பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Sunday, November 29, 2009

போர் குற்றத்திற்கு நீதிகோரும் புனிதப் பயணம்! - ஜெகத்

ழம் வரும். ஈழம் மலரும். ஈழம் சாத்தியமே. இவ்வாறு எழுதுவதை அதீத கனவு விருப்பாகக் கருதி நின்ற பலருக்கு வேகமாக மாறிவரும் காட்சிகள் நம்பிக்கை தந்துள்ளன. நாட்டுக்குள் ராஜபக்சே சகோதரர்கள் திடீரென அடைந்துள்ள பதற்றமும், உலக அளவில் போர்க்குற்றங்கள் தொடர்பாக எடுக் கப்பட்டுவரும் அமைதியான, உறுதியான முயற்சி களும் அத்தகு நம்பிக்கையை மேலும் அதிகரித் துள்ளன.

எனவேதான் நாமும் ஈழம் மலர இன்று செய்யப்படவேண்டியவற்றை பொறுப்புணர்வுடன் சிந்திக்கத் தலைப்படுகிறோம்.கடந்த இதழ்களில் மூன்று விடயங்களை கோடிட்டிருந்தோம். வதை முகாம்களிலிருந்து மக்களை மீட்டு அவர்கள் மறுவாழ்வு தொடங்க உதவு தல் முதலானது; தமிழீழ தாயக நிலப்பரப்பில் சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறாது தடுத்தல் இரண்டாவதும் மிக அடிப்படையானதும்.

குறிப்பாக அடுத்த பனிரெண்டு மாத காலம் இவ்விடயத்தில் உலகத் தமிழர்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இயங்கவேண்டிய காலம். இந்தியாவும், உலக நாடுகளும் உறுதியான ராஜதந்திர அழுத்தங்களைக் கொடுப்பதும், இலங்கைக்குள் தமிழ் அரசியற் சக்திகள் ஒன்றிணைந்து இது தொடர்பாக ஒரே குரலில் முழங்கி இயங்குவதும் சிங்களக் குடியேற் றங்களைத் தடுத்து நிறுத்துவதில் முக்கிய பங்காற்ற முடியும். மூன்றாவதாக தமிழீழ விடுதலைப் போராட்டம் மீது கவிந்த "பயங்கரவாதம்' என்ற நச்சுத்திரையை அகற்றி ஈழத்தமிழர்கள் வரலாற்று ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் தனித்துவமான ஓர் தேசிய இனம், அதனாலேயே அவர்கள் சிங்களப் பேரின வாதத்தால் இன அழித்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக் கிறார்கள்.

அவர்கள் பாதுகாப்பாக எதிர்காலத்தில் வாழவேண்டுமென்றால் அவர்களுக்கென தனி நாடு அமைக்கும் அரசியல் சுயநிர்ணய உரிமையை அவர்களுக்கு வழங்குவதுதான் தீர்வு என்ற நிலைப்பாட்டினை உலகம் ஏற்றுக்கொள்ளச் செய்தது. இது மிக மிக முக்கியமானது.தமிழர் மீது நிகழ்ந்த இன அழித்தல் போர்க்குற்றங்களை முறைப்படி பதிவு செய்து நிறுவி ஆதாரபூர்வமாக நம்மால் நிரூபிக்க முடியுமெனில், உலகினது மனசாட்சியின் முன் அதுவே நம் மக்களின் அரசியல் சுயநிர்ணய உரிமைக்கான மிகப்பெரும் அறைகூவலாய் நிற்கும். உலகம் அதனை சுலபமாகப் புறந்தள்ளவோ, நிராகரித்துவிடவோ முடியாது.

நீதியை நிலைநாட்டுதல் என்பதே நம்பிக்கையுடன் நாம் மேற்கொள்ளும் இடைவிடாத முயற்சிகள்தான். இம்முயற்சியில் தமிழர்களாகிய நாம் தனித்துவிடப்பட்டவர்களல்ல. சிதைக்கப்பட்ட நம் பொது வரலாற்று ஆன்மாவின் வலிகளைப் பகிர்ந்து கொள்ளவும், மீண்டுமொரு வசந்த காலத்திற்காய் அதனை ஆற்றுப்படுத்தி மீட்கவும் பாருலகின் பொது மானுடம் நிச்சயம் நம்மோடு இணையத்தான் செய்யும் என்ற நம்பிக்கையை இரண்டொரு நாட்களுக்கு முன் நடந்த நிகழ்வொன்று தந்தது.

