

புராண வரலாற்றைக் கொண்டது அகஸ்தியர் ஸ்தாபனம். அகத்திய குறுமுனி இங்கு வாழ்ந்ததாக வரலாறு கூறுகின்றது. இந்து சமய தத்துவங்களின் அடிப்படையில் சிவபெருமானின் திருமண நிகழ்வுக்காக எல்லோரும் கைலையில் கூடிய பொழுது கைலாயமே ஒரு புறம் சரிந்தது. இதனை நிவர்த்தி செய்ய அகத்தியரை தென்பகுதிக்கு சிவபெருமான் அனுப்பி வைத்தார். இது வரலாறு கூறிய பாடம். வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தமிழர்களின் பூர்வீகம் இல்லாது ஒழிப்பதை அரசாங்கம் நோக்காக கொண்டு செயற்பட்டு வருகின்றது. இப்பிரதேசங்களில் பௌத்த அதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக பல தரப்பினரும் முயற்சித்து வருகின்றனர். தமிழர்களின் எச்சங்கள் அழிக்கப்படுகின்றது. 2006 ஆம் வருட இடப்பெயர்வின் போது மற்றொரு வரலாற்றுப் பெருமை மிக்க சம்பூர் பத்தரகாளி அம்மன் ஆலயம் அழிக்கப்பட்டது. அப்போது இப்பிரதேச மக்கள் மெல்ல மெல்ல இடம் பெயர்ந்து மட்டக்களப்பு வரை சென்று தமது உயிர்களைப் பாதுகாத்திருந்தனர். இந் நிலையில் கூட கங்கு வேலி பிரதேசத்து மக்கள் இடம் பெயராமல் அருகில் இருந்த நிலாப்பொள என்னும் சிங்கள கிராம மக்களின் ஆதரவுடன் தங்கியிருந்தனர். அப்போது எழாத அச்சம் இப்போது கங்குவேலிமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. சிங்கள மக்கள் கூட அகஸ்தியர் ஸ்தாபனத்திற்கு வந்து போக இயலாத நிலையில் இருந்தனர். வைகாசி மாதம் யுத்தம் முடிவடைந்ததும் சிங்கள மக்கள் தடையின்றி தமிழர்களின் பிரதேசங்களுக்கு எவ்வித அச்சமும் இன்றி சென்று வரக்கூடிய நிலை ஏற்பட்டதாக அரசு பிரச்சாரம் செய்தது. இதனைத் தொடர்ந்து சிங்கள மக்கள் உல்லாசம் அனுபவிக்க தமிழ் பிரதேசங்களுக்கு சென்று வருவதை பொழுது போக்காக கொண்டுள்ளனர் இந் நிலையில் இத் தாபனம் அழிக்கப்பட்டுள்ளது. மாவீர் தினத்தின் பரிசாக இச்செயற்பாடு இடம் பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகின்றது. இம்மாதம் 20 ஆம் திகதி அன்று பிரதேச வாசிகள் இப்பகுதிக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். 28ம் திகதி சனிக்கிழமை இங்கு சென்ற ஒருவர் ஸ்தாபனம் அகற்றப்பட்டிருந்ததைக் கண்ட அதிர்ச்சி அடைந்து இத்தகவலை பிரதேச வாசிகளுக்கு தெரிவித்தார். இதனைக் கேட்ட பிரதேச வாசிகள் கூட்டமாக சென்று அவ்விடத்தைப் பார்த்துக் கண்ணீர் விட்டுக் கதறினர்.
திட்டமிடட முறையில் இச் செயற்பாடு செய்யப்பட்டதாகவே கதப்படுகின்றது. இவ் விடயம் சம்பந்தமாக யாரிடமும் முறையிட கூட முடியாத நிலையில் இப்பகுதி மக்கள் அச்சத்துடன் இருக்கின்றனர். அகத்தியர் ஸ்தாபனத்தை அழித்ததைத் தொடர்ந்து தமது கிராமமும் அழிக்கப்படுவதற்கு திட்டமிடப்படலாம் எனக் கருதிய நிலையில் இவர்கள் காணப்படுகின்றனர்.