
கடந்த வாரத்தில் இந்திய உளவு நிறுவனமான றோவினால் தமிழக ஊடகங்களுக்குக் கசியவிடப்பட்ட செய்தி ஒன்று இதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது. கடந்த வார இறுதியில் ‘இந்தியா உதவியுடன் இலங்கையில் யுத்தம்’ என்ற தலைப்பில் ஜுனியர் விகடன் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. ‘விழ விழ எழுவோம்; ஒன்று விழ ஒன்பதாக எழுவோம்’ என்பதுதான் புலிகளின் ஸ்டைல். அந்த வகையில் ‘இலங்கையில் மீண்டும் போர் மூளும்இ அதுவும் இந்தியாவின் துணையோடு’ என்ற ஆச்சரியமான ஒரு கணிப்பை சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள் புலிகள் தரப்பில் என்று அந்த இந்தியப் பலிபீடத்திற்கு விடுதலைப் புலிகளை வலிந்து பதிவு செய்துள்ளார்கள்.
இந்தியா தமக்கு உதவும் என்ற நம்பிக்கையை ஈழத் தமிழர்கள் இழந்து வெகு காலமாகிவிட்டது. இறுதி யுத்த காலத்திலும் இந்தியா சிங்கள தேசத்துடன் இணைந்து நடாத்திய யுத்தத்தை நிறுத்துமாறு விடுத்த கோரிக்கைகள் அனைத்தையும் இந்தியா கவனத்தில் கொள்ளவே இல்லை. ஈழத் தமிழர்களைப் பகடைக்காயாக்கி இலங்கைத் தீவில் தன் கரங்களை வலுப்படுத்தவே இந்தியா முனைந்தது. அதற்காக இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் பலி கொள்ளப்பட்டார்கள். முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கும்இ ஈழத் தமிழர்களின் பலம் அழிக்கப்பட்டதற்கும் இந்தியாவே பிரதான பாத்திரம் வகித்தது என்பதை அந்தப் பேரவலத்தை எதிர்கொண்ட ஈழத் தமிழாகள் என்றும் இந்தியாவை மன்னிக்கமாட்டார்கள்.
அந்த ஜுனியர் விகடன் இதழில் இந்தியாவின் தற்போதைய இந்த சிந்தனை மாற்றத்திற்கான காரணங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அதில் ஈழத் தமிழர்களின் நலன் சார்ந்த எந்தக் காரணங்களும் தெரிவிக்கப்படவில்லை.’போர் முடிவுக்கு முன்பும் பின்புமான காலகட்டத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்குமான உறவு முற்றிலுமாக மாறிவிட்டது. ஆயுதத் தளவாடங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை போரின்போது இலங்கைக்கு வழங்கியது இந்தியா. இதற்கு பிரதிபலனாக நான்கு விஷயங்களை இலங்கையிடம் கோரியிருந்தது. அந்தமான் தீவுகளுக்கு அருகில் சில நாட்டிக்கல் மைல் தொலைவில் தொடங்கி இலங்கையின் முல்லைத்தீவு வரை நீளும் கடற்பகுதிக்கு அடியில் எண்ணற்ற படிமங்களும் ஏராளமான கடல் வளங்களும் குவிந்து கிடக்கின்றன.
இந்த கடற்பகுதியை கையாளும் உரிமையை இந்தியாவுக்கு வழங்க வேண்டும்; போரில் சீர் குலைந்திருக்கும் வட பகுதியை முழுவதுமாக கட்டமைக்கும் கான்டிராக்ட் பணிகளை இந்தியாவிடம் வழங்க வேண்டும்; இலங்கை ரயில்வே துறையை இயக்கும் பணியை இந்தியாவிடம் வழங்க வேண்டும்; இலங்கையில் எட்டு இடங்களில் துறைமுகம் உள்ளிட்ட சில வேலைகளைச் செய்வதற்கு இந்தியாவை அனுமதிக்க வேண்டும்’ என்ற இந்தியாவின் நான்கு சுயநல நோக்கங்களை சிறிலங்கா அரசு உதாசீனம் செய்ததன் காரணமாகவே இந்தியா மீண்டும் ஈழத் தமிழர்களைப் பகடைக் காய்களாக்கி அச்சுறுத்தல் மூலம் சிங்கள தேசத்தை அடிபணிய வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்தியாவின் நான்கு கோரிக்கைகளுக்காகவும் ஈழத் தமிழர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்திக் களம் இறங்க வேண்டும் என்ற சிந்தனையை தமிழீழ விடுதலைக்கான போராகச் சித்தரிப்பதற்கு இந்தியா முற்படுகின்றது.