போர்க்குற்றங்களை முறைப்படி பதிவு செய்யும் அனைத்துலக அமைப்பினைச் சேர்ந்தவர்கள் கடந்த திங்கட் கிழமையன்று தொடர்புகொண்டு பேசினர். போர்க்குற்றங் களுக்கு உள்ளாக்கப்பட்ட அப்பாவி மக்கள் பலருடைய வாக்குமூலங்களை அவர்கள் சேகரித்துவிட்டதாகவும், மேலும் சில திசைகளில் முக்கிய ஆதாரங்கள் இருந்தால்தான் வலுவான, "போர்க்குற்ற வழக்கினை' உருவாக்க முடியுமென் றும் கூறி அதற்கு உதவ முடியுமா என்றும் கேட்டார்கள். அவர்கள் கேட்டவற்றை நான் இங்கு பதிவு செய்கிறேன். ஏனென்றால் இதனைப் படிக்கிற யாருக்கேனும் அவை தொடர்பான சிறு சாட்சியம் சாத்தியப்பட்டாலும்கூட அது இலங்கையை உலக அரங்கில் போர்க்குற்றவாளியாய் நிறுத்திட பேருதவியாய், வலுவான சாட்சியமாய் அமையக்கூடும். பின்வரும் சாட்சியங்களை அவர்கள் கேட்டார்கள், கேட்கிறார்கள்.


நடேசன், புலித்தேவன் ஆகியோர் தலைமையில் வெள்ளைக் கொடியேந்தி சரணடைய வந்த விடுதலைப்புலிகள் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டது நாம் அறிந்தது. உலகின் பார்வையில் இது மிக முக்கியமான போர்க்குற்றமாகக் கருதப்படுகிறது. ஆனால் அதை நேரில் கண்டவர்கள் குறிப்பாக சரணடையச் சென்றவர்களில் யாரேனும் உயிர்தப்பியிருந்தால் அவர்களில் ஒருவரது வாக்குமூலமே போதுமானது என்கி றார்கள். உலகில் அவர்கள் எங்கு இருந்தாலும் அவர்களை பாது காப்பாக எல்லா செலவுகளையும் செய்து வெளிநாடு ஒன் றிற்கு அழைத்துச் சென்று வாக்குமூலம் பதிவு செய்ய அவர்கள் தயாராயிருக்கிறார்கள். அதுபோலவே சரணடைய முயன்ற பிற போராளிகளை -குறிப்பாக புலிகளின் அரசியற் பிரிவினரை சிங் கள ராணுவம் சுட்டுக்கொன்றதைக் கண்டவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களின் வாக்குமூலங்களையும் கேட்கிறார்கள்.இரண்டாவதாக, சிங்கள ராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டவர்களின் சாட்சியம்.


அப்பாவி ஜீவன்களை வல்லுறவுக்கு உள்ளாக்குவதை மிக மோசமான போர்க்குற்றமாக மேற்குலகம் வரையறுக்கிறது. அமெரிக்காவின் இந்நாள் வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டன்கூட இது விஷயத்தில் மிக உறுதியாய் பேசி வருவதோடு -இலங்கையை "குற்றவாளி நாடு' என்றே ஒரு உரையில் வருணித்தார். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்களிடமிருந்து இதுதொடர்பான வாக்கு மூலங்களைப் பெறுவது சுலபமானதல்ல. அதேவேளை உலக மனிதாபிமானச் சட்டங்களின்படி இரண்டாம் நிலை சாட்சியங் கள்கூட போதுமானது என்கிறார்கள். அவ்வாறு வல்லுறவுக்கு உள்ளான தமிழ்ப்பெண்கள் தங்களுக்கு நேர்ந்த அக்கொடுமை யை யாரிடமாவது பகிர்ந்துகொண்டிருந்தால் -குறிப்பாக மருத் துவர், தன்னார்வ நிறுவனங்களின் பொறுப்பாளர்கள், அருட் தந்தையர்கள், அருட்சகோதரியர்கள் ஆற்றுப்படுத்துநர் (ஈர்ன்ய்ள்ங்ப்ப்ர்ழ்) இவ்வாறான யாரோடேனும் பகிர்ந்துகொண்டிருந்தால் இவர்கள் முன்வந்து அப்பெண்களுக்காய் சாட்சியம் கூறலாம். அவை அனைத்துலக போர்க்குற்ற/மனிதாபிமான சட்டங்களின் முன் நிற்கும் தன்மை கொண்டவையே என்கிறார்கள்.


