நேற்று ஈழத் தமிழர்கள் நிலை குறித்து மத்திய அரசை மிகக் கடுமையாக சாடி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினர். பாஜக, மதிமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், திமுக என அனைத்து எதிர்க்கட்சிகளும் மத்திய அரசை கடுமையாக சாடின.
குறிப்பாக பாஜக மூத்த உறுப்பினர் சுஷ்மா ஸ்வராஜ் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார். தனது பேச்சின்போது தமிழிலும் அவர் பேசியது அனைவரையும் வியப்படைய வைத்தது.
கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து, பாரதியாரின் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி சுஷ்மா சுவராஜ் பேசுகையில், ஈழத் தமிழர் பிரச்சினை இந்தியாவின் தமிழ் மக்களுடன் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. மாறாக ஒட்டுமொத்த நாட்டின் இதயத்துடன் நெருங்கிய விஷயம்.இன்னொரு உயிருக்காக இரங்கக் கூடிய மனிதத் தன்மை ஒருவனிடம் இல்லாவிட்டால் அவனது ஆன்மா செத்துப் போய் விட்டது என்கிறார் பாரதியார். நிவாரண முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் 2.5 லட்சம் தமிழ் மக்களின் உயிர் குறித்து ஒட்டுமொத்த இந்தியாவும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது.
உண்மையில் அவை முகாம்கள் அல்ல, மாறாக முள்வேலி சிறைச்சாலைகள் (இதைத் தமிழிலேயே சுஷ்மா சொன்னார்).
இலங்கையில் பெரும் அவலத்திற்கு மத்தியில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களுக்கு இந்த அரசு செய்யப் போகும் நிவாரண நடவடிக்கைகள் என்ன என்பதை மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா சொல்ல வேண்டும் (இந்தக் கேள்வியை தமிழிலேயே கேட்டார் சுஷ்மா).சமீபத்தில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை சென்றாரே. அது ஏன். இதை அவர் விளக்க வேண்டும்.கிட்டத்தட்ட 50 ஆயிரம் குழந்தைகள் உள்பட 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் போரின் போது இடம் பெயர்ந்து வந்தனர். அவர்களின் கதி என்ன, நிலை என்ன என்பதை இலங்கையிடம் கேட்டு இந்தியா விளக்க வேண்டும்.தமிழர்கள் மிகப் பெரிய அவல நிலையில் உள்ளன என்று ஐ.நா. கூறுகிறது. இந்த நிலையில் இலங்கை முகாம்களின் நிலை குறித்து அறிய அங்கு போன இந்தியக் குழு ( தமிழகத்திலிருந்து போன திமுக தலைமையிலான ஆளுங்கட்சிக் கூட்டணிக் குழு) தாக்கல் செய்த அறிக்கை என்ன. அந்த அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது.நிதியுதவி அளிப்பதோடு இந்தியாவின் கடமை முடிந்து போய் விடவில்லை.
ஆனால் இடம் பெயர்ந்த மக்கள் அங்கு எந்த நிலையில் வாழுகின்றனர் என்பதையும் இந்தியா கவனித்து வர வேண்டும்.இலங்கைக்கு பாரபட்சம் இல்லாமல் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய எம்.பிக்கள் குழுவை அனுப்பி ஆராய வேண்டும். தமிழகத்தைச் சேர்ந்த ஆளுங்கட்சி எம்.பிக்களை மட்டும், தமிழர்களை மட்டும் அனுப்பி வைப்பதால் என்ன புண்ணியம். ஏன் அப்படி ஒரு குழுவை அனுப்பினீர்கள். இந்தப் பிரச்சினை ஒட்டுமொத்த இந்தியா சம்பந்தப்பட்டது. அப்படி இருக்கையில் தேசிய அளவிலான குழுவைத்தானே அனுப்பியிருக்க வேண்டும்.
வெறும் தமிழர்களை மட்டும் அனுப்பி வைப்பதன் மூலம், மத்திய அரசு மிகவும் குறுகிய கண்ணோட்டத்துடன் நடந்து கொண்டுள்ளது தெளிவாகியுள்ளது. இலங்கைக்கு இந்த அரசு அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழுவை அனுப்புமா (இந்தக் கேள்வியை திரும்பத் திரும்ப வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணவைப் பார்த்துக் கேட்டார் சுஷ்மா - அவர் அமைதியாக இருந்தார்) என்றார் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்ட சுஷ்மா சுவராஜ்.
சுஷ்மா சுவராஜின் பேச்சைத் தொடர்ந்து பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களும் பேசினர்.மேலும் இலங்கையில் ஒரு அப்பாவி நபரை போலீஸார் அடித்து உதைத்து கடலில் மூழ்கடித்தது தொடர்பாக ஸ்வராஜ் குறிப்பிட்டு பேசியபோது குறுக்கிட்ட காங்கிரஸ் எம்பிக்கள், இதைவிட காட்டுமிராண்டித்தனம் குஜராத்தில் நடந்துள்ளது.
அதை சுஷ்மா மறக்கக் கூடாது என்றனர்.இதையடுத்து பாஜக-காங்கிரஸ் உறுப்பினர்க இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.