்தியில் பதவிப்பிரமாணம் எடுத்தார்.
இதையடுத்து மகாராஷ்டிர நவ நிர்மான் கட்சியைச் சேர்ந்த 13 எம்.எல்.ஏக்களும் திரண்டு அவரிடம் விரைந்தனர். அவர் முன்பு இருந்த மைக்கைப் பறித்தனர்.
ஆஸ்மிக்கு எதிராக கோஷமிட்டனர். மராத்தியில் பதவியேற்குமாறு கோபத்துடன் கூறினர். அப்போது ராஜ் தாக்கரே கட்சி எம்.எல்.ஏ ராம் கதம் ஆஸ்மியை அறைந்து விட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அரை மணி நேரத்திற்கு சபை ஒத்திவைக்கப்பட்டது.
சபையில் அமைதியை ஏற்படுத்த முதல்வர் அசோக் சவானும், மின்துறை அமைச்சர் அஜீத் பவாரும் கடுமையாக முயன்றனர்