அதுபோலவே சரணடைந்த பெண் போராளிகள் பலர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதாய், தொடர்ந்தும் அக்கொடுமை நடந்தேறி வருவதாய் சொல்லப்படுகிறது. அது தொடர்பான நேரடி அல்லது இரண்டாம் நிலை சாட்சியங்களையும் அந்த அமைப்பினர் கேட் கிறார்கள். நான்காவதாக முள்ளிவாய்க்கால், வவுனியா, இன்னபிற இடங்களில் -அதாவது போரின் இறுதி மாதங்களிலும், போருக்குப் பின்னரும் நடந்தேறிய மானுட அவலங்களை தங்கள் கேமராக்களிலும், கை பேசிகளிலுமாய் புகைப்படம் எடுத்தவர்கள் யாரேனும் இருந்தால் -அவர்களது கேமராக்கள், கைபேசி களிலேயே இன்னும் அப்படங்கள் பாதுகாப்பாக பதிவில் இருந்தால் அவை மிக முக்கியமான போர்க்குற்ற ஆதாரங்களாக நிற்கும் வலுக் கொண்டவை. இணையதளங்களில் பேரவலத்தின் நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் காணக்கிடக் கின்றனதான். ஆனால் அவை சட்டத்தின் முன் ஆதாரங்களாக ஏற்கப்படும் தன்மை கொண்டவை யல்ல.


மாறாக கேமராக்களும், கைபேசிகளும் தீர்க்கமான, உறுதியான ஆதாரங்களாக நிற்கும். அவ்வாறு யாரிடமாவது இருந்தால் அவர்கள் முன்வந்து தருமாறு விரும்பிக் கேட்கிறார்கள்.மேற்சொன்ன நான்கு திசை ஆதாரங்களை யார் தர முன் வந்தாலும் அவர்களது பெயர், விபரங்கள் அனைத்தையும் பூரண ரகசியத்தன்மையோடு பாதுகாத்திட அவர்கள் வாக்குறுதி தருகிறார்கள். இன அழித்தல், போர்க்குற்ற நீதி தேடும் புனித மான வரலாற்று முயற்சியில் யாராவது மேற்சொன்ன சாட்சியங்களாக இருந்தால் வரலாற்றுப் பொறுப்புணர் வுடனும், பொது மானுடக் கடமையுணர்வுடனும் தயவு செய்து தொடர்பு கொள் ளுங்கள்.


எனது முகவரி : ஜெகத் கஸ்பர், 68, லஸ் கோவில் சாலை, மயிலாப்பூர், சென்னை-600 004.


மின் அஞ்சல்: jegath66@yahoo.co.uk.


இணைய தளம் http://www.jegathgaspar.com/.


போர்க்குற்றங்கள் தொடர்பான இச்செயற்பாட்டில் என்னை அணுகியவர்கள் வெள்ளைக்காரர்கள். அவர்தம் பின்னணி என்ன, தமிழர் மீதான இந்த அக்கறைக்கு அரசியற் காரணங்கள் ஏதேனும் இருக்கின்றனவா என்பதையெல்லாம் அறியவேண்டி நேரடியாகவே அவர்களை நான் வினவினேன். எனது கேள்விகளுக்கு அவர்கள் தந்த பதில் ஆறுதலாயும், மிகுந்த நம்பிக்கையாகவும் இருந்தது.இலங்கையை தமிழருக்கெதிரான போர்க்குற்றவாளியாய் நிறுத்தும் இம்முயற்சியில் இயங்கி வரும் இந்த அமைப்பினர் இப்புலத்தில் முன் அனுபவம் கொண்ட நிபுணர்கள்.


ஆனால் இப்பணியை ஏற்றுச் செய்யும்படி இவர்களை அணுகி அதற்கு ஆகும் பெரு நிதி பொறுப்பை ஏற்றுக்கொண்டவர்கள் யார் என்பதுதான் நெகிழ்வான செய்தியாய் இருந்தது.