பி.எஸ்.என்.எல். 3 ஜி மொபைல் போன் எண்களை ஏலத்தில் விட்டதில் சென்னையில் 8 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது.
அதிகபட்சமாக, ஒரு எண் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.வீடியோ கால் வசதி கொண்ட 3 ஜி சேவையை சமீபத்தில் பி.எஸ்.என்.எல். சென்னையில் அறிமுகப்படுத்தியது.இந்த சேவையை தங்களுக்குப் பிடித்தமான பேன்ஸி எண்களுடன் பெற போட்டி போட்டனர் வாடிக்கையாளர்கள். எனவே வாடிக்கையாளரின் இந்த ஆர்வத்தை காசாக்கும் முயற்சியில் இறங்கிய பிஎஸ்என்எல், 292 'பேன்சி' எண்களை ஏலத்தில் விட முடிவு செய்தது.
ஏற்கனவே, 2 ஜி சேவைக்கான எண்களை ஏலத்தில் விட்டு, அதன் மூலம் நான்கு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லாபம் சம்பாதித்த அனுபவம் பிஎஸ்என்எல்லுக்கு உண்டு.எனவே 3 ஜி எண்களும் ஏலத்தில் விடப்பட்டன. இதில் ஒவ்வொரு பேன்சி எண்ணுக்கும் குறைந்த பட்ச தொகையாக ஆயிரம், 2,000, 3,000 என நிர்ணயிக்கப்பட்டு நூறின் மடங்காக ஏலம் கேட்க வேண்டும் என்று, நிபந்தனை விதிக்கப்பட்டது.
தொடர்ந்து நடந்த ஏலத்தில், 93 எண்கள் மட்டுமே ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த, '3 ஜி' எண்கள் அனைத்தும் 94455 என துவங்குமாறு அமைந்துள்ளது. இந்த ஏலத்தில் குறிப்பாக 94455 55555 என்ற எண் மட்டும், ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, 99999 என முடியும் எண், 77 ஆயிரம் ரூபாய்க்கும், 56789 என முடியும் எண், 62 ஆயிரம் ரூபாய்க்கும், 66666 என முடியும் எண் 30,300 ரூபாய்க்கும், 12345 என முடியும் எண் 30 ஆயிரம் ரூபாய்க்கும், 94455 என முடியும் எண் 28 ஆயிரத்திற்கும், 11111 என முடியும் எண் 15 ஆயிரம் ரூபாய்க்கும் ஏலம் எடுக்கப்பட்டன.
இதன் மூலம், மூலம் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கு எட்டு லட்சம் ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. மீதியுள்ள எண்கள் அடுத்த வாரம் ஏலம் விடப்படுமாம்.