தனது விருப்பங்களையும் மீறி சிங்கள தேசத்தில் பலம் பெற்றுவரும் சீன ஆதரவுத் தளத்தினைச் சிதைப்பதற்கான கருவியாக ஈழத் தமிழ் இளைஞர்களை மீண்டும் பலிக்கடா ஆக்கும் தந்திரத்தை இந்தியா கைக்கொள்ள முயற்சிக்கின்றது.’இந்தியாவின் யுத்தத்தையே நாம் நடாத்தினோம்’ என்று யுத்தம் முடிந்த பின்னர் சிறிலங்கா தெரிவித்த கருத்தை ஏற்றுக் கொண்டதன் மூலம் ஈழத் தமிழினத்தின் இன அழிப்பிற்கு பின்பலமாக நின்ற இந்தியா இதற்கும் அதிகமான நன்றிக்கடனை எதிர்பார்க்க முடியாது என்பதே சிங்களத்தின் நிலைப்பாடாக உள்ளது. போர் முடியும்வரை இந்தியாவின் அத்தனை கோரிக்கைகளுக்கும் தலையாட்டி வந்த சிங்கள அரசுஇ இப்போது சீனாவின் குரலுக்கும்இ விருப்பங்களுக்கும் அதிக மதிப்புக் கொடுத்து வருகின்றது.
கடல் நீர் எல்லை ஆதாரச் சட்டத்தைக் காரணம் காட்டிஇ அந்தமான் முதல் முல்லை தீவு கடல் பகுதியைக் கையாளும் உரிமையை இந்தியாவுக்கு வழங்க மறுக்கும் ராஜபக்ஷோ மற்ற மூன்று கோரிக்கை களையும்கூட மறுத்து விட்டார். இதனால்இ இலங்கையுடனான உறவில் இந்தியாவுக்கு விரிசல் விழுந்திருக்கிறது. அதேசமயம்இ சீனாவுடனான உறவை இலங்கை வலுப்படுத்தத் தொடங்கியிருப்பதை ஜீரணிக்க முடியாமல் தவிக்கின்றது இந்தியா. அத்துடன் இந்திய நலன்களை மீறி அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப் பணி நடத்தும் பொறுப்பும் சீனாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இலங்கையின் நிலக்கரி மின் உற்பத்தி துறையின் அபிவிருத்திருக்கு 891 மில்லியன் டொலர்களையும்இ நெடுஞ்சாலை மற்றும் எண்ணெய் அகழ்வு பணிகளுக்கு 350 மில்லியன் டொலர்களையும் இலங்கைக்கு கடனாக வழங்கியிருக்கிறது சீனா.
அதோடுஇ வடபகுதியில் மொத்தம் 1.25 பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ள சீனா மொத்தமாக இலங்கைக்கு 3 பில்லியன் டாலர்களை கடனாக வழங்கியிருக்கிறது. இலங்கை உலகம் முழுவதும் வாங்கியிருக்கும் கடனுக்கு நிகரான தொகையை சீனா தனிப்பட்ட முறையில் கடனாக வழங்கியிருக்கிறது. இதற்குப் பிரதியுபகாரமாக சீனா இலங்கையிடம் எதிர்பார்ப்பது கச்சத்தீவில் ஒரு இராணுவத் தளம் அமைக்கும் உதவியைத் தான்! கிட்டத்தட்ட இதற்கான அனுமதியும் சீனாவுக்குக் கிடைத்து விட்டதாகவும்இ வருகிற 2010 ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பருக்குள் அங்கு இராணுவத் தளத்தையும் சீனா நிறுவி விடும் என இந்திய உளவு அமைப்பான ‘றோ’ மத்திய அரசை எச்சரித்திருக்கிறது.
இந்தியாவின் வட திசையில் இருக்கும் சீனா இந்தியாவின் மேற்கில் அமைந்துள்ள பாகிஸ்தானில் மூன்று இராணுவத் தளங்களையும் கிழக்கில் அமைந்துள்ள பங்களாதேஷில் இரண்டு இராணுவத் தளங்களையும் ஏற்கெனவே நிறுவியிருக்கிறது. ஈழத் தமிழர்களைப் பகைத்துக் கொண்டதன் மூலம் இந்தியா தெற்கிலும் செல்வாக்கிழந்த நிலையில் உள்ளது. ஈழத் தமிழர்கள் மீதான இன அழிப்பிற்குத் துணை போனதன் மூலம் ஈழத் தமிழர்களின் பலமாக விழங்கிய விடுதலைப் புலிகள் சிங்கள தேசத்தால் தோற்கடிக்கப்பட்டார்கள். இந்தியச் சதியினால் விடுதலைக் கனவுகளோடு உயிர் கொடுத்த தமிழினம் முள்ளிவாய்க்காலில் உயிர் பறிக்கப்பட்டு விட்டார்கள். தமிழீழ ஆன்மா இந்தியச் சதியால் மீண்டும் சிங்கள தேசத்திடம் அடிமைப்படுத்தப்பட்டு விட்டது. தற்போது இந்திய நட்புக் கரம் தறிக்கப்பட்டுவிட்டதனால் தெற்கிலும் சீனா பலமாகக் கால் பதிக்கின்றது.
கச்சத்தீவில் தனது இராணுவத் தளத்தை அமைக்கப் போகிறது. தற்போது சிங்கள தேசத்தில் நடைபெறவுள்ள தேர்தலும் இந்தியாவுக்கு பெரும் சவாலாக இருக்கப் போகின்றது. நடைபெறவுள்ள தேர்தலில் மகிந்த ராஜபக்ஷேவும்இ சரத் பொன்சேகாவும் களம் இறங்கிய நிலையில் இவர்களில் யார் வெற்றி பெற்றாலும் இந்தியாவுக்கு சாதகமான நிலை ஏற்பட வாய்ப்பில்லை. இந்த இருவரில் யாரையும் ஆதரிக்கும் நிலையில் ஈழத் தமிழர்கள் இல்லை. வருகின்ற பேயிலும் பார்க்கப் பழகிய பேயை வைத்துக் காய் நகர்த்தும் நிலையை எடுத்துள்ள இந்தியா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அதற்குப் பயன்படுத்த முனைகின்றது. தமிழீழ மக்களது மன உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத முயற்சியாகவே இதனை நோக்கலாம்.
யாழ். மாநகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோள் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டு 78 வீதமான தமிழ் மக்கள் வாக்களிக்க மறுத்ததைக் கவனத்தில் கொண்டால் இந்தியக் கனவுகள் ஈடேறும் சாத்தியம் கிடையாது. ஈழத் தமிழர்களின் எஞ்சியிருக்கும் ஒரே சக்தியான புலம்பெயர் தமிழர்கள் தங்கள் போராட்டங்களை விரைவு படுத்துவதன் மூலம் சீனாவின் மேலாதிக்க விரிவாக்கத்தை விரும்பாத மேற்குலகின் ஆதரவு தவிர்க்க முடியாததாகிவிடும். இந்தியா விடும் றீலை நம்பி ஈழத் தமிழர்கள் மீண்டும் பலிபீடத்தை நோக்கிச் செல்லாமல் மனிதாபிமானம் கொஞ்சமாவது மீந்திருக்கும் மேற்குலகின் கரங்களைப் பற்றி நடப்பதே ஈழத் தமிழர்களுக்கு நல்ல தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் என்பதே யதார்த்தம்.
-சி. பாலச்சந்திரன்